உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 2021 ஆம் ஆண்டு பைக்கில் லிப்ட் தருவதாக அழைத்துச் சென்ற இளைஞர்கள் இரண்டு பேர், மறைவான இடத்தில் வைத்து, சிறுமியின் மார்பை பிடித்து இழுத்து சில்மிசம் செய்து, பைஜாமாவை அவிழ்த்து உள்ளனர். சிறுமி கூச்சலிடவே மக்கள் திரண்டதையடுத்து இரண்டு இளைஞர்களும் தப்பி ஓடி விட்டனர். சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த இளைஞர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ்
வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மார்பகங்களை பிடிப்பதோ, பைஜாமாக்களை அவிழ்ப்பதோ
பாலியல் குற்றமாகாதாம்!?
இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா கடந்த மார்ச் 17 இல் வழங்கிய தீர்ப்பில், “சிறுமியின் மார்பகத்தை பிடித்தது; ஆடையை அவிழ்த்ததை தவிர பாலியல் வன்கொடுமைக்கான எந்த ஆதாரமும் இல்லை; சிறுமி நிர்வாணமாக்கப்படவில்லை; மார்பகத்தை பிடித்தது, ஆடையை அவிழ்த்தது மட்டும் பாலியல் வன்கொடுமையாக கூறிவிட முடியாது” – என்றதொரு ‘அதி புத்திசாலித்தனமான’ தீர்ப்பினை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மேற்கண்ட நீதிபதி தமது தீர்ப்பில் பதிவு செய்து, வழக்கு போக்சோ சட்டத்தில் அடங்காது என்பதாக வியாக்கியானம் செய்து விட்டார்.
இதனை எதிர்த்து சிறுமியின் தாயார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அவசர வழக்காக எடுக்குமாறு கோரியபொழுது நீதிமன்றம் முதலில் மறுத்தது.
இப்பிரச்சினை பெரும் சர்ச்சையாக நாடு முழுவதும் கிளம்பியவுடன் இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்று, ஒன்றிய அரசு, உ.பி. மாநில அரசு, மற்றும் மனுதார்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இவ்வழக்கு மார்ச் 26-ல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி. ஆர்.கவாய், அகஸ்டின் ஜார்ஜ் மாசி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்துள்ளது.
அப்பொழுது நீதிபதிகள், “இது மிகவும் தீவிரமான விஷயம். (அலகாபாத் உயர்நீதிமன்ற) நீதிபதியின் முழு உணர்ச்சியற்ற தன்மையை காட்டுகிறது. தீர்ப்பு ஒத்திவைத்து 4 மாதங்களுக்கு பிறகு தான் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் நீதிபதி அவசரமாக அளித்த தீர்ப்பல்ல; இது மனிதாபிமானமற்ற அணுகுமுறை; நீதிபதிக்கு எதிராக இது போன்ற கடினமான வார்த்தைகளை(?) பயன்படுத்த நாங்கள் வருந்துகிறோம்; எனவே இந்த தீர்ப்புக்கு தடை விதிக்கிறோம்; இந்த வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எடுத்து விசாரித்து உரிய முடிவு அறிவிக்க வேண்டும்; இந்த வழக்கு மீண்டும் இரண்டு வாரத்திற்குப் பிறகு விசாரிக்கப்படும்” என்பதாக உத்தரவிட்டனர்.
படிப்பறிவற்ற பாமரர்கள் கிராமத்தில் கூட்டும் பஞ்சாயத்தில் கூட இவ்வளவு இழிந்த அலகாபாத் போன்ற தீர்ப்பினைக் காண முடியாது!
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா-வுக்கும் மகள்கள் இருக்கக்கூடும்; தமது குடும்பத்தில் பல்வேறு பெண்கள் இருக்கக்கூடும்; மிக நெருங்கிய உறவுப் பெண்கள் இருக்க கூடும்; அவ்விதப் பெண்களுக்கு இப்படிப்பட்ட முறையில் சில ரவுடி இளைஞர்கள் மார்பகங்களை பிடித்து இழுத்து பைஜாமாவை கழட்டி அவமானப்படுத்தி இருந்தால் இந்த நீதிபதி அன்றி வேறு நீதிபதி இதே போன்ற தீர்ப்பினை அளித்திருப்பாரே யானால் தற்போது தீர்ப்பு கூறியிருக்கும் நீதிபதி மிஸ்ரா ஏற்றுக் கொண்டிருப்பாரா? அல்லது பொங்கி எழுந்திருப்பாரா? மக்கள் தான் விட்டு ஒதுங்கி விடுவார்களா? என்பதை நாம் தான் பரிசீலிக்க வேண்டும். எவ்வளவு மிக இழிவான தீர்ப்பினை இந்த நீதிபதி மிஸ்ரா வழங்கி இருக்கிறார் என்பதனை பார்க்கின்ற பொழுது இந்திய நாட்டின் நீதி பரிபாலன முறை பல்வேறு காலகட்டங்களில் – மிகக் கொடுமையான வழக்குகளில் – இதைவிட மோசமாகவுங் கூட தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை நாம் அவதானித்து வருகிறோம்.
