“மணிப்பூரில் இரண்டு இனக்குழுக்களுக்கு மத்தியில் ஏற்பட்ட கலவரத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கின்றனர். ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயமடைந்திருக்கின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூருக்குச் சென்று நிலைமையை சரிசெய்ய முயன்றார். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா செய்யவிருப்பதாக வதந்தி பரவியது.” இது தமிழகத்தின் பிரபல வார இதழான ‘அய்யர்வாள்’ குழுமத்தில் இருந்து வெளிவரும் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி.

“மணிப்பூர் கலவரம் துவங்கியது முதல் கிட்டத்தட்ட 250 கிறிஸ்தவ தேவாலயங்கள், 17 இந்துக் கோயில்கள், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமாகியுள்ளன,. 200 கிராமங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதிகள் முகாம்களில் தமது உயிரைப் பிடித்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து அகதிகளாக வெளியேறி உள்ளனர். பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் உள்ள பொது சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.”என்று புதிய ஜனநாயகம் ஜூலை மாத இதழ் எழுதியுள்ளது.

மணிப்பூரில் நடக்கின்ற வன்முறை வெறியாட்டங்கள் பற்றி தேசிய ஊடகங்கள் துவங்கி மாநில ஊடகங்கள் வரை உண்மை நிலவரத்தை தெரியப்படுத்தாமல் மூடி மறைப்பதும், அங்கு ஏதோ ஒரு சில இடங்களில் மட்டும் வன்முறைகள் நடப்பதாகவும், அதுவும் ராணுவத்தின் உதவியால் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும், அந்த ராணுவத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் மணிப்பூர் மாநிலத்தின் பெண்கள் கலவரக்காரர்களை தப்ப வைப்பதாகவும் உண்மைக்கு புறம்பாக செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க தமிழகத்தில் நடக்கும் சாதாரண வழிப்பறி, திருட்டு முதல் அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கின்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் போன்றவற்றை ஊதிப் பெருக்கி தமிழகத்தில் அமைதிக்கு விரோதமாக வன்முறையான ஆட்சி, அதாவது திராவிட இயக்கத்தின் ஆட்சி நடந்து வருவதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தினமும் பத்திரிக்கையாளர் மத்தியில் கூச்சலிட்டு வருகிறார் என்பதை நாம் அறிவோம்.

“வர்ணமாம் பிராமணே குரு” என்ற பார்ப்பன விதிமுறையின்படி திருவாளர் அண்ணாமலை அன்றாடம் பேசுகின்ற பல செய்திகள், அவர் ஏதோ தேடிக் கண்டுபிடித்து பேசுவதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆஹா! திராவிட இயக்கத்தினருக்கு பொருத்தமாக பதிலடி கொடுக்கும் தலைவர் ஒருவர் கிடைத்துவிட்டார் என்று பார்ப்பனக் கும்பலும் பெரும் மகிழ்ச்சி அடைகிறது.

ஆனால் அது உண்மை இல்லை. துக்ளக் பத்திரிகையின் ஆசிரியரும், பாரதிய ஜனதாக் கட்சியின் தாய்க் கழகமான, ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகளில் ஒருவரான திருவாளர் குருமூர்த்தி எழுதிக் கொடுக்கும் ஸ்கிரிப்டுகளைதான் அண்ணாமலை நன்றாக பெர்ஃபார்மன்ஸ் செய்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ஆடிட்டர் குருமூர்த்தி

ஏனென்றால், பல ஆண்டுக் காலம் அரசியலில் இருக்கின்ற ஒருவருக்கே தமிழகத்தின் மூலை முடுக்குகளில் நடக்கின்ற செய்திகளை தெரிந்து கொண்டு உடனுக்குடன் செய்தியோ, அறிக்கையோ தயாரித்து வெளியிடுவது சாத்தியம் இல்லாதபோது, போலீசு புத்தியுடன் வேலை செய்து வந்த அண்ணாமலை பாஜகவில் இணைந்து திடீர் தலைவராகியவுடன் அனைத்தையும் கரைத்துக் குடித்தவர் போல பேசுவது சந்தேகத்தை உருவாக்கியது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த பாசிச ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் முக்கிய ‘அடுப்பங்கரை அரசியல்வாதியாக’ இருந்த துக்ளக் சோவின் உற்ற நண்பரான குருமூர்த்தி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பாஜக அடிமை எடப்பாடி, ஆட்சியை வழிநடத்தி வந்ததாக பகிரங்கமாக அறிவித்துக் கொண்டார். தற்போது இந்த குருமூர்த்திதான் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பின்னணியில் இருந்து இயக்குவதாக செய்திகள் வெளியாகின்றன.

