
Ministry of Defence-க்கு படத்தை காட்டி அவர்களின் பாராட்டுக்கு பிறகு ரிலீஸான படம் என அமரன் படம் குறித்து அப்பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசியிருக்கிறார். இந்த ஒரு வாக்குமூலமே அப்படம் ஒன்றிய பாஜக அரசின் ஒப்புதலுடன் எடுக்கப்பட்ட படம் என்பதை கொடுத்து, அப்படம் மீதான நம் விமர்சனங்களை நியாயப்படுத்தி விடுகிறது. எனினும் அதற்குப் பிறகு அவர் பேசும் விஷயங்கள், பொதுப்புத்தியில் இருந்து பேசுபவர்கள் மற்றும் எழுதுபவர்களுக்கு சரிதானே என்பது போன்ற தோற்றத்தை கொடுக்கும் வாய்ப்பு இருப்பதால் இப்பதிவு.
”ஒவ்வொரு ரெஜிமெண்ட்டுக்கும் ஒவ்வொரு war cry இருக்கு. மெட்ராஸ் ரெஜிமெண்டுக்கு ’வீரமதராஸி… அடி கொல்லு, அடி கொல்லு’ன்னு முழக்கம் இருக்கும். அது போலதான் ராஜ்புட் ரெஜிமெண்ட்டுக்கும் ’பஜ்ரங் பலி ஜே’ங்கற முழக்கம் இருக்கு. அதைக் காட்டாம படம் எடுத்ததான் தப்பு!” எனப் பேசுகிறார் இயக்குநர்.
முதலில் ராஜ்குமார் பெரியசாமி ஆவணப்படம் எடுக்கவில்லை. Creativity என்கிற சுதந்திரம் அவருக்கு படத்தில் இருக்கிறது. பஜ்ரங் பலி கோஷத்தில் மதமும் குறிப்பிட்ட கட்சியின் கோஷமும் – ஏன் சங்கப் பரிவார அமைப்பின் பெயரே கூட இருக்கிறது எனத் தெரிந்து தவிர்க்க நினைத்தால், அவர் தவிர்த்திருக்கலாம். அல்லது அது சார்ந்த விமர்சனம் இருக்கும்பட்சத்தில், அக்கோஷத்தை வைத்து விமர்சனப் பூர்வமான உள்ளடக்கத்தை – குறியீடாக கூட – வைத்திருக்க முடியும். ஆனால் ராஜ்குமார் பெரியசாமி அதை செய்யவில்லை.
ஒரு காட்சியில் கண நொடியில் கடந்து செல்லும் ஒரு புகைப்படம் உட்பட எல்லா விஷயங்களையும் தீர்மானிப்பவர் இயக்குநர்தான். சினிமாவில் யதேச்சையாக எதுவும் நேர்வதில்லை. எல்லாமுமே கவனிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, ஏற்கப்பட்டுதான் குறிப்பிட்ட ஒரு காட்சியில் இடம்பெறும். சினிமா விவாதங்களில் இடம்பெறும் வாய்ப்பு பெற்றதால், ஒரு காட்சியின் ஒவ்வொரு அம்சமும் எத்தனை நுணுக்கமாக விவாதிக்கப்பட்டு முடிவாகும் என்பதை கண்டிருக்கிறேன்.
ஆகவே பஜ்ரங்பலி என்பது என்ன என்பதும் அது என்ன மாதிரியான விமர்சனங்களை கொண்டு வரும் என்பதும் யாரெல்லாம் அதில் சந்தோஷம் கொள்வார்கள் என்பதும் தெளிவாக விவாதிக்கப்பட்டே காட்சியில் இடம்பெற்றிருக்க முடியும்.
