ப்ரல் 10, 2026 அன்று 42 மாவோயிஸ்டுகள், முக்கிய தளபதிகள் உட்பட சரணடைந்ததைத் தொடர்ந்து, தெலுங்கானா மாநிலம் சிபிஐ (மாவோயிஸ்ட்) ஆயுத அமைப்புகளில் இருந்து முழுமையாக விடுபட்டுள்ளதாக டிஜிபி பி சிவதர் ரெட்டி அறிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலக் குழுவின் செயல்பாடு முடக்கப்பட்டு, மாநிலம் மாவோயிஸ்ட் அச்சுறுத்தலற்ற பகுதியாக (Maoist-free state) மாறியுள்ளதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

“சரணடைந்த மாவோயிஸ்டுகள் அரசு நலத்திட்டங்களைப் பெறுவதற்கும், தேவைப் படுபவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதற்கும் காவல்துறை அனைத்து உதவிகளையும் வழங்கும்” என்று தெலங்கானா காவல்துறை தலைமை இயக்குநர் பி. சிவதர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சரணடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யப்போவதாக முன்வைக்கின்ற இந்திய ஒன்றிய அரசும், தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநில அரசாங்கங்களும் வாழ்நாள் முழுவதும் சரணடையாமல் தனது புரட்சிகர வாழ்க்கையை தொடர்ந்த கிஷன் டா போன்ற தோழர்களை சிறைக்குள்ளேயே வைத்து மரணத்தை பரிசாக அளித்துள்ளது.

“தோழர் கிஷன் டா (பிரசாந்த் போஸ்), இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்) மத்தியக் குழு மற்றும் அரசியல் பணியக உறுப்பினர், ராஞ்சி சிறை மருத்துவமனையில் தியாகி ஆனார். இந்த 80 வயது மாவோயிஸ்டுத் தலைவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை மீண்டும் மீண்டும் மறுக்கப்பட்டது; அவருக்கு ஜாமீனும் வழங்கப்படவில்லை. இது, அரசின் காவலில் அவரது மரணத்திற்கு நேரடியாக வழிவகுத்தது” என்று மாவோயிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் செய்திகளைப் பகிர்ந்து வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள முதலாளித்துவ ஊடகங்கள் இதனை செய்தியாக வெளியிட்டு கடந்து போக நினைக்கின்றனர்.

இந்தியாவில் 70-களில் புதிய ஜனநாயகப் புரட்சிக்கான திட்டத்தை முன்வைத்து செயல்பட துவங்கிய மார்க்சிய லெனினிய இயக்கம் ஒரு சில ஆண்டுகளிலேயே கடும் அடக்குமுறைக்கு ஆளானது. முன்னணியாளர்கள் மீதான படுகொலைகள் காரணமாக பின்னடைவை சந்தித்தது. அது முதற்கொண்டு பல்வேறு குழுக்களாக செயல்பட்டு வருகின்ற மார்க்சிய லெனினிய இயக்கங்களில் ஆந்திரா, கோவா, மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் செயல்பட்ட மக்கள் யுத்தக் குழு என்று அழைக்கக்கூடிய குழுவும், பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களில் செயல்பட்ட மாவோயிச கம்யூனிச மையம் என்ற குழுவும் இணைந்து 2004 மூதல் மாவோயிஸ்ட் கட்சியாக பரிணமித்தது.

மாவோயிஸ்ட் கட்சியின் முன்னணியாளர்களில் ஒருவரான தோழர் பிரசாந்த் போஸ் என்கிற கிஷன் டா. இணைப்பு நிகழ்ந்தக் காலத்தில் மாவோயிச கம்யூனிச மைய அமைப்பின் செயலாளராக இருந்த, மாவோயிச கம்யூனிச மையத்தின் (MCC) சார்பில் இணைப்புக்கான கையொப்பமிட்ட முக்கியத் தோழராவார். இந்த இணைப்புக்குப் பிறகு சில காலம் மாவோயிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தார். அதன் பின்னர் 2021 நவம்பர் மாதம் அவரது இணையரான தோழர் ஷீலா மராண்டியுடன் கைது செய்யப்படும் வரை மாவோயிஸ்டு அமைப்பின் வடகிழக்குப் பகுதியின் பொறுப்பாளராக செயல்பட்டார். மாவோயிஸ்டு கட்சியின் மத்தியக் குழுவிலும் பொலிட் பீரோ உறுப்பினராகவும் இருந்து வந்தார்.