மணிப்பூரில் இரண்டு இன மக்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மோதலானது, தேசிய இன உரிமைகளை நசுக்குகின்ற, பாரதிய ஜனதாவிற்கு மிகப்பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இரண்டு தேசிய இனங்கள் அல்லது இரண்டு இனங்களில் ஒரு இனத்தை முதலில் ஆதரிப்பது, மற்றொரு இனத்தை ஒழித்துக் கட்டுவது, பிறகு அவர்களையும் ஒழித்துக்கட்டி ஏக இந்தியா என்ற “இந்து, இந்தி, இந்தியா” கோட்பாட்டை அமல்படுத்த துடித்துக் கொண்டிருக்கிறது. இதுதான் ஆர்எஸ்எஸ் பாஜகவின் அரசியல் சித்தாந்த வழிமுறையாகும்.

இதையும் படியுங்கள்: மணிப்பூர் கலவரம்: பாசிஸ்டுகளுக்கு வாய்ப்பளித்ததால் வந்த வினை!

இந்த வழிமுறையின் அடிப்படையில் மணிப்பூரில் கலவரத்தைத் தூண்டி வன்முறை வெறியாட்டம் நடத்தி வரும் ஆர்எஸ்எஸ் பாஜகவைப் பற்றி பெரும்பாலான தேசிய ஊடகங்கள் அனைத்தும் வாயையும், ஆசனவாயையும் மூடிக்கொண்டிருப்பதால், அண்ணாமலை போன்றவர்கள் தமிழகத்தில் நடக்கும் அற்ப செய்திகளை கூட ஊதிப் பெருக்கி ஆட்சியை கவிழ்க்க கனவு காண்பதற்கும் அல்லது எதிர்காலத்தில் தமிழகத்தின் முதல்வராக வரவேண்டும் என்ற கனவுடன் உளறிக் கொண்டிருப்பதற்கும் உதவுகிறது.

ஆர்எஸ்எஸ் பாஜகவின் சித்தாந்த குருமார்களான கோல்வால்கர், சாவர்க்கர் போன்றவர்கள் மட்டுமல்ல! அவர்கள் ஆதர்ச நாயகனாக முன்னிறுத்தும் புராண, இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் ராமன், தருமன் போன்ற அனைவரும் நீதிக்கு எதிராக அநீதியாக வன்முறையை தூண்டி படு பாதக செயல்களை செய்தவர்கள் என்பதுதான் ‘உண்மையாகும்.’

பகவத் கீதையில் வரும் “எதிரிகளை கொல்வது கொலை அல்ல! அவர்களின் மேனியைத் தான் நாம் கொல்கிறோம். அவர்களின் ஆன்மா வேறொரு உடலில் புகுந்து கொள்ளும்” என்பதை சாரமாக வைத்து நடத்தப்பட்டதுதான் பாரத யுத்தம் என்று காஷ்மீர் மாநிலத்தின் கம்யூனிஸ்டான பிரேம்சந்த் பசாஸ் முதல், இராவண காவியம் எழுதிய புலவர் குழந்தை வரை,பல்வேறு எழுத்தாளர்கள் அதனை அம்பலப்படுத்தி எழுதி உள்ளனர் .

வன்முறையையே தனது ஆயுதமாகக் கொண்டு செயல்படும் ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு, தமிழகத்தை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது என்று முகத்தில் இடித்து உரைக்க வேண்டும். அதே நேரத்தில் மணிப்பூரில் நடக்கும் வன்முறை வெறியாட்டங்களை பாஜகதான் முன்னின்று நடத்துகிறது என்ற உண்மையை தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்று, இதே போன்ற ஒரு பயங்கரவாத அணுகுமுறையை தமிழகத்திற்குள் பரப்ப எத்தனிக்கிறார்கள் என்று அவர்களின் முகமூடியை கிழித்தெறிந்து தமிழகத்தை விட்டு விரட்டியடிக்கும் வகையில் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும், என்பதுதான் தற்போதைய தேவையாகும்.

  • சண்.வீரபாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here