டந்த ஓராண்டுக்கு மேலாகவே உக்ரேன் நாட்டில் யுத்தம் நடந்து வருகிறது. பிப்ரவரி 2022 முதல் இன்றுவரை நீடித்து வரும் ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்குமான இந்த யுத்தத்தில் உக்ரேனை ஆதரித்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் ஆயுத உதவி உள்ளிட்டவற்றை செய்து வருகின்றன. வளம் பொருந்திய ஏகாதிபத்தியங்களில் ஒன்றான ரஷ்யாவை ஒரு சிறிய முதலாளித்துவ நாடு எதிர்த்து ஓராண்டுக்கு மேல் தாக்குப் பிடிப்பதன் பின்னே இத்தகைய அணிசேர்க்கையே முக்கிய காரணமாக இருக்கிறது.

இந்த யுத்தத்தில் இரு தரப்பினரும் தமது ஆயுதங்களைக் கொண்டு எதிர் தரப்பில் ராணுவ பலத்தை தாக்கி அழிப்பது என்ற வழமையான முறையை மீறியுள்ளனர். முக்கியமாக அணைக்கட்டுகள் குறிவைக்கப்படுகின்றன.

அணைகளை தகர்ப்பது!

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள தெற்கு உக்ரேனின் கர்சன் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய அணையான நோவா காக்கவ்கா அணை தகர்க்கப்பட்டுள்ளது.

தினேப்பர் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையில் தேக்கப்படும் தண்ணீர் ஆனது மின்சார உற்பத்திக்கு மட்டுமல்லாமல் மிகப்பெரிய பரப்பளவில் விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்த அணையில் இருந்து தான் தென் திசையில் உள்ள கிரீமியாவிற்கும் தண்ணீர் அனுப்பப்படுகிறது. அதே போல் ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணு உலையான ஜபோரிஜ்ஜியா அணுமின் நிலையத்திற்கும் இங்கிருந்துதான் தண்ணீர் அனுப்பப்படுகிறது.

இப்படிப்பட்ட முக்கியமான மிகப்பெரிய அணையை ரஷ்ய இராணுவம் தான் தகர்த்துள்ளது என உக்ரேனும், உக்ரேன்தான் வெடிவைத்து தகர்த்துள்ளது என ரஷ்யாவும் மாற்றி மாற்றி பழி போட்டுக் கொண்டுள்ளனர்.

அணைகளை வைத்து அரசியல் செய்யும் அதிகார வர்க்கமும் அரசியல் கட்சிகளும்!
Guardian graphic. Source: the Institute for the Study of War with AEI’s Critical Threats Project

தற்போது ஜூனில் மோக்ரி யாலி  நதியின் குறுக்கே உள்ள அணையையும் ரஷ்ய ஆக்கிரமிப்பு படையினர் தகர்த்துள்ளதாக உக்ரேன் குற்றம் சாட்டுகிறது. அதாவது தங்களது ராணுவத்தின் முன்னேற்றத்தை தடுப்பதற்காகவே இப்படி அணையை உடைத்து வெள்ளப்பெருக்கால் கிராமங்களை மூழ்கடிப்பதாக ரஷ்யா மீது குற்றம் சுமத்தியுள்ளது.

அணைகளை தகர்த்து வருவது உக்ரேனிய ராணுவமோ அல்லது ரசிய ராணுவமோ எதுவாக இருந்தாலும் தமது சுயநலனுக்காக ஒரு பிராந்தியத்தின் நீர் ஆதாரத்தை அழித்து, சுற்றுச்சூழல் பேரழிவுக்கு தள்ளிவிடும் இந்த போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவர்களின் இத்தகைய தாக்குதலின் விளைவை, அதாவது குடிக்க கூட குடிநீர் இல்லாமல் தவிக்கும் அவலத்தை உக்ரேனின் தெற்கு பிராந்திய மக்களுக்கு  ஏகாதிபத்தியங்கள் பரிசளித்துள்ளன.

இந்தியாவிலும் அணை அரசியல்!

இப்படி அணையை வைத்து அரசியல் செய்யும் போக்கு வெளிநாடுகளில் மட்டுமல்ல நம் இந்தியாவிலும் நடக்கத்தான் செய்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை பல பத்தாண்டுகளாக தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வருவதாக முல்லைப் பெரியாறும், காவிரியும் அமைந்துள்ளது.

கர்நாடகத்தில் 2023 தேர்தலில் வென்று ஆட்சியை அமைத்துள்ள காங்கிரஸ் அரசானது, காவிரியின் குறுக்கே மேக்கே தாட்டு அணையை கட்டுவதற்கான வேலையை முன்னெடுக்கிறது. இது பெங்களூர் நகரத்திற்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய என நியாயப்படுத்தவும் செய்கிறது. ஏரிகளின் நகரமான பெங்களூருக்கு குடிநீர் பஞ்சம் ஏன் வந்தது என்பதை ஆட்சியாளர்கள் வசதியாக மறைத்தும் – மறந்தும் விடுகின்றனர்.

