84 வயதான பாதிரியார் ஸ்டேன் சாமி மரணம் அடைந்ததை ஒட்டி சிறையிலேயே வைத்து அவரைக் கொன்று விட்டதாக நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. 2014 முதல் இந்தியாவை ஆண்டு வரும் பாசிச மோடிக் கும்பலின் ஆட்சியில், கடந்த எட்டாண்டுகளில் காஷ்மீரில் சுயநிர்ணய உரிமை கோரும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், வடகிழக்கு மாநிலங்களில் போராடும் தேசிய இன உரிமை போராளிகள், மதச் சிறுபான்மையினரின் நலனுக்காக போராடும் இசுலாமிய அமைப்புகள், அர்பன் நக்சல் என்ற பெயரில் நடத்தப்பட்ட வேட்டைகளில் சிறையில் அடைக்கப்பட்ட நக்சல்பாரி புரட்சியாளர்கள், பீமா கோரகான் வழக்கில் கைதாகியுள்ள புரட்சிகர – ஜனநாயக சக்திகள் எனப் பலரும் ஆண்டுக்கணக்கில் சிறையில் இடப்பட்டு வதைக்கப்படுகிறார்கள். நாம் ஒரு கம்யூனிஸ்ட் என்ற முறையில் சுயபரிசீலனை செய்து பார்க்கும் போது மனக்கண்முன் விரியும் பலவற்றையும் காய்தல், உவத்தல் இன்றி விவாதிக்க வேண்டியுள்ளது.

பாதிரியார். ஸ்டேன் சாமியின் படுகொலைக்கு அரசு பயங்கரவாதமும், நீதித்துறையின் பாசிச மனோபாவமும் முக்கிய காரணம் என்றாலும் இந்த அரசு கட்டமைப்புக்கு மட்டும்தான் இந்த மரணத்தில் பங்கு உள்ளது என்று எளிதாக கடந்து போக முடியவில்லை. வழக்கம்போல நிகழ்ச்சி நிரலை அவர்கள்தான் தீர்மானித்துக் கொண்டு இருக்கிறார்கள். நாம் அதன் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம். “அரசியலை ஆணையில் வை” என்பதுதான் புரட்சிகர அமைப்புகளின் தாரக மந்திரம். அதனை ஒட்டி நின்று நிதானித்து பரிசீலிக்கும் போது தான் அடக்குமுறை சட்டங்கள் கொண்ட அரசு பயங்கரவாதத்தை எதிர்த்து நாம் போராடி கடக்க முடியும். நமது இலட்சியத்தை நோக்கிய பயணத்தில் முன்னேறுவதற்கு உணர்ச்சிபூர்வமான அணுகுமுறைகளும், கண்ணீரோ, கணநேர ஆத்திரமோ ஒருபோதும் தீர்வாகாது!

2009-இல் முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் மூலம் ஈழத்தமிழர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. அப்போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சிங்கள பேரினவாத ராணுவத்தினரால் நேருக்கு நேர் படுகொலை செய்யப்பட்ட புகைப்படம் வெளியான போதும் சரி சிரியாவில் இருந்து உயிர் பிழைக்க தப்பி ஓடிய மக்கள் நடுக்கடலில் சிக்கிக்கொண்டு உயிரிழந்த போது, அவர்களின் இளம் குழந்தை மரணம் அடைந்து கடற்கரையோரத்தில் ஒதுங்கிய புகைப்படத்தை பார்த்த போதும் சரி வேதாந்தாவின் காப்பர் வேட்டைக்காக ஸ்டெர்லைட் கொலைகாரர்கள் பக்கம் நின்று 15 உயிரை போலீசு சுட்டு வீழ்த்தியபோதும் சரி சக மனிதர்களின் மரணத்தைக் கண்டு கண்ணீர் வடிக்கும் ’சராசரிகள்’ போலத்தான் இன்று பலர் ஸ்டேன் சாமியின் மரணம் கண்டு கண்ணீர் விடுகின்றனர், கண்டனக் குரல் எழுப்புகிறார்கள்.

