த்திரிக்கையாளர்களை சந்தித்து கேள்விகளுக்கு பதில் தர துப்பின்றி ஓடி ஒளியும் பிரதமர் மோடி, வழக்கம்போல் தனது அறிக்கையை மட்டுமே PTI   மூலம் வெளியிட்டுள்ளார். வருகின்ற நூறாவது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடும்போது, அதாவது 2047 ஆம் ஆண்டில் நம் நாடு வளர்ந்த நாடாக இருக்கும் என்றும், இந்நாட்டில் ஊழல், சாதி, மதவாதம் உள்ளிட்ட தீய சக்திகளுக்கு  கட்டாயம் இடம் இருக்காது என்றும் இந்த நேர்காணல் நாடகத்தில் கோயபுல்ஸ் பாணியில் அடித்து விட்டுள்ளார் பிரதமர் மோடி.

சுய தம்பட்ட பிரியர் மோடி!

தற்போது இந்தியாவின் தலைமையில் ஜி 20 கூட்டங்களை அருணாச்சல பிரதேசத்திலும், காஷ்மீரின் ஸ்ரீ நகரிலும் நடத்தியதையே பெரும் சாதனையாக காட்டுகிறார்.  பிற கட்சிகளின் ஆட்சியில் சர்வதேச கூட்டங்கள் அனைத்தும் டெல்லியில் மட்டுமே நடந்திருந்ததாகவும், பிற மாநில மக்களின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்ததாகவும், தனது ஆட்சியில் அப்படியில்லாமல் அனைத்து மாநிலங்களிலும் சர்வதேச கூட்டங்களை நடத்தும் அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ளதாக முன்னேறி இருப்பதாகவும் தனக்குத்தானே புகழ் மாலை சூட்டிக் கொள்கிறார்.

இந்தியாவில் மோடி அரசு முன்னெடுத்து வரும் திட்டங்கள் உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைக்கிறதாம். இந்தியாவின் தொலைநோக்கு வார்த்தைகளை உலக நாடுகள் வெறும் கருத்துக்களாக பார்க்காமல், எதிர்காலத்திற்கான வழிகாட்டுதலாகவே பார்க்கின்றனவாம்.

அதாவது உலக நாடுகள் பொருளாதார மையப் பார்வையுடன் இருப்பதாகவும், தற்போது மக்களை மையப்படுத்தி சிந்திப்பவர்களாக மாறி வருவதாகவும், இத்தகைய மாற்றத்திற்கு இந்தியா தான் வினையூக்கியாக செயல்பட்டு வருவதாகவும் அடித்து விடுகிறார் மோடி. ஆனால் இங்கு ஒரு கேள்வி வருகிறது. மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா  எந்த இடத்தில் மக்களை மையப்படுத்தி சிந்தித்து உருப்படியாக வேலை செய்து இருக்கிறது?

வாயாலேயே வறுமையை ஒழித்து விட்ட மோடி !

நீண்டகாலமாக உலக நாடுகள் இந்தியாவை பசியால் வாடும் மக்கள் நிறைந்த நாடாகத்தான் பார்த்தனராம். தற்போது அப்படிப்பட்ட இந்தியா உயர்ந்த லட்சியம் மற்றும் திறமையானவர்கள் கோடிக்கணக்கில் இருக்கும் நாடாக மாறிவிட்டதாம்.மேலும் இந்தியாவின் அதிக மக்கள் தொகையால் நமக்கு சிறந்த பலன் கிடைக்கப் போகிறதாம். வளர்ச்சிக்கான அடித்தளம் அமைக்கும் சிறந்த வாய்ப்பு இன்றைய இந்தியர்களுக்கு, அதாவது இளைஞர்களுக்கு உள்ளதாம். இப்படி எல்லாம் ஜோசியம் சொல்கிறார் மோடி.