அணைகளை வைத்து அரசியல் செய்யும் அதிகார வர்க்கமும் அரசியல் கட்சிகளும்!
mekedatu

தமிழக விவசாயிகள் – குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகள் இந்த அணைக்கட்டு திட்டத்தை எதிர்க்கும் போது குடிநீர் எடுப்பது கூட குற்றமா என்பது போல கர்நாடகாவில் மொழி வெறி அரசியலை தூண்டி ஆதாயம் அடைய முடிகிறது. அதேபோல் நேற்று வரை மேக்கே தாட்டு அணையை ஆதரித்த பாஜகவினர் தற்போது கர்நாடகத்தில் அதிகாரத்தை இழந்துள்ள நிலையில், இங்குள்ள அண்ணாமலை மேக்கே தாட்டு திட்டத்தை எதிர்ப்பதாக வேஷம் போட்டு தமிழக காங்கிரசின் வழியில் பயணிக்கவும் கூடும்.

ஒரு நாட்டின் இயற்கை வளங்கள் கனிம வளங்கள் அந்த நாட்டின் மக்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதை வல்லரசு நாடுகளின் நிதி மூலதன கும்பல்கள் ஏற்பதில்லை. அதாவது அனைத்தையும் காசாக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் எதையும் விட்டு வைப்பதாக இல்லை. தற்போது காவிரியின் குறுக்கே அணையைக் கட்டி தண்ணீரை எடுத்து அதை ஒரு நகரத்திற்கு விநியோகிப்பதாக இருந்தாலும், அந்த அணையும், அந்தத் தண்ணீரும் கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கானதாகவே அமையும்.

இதையும் படியுங்கள்: முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவோம்! 2018 மீள்பதிவு

இனி காவிரியின் மீது கர்நாடக விவசாயிகளுக்கும் உரிமை இருக்கப் போவதில்லை, தமிழக டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் உரிமை இருக்கப் போவதில்லை. இந்த பேரபாயத்தை மூடிமறைத்துதான் கன்னடர்கள் எதிர்ப்புறம் தமிழர்கள் என அணிவகுக்க வைத்துள்ளனர். மொழி வெறி, இனவெறி அரசியல்செய்வதுதான் இரு மாநிலங்களிலும் தொடர்கிறது.

அணையை தகர்க்க விரும்பும் கேரளா!

கேரளாவும் தனது பங்கிற்கு சிறுவாணியில் தடுப்பணைகளை கட்டி தண்ணீரை மடைமாற்ற பார்க்கிறது. முல்லைப் பெரியாரில் அனுமதிக்கப்பட்ட கன அடிக்கு தண்ணீரைத் தேக்க தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. அணை வலுவாக உள்ளதாக வல்லுநர் குழு ஆய்வு செய்து சமர்ப்பிக்கும் அறிக்கையை குப்பை காகிதமாகவே மதிக்கிறது. உண்மையில் முல்லைப்பெரியாறை தனது ரிசார்ட்டுகள் மூலம் ஆக்கிரமித்து சர்வதேச சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கவே விரும்புகிறது.

இப்படி  நம் நாட்டிலும் சர்வதேச அளவிலும் அணைகள் இலக்காக்கப்பட்டு அரசியல் முன் எடுக்கப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும், புவி வெப்பமயமாதலை தடுக்க வேண்டும், உலகை பேரழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும் என கருத்துரைக்கும் ஒவ்வொருவரும் தற்போது நடந்து வரும் நீர் நிலைகளை முன்வைத்து வெறியூட்டப்படும் அனைத்து வகை போக்குகளையும் எதிர்த்து களமிறங்க வேண்டும்.

கார்ப்பரேட்டுகளும் ஏகாதிபத்தியங்களும்நீடிக்கும் வரை நமக்கு குடிக்க தண்ணீரும் மிஞ்சப் போவதில்லை என்பதையே இன்றைய தெற்கு உக்ரேனின் நிலையும் உணர்த்துகிறது. அங்கே இராணுவம்தான் குடி மக்களுக்கு தண்ணீர் பாக்கெட்களை விநியோகித்து வருகிறது. ஆட்சியாளர்களின் இன- மொழி வெறியூட்டல்களுக்கு பலியாகாமல் விழித்துக் கொள்வோம். கார்ப்பரேட்டுகளிடமிருந்து உலகைக்காக்க ஒன்று படுவோம்.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here