மக்பூல் பட், சையது ஷா கிலானி போன்றோரின் புகைப்படங்கள் இடம்பெறும் காட்சிகள் இப்படத்தில் உள்ளன. குறைந்த காட்சி நேரமாகவே இருந்தாலும், ஒரு கலை இயக்குநர் அல்லது கலை உதவி இயக்குநர் தாமாக சென்று அந்த புகைப்படங்களை காட்சிக்குள் வைத்து விட மாட்டார். குறைந்தபட்சம் ‘காஷ்மீர் தீவிரவாதம்’ (காஷ்மீர் தேசிய இன விடுதலைக்கு இந்தியா சூட்டியிருக்கும் பெயர்களில் ஒன்று) சார்ந்தவர்களின் புகைப்படங்கள் வேண்டும் என்றேனும் இயக்குநரின் தரப்பு உத்தரவிட்டிருக்கும். அதிகபட்சமாக இவர்களின் பெயர்களை குறிப்பிட்டே கூட கேட்கப்பட்டிருக்கும். எப்படி நடந்திருந்தாலும் அப்படங்கள் இடம்பெற்றது யதேச்சையான விஷயம் அல்ல.
அப்படங்களுக்கு பின் ஓர் அரசியல் தேர்வு இருக்கிறது. காஷ்மீரில் நடக்கும் மோதலில் எந்த தரப்பை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்கிற முடிவு இருக்கிறது. அந்த முடிவிலிருந்தும் தேர்விலிருந்தும்தான் தீவிரவாதிகளாக இவர்களின் புகைப்படங்களை காட்டும் செயல் அரங்கேறியிருக்கிறது. இதே பாணியிலான தேர்வும் முடிவும்தான் ‘பஜ்ரங்பலி’ கோஷம் வைப்பதிலும் இருக்கிறது என சொல்கிறோம்.
‘இல்லை, அந்த கோஷம் நடைமுறையில் அப்படி இருப்பதால்தான், அதை அப்படியே ஆவணப்படுத்துகிறோம்’ என கழுவும் நீரில் மீனை நழுவ விடும் இயக்குநரிடம் நாம் கேட்கும் கேள்வி இதுதான். அதே வகை ஆவணப்படுத்தும் முனைப்புடன் ஏன் தேசிய இன விடுதலைப் போராட்டம் காண்பிக்க படவில்லை? ஒரு வசனம் கூட காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக இல்லாமல் ‘பாஜக’வின் இந்துத்துவ தேசியவாதத்தை படம் அப்பட்டமாக பேசுகிறதே, எப்படி?
’ஒரு பக்கத்தில் மட்டும் யதார்த்தத்தை அப்படியே ஆவணப்படுத்துவோம், ஆனால் மறுதரப்பை காட்டுகையில் அப்படி யோசிக்கக் கூட மாட்டோம்’ என்றால் அதில் இயக்குநரின் பக்கசார்பு மட்டும்தான்.
‘ஒவ்வொரு ரெஜிமெண்டுக்கும் ஒவ்வொரு முழக்கம் இருக்கிறது’ என்கிறார் இயக்குநர். அதை ஆதரித்து ‘லாஜிக்’குடன் பேசுவதாக நம்பி ஒரு கூட்டமும் அடித்து விட்டுக் கொண்டிருக்கிறது.
படிக்க: அமரன், தமிழ்ச்சூழலுக்கேற்ற Kashmir Files!
ஒவ்வொரு போர் முழக்கம் இருக்கும் ராணுவக் குழுக்கள் யாருக்காக போராடுகிறார்கள்? உதாரணமாக ராஜ்புட் ரெஜிமெண்ட் வீரர்கள், ரஜபுத்திரர்களுக்காக போராடுகிறார்களா, அல்லது இந்தியாவுக்காகவா? சீக்கிய ரெஜிமெண்ட் வீரர்கள், சீக்கிய மக்களுக்காக போராடுகிறார்களா, இந்தியர்களுக்காகவா?
இந்தியர்களுக்காகதான் போராடுகிறார்கள் எனில், இந்தியாவை வழிநடத்துவது எது? அரசியல் சாசனத்தின் மதச்சார்பின்மையா, பஜ்ரங்பலியா?