சில தினங்களுக்கு முன்புதான் உலக வங்கி முன்வைத்த அறிக்கையானது, இந்தியாவில் 70 சதம் பேர் பட்டினியில் இருப்பதாக தெரிவித்துள்ளது. அது பற்றி எல்லாம் கவலையே படாமல், நம்மில் எத்தனை பேர் அதை நினைவில் வைத்திருக்க போகிறோம் என்ற அசட்டு துணிச்சலுடன் கற்பனையாக அள்ளி வீசுகிறார் மோடி. அதை அப்படியே இந்து தமிழ் திசை போன்ற பத்திரிகைகள் முதல் பக்கத்தில் விரிவாக எழுதி தனது விசுவாசத்தை காட்டிக் கொள்கிறது.

உலக சவால்களுக்கு இந்தியா தீர்வு காண்கிறதா?

நம் நாடு ஒரு காலத்தில் மிகப்பெரிய சந்தையாகத்தான் பார்க்கப்பட்டதாம். ஆனால் தற்போது உலகத்தின் சவால்களுக்கு தீர்வு காணும் நாடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறதாம்.

எதை வைத்து இப்படி கதை அளக்கிறார், மோடி ஜி? உலகின் பல நாடுகளில் இஸ்லாமிய பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்தியாவில் புல்டோசர்கள் மூலமும், தீப்பந்தங்கள் மூலமும், இந்திய குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு மூலமும், மொத்தமாக சிறுபான்மை மதத்தினரை, குறிப்பாக இஸ்லாமியர்களை ஒழித்துக் கட்ட எடுத்து வரும் முயற்சிகளை பற்றித்தான் பெருமிதம் கொள்கிறாரோ?

இலவசங்களை ஒழித்தால்தான் முன்னேறுமாம்!

இலவச கலாச்சாரத்தை எதிர்க்கட்சிகள் தான் ஊக்குவிக்கின்றனவாம். இது பொறுப்பற்ற நிதிக் கொள்கையாம். இத்தகைய கொள்கையால் குறுகிய கால அரசியல் பலம் தான் கிடைக்குமாம். மாறாக, நீண்ட காலத்துக்கு மிகப்பெரிய விலையை நாம் கொடுக்க வேண்டி இருக்குமாம்..

சமூகத்தின் அடுத்தட்டில் உள்ளவர்களை பொருளாதார ரீதியாக, தற்காலிகமாக சற்று உயர்த்த, குறைந்தபட்சம் மூன்று வேளை அரைகுறையாகவாவது உண்ணவைக்க இந்த இலவசங்கள் அவசியமாகின்றன. அவர்களும் நாமும், ஆண்டையும் அடிமையும், ஒன்றுபோல் உண்ணவோ உடுத்தவோ எடுக்கப்படும் குறைந்தபட்ச முயற்சிகளை கூட அனுமதிக்க பார்ப்பனியம் விரும்புமா? விரும்பாததால் தான் இலவசங்களை பற்றி இப்படி இட்டுக்கட்டுகிறார்கள் காவி பாசிஸ்டுகள்.

இப்படி எல்லாம் அளந்து விடும் மோடியின் அரசு இலவசங்கள் தருவதே இல்லையா ஆம் மக்களுக்கு தருவதில்லை ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு லட்சக்கணக்கான கோடிகளை வாரி வழங்குகிறது.

வசுதைவ குடும்பம் என்பது வெறும் முழக்கம் அல்லவாம். நமது கலாச்சார நெறிமுறைகளில் இருந்து பெறப்பட்ட பரந்த தத்துவம் என பரவசமடைகிறார் மோடி. வசுதைவ குடும்பகம் (சமசுகிருதம்: वसुधृव कुटुम्बकम्) என்பது இந்து சமய நூல்களில் ஒன்றான மகா உபநிடத்தில் காணப்படும் சமஸ்கிருத வசனமாகும். இந்த வசனத்தின் பொருள் “உலகம் ஒரே குடும்பம் (“The World Is One Family”) என்பதாகும்.

