
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான மும்பை தாராவி மீண்டும் ஒரு பேசு பொருளாக மாறி உள்ளது.
மராட்டிய மாநிலத்தில் நடக்கப் போகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக போட்டி போடுகின்ற பாசிச பாஜக தலைமையிலான கூட்டணி மற்றும் அதற்கு எதிராக போட்டியிடுகின்ற மகா விகாஸ் அகாடி ஆகிய இருவருக்கும் இடையில் யார் மகாராஷ்டிராவின் ஆட்சியை கைப்பற்றுவது என்பதற்கான போட்டியுடன், தாராவி பகுதியில் அதானியின் நில அபகரிப்பு மற்றும் நில விற்பனை தொடர்பான விவகாரங்கள் தேர்தலில் முன்னிலை பெற்றுள்ளன.
இந்தியாவில் பிரிட்டன் காலனியாதிக்கத்தின் போது 1850 களில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மும்பையில் உருவாக்கப்பட்டன. அந்த தோல் பதனிடும் வேலைகளுக்கு தேவையான தொழிலாளர்கள் குறிப்பாக சொல்லிக் கொள்ளப்படும் இந்துக்களில் ஒடுக்கப்பட்ட மக்கள், இஸ்லாமியர்கள் போன்றவர்கள் தான் இந்த தொழிலில் முதலில் அதிகமாக ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த தொழிலில் ஈடுபட்ட உழைப்பாளி மக்கள் மும்பையில் அதிகமாக ஆடுகள் மற்றும் மாடுகள் வெட்டப்படும் பாந்த்ரா நகருக்கு அருகில் உள்ள தாராவி பகுதியில் தான் அதிகம் குடியேறினர். ஏனென்றால் இங்கு விலை மலிவான வாடகையில் வீடுகள் கிடைப்பது சுலபமாகிறது என்பதாலும், நெருக்கடி இல்லாமல் அனைத்து பிரிவினரும் தங்குவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதாலும் இப்பகுதி உழைக்கும் மக்களின் மிகப்பெரும் தங்குமிடமாக மாறியது.
தாராவி உருவான சுருக்கமான வரலாறு.
இந்தியா மட்டுமன்றி, ஆசியாவிலே அதிக அளவிலான குடிசைகள் எங்கு இருக்கிறது என்று கேட்டால், அனைவரும் கையை காட்டும் இடமாக இருப்பது `மும்பை தாராவி’. அதுவும் தமிழர்களால் உருவாக்கப்பட்ட இன்றைய தாராவி ஒரு காலத்தில் கழிவுகள் மற்றும் சாக்கடைகள் நிறைந்த கழிமுகப்பகுதியாக இருந்தது.
மும்பை உள்ளாட்சி நிர்வாகம் தாராவியை குப்பை மற்றும் கழிவுகளை போடும் புறநகர் பகுதியாகவே 20-வது நூற்றாண்டின் மத்திய பகுதி வரை நினைத்துக்கொண்டிருந்தது. எனவேதான் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் தாங்கள் நினைத்த இடத்தில் குடிசைகள் அமைத்து வாழ முடிந்தது. இதனை உள்ளாட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவே இல்லை. தாராவியில் உள்ளூர் தாதாக்கள் குறிப்பிட்ட இடங்களை வளைத்துப் போட்டுக்கொண்டு அதனை சில நூறு ரூபாய்களை வாங்கிக்கொண்டு நிலத்தை கூறு போட்டு விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
தாராவி பகுதியில் குடியேறிய மக்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் 50 சதவீதம் உள்ளனர். அதிலும் ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்கள் அதிகமுள்ளனர்., இஸ்லாமியர்கள் மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதம் உள்ளனர். குஜராத்தில் இருந்து குடியேற்றப்பட்ட மண்பாண்டம் செய்யக்கூடிய குயவர்கள் மற்றும் பாரம்பரியமாக இந்த மண்ணைச் சார்ந்த மீனவர்கள், பௌத்தத்தை ஏற்றுக் கொண்ட மக்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் அனைவரும் வாசிக்கின்றனர்.
படிக்க: அதானி சேவையில் திமுக அரசின் போலீசு!
வெவ்வேறு மதங்கள், சாதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும் அவர்கள் அனைவரும் தாராவி என்ற ஒரு மிகப்பெரும் சேரி பகுதியில் வாழ்வதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவியில் சுமார் 7 இலட்சம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இப்பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள், ஜவுளி பொருட்கள் உற்பத்தி மற்றும் வீட்டு வேலைகள் செய்து தங்களுடைய அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வரப்போவதாக கூறிய மாநில அரசு தாராவியை மறு சீரமைப்பதற்க்கான திட்டம் ஒன்றை கடந்த 1999 ஆம் ஆண்டிலேயே முன்வைத்தது. ஆனால், பலமுறை முடிவு செய்தும் டெண்டர் விடப்பட்டும் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் தற்போது மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா-பா.ஜ.க கூட்டணி அரசு அதானி கும்பலுக்கு இத்திட்டத்தை தாரை வார்த்துள்ளது.
தாராவியை அபகரிக்கும்
அதானி குழும திட்டம்.
