2024 நாடாளுமன்றத் தேர்தலில் முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்திய ஒன்றியத்தை கடந்த 10 ஆண்டுகளாக ஆட்டிப்படைத்து வந்த பாசிச பாஜக தலைமையிலான கூட்டணி 295 இடங்களையும் அதனை எதிர்த்து போட்டியிட்ட இந்தியா கூட்டணி 230 இடங்களையும் பெற்றுள்ளது.
இந்த பட்டியலில் சிலது வேறுபடலாம், ஆனால் பாசிச பாஜகவின் முன்னேற்பாட்டின் படி தேர்தல் ஆணையத்தை வளைத்து போட்டது முதல் வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்தது; மீடியாக்களில் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டது; உண்மையில் பதிவான வாக்குகளை விட ஒரு கோடியே ஏழு லட்சம் வாக்குகளை அதிகமாக போட்டது; எதிர்க்கட்சிகளின் மீது அமலாக்கத்துறை(ED), வருமான வரித்துறை(IT),, போதை மருந்து தடுப்பு பிரிவு(NCB) உள்ளிட்ட அமைப்புகளின் மூலம் மிரட்டியது; பாஜகவிற்கு எதிராக செயல்படுகின்ற சமூக செயல்பாட்டாளர்களை ஊபா(UAPA) சட்டத்தின் கீழ் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைப்பது; நீதிபதிகளை தனது கைக்கூலிகளாக மாற்றி நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்களை ஏவிய குண்டர்களை விடுதலை செய்தது உள்ளிட்ட அனைத்து மோசடிகளின் மூலம் தனது தேர்தல் வெற்றியை நிலைநாட்டிக் கொள்ள எத்தனித்தது.
முதற்கட்ட தேர்தல் துவங்கும் முன்பே பாசிச பாஜகவின் முழக்கம் ‘abki baar 400 paar’ என்பதுதான். ஆனால் அடுத்தடுத்த கட்ட தேர்தல் பரப்புரைகளில் பாஜக வேட்பாளர்களின் மீது நடத்தப்பட்ட மக்களின் தாக்குதல்களை கண்டு இந்த முழக்கத்தை படிப்படியாக பின்வாங்கிக் கொண்டது.
குறிப்பாக கடந்த 40-50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. விலைவாசி கட்டுப்படுத்தப்படாமல் பல மடங்கு உயர்ந்து, அன்றாடம் கடும் துன்பத்தையும் துயரத்தையும் பெரும்பான்மை மக்களுக்கு உருவாக்கியுள்ளது.
நாட்டின் பெரும்பான்மை மக்கள் சார்ந்துள்ள விவசாயம் படிப்படியாக அழித்து ஒழிக்கப்பட்டு வருகிறது. அவர்களிடமிருந்து நிலம் பறிக்கப்பட்டு கார்ப்பரேட்டுகளின் கையில் ஒப்படைக்கப்பட்டு வருவதால், விவசாயிகள் தனது வாழ்க்கையை இழந்து ஓட்டாண்டிகளாகி நாடோடிகளாக மாறியுள்ளனர் என்பது மட்டுமின்றி, அற்ப சொற்ப கூலிக்காக புலம் பெயர்ந்து பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தனது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளர்களின் நிலைமையோ மேலும் மேலும் மோசமாகிக் கொண்டே செல்கிறது, குறைந்தபட்ச கூலி உத்தரவாதம் இல்லாமல் உழைக்கின்ற தினக்கூலி தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நிரந்தர தொழில், நிரந்தர வேலை வாய்ப்பு என்பது படிப்படியாக ஒழித்துக் கட்டப்பட்டு வருகிறது. நிரந்தர வேலை வாய்ப்புகளை வழங்கி வந்த பொதுத்துறை நிறுவனங்களான சுரங்கங்கள், தொலைத்தொடர்பு, மின்சார உற்பத்தி நிலையங்கள், போக்குவரத்து துறைகள், ஆயுத தளவாட உற்பத்தி கூடங்கள் மற்றும் வங்கிகள், இன்சூரன்ஸ் துறைகள் ஆகிய அனைத்திலும் நிரந்தர வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டு தினக்கூலி தொழிலாளர்களின் உழைப்பு உறிஞ்சப்படுகிறது.
