2023-ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி மணிப்பூர் உயர்நீதிமன்றம் மெய்தேய் சமூகத்தினரை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி பழங்குடி மக்கள் போராடிய போது அதனை ஒடுக்க ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் கைகூலிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பழங்குடி மக்களின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. குக்கி பழங்குடி பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு நடுரோட்டில் இழுத்துச் செல்லப்பட்டது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இன்றுவரை மணிப்பூரில் அமைதிநிலை திரும்பவில்லை. பல இடங்களில் திட்டமிட்டு வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. அம்மாநில மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிலர் வன்முறையால் பாதிக்கப்பட்டு அண்டை மாநிலமான மிசோரமில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்த கலவரத்திற்கு மணிப்பூரை ஆளும் பாஜக தலைமையிலான அரசே காரணம். இதுவரை இந்திய பிரதமர் மோடி மணிப்பூரை சென்று பார்வையிடவும் இல்லை. அது பற்றி பேசவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கலவரம் தொடங்கி 16 மாதங்கள் கடந்தும் மணிப்பூர் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

இந்நிலையில் மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள கோட்ரூட் மற்றும் கடங்பண்ட் கிராமங்கள் மீது செப்டம்பர் 1 அன்று ட்ரோன் மூலம் தாக்குதல் நடந்துள்ளது. இந்த இரோன் தாக்குதலினால் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 9 பேர்  காயமடைந்துள்ளனர். இதை தொடர்ந்து அடுத்த நாளும் தாக்குதல் நடந்துள்ளது.

இந்த தாக்குதலின் பின்னணியில் குகி-சோ போராளிகள் இருக்கலாம் என இந்திய ஊடகங்களால் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. இதற்கு ஆதாரமாக மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக 2021-ல் நடந்த தாக்குதலை சொல்கின்றன ஊடகங்கள்.

மியான்மர் துணையுடன் குக்கி பழங்குடிகள் போராடுகிறார்கள் என திரித்து கூறுகின்றன. இதில் சீனாவும் ஆதரவு அளித்திருக்கலாம் என்று சங்கிகளின் வாட்சப் பதிவுகளை செய்திகளாக பரப்புகின்றன பாஜக ஆதரவு ஊடகங்கள்.

குக்கி பழங்குடிகளும் அவர்களது போராட்ட குழுக்களும் அத்தகைய தொழில்நுட்ப வசதி படைத்ததா? வன்முறை உச்சக்கட்டத்தில் நிகழ்ந்த போது ட்ரோனை பயன்படுத்தாமல் இப்போது பயன்படுத்த வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை என்பதே உண்மை.

படிக்க:

♦ மணிப்பூர்: கலவரங்களின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் குண்டர் படை! எப்படி தடுப்பது?

♦ 2023 மணிப்பூர் கலவரம்: 2024ல் நாம் செய்ய வேண்டியதை உணர்த்துகிறது!

மேலும் நீண்ட காலமாக இந்திய அரசிற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் மாவோயிஸ்ட் உட்பட பல்வேறு குழுக்கள் இதுவரை ட்ரோன் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதில்லை. அப்படியிருக்கும் போது குக்கி-சோ போராளிகள் ட்ரோன் தொழில்நுட்பத்தினை எவ்வாறு பயன்படுத்தியிருக்க முடியும்?

ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த மணிப்பூர் அரசோ அல்லது அவர்களது கைக்கூலி படைகளாலோ தான் முடியும் என்பதே உண்மை. ஆனால் மணிப்பூர் பாஜக அரசோ பயங்கரவாதிகள் தாக்குதல் என ஓலமிடுகிறது.

மாணவர்கள் போராட்டம்

கடந்த ஓராண்டிற்கும் மேலாக நடந்து வரும் கவரத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டு பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கும் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு அவர்கள் கல்வி பாதிப்பு அடைந்துள்ளது.

இந்நிலையில் ட்ரோன் தாக்குதலை கண்டித்தும் மாநிலத்தில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்காத பாஜக அரசை கண்டித்தும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் உருவ பொம்மையை எரித்து தங்களது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்கள்.

இதனிடையே 10.09.2024 அன்று மணிப்பூர் பல்கலைக்கழக மாணவர்கள்  ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடத்தினார்கள். அப்போது மாணவர்களை கலைக்க போலீசு கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. ஒரு கட்ட்த்தில் மாணவர்களின் எதிர்ப்பிற்கு தாக்கு பிடிக்க முடியாமல் போலீசு ஓடியது. மாணவர்களுக்கும் போலீசுக்கும் நடந்த மோதலில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மணிப்பூரில் மீண்டும் கலவர சூழல் நிகழ்வதால் இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தௌபால் ஆகிய மாவட்டங்களில் நேற்று முதலே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மேலும் 2 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவித்துள்ளது. அரசின் ஒடுக்குமுறைகள் வெளியில் பரவ விடாமல் தடுக்க 5 நாட்களுக்கு இணைய சேவையும் முடக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் மணிப்பூர் முதல்வர் பிரேன்சிங் பேசும் ஆடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. மீண்டும் கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டதற்கு அம்மாநில பாஜக முதல்வர் பிரேன்சிங் தான் காரணம் என மணிப்பூர் மக்கள் கூறுகிறார்கள். 16 மாதங்களாக நடந்துவரும் கலவரத்திற்கு முதல்வர் பிரேன்சிங் காரணம் என்பதை மெய்பிக்கும் வகையிலும், அவரை சிக்கவைக்கும் வகையிலும் ஆடியோ இருந்துள்ளது. ஆனால் இது சித்தரிக்கப்பட்டது எனக் கூறுகிறார் முதல்வர் பிரேன்சிங்.

மணிப்பூர் மக்கள் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வரை 56 இன்ச் மோடி அங்கு செல்லாமல் இருக்கிறார். இது குறித்து எந்த மீடியாக்களும் கேள்வி எழுப்புவதில்லை. விவாதங்கள் நடத்துவதில்லை. மணிப்பூர் இந்தியாவில் இல்லை என்பது போல் கடந்து செல்கிறார் மோடி.

ஆனால் சங்கிகளோ ரஷ்ய – உக்ரைன் போரையே தடுத்து நிறுத்தும் வல்லமை படைத்தவர், உலகத் தலைவர் என புகழாரம் பாடுகின்றனர். Godi மீடியாக்களும் இதற்கு ஒத்து ஊதுகின்றனர். ஒரு மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ்-ன் அடியாள் அமைப்பின் மூலம் கலவரத்தை உருவாக்கி அம்மாநில மக்களின் வாழ்க்கையை குழித்தோண்டி புதைத்துக் கொண்டிருக்கும் பாசிச கும்பலுக்கு மணிப்பூர் மாணவர்களும் மக்களும் ஒற்றுமையான போராட்டத்தின் மூலம் பதிலளிப்பார்கள்.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here