பிரிட்டன் ஆட்சி காலத்தில் விக்டோரியா மகாராணி பிரகடனத்தின் கீழ் இந்தியாவில் உள்ளாட்சி, நகராட்சி முதல் இந்திய ஒன்றியத்தை ஆளுகின்ற நாடாளுமன்றம் வரை புதிய வடிவிலான ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்பதை முன் வைத்தது காலனியாதிக்கம்.
அந்தக் காலனியாதிக்கத்தின் நினைவாக எழுப்பப்பட்டுள்ள பழைய நாடாளுமன்ற கட்டிடம் தற்போதைய நமது ’நவீன இந்தியாவிற்கு’ (அதாவது கார்ப்பரேட் காவி பாசிச) ஒத்து வராது என்பதால் *புதிய நாடாளுமன்றக் கட்டடம் சுமார் 64,500 சதுர மீட்டர் பரப்பளவுக்கு முக்கோண வடிவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டடத்துக்கு `சென்ட்ரல் விஸ்டா’ எனச் சிறப்பு பெயரும் இடப்பட்டிருக்கிறது. இத்தகைய கட்டிடத்தை கட்டி அதில் குடியேறுவது என்றும், சொந்த நாட்டு மக்களை ஆதார் கொண்டு கண்காணிப்பது போல் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அதிநவீன கருவிகளின் மூலம் கண்காணிப்பதற்கு வசதிகளைக் கொண்ட நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டது.
அண்மையில் டெல்லியில் பெய்து வருகின்ற கனமழை காரணமாக புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஒழுக துவங்கியது என்பது மட்டுமின்றி, ஒழுகுகின்ற தண்ணீரை பிடிப்பதற்கு நீல நிற வாளியை வைத்து பிடித்ததால் சமூக வலைதளங்களில் மோடி ஆட்சி கழுவி ஊற்றப்படுகிறது.
இந்த நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டும் போது இது மோடியின் கனவு திட்டம் என்றும், அதிநவீன ஹை டெக் வசதிகளை கொண்டது என்றும் மிகவும் ஜம்பம் அடித்துக் கொண்டது பாசிச பாஜக.
இந்த நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டத் துவங்கிய போது ”இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் ஆயுட்காலம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் எனவும், பூகம்பத்தைத் தாங்கும் வகையில் வலுவாக வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும்” தெரிவிக்கப்பட்டிருக்கிறது
இந்த மாபெரும் கட்டிடத்தை கட்டுவதற்கான ’தேசபக்த’ பணியை முடிப்பதற்கு சுமார் ரூ.971 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டு, அதன் கட்டுமானப் பொறுப்பை TATA நிறுவன குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த குழுமம் இடையில் ஒரு ரூபாய் காசு வாங்காமல் கட்டிடத்தை கட்டி தருவதாக ஃப்பேக் நியூஸ் பரப்பியது.
இந்தப் புதிய கட்டடத்தினுள் அதிநவீன அரசியலமைப்பு மண்டபம் (State-of-the-art Constitutional Hall), நவீன ஆடியோ-விஷுவல் வசதிகளுடன் கூடிய ஆலோசனைக் கூட்ட அரங்குகள், எம்.பி-க்கள் ஓய்வுவெடுக்கும் அறைகள், நிலைக்குழுக்களுக்கான அறைகள், உணவகம், நூலகமும் இடம்பெற்றிருக்கின்றன.
*மிக முக்கியமாக மக்களவை, மாநிலங்களவைக் கூட்டங்களுக்காக தற்போது இருப்பதைவிட அதிகமான உறுப்பினர்களுக்கு இடமளிக்கும் வகையில் அதிக இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்றெல்லாம் மோடி ஆதரவு கோடி மீடியாக்கள் அலப்பறை செய்தன.
”நரேந்திர மோடி தலைமையிலான பா.ச.க. அரசு புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைக் கட்டுவதற்கான திட்டத்தை 2019ஆம் ஆண்டு தீட்டியது. 2020-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 10ஆம் நாள் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். நான்கு தளங்களில் மொத்தம் 16,500 சதுர மீட்டர் பரப்பளவில் 862 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என்ற மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இக்கட்டடம், கட்டி முடிப்பதற்குள் சுமார் 1200 கோடியை எட்டியுள்ளது
மன்னராட்சிக் காலத்தின் அதிகாரக் குறியீடான செங்கோலை இந்தியாவின் பழைய மரபுகளைக் காத்தல் என்ற பெயரால் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு நிகழ்ச்சியில், நேருவிடம் அளிக்கப்பட்ட செங்கோலைத் தமிழ்நாட்டிலிருந்து திருவாவடுதுறை ஆதீனம் தலைமையில் சென்ற 20 சைவ மடங்களின் ஆதீன கர்த்தர்கள் மோடியிடம் வழங்கினர். மோடி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து அச்செங்கோலை வணங்கினார். பின்பு அவைத் தலைவர் இருக்கை அருகே அதை நிறுவினார். இந்தியாவில் நடப்பது மக்களாட்சியா? மன்னர் காலத்து ஆட்சியா? ஆர்எஸ்எஸ் தீட்டித்தரும் திட்டத்தின்படி இந்தியாவில் மன்னர் காலத்து வருணாசிரம-சாதியக் கட்டமைப்பை மீண்டும் நிலைநாட்டுவதன் அறிகுறியே நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட செங்கோல் ஆகும்.