ஊழல் பணக் குவிப்பில் உயர் நீதிமன்ற நீதிபதி
‘பெரும் சாதனை’!
ஒரு புறம் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மிஸ்ரா போன்றோரின் இழிவான தீர்ப்புக்கள் ஒருபுறம் வந்து கொண்டிருக்கையில், உயர்நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த்
வர்மா என்பவரின் டெல்லி துக்ளக் நகர் வீதியில் உள்ள வீட்டில் தீப்பிடிப்பதை அணைக்கச் சென்றபோது தீயணைப்பு படை வீரர்களுக்கு அவ்வீட்டில் அதிர்ச்சிக் காத்துக் கிடந்தது. ஆம், மூட்டை மூட்டையாக பண குவியல். (16) பதினாறு கோடி ரூபாய் பாதி எரிந்த நிலையிலும், (26) இருபத்தாறு கோடி ரூபாய் ரொக்கமாகவும் கைப்பற்றப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றம் இது தொடர்பாக விசாரணை செய்ய மூன்று நீதிபதிகளை கொண்ட குழு அமைத்துள்ளது.
படிக்க:
♣ வி.எச்.பி கூட்டத்தில் மதவெறியைக் கக்கிய உயர்நீதிமன்ற நீதிபதி மீது நடவடிக்கை எடு!
♣ மகா கும்பமேளா: மக்கள் வரிப்பணத்தில் மூடத்தனத்தை வளர்க்கும் பாஜக அரசு!
பாராளுமன்றத்தின் நிலையையும் தெரிவிக்கக் கோரியுள்ளது. குற்றச்சாட்டுக்கு உள்ளான நீதிபதி வர்மாவோ இது தன் மீது ஏவப்பட்ட சதி என்றும், கொடிக்கணக்கான தொகை எனது வீட்டில் எப்படி வந்தது என்று தமக்கே தெரியாது என்றும் நாடகம் ஆடுகிறார். உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், பாராளுமன்றம், கொலிஜியம் என்றெல்லாம் என்னென்ன பெயர்களையோ வைத்துக் கொண்டு நாட்டு மக்களை வஞ்சித்து ஏமாற்றி கோடி கோடியாய் கொள்ளை அடிக்கிறார்கள் பல நீதிபதிகள்! அவ்வித குற்ற வழக்கிலிருந்து நீதிபதிகளுக்கான பிரக்தியேக சலுகைகளில் இருந்து எளிதாக தப்பித்து விடுகின்றனர்! இதுதான் நீதித்துறையின், நீதிபதிகளின் லட்சணங்களாக இருக்கின்றன. நீடித்து வருகின்றன.
எனவே இத்தகைய வர்க்க சார்புடைய சமூக கட்டமைப்பில் இவ்விதமான அலங்கோலமான தீர்ப்புக்களை – செயற்பாடுகளை நாம் கண்டு அதிர்ச்சியடைந்து விட முடியாது.
எனவே, இந்த சமூகக் கட்டமைப்பில் உள்ள முழுமையான கோளாறுகள் நொறுக்கப்படும் வரை இத்தகைய அவலங்கள் நீடித்துக் கொண்டே தான் இருக்கும். இதற்கு நிரந்தரமான தீர்வு என்பது உழைக்கக்கூடிய மக்கள் தமக்கான அதிகாரத்தை பெறுவதற்கு அரசியல் ரீதியாக முதிர்ச்சி பெற்று களம் கண்டு சமர் புரிந்து வெற்றிவாகை சூடுவதில் தான் அடங்கியுள்ளது.
அதுவரை இத்தகைய கேவலமான தீர்ப்பு வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா மீது தக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்!
உடனடியாக அவரது பதவி பறிமுதல் செய்யப்படல் வேண்டும்!
கோடி கோடியாய் தமது வீட்டில் பணத்தை குவித்து வைத்திருந்த டெல்லியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மாவின் பதவியும் பறிக்கப்படல் வேண்டும்!
ஊழல் பணம் முழுவதும் அரசு கைப்பற்ற வேண்டும்!
அவர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!
இவைதான் இடைக்காலத்தில் இந்த இரு வேறுபட்ட நீதித்துறை சார்ந்த பிரச்சனைகளில் இந்திய நாட்டு மக்கள் எழுப்ப வேண்டிய கோரிக்கை முழக்கமாகவும் போராட்டமாகவும் இருக்க முடியும்!
- எழில்மாறன்
மேலும் விஎச்பி கூட்டத்தில் நீதிபதி தான் ஒரு சங்கி என்பதனை நிரூபித்துக் கொண்டு பங்கேற்பதும் விஷத்தை கக்குவதும் இந்த நாட்டின் மிகப் பெரும் சாபக்கேடு!! அதனையுங்கூட இக்கட்டுரையில் நான் சேர்த்து விவரித்து இருக்க வேண்டும்!