
கட்டுரைக்குள் செல்வதற்கு முன்பாக ஒரு விசயத்தை – தொகுதி மறுவரையறை செய்வதற்காக குழு அமைக்கப்பட்டால் அந்தக் குழுவை எதிர்த்து யாராலும் எதுவும் செய்ய முடியாது. தொகுதி மறுவரையறை செய்வதற்காக அமைக்கப்படும் குழுவின் முடிவை பாராளுமன்றத்தாலோ நீதிமன்றத்தாலோ மாற்றவோ நிறுத்தி வைக்கவோ முடியவே முடியாது என்று சட்டம் கூறுகிறது என்பதை – வாசகர்கள் தங்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.
Delimitation Act, 1952 / 1972 / 2002 – ஒவ்வொரு Census (மக்கள் தொகை கணக்கெடுப்பு) பிறகும் தொகுதி மறு வரையறை செய்ய உதவியது.
நீதிமன்ற மதிப்பீட்டிற்குட்பட முடியாதது (Exemption from Judicial Review)
ஒரு முறை தொகுதி மறு வரையறை முடிவடைந்த பிறகு, நீதிமன்றத்தில் அதை எதிர்க்க முடியாது.
இது ஒரு சுயாதீன அதிகார அமைப்பு என்பதால் அதன் முடிவுகள் இறுதி ஆகும்.
தமிழ்நாட்டில் பிஜேபியின் கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட ஒன்று இரண்டு கட்சிகளைத் தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றாக நின்று தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்றும் தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்பட உள்ள தென்மாநிலங்கள் மற்றும் பஞ்சாப், ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டு நடவடிக்கை குழு அமைத்து இதற்காக போராட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
ஆனால் பாஜக வினவினரோ இது தேவையற்றது. தொகுதி மறு வரையறையால் தமிழ்நாடு ஒருபோதும் பாராளுமன்ற தொகுதிகளை இழக்காது மாறாக அதிகரிக்கவே செய்யும் என்று அயோக்கியத்தனமாக கூறி வருகின்றனர். திமுக அரசு தனது தோல்விகளை மறைப்பதற்கு இப்படிப்பட்ட அச்சத்தை மக்களிடையே பரப்புவதாகவும் கூறி வருகின்றனர். இதில் சிறிதேனும் உண்மை இருக்கிறதா? என்பதை பார்ப்போம்.
1951க்கு முன்பு நாடாளுமன்ற பிரதிநிதிகளின் மொத்த எண்ணிக்கை 489. ஆனால் 1951 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறையின்படி இந்த இடங்கள் 494 ஆக உயர்த்தப்பட்டன.
மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு 1961 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 522 ஆக அதிகரிக்கப்பட்டன. 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை எண்ணிக்கை 543 ஆக உயர்த்தப்பட்டன. ஆனால் 1961 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு இருந்த 41 நாடாளுமன்ற தொகுதிகள் 1971 கணக்கெடுப்பின்படியான நாடாளுமன்ற தொகுதிகளில் மறு வரையறையின் போது 39 தொகுதிகளாக குறைக்கப்பட்டன.
படிக்க:
♣ நாடாளுமன்ற கூரை ஒழுகுகிறது! கட்டிடம் மட்டுமல்ல! அதன் உள்ளடக்கமும் பழுதடைந்து விட்டது!
♣ 2024 நாடாளுமன்ற தேர்தல்: மக்கள் சக்தி வென்றது! பாசிச பாஜக வின் ’ஒற்றை சர்வாதிகார’ கனவு வீழ்ந்தது!
ஆக நாடாளுமன்றத்தில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் கூட தமிழ்நாட்டின் எண்ணிக்கை குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது என்பதைத்தான் இது காட்டுகிறது.
அது மட்டுமின்றி நாடாளுமன்றத்தில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 848 ஆக அதிகரிக்கும் போது தமிழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலோட்டமாக பார்க்கும் பொழுது அதிகரிக்கவும் செய்யலாம்.
ஆனால் 1970களில் இந்தியாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்தியா முழுமைக்கும் குடும்ப கட்டுப்பாட்டு திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசு கூறியது. இதை ஏற்று முறையாக இந்தத் திட்டத்தை செயல்படுத்திய தென்னிந்திய மாநிலங்களிலும் பஞ்சாப், ஒரிசா, மேற்கு வங்கம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களிலும் மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஆனால் உத்திரப் பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்பாடு இன்றி உயர்ந்து கொண்டே சென்றது.
மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறு வரையறை செய்யப்பட்டால் மத்திய அரசின் திட்டத்தை ஏற்று அதை முறையாக செயல்படுத்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும். அது அந்த மாநிலங்களுக்கு தண்டனையாக அமையும். எனவே, 1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடாளுமன்ற பிரதிநிதிகள் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை. மாறாக அன்றைய காங்கிரஸ் அரசால் 25 ஆண்டுகளுக்கு பிறகு தொகுதி மறு வரையறை செய்யப்பட வேண்டும் என்று சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இதற்கு பதிலாக 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு தொகுதி மறுவரையறை செய்யப்படும் என்று அன்றைய பாஜக அரசால் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால் 2001 ஆம் ஆண்டும் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தாலும் ஏற்கனவே கூறியதைப் போல மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் நாடாளுமன்றத்தில் தங்களது பிரதிநிதித்துவத்தை இழக்கும் என்பதால் 2026 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறு வரையறை செய்யப்படும் என்று மீண்டும் ஒருமுறை சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதனாலேயே ஒன்றிய பாஜக அரசு 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்டு இருக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை காலவரையின்றி தள்ளிப்போட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு கொரோனா பேரிடர் காரணமாக இருந்தாலும் அதற்குப் பிறகு நடத்தியிருக்க வேண்டும். உலகின் பல நாடுகளிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அதன் பிறகு நடந்துவிட்டது. இந்தியாவில் 2026 க்குப் பிறகான மக்கள் தொகை கணக்கெடுப்பில் தான் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என்பதால் 2026 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பை தள்ளிப்போடும் வேலையை மோடி அரசு சதித்தனமாக செய்துள்ளது. இதுவே மிகப்பெரிய முறைகேடு.
இதன்படி அடுத்து நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவறையரை செய்யப்பட உள்ளது. இதற்கு வசதியாக தான் பாஜக அரசால் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் 848 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
இதை கணக்கில் கொண்டு பார்க்கும் பொழுது நடக்கவுள்ள தொகுதி மறு வரையறை இரண்டு வழிகளில் ஏதேனும் ஒன்றில் நடப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன.
தற்பொழுது நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்களின் மொத்த பிரதிநிதித்துவம் 7.18 சதவீதமாக உள்ளது. இனி நடக்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுத்தும் அந்த அடிப்படையில் தொகுதி மறு வரையறை செய்யப்பட்டால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் கணிசமாக குறைந்து விடும்.
இதே போல மக்கள் தொகையை வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வந்த தென் மாநிலங்கள் உள்ளிட்ட மாநிலங்களில் பிரதிநிதித்துவமும் கணிசமாக குறையும். அதேசமயம் பீகார், குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் கணிசமாக அதிகரிக்கும். இதன் மூலம் பாஜக தனது பசு வளைய மாநிலங்களில் வெற்றி பெறுவதன் மூலமாக மட்டுமே கூட மத்தியில் பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைத்து விட முடியும். இதற்காகத்தான் பாஜகவினர் தொகுதி மறு வரையறையை செய்யத் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இன்னொருபுறம், பாஜக ஆட்சியில் தொகுதி மறுவரையறை என்பது திட்டமிட்டு எதிர்கட்சிகளுக்கு சாதகமான தொகுதிகளை இல்லாமல் செய்வதும் நடைபெறும் அபாயம் உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தொகுதி மறுவரையறையை பயன்படுத்தி அப்படி ஒரு சதித்தனமான வேலையில் ஈடுபட்டது என்பதை Newslaundry ஊடகம் அம்பலப்படுத்தி உள்ளது.
நாடாளுமன்றத்தில் உறுப்பினர் இருக்கைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் மக்கள் தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் ஏற்கனவே எத்தனை சதவீதத்தில் உள்ளதோ அதே அளவிற்கான சதவீதம் இனிமேலும் இருக்க வேண்டும் என்பதுதான் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் வலிமையான நியாயமான கோரிக்கையாக உள்ளது. இந்த கோரிக்கை நியாயமானதும் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். தொகுதி மறுவரையறைக்கான குழு அமைக்கப்படுவதன் மோடி அரசின் கீழ் நடைபெறுவது நிச்சயமாக பல முறைகேடான வழிகளிலேயே நடத்தப்படும். அதற்கு கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலே எடுத்துக்காட்டு. ஆகையால், மோடி அரசின் கீழ் தொகுதி மறுவரையறை நடப்பதை தடுப்பதற்கான நாடு முழுக்க கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
- குமரன்