மணிப்பூரில் தொடரும் பாலியல் வல்லுறவு படுகொலை! மோடி எங்கே?

மணிப்பூர், பாசிஸ்டுகளால் திட்டமிடப்பட்ட வன்முறை என்பது பிரேன்சிங் பேசிய ஆடியோ வெளியான பின்பும் நீதிமன்றங்கள் வாய் திறக்காமல் விசாரணை என்ற பெயரில் இழுத்தடித்து பாசிஸ்டுகளுக்கு துணைப் போகிறது.

2

ணிப்பூரில் ஜிரிபாம் மாவட்டத்தில் 3 குழந்தைகளின் தாயான பள்ளி ஆசிரியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொள்ளப்பட்டுள்ளார் என உள்ளூர் பழங்குடி அமைப்பான ஐ.டி.எல்.எஃப் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழன் இரவு 9 மணியளவில் ஆயுதம் ஏந்திய நபர்கள் 17 குடிசைகளுக்கு தீ வைத்துள்ளனர். இனக்கலவரம் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லப்பட்ட பெண்ணின் கணவர் நுர்தன்சிங், ஜிரிபாம் காவல் கண்காணிப்பாளரிடம் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளார். அதில் அவரது மனைவி 31 வயதான சோசங்கிம், “அரம்பை தெங்கோலுடன்(மணிப்பூர் ஆர்.எஸ்.எஸ்.) தொடர்புடைய மெய்த்தே ஆயுதக் குழுவால்” தாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். தீவிரவாதிகள் தங்கள் வீட்டிற்குள் நுழைந்து, சோசங்கிம் தப்பிச் செல்லாமல் இருக்க அவரது காலில் சுட்டுக் கொன்றதாகவும், பின்னர் அவளை உயிருடன் எரிப்பதற்கு முன்பு கொடூரமான பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இச்சம்பவம் அவரது வீட்டைச் சாம்பலாக்கியது, மனைவியை, தாயை இழந்த நுர்தன்சிங்கும் அவரது மூன்று குழந்தைகளின் நிலைமை எண்ணிப் பார்க்கவே நம்மால் முடியவில்லை.

காலில் சுடப்பட்டு கொல்லப்பட்ட 3 குழந்தைகளுக்கு தாயான பெண்ணை இறந்த பிறகும் பாலியல் வல்லுறவுக்கு ஆளக்கியிருக்கிறார்கள் என்றால் எந்த அளவுக்கு மிருகத்தன்மை உடையவாக இருந்திருப்பார்கள் ஆர்.எஸ்.எஸ்.-ன் அரம்பை தெங்கோல் தீவிரவாதிகள். குக்கி மற்றும் கொல்லப்பட்ட பெண்ணின் சமூகமான ஹமர் சமூகத்தை சேர்ந்த மக்கள் கூறுகையில் அரம்பை தெங்கோல் மற்றும் மெய்தே தீவிரவாதிகள் தங்கள் மக்களுக்கு எதிராக தீவிர இனவெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள் என்கிறார்கள்.

2023 மே மாதம் மணிப்பூரில் தொடங்கிய ‘திட்டமிட்ட வன்முறை’யானது இன்று வரை ஓய்ந்தபாடில்லை. பாஜகவின் முதல்வர் பிரேம் சிங்குக்கு இந்த வன்முறையில் பங்கு உள்ளது என ஆடியோ டேப்புகள் வெளியான பின்னரும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

மணிப்பூர் தவிர்த்து பாஜக ஆளாத வேறு எந்த வேறு மாநிலங்களில் இது போன்ற சம்பவம் நடந்திருந்தாலும் என்றோ ஆட்சியை கவிழ்த்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியிருக்கும்.

பாஜக ஆளும் மாநிலம் என்பதாலும் அவர்களால் ‘திட்டமிடப்பட்ட கலவரம்’ என்பதாலும் அமைதியாக வேடிக்கை பார்ப்பதோடு போராட்டத்தையும் தூண்டிவிடுகிறது. குக்கி இன மக்கள் கொல்லப்படுவதை ரசிக்கிறது.