மாவோயிஸ்டுகள் மீதான தேடுதல் வேட்டை ஆபரேஷன் கிரீன் ஹண்ட், சமாதான்பிரஹார் போன்ற பெயர்களில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டை பல்வேறு முன்னணி யாளர்களை கைது செய்து சிறையில் அடைக்க வைத்தது. பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தோழர் சாய் பாபா இறுதி காலம் வரை சிறையிலேயே பல்வேறு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது போலத்தான் தோழர் கிஷன் டாவின் மரணமும் நேர்ந்துள்ளது.

மாவோயிஸ்ட் என்ற இயக்கத்தில் இணைந்து தனது சொந்த நலன்களையும், அற்ப வாழ்க்கை கண்ணோட்டங்களையும் தூக்கியெறிந்து புரட்சி ஒன்றே தீர்வு என்று உயிர்த் தியாகம் செய்வதற்கு முன்வந்துள்ள பல்வேறு இளைஞர்கள் முதல் முதுபெரும் தோழர்கள் வரை கடந்த சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் சரணடைய வைக்கப்பட்டுள்ளனர்.

புரட்சிகர வாழ்க்கை உயிர் தியாகங்களை கோருகிறது என்பது உண்மையென்ற போதிலும் இவர்கள் மீது நடத்தப்படுகின்ற கொடூரமான தாக்குதல்கள்; தேடுதல் வேட்டை என்று நடத்தப்படுகின்ற படுகொலைகள்; சிறையிலேயே அடைத்து வெளிவர முடியாத அளவிற்கு கொடூரமான சித்திரவதை மூலம் படிப்படியாக கொலை செய்வது ஆகியவை அனைத்தும் பாசிச மோடியின் ஆட்சியின் கீழ் சட்டபூர்வமான வழிமுறைகள் ஆகிவிட்டது.

படிக்க:

 தொடரும் நக்சல் வேட்டை; மாவோயிஸ்ட் தலைவர்கள் படுகொலை; இந்தியப் புரட்சிக்கு பின்னடைவா?

 இந்திய ஒன்றியத்துடன் பேச்சுவார்தைக்கு தயாரான நிலையில் மாவோயிஸ்ட் செயலாளர் படுகொலை!

இதனை எதிர்த்து கேள்வி கேட்கின்ற மனித உரிமை அமைப்புகள் மற்றும் அதன் தலைவர்கள் பொய் வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு அவர்கள் வெளிவருவதற்கே ஒரு சில ஆண்டுகள் ஆகிறது என்ற நிலையில் எந்த விதமான கேள்விக்கிடமின்றி இத்தகைய தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார்கள்.

இடதுசாரிகள் நாடாளுமன்ற சரணடைவுப் பாதை மூலம் இந்தியாவில் தேர்தல் அரசியலில் பங்கெடுத்து கொண்டு செயல்படுகிறார்கள் என்பதால் அவர்களை இன்னும் சில காலம் செயல்பட அனுமதிப்பார்கள் என்பதேயன்றி ஆர்எஸ்எஸ் – பாஜக என்ற பாசிச பயங்கரவாத இயக்கத்தின் குறிக்கோள்களில் முக்கியமான ஒன்று கம்யூனிச இயக்கத்தை அழித்தொழிப்பது என்பது தான்.

மாவோயிஸ்ட் இயக்கத்தில் தோழர் கிஷன் டா போல தலைமறைவு வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு பொதுவெளியில் தெரியாமல் வாழ்ந்து உயிரை துறந்துள்ள பல்வேறு தியாகிகள் வானத்தில் சிவப்பு நட்சத்திரமாக ஒளிர்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

சட்டபூர்வமான வாய்ப்புகளை பயன்படுத்தலாம் என்று புரட்சிகர இயக்கங்களில் முடிவு செய்தவுடன், உத்தரவாதமான குட்டி முதலாளித்துவ வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, புரட்சி பேசுகின்ற ‘போலிப் புரட்சியாளர்கள்’ மலிந்துள்ள இன்றைய சூழலில் இத்தகையத் தோழர்களின் உயிர்த் தியாகம் இந்திய புரட்சிக்கு கலங்கரை விளக்காகவும், முன்னோடி வாழ்க்கையாகவும் அமைகிறது என்பதில் ஐயமில்லை.