இதே சீக்கியர்கள், சீக்கிய ரெஜிமெண்டுக்கான இதே கோஷத்துடன் டெல்லி எல்லையில் விவசாயிகளுடன் ஒரு வருடத்துக்கும் மேலாக போராடினார்களே, அப்போது இந்திய அரசு ’இந்திய ராணுவத்தின் முக்கியமான ரெஜிமெண்டை சேர்ந்தவர்கள்’ என உடனே ஓடி வந்து கோரிக்கைகளை கேட்டதா என்ன?
லாஜிக் பேசலாம். ஆனால் அந்த லாஜிக்கிலாவது கொஞ்சம் லாஜிக் இருக்க வேண்டும்.
படிக்க: இந்திய அரசின் துரோகத்தை மறைக்கும் அமரன்!
இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான ஒன்று, இந்திய ராணுவத்தில் செய்யப்படுகிறது எனில், அதை அம்பலப்படுத்த வேண்டும். அல்லது பொருட்படுத்தாமல் இருந்துவிட வேண்டும். காட்சியில் காட்டி விட்டு, அது தவறு என விமர்சனம் வைக்கப்படுகையில், ’அது தவறொன்றுமல்ல, அதுதான் மரபாக இருக்கிறது’ எனப் பேசுவது அபத்தம்.
ராஜ்புட் ரெஜிமெண்டுகள், ஜாட் ரெஜிமெண்டுகள் போல குறிப்பிட்ட சாதியப் பெயர்கள் கொண்டு இந்திய ராணுவம் இயங்குவதை பற்றிய அதிருப்தியை முன்னாள் ராணுவ அதிகாரிகள் பலரும் எழுதியிருக்கின்றனர். சமீபத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் கூட, ஒரு சமயத்தில், ’ராணுவத்துக்குள் அரசியல் தலையிடக்கூடாது’ என்றும் ’ராணுவத்தின் மதச்சார்பின்மைக்கு பங்கம் வரக் கூடாது’ என்றும் கூட பேசியிருந்தார்.
இவற்றைத் தாண்டி ‘பஜ்ரங் பலி’ என மதவாத கோஷம் போடுவதுதான் யதார்த்தமாக இந்திய ராணுவத்தில் இருக்கிறது என இயக்குநர் கோருவார் எனில், மதச்சார்பின்மையை முன் வைக்கும் இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிராக இந்திய ராணுவம் இருப்பதாக இயக்குநர் சொல்கிறார் என எடுத்துக் கொள்ளலாமா?
இறுதியாக ”‘யாரோ எங்கேயோ பேட்டி கொடுக்கறாங்க, கேள்வி கேட்கறாங்க’ன்னு நம்ம எல்லாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை!” என்கிறார் இயக்குநர் ராஜ்குமார்.
பதில் சொல்ல வேண்டும் ராஜ்குமார்!
குறிப்பாக, இந்தியாவின் அங்கமாக இருக்கும் இஸ்லாமிய மக்களையும் நாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் காஷ்மீர் மக்களையும் பற்றிய ஒரு பிம்பத்தை படம் கொடுக்கிறதெனில், அதற்கான கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் பொறுப்பு.
இரவோடு இரவாக இணையத்தை துண்டித்து விட்டு, சம்பந்தப்பட்ட மக்களுக்கு கூட தெரியாமல் அடுத்த நாளில் ஜம்மு காஷ்மீரை துண்டாடி, சிறப்பு அந்தஸ்தையும் ரத்து செய்து விட்டு, கேள்வி கேட்டவர்களை ஒடுக்கி, சிறையில் தள்ளியவர்களுக்கும் உங்களின் பேச்சுக்கும் என்ன வித்தியாசம் ராஜ்குமார் பெரியசாமி?
பதிலளிக்க வேண்டியதில்லை என்பதும் ஒருவகையில் பதில்தான்.
பாசிசம் அளிக்கும் பதில் அது!