ஆனால் இந்த குடும்பத்திற்குள் மத சிறுபான்மையினர் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் வர வாய்ப்புள்ளதா? குடும்பத்தில் இந்துக்களாவது சமத்துவத்துடன் நடத்தப்படுவார்களா? அதாவது பார்ப்பனர்கள் சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், சண்டாளர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ண இடம் இருக்குமா? நமக்குத்தான் இடம் இருக்காது. ஆனால் மோடியின் விருந்தினர்களுக்கு இடம் உண்டு.

இதையும் படியுங்கள்:

இஸ்லாமியர்கள் மீது அதிகரித்துவரும் ஆர்எஸ்எஸ் குண்டர்களின் தாக்குதல்கள்!

ஹரியானா மதக்கலவரம்; பாஜகவின் திட்டம்!

மோடியின் நண்பர்களான அமெரிக்க, ஐரோப்பிய கார்ப்பரேட் முதலாளிகளாகவும் தலைமை அதிகாரிகளாகவும் இருக்கும் கிறிஸ்தவர்களுடன் கூடிக் கொள்ளலாம். மதத்தால் இஸ்லாமியர்களே என்றாலும் சவுதி அரேபியாவின் அரபு சேர்க்குகளுடன் நட்பு பாராட்டலாம். அகிம்சையை விரும்பாத பௌத்தர்களே என்றாலும் சிங்கள பௌத்த பேரினவாத தலைவர்களுடன் விருந்துண்ணலாம். இப்படி உலகை ஆள விரும்புகின்ற எஜமானர்களுக்கு கீழ்ப்படிந்து சேவகம் செய்யும் அடிமையின் குடும்பமாக இந்தியாவை மாற்றவே மோடி விரும்புகிறார்.

2047 இல் என்ன மாற்றம் வந்திருக்கும்?

காவி பாசிஸ்டுகளின் கார்ப்பரேட் அடிமைத்தன ஆட்சி ஒருவேளை தொடர்ந்தால், துரதிர்ஷ்டம் நம் மக்களை விடாது கவ்வி பிடித்திருந்தால் கீழ்க்கண்ட மாற்றங்கள் கண்டிப்பாக நடக்கும்.

இந்தியாவின் 100வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது மோடி சொல்வது போல் இந்தியாவில் ஊழல், சாதி, மதவாதம் உள்ளிட்ட தீய சக்திகளுக்கு கட்டாயம் இடம் இருக்காது. இது எப்படி இல்லாமல் போகும்?

கார்ப்பரேட்டுகளுக்கு லட்சம் கோடிகளை அள்ளி விடுவது ஊழல் என சொல்லப்படாது. ரேஷன் கடைகளில் போடும் புழுத்த அரிசியும் கோதுமையும் தான் ஊழலாக பார்க்கப்படும். எனவே ரேஷன் கடைகளே ஒழித்துக் கட்டப்பட்டிருக்கும்.

வங்கிகடன் வாங்கி மோசடி செய்து வங்கியையே திவால் ஆக்கியவர்கள் இன்று போலவே தொழில் அதிபர்களாக கொண்டாடப்படுவார்கள். ஆனால் தொழில் தொடங்கவோ விரிவாக்கவோ கடன் உதவி கேட்டு சிறு முதலாளிகளும் சிறு விவசாயிகளோ வங்கிகளை நெருங்கவே முடியாமல் போகும். இவ்வர்க்கம் அடித்து வீழ்த்தப்பட்டு, மரணப் படுக்கையில் கிடக்கும்.

கல்விக்கடன் வாங்கி படித்துவிட்டு கடன் கட்ட முடியாமல் கார்ப்பரேட்டுகளுக்கு அடிமைகளாக மாற்றப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைத்து குலக்கல்வி மூலம் பாட்டன் தொழிலை செய்ய என நசுக்கப்பட்டு இருப்பார்கள் இளைஞர்கள்.

இதையும் படியுங்கள்:

 மனித குலத்திற்கே எதிரான அரசியல் செய்கிறார்களா ?