அவருக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருந்தது என்பதை நிரூபிப்பதற்கு போலியான ஆவணங்களை தயாரித்து, எங்கோ ஒரு மூலையிலிருந்து அவரது கணினியை ஹேக் செய்து அதன் மூலம் அவரை குற்றவாளியாக்கி சிறையில் அடைத்து விட்டனர். இது சட்ட விரோதம், இதுதான் பாசிச வழிமுறை. எனவே அவருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பில்லை என்று வாதாடுவதன் மூலம் அவரது மரணத்தின் வலியை எதிர்கொள்கின்றனர் பலரும். இதுதான் ஆளும் வர்க்கம் விரிக்கும் சிலந்தி வலை. தரவுகளை கையில் வைத்துக் கொண்டு இவர்கள் இப்படித்தான் போராடுவார்கள் என்றும், போராடும் வழிமுறைகள் உள்ளிட்டு அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள்.

மாவோயிஸ்டுகள் என்பது அவ்வளவு பெரிய தேசத்துரோக வார்த்தையா? கம்யூனிஸ்டுகள் என்றால் நாட்டுப்பற்று இல்லாதவர்களா? எளிமை, தியாகம், அர்ப்பணிப்பு இவை அனைத்தையும் சுய விதிகளுக்கு கட்டுப்பட்டு, யாருடைய நிர்பந்தமும் இல்லாமல், சமூகக் கொடுமைகளை கண்டு வர்க்க உணர்வுடன் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் கம்யூனிஸ்டுகளின் மரணம் எப்படி வேண்டுமானாலும் நிகழலாம் என்று அர்த்தமா? நக்சல்பாரிகள் என்றால் பயங்கரவாதிகள், தீவிரவாதிகளா? என்று கலகக் குரல் ஏதும் எழவில்லை. ஏன் எழவில்லை என்பதிலிருந்து நாம் நமது சுய பரிசீலனையை துவங்க வேண்டும். மக்களுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் உள்ள பிணைப்பைப் பற்றி நேர்மையாக பரிசீலிக்க வேண்டும்.

ஒட்டு மொத்த இந்தியாவின் கனிம வளத்தில் 41% தன்னகத்தே கொண்டுள்ள ஜார்கண்ட் மாநிலத்தின் கனிம வளங்களை சூறையாடுவதற்கு கார்ப்பரேட்டுகள் தயாராக இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை தான். எனினும் சொந்த மண்ணை, நாட்டின் இயற்கை வளங்களை, ஏதோ ஒரு கார்ப்பரேட் முதலாளியின் நிதிமூலதனத்துக்கு வாரிக் கொடுப்பவர்கள் “தேசபக்தி” கூச்சலிடுகிறார்கள்!  கார்ப்பரேட்டுகளுக்கு அஞ்சி அல்லது கட்டுப்பட்டு அல்லது உடன் பங்கேற்று கொண்டு அனுமதிக்கும் அரசியல் கட்சிகளும், அதிகாரத்தில் உள்ள பிரதமர், அமைச்சர்கள், கலெக்டர் முதல் உள்ளூர் கிராம நிர்வாக அலுவலர் வரையிலான அதிகார வர்க்கம் உள்ளிட்ட அனைவரும் ’தேசபக்தர்கள்’ போல கூச்சலிடுகிறார்கள். ஊடகங்களும் கார்ப்பரேட் வாயில் இருந்து தெறிக்கும் எச்சிலை விழுங்கி நிற்கிறது. பலரும் நம்பி ஏமாந்து கிடக்கும், இந்திய மனசாட்சியின் இறுதிக் கனவான நீதிமன்றத்தின் கையிலிருக்கும் துலாக் கோல் கார்ப்பரேட்டுகளின் பிடியிலிருந்து நழுவாமல், அதன் முள் மட்டும் ஒரு பக்கம் சரிந்து நிற்கிறது.