நாட்டின் பெரும்பான்மை மக்கள் வறுமைக் கொடுமையிலும், பசி-பட்டினி, சொல்ல முடியாத புதுப்புது வகையான நோய்கள், உளவியல் ரீதியிலான பாதிப்புகள் மூலமாகவும் இன்னமும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத அவலமான வாழ்க்கையிலும் வாழ்ந்து வரும் சூழலில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒன்றிரண்டு தேசங்கடந்த தரகு முதலாளிகள், கார்ப்பரேட்டுகளின் சொத்து மதிப்பு பல்லாயிரம் கோடி உயர்ந்து கொண்டே செல்கிறது.
கடந்த 10 ஆண்டுகால பாசிச பாஜகவின் ஆட்சியில் மக்கள் நலனிலிருந்து திட்டங்கள் அவர்கள் வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கின்ற செயல்பாடுகள் எதுவுமின்றி, கார்ப்பரேட்டுகளை பாதுகாக்கின்ற பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்தியது மட்டுமின்றி, அவர்கள் சூறையாடுகின்ற வகையில் அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்தது மட்டுமின்றி அவர்களுக்கு பல்லாயிரம் கோடி வரிச்சலுகையை வாரி வழங்கியது. இதனால் நாடு முழுவதும் இரு துருவ ஏற்றத்தாழ்வு அதிகரித்துக் கொண்டே செல்கிறது, மக்களின் வாழ்க்கை அழிந்து கொண்டு உள்ளது.
இத்தகைய சூழலில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கு ராமர் கோவில் கட்டுவது, அடுத்து காசி, மதுரா என்று கொக்கரிப்பது; இஸ்லாமியர்களின் மீது இன வெறுப்பு அரசியலை உருவாக்குவது; காஷ்மீரை இரண்டாக துண்டாடியதை பற்றி பெருமை பீற்றுவது; CAA, NRC, NPR போன்ற கணக்கெடுப்புகளை அமல்படுத்துவதை தனது சாதனையாக கூறிக் கொள்வது என்று மக்களின் மத்தியில் புரையோடிப் போயுள்ள சாதி, மத, இனவெறி போன்ற பிற்போக்குத்தனங்களை தூண்டி விடுவதற்கு முயற்சி செய்தனர்.
நாடு முழுவதும் பாசிச பாஜகவிற்கு எதிராக போராடிய புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களின் மீது கடுமையான அடக்குமுறைகளை ஏவி விட்டனர்; எந்தவித முகாந்திரமும் இன்றி சிறையில் அடைத்து பிறகு பொய் வழக்குகளை புனைந்து மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை அவர்களின் செயல்பாடுகளை முடக்கினர்; காடுகளிலும், மலைகளிலும் ஆயுதமேந்தி போராடுகின்ற மாவோயிஸ்டுகளை எந்தவிதமான விசாரணையுமின்றி சுட்டு வீழ்த்தி வருகின்றனர். போராளிகள், புரட்சிகர, ஜனநாயக அமைப்புகளின் மீது NIA என்ற கொலைகார உளவுப்படையை ஏவுவது, ஊபா சட்டத்தின் கீழ் அடைப்பது என்று சட்ட விரோத, பாசிச பயங்கரவாத நடவடிக்கைகளை அமுல்படுத்துகின்றனர்.