 கார்ப்பரேட் காவி பயங்கரவாதிகளை எதிர்த்து போராடும் மாணவர்கள், இளைஞர்கள்

நூற்றாண்டு கொண்டாட்டத்தின் போது பெரும்பான்மை இந்துக்களுடன் நட்புறவுடன் வாழ்ந்து வந்திருந்த இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்டு விரட்டப்பட்டு நவீன முன்வேலி முகாம்களுக்குள் ஈழ அகதிகளைப் போல, ரோஹிங்கியாவைப் போல தஞ்சமடைந்திருப்பார்கள்.

மோடி குறிப்பிடுவதைப் போன்ற தீய சக்திகளான – அதாவது நாட்டுப்பற்று கொண்டவர்களின், மத நல்லிணக்கத்தை விரும்புபவர்களின் மூடநம்பிக்கை எதிர்ப்பு சனாதன எதிர்ப்பாளர்கள் நசுக்கப்பட்டு, அவர்கள் வேட்டையாடப்பட்டு இருப்பார்கள்.

ஆனால் மாடுகளுக்கு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மாடுகளுக்கு 108 ஆம்புலன்ஸ், மாடுகளுக்கு நவீன குளிர்சாதன வசதி கொண்ட கொட்டகைகள் என அரசால் உருவாக்கப்பட்டிருக்கும்.  மனிதனை விட மாடு மதிக்கப்பட்டு கொண்டாடப்படும். அனைவருக்கும் காலையில் கட்டாயமாக கோமியம் குடிக்க தரப்படும். மருத்துவமனைகளிலோ கட்டாய மாட்டு சாணி குளியல் அமலாக்கப்படும்.

நாடாளுமன்றம் என்னவாகும்? ஒரு சர்வாதிகாரியின் கிறுக்குத்தனங்களுக்கு தலையாட்டி தாளம் போடும் கூடமாக மாற்றப்பட்டு இருக்கும். பாராளுமன்றத்தில் அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வந்த கட்சிகள் எல்லாம் தடை செய்யப்பட்டிருக்கும். அதாவது ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே பாராளுமன்றம், ஒருவரே நிரந்தர அதிபர் என மாறி பார்ப்பன பேரரசுக்கான அடித்தளம் உருவாகி இருக்கும்.

மோடியின்கனவு பலிக்குமா?

எங்கே பகல் கனவாகி போய்விடுமோ என்ற கலக்கத்துடன் தான் மோடி சுற்றி வருகிறார். இலவசங்கள் கூடாதென சொல்லிக்கொண்டே கேஸ் விலையை குறைத்து சலுகைகளை அள்ளி வீசுகிறார். அதாவது இதுவரை ஆண்ட கட்சிகள் அமல்படுத்தியதாக விமர்சித்த பாணியிலேயே பாஜக ஆளும் மாநிலங்களில் 10 கிலோ அரிசி 3000 உதவித்தொகை என்றெல்லாம் இலவச திட்டங்கள் களை கட்டுகின்றன.

காவி பாசிஸ்ட்டுகள் விரும்பும் வகையில் பெரும்பான்மை இந்துக்கள் பிற மதத்தினரை வெறுத்து ஒதுக்கிவிட தயாராக இல்லை. ஆதிக்க சாதியில் பிறந்துள்ள அனைவருமே உழைக்கும் மக்களான தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்களை கொடூரமாக நசுக்குவதை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதாகவும் இல்லை என்பதைத்தான் மணிப்பூர் ஹரியானா கலவரங்களுக்கு எதிரான நாடு தழுவிய எதிர்வினை உணர்த்துகிறது. எனவே தலை கீழாக நின்று தண்ணீர் குடித்தாக வேண்டிய நிலையில் காவி பாசிஸ்டுகளும் மோடியும் இருக்கின்றனர். நாம் அவர்களுக்கு கோமியத்தையே பரிந்துரைப்போம்.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here