இந்த மண்ணின் ஒரு பிடி கனிம வளத்தையும், ஒரு சொட்டுத் தண்ணீரையும் ஒரு சொட்டு இயற்கை எண்ணையையும், ஒவ்வொரு தடவை சுவாசிக்கும் மூச்சுக் காற்றையும், எந்த அந்நியனுக்கும், அல்லது எந்தக் கார்ப்பரேட்களுக்கும் விட்டுக் கொடுக்க விடமாட்டோம் என்று தனது காலடியின் கீழ் கிடைக்கும், கனிம வளங்களின் மகத்துவம் அறியாத பழங்குடி மக்களிடம் சென்று பிரச்சாரம் செய்து மண்ணின் மீதும், நாட்டின் மீதும் பற்று உருவாக்கியவர்கள் தேசத்துரோகிகளாம். ஆம் கார்ப்பரேட்டுகளின் காலடியில் மானத்தையும், வயிற்றையும் விற்று, பிழைக்க தெரியாத ’தேசத்துரோகிகள்’.

கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு எதிராக மக்களை விழிப்புணர்வு அடையச் செய்தார்கள் என்பதற்காக படுகொலை செய்யப்படுபவர்களின் பட்டியல் மிக நீளமானது.  நீண்டகாலமாக சிறையில் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருக்கும் எண்ணற்ற மார்க்சிய – லெனினிய போராளிகள், நாட்டின் மீது அக்கறை கொண்ட அறிவுஜீவிகள், வழக்கறிஞர்கள், பீகார், சத்திஸ்கார் வனங்களில் கிடைக்கும் அரிய கனிமவளங்களை கொள்ளையிட அனுமதிக்காமல் போராடி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பழங்குடி மக்கள் என அனைவரையும் அரசு பயங்கரவாதம் வேட்டையாடிக் கொண்டுத்தான் இருக்கிறது.

புரியும் படி சுருங்கச் சொன்னால் கார்ப்பரேட்- காவிப் பாசிசம் பெருந்திரளான மக்களை நரவேட்டை ஆடிக் கொண்டிருக்கிறது அதன் ஊழித்தாண்டவம் வழமையான முறையில் முழுவீச்சை அடையுமா? அல்லது சட்டப் பூர்வ வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொண்டே உச்ச நிலை பெறுமா? என்பது தான் நாம் அனைவரும் அவதானிக்க தக்க ஒன்றாகும்.

இது ஒரு புறம் இருந்தாலும் இத்தகைய கொடுமைகளுக்கு எதிராக, இவற்றைப் பற்றி புரிந்து கொள்ளாத அல்லது அறியாத பெரும்பான்மை உழைக்கும் மக்களிடம், விரித்துச் சொன்னால் விவசாயிகள்- தொழிலாளிகள் – மாணவர்கள் – மீனவர்கள் – சில்லரை வர்த்தகர்கள் மற்றும் பேராசிரியர்கள், மருத்துவர்கள் உள்ளடக்கிய அறிவுதுறையினரிடம் எந்த அளவிற்கு கருத்து பிரச்சாரத்தை கொண்டு சென்று, கார்ப்பரேட் -காவி பாசிசத்திற்கு எதிராக ஒரு அமைப்பின் கீழ் அவர்களைத் திரட்டி கொண்டு வந்துள்ளோம் என்பதும், அவர்களை திரட்டி போராடுகிறோம் என்பது தான் நாம் விவாதிக்க வேண்டிய முக்கிய பொருளாகும். கடந்து போகும் நாட்களும், திரும்ப வராத மணித்துளிகளும் ஏக்கத்துடன் நம்மை பார்த்து பரிதவித்து நிற்கின்றன. காலத்தை கைப்பற்றும்படி நிர்பந்திக்கின்றன.

’தானுண்டு தன் வேலை உண்டு!’ என்று வாழ்கின்ற பெரும்பான்மை சமூகத்தை பற்றி உடனடியாக விவாதிக்கவும்,  விமர்சிக்கவும் ஒன்றும் இல்லை. ஆனால் கம்யூனிசம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், நாட்டுப்பற்று, கார்ப்பரேட் கொள்ளை, பார்ப்பன ஆதிக்கம், மதவெறி பாசிசம் என்று பேசுகின்ற பலர் தன்னை ஒருவருக்கொருவர் அணியமாக்கிக்கொண்டு ஒரு ஈட்டி முனையை போல எதிரிகளை நோக்கி பாய்வதற்கு, தன்னிடமுள்ள பலவீனங்களை நேர்மையாக பரிசீலனை செய்துக் கொண்டு, பல தடைகளை கடப்பதற்கு தயாராக இல்லை. ஏன் இல்லை என்பதுதான் விமர்சனத்திற்குரிய அம்சமாகும். கொஞ்சம் வருத்தமளிப்பதாக இருந்தாலும் நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி இதுதான். ’புரட்சியாளர்கள் மக்கள் எனும் கடலில் நீந்தும் மீன்களைப் போன்றவர்கள்’, ’மக்கள், மக்கள் மட்டுமே மாபெரும் வரலாற்றை படைக்கும் மகத்தான உந்து சக்திகள்’ என்பதுதான் நமக்கு வழிகாட்டும் நெறிமுறை என்றால் நாம் நழுவக்கூடாது. மக்களுடன் ஐய்க்கியம் என்பதில் நமது நிலை என்ன என்பதில் தான் நமது கேள்வி எழ வேண்டும்.

அன்றாடம் குறிப்பிட்ட மணி நேரத்திற்கு பிறகு குழந்தை, குட்டிகளுடன் கொஞ்சி மகிழ  முறையாகச் செல்பவர் களும், தான் பார்க்கும் வேலையை எக்காரணம் முன்னிட்டும் இழந்து விட தயாராக இல்லாதவர்களும், தனது அற்ப உத்திரவாதமான வாழ்க்கை முறைக்கு எந்த இடையூறும் வந்துவிடக் கூடாது என்பதை கணக்கிட்டு வாழ்க்கை நடத்தும் சமூகப் போராளிகளும், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இணையவழி பரப்பல்கள் என கிடைத்த வாய்ப்புகளைக் கொண்டு போராடும் இயக்கங்கள் உள்ளிட்டு, ஸ்டேன் சாமி மரணத்திற்கு முன் எத்தனை முறை ’அரசியல் கைதிகளை விடுதலை செய்!’ என்று வீதியில் இறங்கி நின்றார்கள் என்றால் அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை என்பதே அதற்கு பதில் ஆகும்.

சிறைக் கொடுமை என்பது அவ்வளவு எளிதானது அல்ல! பாரதிதாசன் கூறுவதைப் போல ’மாங்குயில் கூவும் பூஞ்சோலை, எம்மை வாட்ட நினைக்கும் சிறைச்சாலை’ என்பது அல்ல உண்மை!. உறவுகளை விட்டு பிரிந்து, அன்றாட உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, புற உலகில் நடக்கும் எதனுடன் தொடர்பில்லாமல் நாட்கணக்கில், வருடக்கணக்கில் ஏற்றுக் கொண்ட லட்சியத்திற்காக சிறையில் அடைந்து கிடப்பது என்பது மிகப்பெரும் சவால். சமீபத்தில் விவசாயிகள் மத்தியில் வேலை செய்ய சென்றபோது, கார்ப்பரேட் கொள்ளை உள்ளிட்ட பலவற்றை எளிய மொழியில் விளக்கிய தமிழக விவசாயிகள் சங்கத்தின், விவசாய தோழரிடம், “உங்கள் குடும்பம் அரசியல் பணிகளுக்கு ஒத்துழைக்கிறதா? என்றவுடன், தோழரே! தன் மனைவி நாகம்மையார் இறந்த போது, அவர் இறந்தை எண்ணி கலங்குவதா, தனது பொது வாழ்க்கைக்கு இருந்த தடை அகன்று விட்டது என்று மகிழ்வதா என்று தந்தை பெரியார் எழுதிய கடிதத்தை நீங்கள் படிக்கவில்லையா? அவருக்கே அதுதான் நிலைமை என்றால் நான் எப்படி தப்ப முடியும்” என்றார். இதுவே வாழ்க்கை உத்திரவாதம் உள்ள குட்டி முதலாளித்துவ வர்க்க பின்னணி கொண்டவராக இருந்திருந்தால் என்ன பதில் கூறியிருப்பார் என்பதை எண்ணி பாருங்கள்! அனைவரும் ரசிக்க தூண்டும் கவிதை நயமுடைய எழுத்து பிறந்திருக்கும். ஆனால் உழைக்கும் மக்களிடம் அது போன்ற தேர்ச்சி நயம் இல்லைதான். ஆனால் நேர்மை இருக்கிறது.

தூக்குமேடை குறிப்புகளை படித்து குறிப்பெடுத்துக் கொண்டு, மற்றவர்களுக்கு விளக்கும்போது நெஞ்சு புடைக்க, கோபம் கொப்பளிக்க விமர்சிக்க முடியும். ஷெல் ஆயில் நிறுவனத்திற்கு எதிராக போராடிய ஒரே காரணத்திற்காக தூக்கில் ஏற்றப்பட்ட ஆசிரியரான, போராளி. கென் சரோ வைவாவை பற்றி உணர்ச்சி கொப்பளிக்க எழுச்சி உரை ஆற்ற முடியும். இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக இளம் வயதில் தூக்கு மேடையில் ஏறிய பகத்சிங்கை பற்றி கண்கள் சிவக்க உரையாற்ற முடியும். ஆனால் இது போன்ற எது ஒன்றையும் தெரிவு செய்வது உத்தமம் இல்லை என்ற எச்சரிக்கை உணர்வு, ’மூளைக்குள் இருக்கும் கத்திரி’ வேலை செய்கிறது. என்ன சொல்ல வருகிறீர்கள் என கேள்வி கேட்பவர்களின் மீது ஆத்திரத்தை தூண்டுகிறது.

இத்தகைய கொடுமைகளை மனதில் கற்பனை செய்து வார்த்தைகளை தேடித்தேடி சிலம்பம் ஆடுவதை காட்டிலும், எழுதப் படிக்கத் தெரியாத எண்ணற்ற பழங்குடிகள் ’மாவோயிஸ்டுகள்’ என்ற பெயரிலும், சமூகக் கொடுமைகளை காண சகிக்காமல் எழுதியும், பேசியும், ’அர்பன் நக்சல்’ என்ற பெயரிலும், இந்திய சிறைகளில் வாடுகிறார்கள், சவாலை துணிச்சலுடன், எந்த காரியவாத சிந்தனையும் இன்றி எதிர்கொண்டு நிற்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும்போது யதார்த்தத்திற்கும், வாய்வீச்சுகளுக்கும் இடையில் உள்ள முரண் கண்முன்னே நிழலாடுகிறது.

சிறை, சித்திரவதை கொடுமைகளை வாழ்நாளில் ஒரு முறையேனும் அனுபவிக்காத பலரும் சிறை கொடுமையால் கொல்லப்பட்ட ஸ்டேன் சாமியின் படுகொலை பற்றி உணர்வு பூர்வமாக எப்படிப் பேச முடியும்!. பேரிக்காயின் சுவையை சுவைத்துப் பார்க்காமல் பேரிக்காயின் ருசியை அறிய முடியாதது போலத்தான் இதுவும். 130 கோடி மக்கள் தொகை கொண்ட பரந்த ஒரு நாட்டில் ஒரு சிறு துளி அளவு இருக்கின்ற இடதுசாரி அமைப்புகள் பலவும், சட்டம் – நீதி ஒழுங்கு இவற்றுக்கு கட்டுப்பட்டு, சட்டப்பூர்வமாகவே அரசியல் மாற்றத்தை நிகழ்த்த தீவிரமாக பாடுபடுகிறார்கள். அவர்களைக் காட்டிலும் நாங்கள் ’மேலானவர்கள்’ என்ற சிலர் மக்களிடமிருந்து விலகி மேட்டுக்குடி அரசியல் நடத்த எத்தணிக்கிறார்கள். கம்யூனிச லட்சியத்தை ஏற்று செயல்பட முன் வரும் யாரையும் பரிசீலனை செய்து, சிறந்தக் கம்யூனிஸ்டுகள் யார் என்று மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் சமூக விஞ்ஞானம் பயில்வதாலேயே தங்களை மக்களை விட மேலானவராக கருதிக் கொண்டு விடுகிறார்கள். அப்புறம் உபதேசிக்க கிளம்பி விடுகிறார்கள்.

ஆனால் இவர்கள் அனைவருமே எதிரிக்கு எதிரான போராட்டத்தில் ஒருமுனைப்படுத்த வேண்டிய சக்திகளைப் பற்றி குழப்பிக் கொண்டு, முனை மழுங்கடிக்கும் செயலை மட்டும் தெளிவாக தொடர்ந்து செய்கிறார்கள் அல்லது அரசியல் வேறுபாடுகள் என்ற முகாந்திரத்தில் புகுந்துக் கொண்டு பொது வெளியில் பேசி திரிகிறார்கள். மக்கள் நலன், நாட்டு நலன் என்பதெல்லாம் கொள்கையாக காகித ஏடுகளில் உறங்கும் போது, ’தான்’, ’தனது’ என்ற தனியுடைமை வழி நிற்கிறார்கள்.  இவர்களால் எப்படி ஸ்டேன் சாமி கொலைக்கு உண்மையான நியாயம் கேட்க முடியும்.

எதிரி யார்? நண்பன் யார்? என்ற அடிப்படை வரையறை கூட வகுத்துக்கொள்ளும் அறிவியல் பார்வை இல்லாதவர்கள் யாரும் ஸ்டேன் சாமி மரணத்திற்கு கண்ணீர் வடிப்பது ஆபாசமானது. இழப்பு, தியாகங்களுக்கு அஞ்சி நடுங்கி சாமார்த்தியமாக சண்டையிடும் கோழைகள் பொதுவெளியில் சவடால் அடிப்பது பார்க்கவும், கேட்கவும் அருவருப்பானது. இந்த நேரத்தில் நம்மைப் பற்றி விமர்சனம் தேவையா என்று அஞ்சி நடுங்குவது தான் உண்மையில் கோழைத்தனமானது. தமக்குள் உள்ள வேற்றுமைகளை களைந்துக் கொண்டு கார்ப்பரேட்- காவி பாசிசத்தை வீழ்த்தும் ஈட்டியாக எழுந்து நிற்பதற்கு முன்னரே பேசித் தீர்க்க வேண்டிய விவாதப் பொருளும் இதுதான்.

மறுகாலனியாக்கம் துவங்கிய கடந்த மூன்று தசாப்தமாக நிகழ்ச்சிப் போக்குகளை எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள் என்பதுதான் நாம் புரிந்துக் கொள்ள வேண்டிய உண்மை. அவர்களுக்கு ஏகாதிபத்தியம், கார்ப்பரேட்டுகள், பார்ப்பன பாசிஸ்டுகள் என்று எந்த அடையாளத்தை வேண்டுமானாலும் கூறிக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் தான் இப்போதும் நமது செயல்பாட்டை, பிரச்சாரத்தின் தேவையை, அரசியல் விவாதங்களை தீர்மானித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது பெரும்பான்மை மக்களாகிய நமக்கு எவ்வளவு பெரிய பலவீனம் என்பதை உணராத வரை ஸ்டேன் சாமிகளின் மரணங்களை தடுக்க முடியாது! அதுவரை மனசாட்சி விதிக்கும் குற்றவாளிக் கூண்டில் இருந்து நாம் தப்பவும் முடியாது.

16-07-2021                                                                                  – இளஞ்செழியன்.

1 COMMENT

  1. ஐயா இளஞ்செழியன் அவர்களே….இந்த இடித்துரைப்பதையெல்லாம் அமைப்பிற்குள் செய்யுங்கள்…இப்படி எழுதுவதாலேயே பாசிச எதிர்ப்பு சக்திகளெல்லாம் திரண்டு வராது.. அதே. பாணி…
    கொஞ்சம் மாத்தி யோசிங்க..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here