தனக்கு எதிராக களமாடுகின்ற நியூஸ் கிளிக், தி ஒயர் போன்ற பத்திரிக்கைகள் மற்றும் ஊடகவியலாளர்களை கொடூரமான வழக்குகளின் கீழ் கைது செய்வது, கெளரி லங்கேஷ் போன்றவர்களின் மீது தாக்குதலை நடத்துவது, அதற்கும் மேலே சென்று தபோல்கர், கல்புர்கி, பன்சாரே, கெளரி லங்கேஷ் போன்ற பகுத்தறிவாளர்களின் மீது சனாதன் சன்ஸ்தான் போன்ற கொலைகார குண்டர் படைகளை கொண்டு கொலை வெறி தாக்குதல் நடத்தி கொன்றொழிப்பது என்றெல்லாம் பாசிச வெறியாட்டத்தின் உச்சகட்டத்தில் நாடு கடந்த 10 ஆண்டுகள் துன்பத்தை அனுபவித்து வந்தது. இதைப் பற்றிய விவாதங்கள் தேர்தலில் ஓரளவிற்கு மேல் நடக்கவில்லை
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய ஒன்றியத்தை ஆண்டு வருகின்ற பாசிச பாஜக மக்களின் அடிப்படை பிரச்சனைகள் பற்றி எதுவும் பேசவில்லை. இஸ்லாமிய இனவெறுப்பு அரசியலைதான் மோடி பிரதானமாக பிரச்சாரம் செய்து வந்தார் என்பது தொடர்ந்து அம்பலமான போதிலும், தேர்தல் நடத்தை விதிகளை கால்தூசுக்கு சமமாக கருதி, ஆளும் பாசிச பாஜக அதை பலமுறை காலில் போட்டு மிதித்த போதும், தேர்தல் ஆணையம் அதை கண்டு கொள்ளவில்லை என்பதும் அம்பலமானது.
தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு தில்லுமுல்லுகளை நிறைவேற்றுவதற்கு மெகா பிளான் செய்திருந்த ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு எதிராக, இந்தியாவில் உள்ள 300 க்கும் மேற்பட்ட குடிமை சமூக அமைப்புகள் மற்றும் 102 முன்னாள் ஓய்வு பெற்ற சிவில் அதிகாரிகள் போன்றவர்களின் பரப்புரைகளாலும், ஜனநாயக சீர்திருத்த அமைப்பு (ADR) உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கினாலும், தனது நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றிக் கொள்ளாத சூழல் பாசிச பாஜகவிற்கு ஏற்பட்டது.
ஆனாலும் வாய்ப்பு கிடைத்த அனைத்து பகுதிகளிலும் மோசடிகளை அரங்கேற்றி நிலவுகின்ற ’ஜனநாயக கட்டமைப்பின்’ மீது தாக்குதலை தொடுத்துள்ளனர். ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் பூபேஷ் தகல் தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்ட வாக்கு எந்திரங்களும், எண்ணப்பட்ட வாக்கு இயந்திரங்களும் வெவ்வேறானது என்று பகிரங்கமாக பேட்டியளித்துள்ளார். இது போன்ற பல்வேறு தில்லுமுல்லுகளை செய்த போதிலும் பாசிச பாஜக முழு வெற்றி பெறவில்லை. தற்போதைய சூழலில் எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லை.
400 இடங்களில் வெற்றி பெற்றால், மூன்றில் இரண்டு பங்கு வெற்றி பெற்று அரசியல் அமைப்புச் சட்டத்தை மனுதர்மத்தின் அடிப்படையில் மாற்றப் போகிறோம் என்ற திமிர்த்தனம், பாஜக 2047 வரை ஆட்சியில் இருக்கும், பத்தாண்டுகளுக்கு பிறகு, 100 ஆண்டுகளுக்கு பிறகு, ஆயிரம் ஆண்டுகளுக்கு திட்டம் என்றெல்லாம் பல்வேறு கனவுகளில் மிதந்த ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலுக்கு தேர்தலில் வந்துள்ள தீர்ப்பு மரண அடி கொடுத்துள்ளது.