புரட்சிகர அமைப்பில் இணைந்து பிரபலமடைந்த உடன் சிறிது காலத்திற்குள் தாக்குப் பிடிக்க முடியாமல் வெளியேறி அந்த பிரபலத்தை வைத்துக்கொண்டு, சிவப்புப் போர்வையில் பிழைப்புவாதத்தை நடத்தி வருகின்ற அற்பவாதிகள் மத்தியில் இப்படிப்பட்ட தோழர்களின் தியாகத்துக்கு அஞ்சாத மரணம் இந்தியப் புரட்சிகரப் போராட்டக் களத்தில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளன.

படிக்க:

♦ போலி மோதல் கொலைகளில் பலியாகின்ற மாவோயிஸ்ட் அமைப்பினர்!

 பழங்குடி மக்களின் தலைவராக பிர்சா முண்டாவிற்கு அடுத்து  உருவாகியுள்ள ஹிட்மா.

ஆயுதப் போராட்டங்களை முன்வைத்து செயல்படுகின்ற மாவோயிச இயக்கம் மட்டுமின்றி புரட்சிகர இயக்கங்கள் மற்றும் ஈழத்தில் செயல்பட்ட விடுதலைப் போராட்ட அமைப்புகள் ஆகியவற்றை சீர்குலைப்பதற்கு உளவுத்துறை பல்வேறு கருங்காலிகளை உருவாக்குகின்றனர். இத்தகைய அமைப்புகளைக் காட்டிக் கொடுப்பதற்கு பொருத்தமான ‘கருணாக்களையும்’, ‘வேணுகோபால்களையும்’ உருவாக்குகின்ற எதிர் புரட்சிகர அரசியலை சமகாலத்தில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எனினும் இத்தகைய துரோகிகள் தற்போதைக்கு மகிழ்ச்சிகரமாகவும், ஆபத்தில்லாத வாழ்க்கையை தேர்ந்தெடுத்து விட்டதாகவும் தற்காலிகமாக ஓய்வு கொள்ளலாம். ஆனால் இது நீடித்து நிற்காது.

அரசியல் போர்த்தந்திரம் அதனை நிறைவேற்றுகின்ற வகையிலான அரசியல் செயல் தந்திரம் இவற்றின் வழியில் நடத்தப்படுகின்ற இராணுவ போர்த் தந்திரம் மற்றும் செயல் தந்திரங்கள் ஆகியவை அனைத்தும் புரட்சிக்கு தலைமை தாங்கக்கூடிய விஞ்ஞானம் என்ற அடிப்படையில் புதிய ஜனநாயகம் நீண்ட காலமாக முன்வைத்து இந்தியப் புரட்சிகர இயக்கங்களுடன் சித்தாந்த ரீதியாக போராடி வருகிறது. இந்த அறிவியல் பூர்வமான புரட்சிப் பாதைக்கு மாற்றாக மாவோயிச அமைப்பினர் வேறொரு பாதையைத் தேர்தெடுத்து அதற்காக தனது இன்னுயிரை ஈந்து வருகின்றனர்.

இந்தியப் புரட்சிக்கான பாதையில் வேறுபட்டு ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் மூலமே புரட்சி நடத்தி முடியும் என்ற நம்பிக்கையில் உறுதி குலையாமல் வாழ்ந்து மடிகின்ற அல்லது சிறையில் அடைக்கப்பட்டுக் கொல்லப்படுகின்ற தோழர்களின் வாழ்நாள் முழுவதும் சமரசம் இன்றி போராடி மடிகின்ற வாழ்க்கைக்கு சிவப்பு வணக்கங்களை செலுத்துவோம்.

இந்தப் பாதையில் கிடைத்துள்ள அனுபவங்களை நேர்மறையிலும், எதிர்மறையிலும் எடுத்துக் கொண்டு இந்தியப் புரட்சியை முன்னெடுத்து செல்வோம்.. கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துகின்ற போராட்டமும் இத்தகைய தியாகங்கள் அர்ப்பணிப்பு இல்லாமல் முன்னேறாது.

ஆல்பர்ட்

புதிய ஜனநாயகம் தினசரி

2 COMMENTS

  1. சிறையிலேயே ‘கொல்லப்பட்ட’ மிக மூத்த தோழர் கிஷன் டா அவர்களுக்கு நமது சிவப்பு அஞ்சலியை செலுத்துவோம்!