மணிப்பூரில் இரு சமூக மக்களிடையே இருந்த ஒற்றுமையை சீர்குலைத்து கலவர பூமி ஆக்கியுள்ளது. மே 2023-ல் கலவரம் தொடங்கினாலும், பழங்குடியின பெண் நிர்வாணமாக்கப்பட்டு தெருவில் இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலான பின்னரே வெளி உலகத்திற்கு தெரிய வந்தது.

ஒன்றை ஆண்டுகள் கடந்தும் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வராமல் ஒடுக்கப்படும் குக்கி இன மக்களை போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், சீனாவின் சதி இருக்கிறது என சங்கி ஊடகங்களாலும் இணைய கைக்கூலிகளாலும் திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது. ஒடுக்கப்படும் குக்கி பழங்குடிகள் இந்தியாவில் எதிரிகள் போல் சித்தரிக்கப்படுகிறார்கள்.


படிக்க: மணிப்பூர்: கலவரங்களின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் குண்டர் படை! எப்படி தடுப்பது?


இதுவரை நடந்த வன்முறை சம்பவங்களால் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. 60,000க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த கொலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மலைவாழ் தீவிரவாதிகள் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணை சுட்டுக் கொன்றதாகவும் பாதுகாப்பு படை மீண்டும் தாக்குதல் தொடுத்ததாகவும் தப்பி ஓடிவிட்டனர் என்று கதையளக்கும் காவல்துறை பெண் எரித்துக் கொல்லப்பட்ட பிரச்சினையை திசை திருப்பப் பார்க்கிறது.

இதனிடையே குக்கி சோ எம்எல்ஏக்களுடன் மணிப்பூர் பாஜக அரசாங்கத்தின் முதல்வர் பிரேன்சிங் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதாக நவம்பர் 8-ல் உச்ச நீதிமன்ற விசாரணையில் இந்திய சோலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

ஆனால் இது அப்பட்டமான பொய் என்கிறார்கள் குக்கி – சோ எம்எல்ஏக்கள். “மே 3, 2023 க்கு பிறகு முதல்வர் என்.பிரேன்சிங்குடன் நாங்கள் எந்த சந்திப்பையும் நடத்தவில்லை என்பதையும் இம்பாலில் இருந்து எங்கள் மீதான வன்முறை மற்றும் இன சுத்திகரிப்புக்கு பின்னால் பிரேன்சிங் மூளையாக இருப்பதால் எதிர்காலத்தில் அவரை சந்திக்கும் எண்ணம் இல்லை என்பதையும் நாங்கள் மேலும் தெளிவுபடுத்துகிறோம். இது இன்று வரை தொடர்கிறது” என குக்கி – சோ மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

ஒன்றாய் வருடமாக கலவரம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் 56 இன்ச் இந்தியாவின் பிரதமர், உக்ரைன் – ரஷ்யப் போரை நிறுத்தும் வலிமை படைத்த பாசிச மோடி மணிப்பூர் பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை. அதைப் பற்றி பேசுவதும் இல்லை. மாறாக உலகம் சுற்றுவது தேர்தல் பிரச்சாரத்தில் வேடங்கள் பல இட்டு வாக்கு சேகரிப்பது என ‘பிசியாக’ உள்ளார்.


படிக்க: மணிப்பூர் கலவரம்: நெருப்பை அணையாமல் பாதுகாக்கிறது பாஜக!


தற்போது நடந்து வரும் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தலில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் மோடி, ஜார்க்கண்டில் பேசும்போது ஓபிசி எஸ்டி மக்களிடையே ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா பிளவை உருவாக்குவதாக பேசியுள்ளார். ஒன்றரை வருடமாக மணிப்பூரில் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறது பாசிச பாஜகவும் அதன் வானர கும்பலான அரங்கோல் தெம்பையும். மோடியினால் மட்டும் தான் இப்படி பேச முடியும்.

மணிப்பூர் விசயத்தில் மட்டுமல்ல, பசு குண்டர்களால் பல அப்பாவி இஸ்லாமியர்களும், இந்துக்களும் அடித்துக் கொல்லப்பட்ட போதும் வாய் திறக்கவில்லை. காஷ்மீர் கத்துவாவில் 8 வயது சிறுமி கோவிலில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட போதும் வாய் திறக்கவில்லை. அந்த கொலையை செய்த படுபாதகனுக்கு ஆதரவாக பாசிச பாஜக கொடி ஊர்வலம் நடத்திய போதும் கண்டிக்கவில்லை. இதுவெல்லாம் மோடிக்கு தெரியாது என்று சொல்லி விட முடியாது. தெரிந்தும் கண்டும் காணாமல் இருக்கிறார் என்றால் இந்த கொலைகளை ஆதரிக்கிறார் என்றே கருத வேண்டும்.