பாசிச பாஜகவின் கிரிமினல் கும்பல் தலைவரான அமித்ஷா தொடர்ந்து 400 இடங்கள் கிடைக்கும் என்று பிரச்சாரம் செய்தது; தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாள் கூட 310 சீட்டுகள் உறுதியாகிவிட்டது. வெற்றி பெற்று விட்டோம் என்ற அறிவித்தது; அரசியல் புரோக்கரான பிரசாந்த் கிஷோர் மூலம் பாஜக வெற்றி பெறும் என்று அறிவித்தது போன்ற அனைத்தும் தவிடு பொடியாகியுள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் பாசிச பாஜகவின் கூட்டணி மற்றும் அவர்களின் அடிமைகளான அண்ணா திமுக ஆகிய இரண்டும் 40 இடங்களிலும் துடைத்தெறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்ப்பன பாசிசத்திற்கும், ஆரிய பார்ப்பன கும்பலின் சித்தாந்தத்திற்கும் எதிராக தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது என்பதை நிரூபித்துள்ளது என்பது மட்டுமின்றி, பெரியாரின் மண் என்பதும் தமிழகத்தில் தொடர்ச்சியாக பார்ப்பனியத்துக்கு எதிராக போராடி வருகின்ற திராவிட இயக்கங்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளின் பங்கு ஆகியவை அனைத்தும் ஒன்று சேர்ந்து இந்த தேர்தலில் பாசிச பாஜக கும்பலை முற்றாக துடைத்தெறிந்துள்ளது.
மேலும் பாசிச பாஜகவின் கோட்டை என்று கருதப்படுகின்ற உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் சமாஜ்வாதி கூட்டணியின் வெற்றி காரணமாக கடுமையான பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளது.
தேர்தலில் பாசிச பாஜகவை தோற்கடிக்கவே முடியாது என்று ’மார்க்சிய புரோகிதர்கள்’ ஆருடம் சொல்லிக் கொண்டிருந்ததை நாம் விமர்சித்த போது முகநூல் பக்கங்களில் சிலர் உளறிக் கொண்டிருந்தனர். ஆனால் தேர்தலில் பாஜக தோல்வியடைந்தவுடன் அது மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று பம்மாத்து காட்டுகின்றனர்.
நாடு தழுவிய அளவில் நடக்கின்ற போராட்டங்கள் அனைத்தும் மக்களின் முன்முயற்சியால் நடப்பவைகளாகவே உள்ளன. குறிப்பிட்ட அமைப்புகள், கட்சிகள் மக்களுடைய போராட்டங்களில் தலைமை தாங்கி போராடுவதில் பின் தங்கியே உள்ளது என்ற உண்மையை நேர்மையாக பரிசீலிக்காமல் தன்னெழுச்சியாக நடக்கின்ற போராட்டங்கள்தான் பாசிச பாஜகவை தோற்கடித்தது என்று பேசிக் கொண்டிருப்பது அரசியல் அறிவற்ற தற்குறித்தனமாகும். மேலும் தனது ’அரசியலற்ற, சித்தாந்தமற்ற, லும்பன் அரசியலை’ மறைக்க மக்கள் போராட்டம் என்ற போர்வையில் ஒளிந்துக் கொள்கின்றனர்.
பாசிசத்தை வீழ்த்துவது என்பது கம்யூனிஸ்டுகள் மட்டும் முயற்சி செய்து நடக்கின்ற செயல் அல்ல என்பதால் தான் ஐக்கிய முன்னணி ஒன்றை கட்டுவோம் என்பதற்கு அறைகூவல் விடுக்கின்றோம். நாடு தழுவிய அளவில் மக்களுக்கு ஒரே எதிரிதான்! அதை எதிர்த்து போராடுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒரே நோக்கத்துடன் பாசிசத்தை முறியடிப்பதற்கு ஓரணியில் திரள வேண்டும் என்பதுதான் மார்க்சிய லெனினிய அறிவியலாகும்.