கருநாடகத்தில் உள்ள சிருங்கேரி சங்கர மடத்தைச் சேர்ந்த பார்ப்பனர்கள் கணபதி ஹோமம் செய்தனர். வேத மந்திரங்கள் முழங்க தலைமை அமைச்சர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைத்தார். அங்கிருந்தவர்கள் மோடி மோடி என்று முழக்கமிட்டனர். இந்நிகழ்வு பேரரசர்கள் முடிசூட்டு விழாவைப் போல் காட்சி அளித்தது.” என்று இந்த நாடாளுமன்ற கட்டிடத்தின் யோக்கியதையையும் அது கொண்டு வரத் துடிக்கும் சனாதன இந்தியாவையும் தோலுரித்துக் காட்டினார் தோழர் வாலாசா வல்லவன்.
படிக்க:
♦ நாடாளுமன்றம்: தேவை புதிய கட்டிடம் அல்ல!
முதலாளித்துவ ஜனநாயகத்தின் ஆட்சி வடிவமான பாராளுமன்ற ஜனநாயக முறையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பாஜக ஒரு போதும் விரும்பவில்லை; மாறாக 500 ஆண்டுகளுக்கு பின்னோக்கிச் சென்று காட்டுமிராண்டிகளை போல பிற்போக்கு பார்ப்பன மதவெறி ஆட்சியை நடத்துவதற்கு துடித்துக் கொண்டுள்ளது. அதனால்தான் ஒரு புறம் மன்னரைப் போலவும், மறுபுறம் கார்ப்பரேட் CEO போலவும் பாசிச மோடி வலம் வருகிறார்.
1947 இல் சுதந்திரம் வாங்கியதாக சொல்லப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட போலி ஜனநாயக அரசு கட்டமைப்பு 2008க்கு பின்னர் அதன் உள்ளடக்கம் படிப்படியாக சொல்லிக்கொள்ளப்படும் ஜனநாயகத் தன்மையை இழந்து வந்தது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் ஆர்எஸ்எஸ் பாஜக வெற்றி பெற்ற பிறகு அதன் உள்ளடக்கம், ”பாசிசமயமாவதும், அதற்கு எதிரான ஜனநாயக சக்திகளின் போராட்டமும்” என்ற தன்மையை பெற்றது.
ஜனநாயக சக்திகள் அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை கொண்டு அதனை பாதுகாப்பதற்கு போராடிக் கொண்டிருக்கும் வேளையில், பாஜக அதனை உருவி அப்பட்டமான பாசிச சர்வாதிகார ஆட்சியை, அதாவது ஒரு கட்சி சர்வாதிகார ஆட்சி நிறுவுவதற்கு அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறது.
இதுதான் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தற்போதைய இழிந்த நிலைமை. ‘கட்டிடத்தின் கூரை ஒழுகுகிறது’ என்று கவலைப்படுவது பெரிய விடயம் அல்ல! சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகம் ஒழித்து கட்டப்படுகிறது என்பதுதான் நாம் மக்களிடம் கொண்டு சென்று அதற்கு எதிராக போராட்ட அலையை உருவாக்க வேண்டிய விடயமாகும்..
மக்கள் எழுச்சியின் மூலம் பாராளுமன்றத்தின் பாசிச உள்ளடக்கம் துக்கியெறியப்படட்டும்; மேலிருந்து நாட்டை ஆளுகின்ற அமைப்பு முறையில் ஜனநாயகத் தன்மையும், கீழிருந்து அதற்கு ஆதரவும், நிர்பந்தமும் கொடுக்கும் புதிய ஆட்சி வடிவமாக ஜனநாயக கூட்டரசு ஒன்றை உருவாக்க தொடர்ந்து போராடுவோம்.
- மருது பாண்டியன்.
பாசிசமயமாகியுள்ள நாடாளுமன்றம்!
மதவெறி ஆட்சி மட்டுமல்ல. பண்ணையாரை ஆண்டு கொண்டிருக்கிறார் மோடி…