    கட்டுரையாளர் தோழர் ஆல்பர்ட் மார்க்சிய – லெனினிய – மாவோ சிந்தனைகளை வழிகாட்டியாகக் கொண்டு இயங்கும் புரட்சிகர கம்மயூனிச இயக்கங்கள் நாட்டில் புதிய ஜனநாயக புரட்சியை நடத்துவதற்காகத் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ள வழிகாட்டு முறைகளையும், இதில் தாக்குப் பிடிக்க முடியாத குட்டி முதலாளித்துவ வாதிகள்
    தனக்கு ஏற்ற சொகுசான வாழ்க்கை முறையைத் தேர்வு செய்து கொண்டு அதே சமயத்தில் ‘புரட்சி’ வேடம் தரித்துத் திரிவதையும், இந்திய பாசிச காவிக் கும்பல் இந்திய நாட்டு மண்ணில் “சிவப்பு” எண்ணமே வளர்ந்துவிடக் கூடாது என்ற ‘தெளிவான’ நோக்கில் கொடும் அடக்கும் முறைகளை கட்டவிழ்த்து விடுவதையும், இவ்வளவுக்கு இடையிலும் சிறியோர் முதல் பெரியோர் வரை உயிர்த் தியாகம் புரியும் தோழர்களின் வாழ்வியலில் இருந்து நாம் சகல வழிகளிலும் கற்றுக் கொண்டு பயணப்பட வேண்டியதன் அவசியத்தையும் புரிந்து கொள்ளும் வகையில் கட்டுரையை செழுமைப் படுத்தி உள்ளார். தோழருக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்!

    உழைக்கும் பாட்டாளிகளுக்கு தேவையான விடுதலைக்கு இப்படிப்பட்ட புரட்சிகர தத்துவங்களை முதன் முதலில் உலகம் புரிந்துகொள்ள முன்னெடுத்தப் ‘பாவி மனுஷன்’ ஆசான் காரல் மார்க்ஸ்
    காலத்தில் கூட அவருக்கு எதிரிகள் பல்வேறு விதமான துன்ப துயரங்களை அனுபவிக்கச் செய்தார்களேயொழிய,
    பூண்டோடு கொலை செய்து முடிக்க வேண்டும் என்ற கொடூரமான எண்ணங்களை கொண்டிருக்கவில்லை.
    ஆனால் தற்காலத்தில் தான் அதிலும் குறிப்பாக ஆர் எஸ் எஸ் பாஜக இந்துத் துவா பாசிச அமைப்புகள் போன்று உலகம் முழுமைக்கும் உருவாகியுள்ள அரசாங்கங்களும் அதன் அடியாள் படைகளும் இத்தகைய அழித்தொழிக்கும் ஈனத்தனமான காரியங்களில் முழு வீச்சோடு செயல்படுகிறார்கள்!

    கட்டுரையாளரின் அறைகூவல்படி கம்யூனிச சித்தாந்தம் என்பது குறிப்பிட்ட வரம்பிற்குள் நின்று விடப் போவதில்லை.
    அந்த விஞ்ஞானத்தை மேலும் வளர்த்தெடுக்க புதைக்கப்பட்ட தோழர்கள் விதைகளாக – செடி மரங்களாக வளர்ந்து கொண்டே இருப்பர் என்பதை எதிரிகள் புரியும் வண்ணம் வினையாற்ற முற்படுவோமாக…! சமூக அறிவியலுக்கு முன்னால் தற்காலிக பின்னடைவுகள்
    நிரந்தரமானதாக மாறிவிடாது என்பதையும் அனைவரும் உணர்வோமாக…!

  2. புரட்சிகர வாழ்வு என்பது பணம் பதவி அதிகாரம் போன்ற சொகுசுகளை வாழ்க்கை ஏற்பவர்கள் இல்லை.
    உயிரை பற்றி கவலைப்படாமல் சித்தாந்தம் காட்டிய வழியில் தீரமாக நடைபோடுபவர்கள் .
    இவர்களின் உணர்வுகளை அர்ப்பணிப்பு களை இன்றைய இளைய சமூகம் உணர வேண்டும்.
    இளைய சமூகம் புரட்சிகர அரசியல் மைய நீரோட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டு அரசியல் அதிகார மாற்றத்தை உருவாக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here