2022 ஆம் ஆண்டில், கௌதம் அதானி தலைமையிலான அதானி ரியாலிட்டி ரூ.20,000 கோடி மதிப்பிலான 259 ஹெக்டேர் தாராவி கிளஸ்டர் மறுவடிவமைப்பு திட்டத்திற்கான டெண்டரை ’வென்றது’. புதிய திட்டம் ஆசியாவின் மிகப்பெரிய சேரியை “நவீன நகர்ப்புற நிலப்பகுதியாக” மாற்றுவதாக கூறுகிறது. இப்பகுதி மும்பையின் மையமாக அமைந்துள்ளது எனபதாலும், நகரின் மேல்-சந்தை மத்திய மற்றும் மேற்கு புறநகர்ப் பகுதிகளை இணைக்கிறது எனபதாலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
படிக்க: ரூ.12,000 கோடி ஊழல்: உள்ள இந்தியர்களின் தலையில் நிலக்கரியை அரைத்த அதானி
இந்த ஆண்டு செப்டம்பரில் அதானி ரியாலிட்டி நிறுவனம் மாநில அரசாங்கத்தின் தாராவி மறுவடிவமைப்பு திட்ட ஆணையத்துடன் ஒப்பந்தம் செய்து தாராவி மறுவடிவமைப்பு திட்ட பிரைவேட் லிமிடெட் (டிஆர்பிபிஎல்) என்ற சிறப்பு நோக்கத்திற்கான அமைப்பை (SPV) நிறுவியது. மாநிலத்தின் குடிசைப்பகுதி மறுவாழ்வு ஆணையத்தின் (SRA) கீழ் குறிப்பாக தாராவி திட்டத்திற்காக. மொத்த DRPPL இல், அதானி ரியாலிட்டிக்கு 80% உரிமை உள்ளது, இது மாநிலத்தின் மிகக் குறைந்த குறுக்கீடுகளுடன் இப்பகுதியின் மறுமேம்பாட்டினை மேற்கொள்ளும் ஒரு தனி நிறுவனமாக அமைகிறது.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வசித்து வரும் மக்களை அவர்களது இருப்பிடங்களிலிருந்து அகற்றி ரியல் எஸ்டேட் தொழில் மூலம் மிகப்பெரும் வணிக வளாகங்களை கட்டி பல்லாயிரம் கோடிகளை கொள்ளையடிப்பதற்கு தேவையான இடத்தை மும்பையில் மையப்பகுதியில் கைப்பற்றுவதற்கு மறு பெயர் தான் தாராவி மறுசீரமைப்புத் திட்டம். உழைப்பாளி மக்களுக்கு சிறிய அளவு நிலத்தை கொடுத்து அவர்களை வாயடைப்பதும், கணக்கில் இல்லாத தாராவி மக்களை மும்பை இருந்து தொலைவிற்கு விசிறியடிப்பதும், மீதமுள்ள இடங்களை கைப்பற்றி சுருட்டுவதற்கும் அதானி கும்பல் மோடியின் ஆதரவுடன் தயாராக உள்ளது.
மும்பை மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு வேலைகளுக்கு சென்றாலோ அல்லது தனியார் வேலைகளுக்கு சென்றாலும் தாராவி பகுதியிலிருந்து வருகிறோம் என்று சொன்னால் இளக்காரமாக பார்ப்பதும் இழிவாக கருதப்படுவதும் ஒரு கேடுகெட்ட சமூக கண்ணோட்டமாக உள்ளது.
தாராவி என்றாலே தாதாக்கள், ரவுடிகள், பொறுக்கிகள், கிரிமினல்கள் குடியிருக்கும் இடம் என்று ஆளும் வர்க்க கழிசடை கும்பலால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார தலைநகரம் என்றெல்லாம் பீற்றிக் கொள்ளப்படும் மும்பையை உருவாக்கிய லட்சக்கணக்கான உழைப்பாளர்கள் வசிக்கின்ற பகுதி என்பதால் இயல்பிலேயே இழிவுபடுத்தப் படுகிறது என்பது தான் உண்மை.
இந்த இடத்தை அபகரிப்பதற்கு இந்தியாவில் நிழல் பிரதமரான திருவாளர் அதானியின் குழுமம் தாராவி மறுசீரமைப்பு திட்டம் என்ற பெயரில் பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கி நிலத்தை அபகரிக்க முயற்சித்து வருகிறது என்பதுதான் உண்மை.
இந்த சட்ட மன்றத் தேர்தலில் தாராவி தொகுதியில் நீண்ட காலம் தேர்வு செய்யப்பட்டு எம்எல்ஏவாக மற்றும் எம்பியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் கெய்க்வாட் குடும்பத்தைச் சார்ந்தவர்களை ஒழித்துக் கட்டிவிட்டு அதானி கும்பலுக்கு சேவை செய்யும் ரியல் எஸ்டேட் புரோக்கரான ராஜேஷ் காந்த்ரேவைக் கொண்டு வருவதற்கு ஆர்எஸ்எஸ் பாஜக மற்றும் சிவசேனா துடித்துக் கொண்டுள்ளது.
இதன் மூலம் அதானியின் தாராவி நிலத்திருட்டை அதிகாரப்பூர்வமாக, சட்டபூர்வமாக ஆக்குவதற்கு தயாராகியுள்ளது என்பதுதான் நாம் அம்பலப்படுத்த வேண்டிய முக்கிய அம்சமாகும்.
- பார்த்தசாரதி
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி