சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று  ஆர்எஸ்எஸ் பாஜகவின் அடிமடியில் கைவைத்து உலுக்கி வருகிறது தமிழகம். “சனாதனத்தை ஒழிக்கப் போராடுவோம்” என்று பேசிய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி விலை வைக்கிறான் வடநாட்டு சங்கி சாமியார் ஒருவன். சனாதனத்துக்கு எதிராக பேசியதை 80% இந்து மக்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு எனத் திரிக்கின்றனர்.

தமிழகத்தின் ஆளுநர் ஆர் என் ரவி தனது சித்தாந்த குருமார்களான ஆர்எஸ்எஸ் கல்வி சாலையில் பயின்றது முதல் இந்தியாவின் பாரம்பரியம் சனாதன தர்மம் என்று வாய் கூசாமல் மேடைதோறும் முழங்கி வருகிறார். அவரது வரிசையில் இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சரான அமித்ஷாவும் இணைந்துள்ளார்.

சனாதனத்தை தோலுரித்து தொங்கவிட்ட மரபு தமிழ் மரபு. இந்திய பொருள் முதல்வாத தத்துவ மரபு. அதுதான் கம்யூனிஸ்டுகளின் மரபும் கூட.

இந்துத்துவா என்பதே பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தை நிபந்தனை இன்றி ஏற்றுக்கொள்ளச் செய்கின்ற சனாதன தர்மம்தான் என்று 90களில் இருந்து முழங்கி வருகிறது மக்கள் கலை இலக்கியக் கழகம். Hindutva nothing but Brahminic Sanatan Dharma என்ற ஆங்கில வெளியீட்டின் மூலம் இந்தியாவில் உள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மற்றும் பார்ப்பன இந்துமத எதிர்ப்பாளர்கள் மத்தியில் தனது கருத்தை கொண்டு சென்றது மக்கள் கலை இலக்கியக் கழகம். இன்று சனாதன தர்மம் என்பது பற்றி நாடு முழுவதும் விவாதப்  பொருளாகியுள்ளது.

சனாதன தர்மம் குறித்து பார்ப்பன கும்பல் என்ன விளக்கம் தருகிறது என்பதை பார்ப்போம். தேடல் என்ற இணைய முகவரியுடன் ராமலிங்கம் ஜி என்பவரும், ரங்கராஜன் பார்த்தசாரதி ஜி ஆகிய இருவரும் சனாதன தர்மத்தை புரிந்து கொள்ள தேடி அலைந்து உள்ளனர். இறுதியில் அவர்கள் வந்தடைந்த முடிவுகளை இவ்வாறு எழுதியுள்ளனர்.

“அந்த கேள்விக்கு பதில் வந்தது தேடல். நாங்கள் அனைவரும் ஒரே பள்ளியிலிருந்து (ஸ்ரீ அஹோபில மத் ஓரியண்டல் ஹையர் செகண்டரி பள்ளி, மேற்கு மாம்பலம்) நமது கலாச்சார விழுமியங்கள் மற்றும் பாரம்பரியங்களை வலியுறுத்துவதற்கு இது உதவியது. தமிழ் இலக்கியங்களான திருக்குறள் மற்றும் பிற இலக்கியப் படைப்புகளுக்கு உரிய முக்கியத்துவத்துடன் நமது இதிகாசங்களையும், ஸ்ரீ ராமானுஜர், ஆதி சங்கரர் போன்ற மகான்களையும் நாம் வெளிப்படுத்தியது இங்குதான். பள்ளிக்குப் பிறகு எங்கள் பாதைகள் வேறுபட்டன, ஆனால் இறுதி உண்மையைத் தேடுவதில் நாங்கள் ஒன்றாக இருந்தோம், அது இறுதியில் தேடலுக்கு ஒத்துழைக்க உதவியது.

இந்த கேள்வியை நாம் பலமுறை எதிர் கொண்டிருப்போம். ஆனால் நம்மில் பலருக்கு இதற்கான சரியான விடை தெரியுமா என்பது சந்தேகமே. ஹிந்து மதமே சனாதன தர்மம் என்று சிலர் நினைக்கிறார்கள். அது ஒரு வகையில் சரி என்றாலும், சனாதன தர்மம் என்பது  மதத்தைத் தாண்டிய விஷயமாகும்.

இதையும் படியுங்கள்:

♦ அனைத்து சாதி அர்ச்சகர் ரத்து! சனாதனமே இனி ஆட்சிமுறை!
♦  “தமிழ் இந்து” என பேசுபவர்கள் சனாதன தர்மத்தை ஏற்பவர்களே!

சனாதனம் என்பதற்கு “புராதனம் அல்லது காலத்தால் அழியாதது’ என்று பொருள். ஒருவர் தன் வாழ்வை ஒழுக்கமாகவும் நிறைவாகவும் வாழ உதவும் கோட்பாடுகளே சனாதன தர்மம் எனலாம்.   இந்தக் கோட்பாடுகள் வழிகளே அன்றி விதிகள் அல்ல. அதாவது ஒருவர் எந்த மதத்தவர் ஆனாலும் (அல்லது மதமற்றவராக இருந்தாலும் கூட) அவர் சனாதன தர்மத்தைப் பின்பற்ற முடியும்.சனாதன தர்மத்தில் என்னவெல்லாம் இருக்கின்றன என்பதை பார்ப்போம்.” என்று இவர்களின் விளக்க உரை நீள்கிறது.

“சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்”, நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன் என்று கொக்கரிக்கின்ற, கடவுளே மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் பிரித்து வைக்கின்ற, நால்வர்ண கோட்பாட்டை ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலமாக எதிர்த்து போராடி வருகிறது திராவிட இயக்கம். இந்திய  பொருள் முதல்வாத பாரம்பரியத்தின் மரபில் வந்துள்ள கம்யூனிஸ்டுகளும்  30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் போராடி வருகிறோம்.

சனாதன தர்மம் என்ற பெயரில் முன் வைக்கப்படுகின்ற பார்ப்பன கும்பலின் மேலாதிக்கத்தை நாம் ஏன் முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து பார்ப்போம்.

(தொடரும்…)

  • சண்.வீரபாண்டியன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here