மார்க்சிய லெனினியம் முன்வைக்கக்கூடிய ஐக்கிய முன்னணி என்ற அமைப்பு வடிவம் மற்றும் நடைமுறைதான் பாசிச பாஜகவை முற்றாக வீழ்த்தும், அந்த ஐக்கிய முன்னணியில் கலந்து கொண்டு செயல்படுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகளில் யார் எப்படி போராடுகிறார்களோ அதை பொறுத்தே அவர்களின் தலைமையை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள், முன்கூட்டியே கம்யூனிஸ்டுகள் தலைமையில்தான் அனைவரும் ஒன்றுதிரள வேண்டும் என்று பேசுவது குறுங்குழுவாத கண்ணோட்டம் மற்றும் எப்போதுமே அதிகாரத்தை குறிவைத்து கம்யூனிஸ்டுகள் வேலை செய்வதை போன்ற தவறான வாதமாகும். உட்கட்சி தேர்தலுக்கே ’வீரமர்தினிகளை’ தேர்வு செய்து அனுப்புபவர்களுக்கு இது புரியாததல்ல!
வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் மேற்கண்ட தவறான வாதங்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்பது மட்டுமின்றி, பாசிச பாஜகவிற்கும், கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கும் எதிரான மக்களின் போராட்டத்திற்கு ஒரு உந்துசக்தியை உருவாக்கிக் கொடுத்துள்ளது என்றால் அது மிகையில்லை.
இந்தியாவில் உள்ள மார்க்சிய லெனினிய இயக்கங்களில் முன்னோடியாகவும், பாசிச அபாயத்தை புரிந்து கொண்டதன் அடிப்படையிலும், தேர்தலில் பாசிச பாஜகவை தோற்கடிப்போம் என்பது மட்டுமின்றி, அதற்கு எதிராக நாடு தழுவிய அளவில் செயல்படுகின்ற தேசிய கட்சிகளில் ஒன்றான காங்கிரசை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற முடிவையும் எடுத்து தமிழ்நாடு மற்று புதுச்சேரி முழுவதும் பிரச்சாரத்தை கொண்டு சென்றன புரட்சிகர அமைப்புகள்.
படிக்க:
♦ தேர்தல் முடிவுகளும், பாட்டாளி வர்க்க இயக்கத்தின் கடமைகளும்!
♦ தேர்தல் கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில் மோடிக்கு சொம்படித்த கோடி மீடியாக்களுக்கு செருப்படி!
தேர்தலில், “பாசிச பாஜகவை தோற்கடிப்போம்! இந்தியா கூட்டணியை ஆதரிப்போம்!” என்று பிரச்சாரம் செய்தது என்பதோடு புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் கடமை முடிந்துவிடவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். மீண்டும் இந்திய ஒன்றிய ஆட்சியை பாசிச பாஜக ஆர்எஸ்எஸ் கும்பல் கைப்பற்றுவதன் மூலம் புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் வேலை இரண்டு மடங்கு கூடியே உள்ளது.
கடந்த பத்தாண்டு காலத்தில் பாசிச பாஜக பறித்தெடுத்த உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுப்போம். ஜிஎஸ்டி வரிவிதிப்பு,, மாநிலங்களின் நிதியாதாரங்களை கைப்பற்றிக் கொள்வது, மாநிலங்களின் உரிமையை மறுக்கின்ற பாசிச சர்வாதிகாரம், அம்பானி, அதானி போன்றவர்களை மேலும் மேலும் கொழுக்க வைக்கின்ற கார்ப்பரேட் பொருளாதாரக் கொள்கை, இந்து மதத்தின் பெயரால் நடத்தப்படும் காவி பாசிச பயங்கரவாத நடவடிக்கைகள் ஆகிய அனைத்தையும் முறியடிக்கின்ற வகையில் தொடர்ந்து போராடுவோம்.
பாசிச பாஜகவை வீழ்த்துவதற்கு குறைந்தபட்ச செயல் திட்டத்தின் கீழ் ஐக்கிய முன்னணி ஒன்றை கட்டுவதும், அதன் மூலமாக நிலவுகின்ற கார்ப்பரேட் ஆதரவு அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கொள்கைகளுக்கு மாற்றாக மக்கள் நலனிலிருந்து புதிய வகையிலான அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கொள்கைகளை முன்னிறுத்தி ஜனநாயக கூட்டரசு ஒன்றை நிறுவுவதுதான் உடனடியான கடமையாக உள்ளது.
- மணிமாறன்