மணிப்பூர், பாசிஸ்டுகளால் திட்டமிடப்பட்ட வன்முறை என்பது பிரேன்சிங் பேசிய ஆடியோ வெளியான பின்பும் நீதிமன்றங்கள் வாய் திறக்காமல் விசாரணை என்ற பெயரில் இழுத்தடித்து பாசிஸ்டுகளுக்கு துணைப் போகிறது. ஒரு வகையில் மணிப்பூர் கலவரம் உருவாவதற்கு காரணமாகவும் நீதிமன்றம் இருந்துள்ளது.

இதையெல்லாம் அறியாத நடிகர் விஜய் போன்ற அறிவிலிகள் தான் “பாசிசம் என்று ஏமாற்றுகிறார்கள். அவர்கள் பாசிசம் என்றால் இவர்கள் பாயாசமா?” என தற்குறித்தனமாக பேசுகிறார். ஒடுக்கப்படும் மக்களின் வலியை உணராத மோடியோ, விஜய்யோ மக்களின் தலைவராக ஒருபோதும் இருக்க முடியாது.

இந்தியாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்கள் மீதும் சிறுபான்மை இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் வன்முறை கொலைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது ஆர்.எஸ்.எஸ் மற்றும் அரம்பை தெங்கோல் உள்ளிட்ட மதவெறி தீவிரவாத அமைப்புகள் தான். பல்லாயிரம் கோடி சொத்துக்கள் வைத்துள்ள இந்த அமைப்புகளை தடை செய்யாவிடில் மணிப்பூர் போன்று இந்தியாவின் எந்த பகுதியிலும் வன்முறை உருவாக்குவார்கள். அதனை கவனத்தில் கொண்டு எதிர்கட்சிகள், கவனம் ஈர்க்கும் வகையில் கொலைகார அமைப்புகளுக்கு எதிராக மக்களை திரட்டி போராட வேண்டும். வீதிவீதியாக சென்று பாசிஸ்டுகளை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். தேர்தலில் பாஜகவை வீழ்த்திவிட்டால் பிரச்சினை ஒழிந்து விடும்  என நினைப்பது அறிவீனம்.

  • நலன்

2 COMMENTS

  1. மணிப்பூரில் பாலியல் வல்லுறவு படுகொலைகள் மோடி எங்கே? என்ற கட்டுரை மணிப்பூர் குக்கி/ மேய்தீ மக்களின் மோதல்கள் அரம்பை தென்ஙகோல் கும்பலால் படுகொல வல்லுறவு செய்யப்படுகிறது பாசிச மோடியே இதுவரை மணிப்பூர் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை/ மணிப்பூர் முதல்வர் பிரேம் சிங் பேசிய ஆடியோ குறித்தும் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை நீதிமன்றங்களும் மௌனம் காக்கிறது போன்ற விவரங்கள் புரிந்து கொள்ளும்படி உள்ளது கட்டுரை சிறப்பு

  2. மணிப்பூரின் தற்போதைய நிலை குறித்து – ஒன்றரை ஆண்டு காலமாக நீடித்து வரும் கொடுஞ்செயல்கள் குறித்து கட்டுரை நன்றாகவே அலசுகிறது. பாஜக-சங்பரிவார்க் கூட்டம் மற்றும் நீதித்துறை இவை எதனையும் கண்டு கொள்ளாமல் வாய் மூடி மௌனிகளாக இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. கட்டுரையாளர் குறிப்பிட்டு இருப்பது போல மக்கள் திரள் போராட்டங்கள் தான் – வீதி போராட்டங்கள் தான் இவர்களது பாசிச கொடுங்கோன்மையை வீழ்த்திக் காட்டும்.

    கட்டுரையில் தென்படும் முக்கிய ஓரிரு எழுத்துப் பிழைகளை தவிர்த்து
    இருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here