டந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் மணிப்பூரின் சமவெளிகளில் வாழும் பொருளாதார ரீதியில் முன்னேறிய நிலையிலுள்ள, இதுவரை பழங்குடியாக தங்களைக் கருதாத, வைணவ இந்துக்களாக தங்களை கருதிக்கொள்ளும் மெய்டி இன மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் அம்மாநிலத்தின் உயர்நீதிமன்றத் தீர்ப்பு கலவரத்தைத் தொடங்கிவைத்தது. அதைத் தொடர்ந்து மணிப்பூரின் மலைப்பகுதிகளில் ஆண்டாண்டு காலமாக பழங்குடிகளாக இருக்கும் குக்கி மற்றும் மிசோ மக்களை அண்டைநாடான மியான்மரிலிருந்து ஊடுருவியவர்கள், போதைப்பொருட்களை பயிரிடுபவர்கள், காட்டுமிராண்டிகள் என்று முத்திரைகுத்தி தாக்குதல் தொடுத்தும், அவர்கள் வசிக்கும் கிராமங்களில் புகுந்து கொடூரமாகக் கொன்று குவித்து எஞ்சியிருப்பவர்களை வசிப்பிடங்களிலிருந்து விரட்டியடிக்கும் வகையில் கடந்த ஓராண்டாக பல்வேறு கலவரங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.

அக்கலவரங்கள் இன்றுவரை ஓயாத நிலையில் ரஷ்ய-உக்ரைன் போர், காசா-இஸ்ரேல் போரையெல்லாம் ஒற்றை போன்கால் மூலம் நிறுத்திவைக்கும் வல்லமைபெற்ற நமது 56-இன்ச் அட்டக்கத்தி, உலகம் முழுவதும் சுற்றி சுழன்றடிக்கும் விஸ்வகுரு தமது அரண்மனையிலிருந்து 2400 கிமீ தூரத்திலிருக்கும் மணிப்பூருக்குப் போய் கலவரத்தை நிறுத்தவோ, கலவரக்காரர்களை அடக்கவோ, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறவோ மனமில்லாமல் பம்மாத்து காட்டிக்கொண்டிருக்கிறார். மணிப்பூரில் நடந்த கொடுமைகளை அம்பலப்படுத்தி முன்னாள் ஜே.என்.யூ பேராசிரியர் பிமோல் அகோய் எம்.பி,  நாடாளுமன்றத்திலேயே கேள்வி எழுப்புகிறார். 

குக்கி இன மக்களை மணிப்பூரிலிருந்து விரட்டியடிக்கும் கலவரங்களை முன்னின்று நடத்தியது இதற்காகவே கடந்த 2020-ஆம் ஆண்டில் ஆர்எஸ்எஸ்-பாஜவின் தற்போதைய முதலமைச்சரான பிரேன்சிங் மற்றும் மணிப்பூரில் முன்னாள் மன்னரின் வம்சாவழியும் மாநிலங்களவை உறுப்பினருமான லேய்சம்பா சனஜோபா ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட அரம்பை தெங்கோல் மற்றும் முன்னாள் ABVP உறுப்பினரான பிரமோத்சிங்கால் ஆரம்பிக்கப்பட்ட மெய்தி லீபுன் போன்ற மத/இனவாத வன்முறை கும்பல்களும், ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ள மெய்டி இனத்தைச் சேர்ந்த சில முன்னாள் போராளி குழுக்களும் தான்.

“மத சிறுபான்மையினரான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் SC/ST உள்ளிட்ட சாதியினரும் எந்தவிதமான உரிமையும் அற்றவர்கள், அவர்கள் எந்த ஒன்றையும் உரிமையோடு கேட்கக்கூடாது என்ற ஆர்எஸ்எஸ்-ன் சித்தாந்தத்தையே பின்பற்றுபவை.  அதனால் தான் மெய்டி-குக்கி இனமோதல் என்று வெளியுலகிற்கு தெரிந்தாலும் உண்மையில் மெய்டி என்ற இந்து பெரும்பான்மை இனக்குழுவுக்கும், குக்கி என்ற கிறிஸ்தவ சிறுபான்மை குழுவுக்குமான மோதலாக இருக்கிறது. அதனால்தான் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ தேவாலயங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன. குக்கி மக்களின் தேவாலயங்கள் மட்டுமின்றி மெய்டி மக்களின் தேவாலயங்களும் இக்கொலைகார கும்பல்களின் தாக்குதல் இலக்குகளாயின.

மாநில முதலமைச்சரின் அடியாள் படைகளாக இருப்பதால் இக்கொலைகார கும்பல்களுக்கு ஆள்சேர்க்கவும், ஆயிரக்கணக்கில் கூடவும், பயிற்சி எடுக்கவும், மெய்டி இனத்தைச்சேர்ந்த போலீஸ் கமாண்டோக்கள் இக்கும்பலுடன் இணைந்து குக்கி மக்களைக் கொன்றுகுவிக்கவும், அவர்களின் சொத்துக்களை சூறையாடவும் மாநில அரசின் இயந்திரம் முழுஒத்துழைப்பு கொடுத்தன. போலீசே தமது ஆயுதக்கிடங்கின் கதவுகளை இக்கும்பல்களுக்கு திறந்துவிட்டு தங்கள் வாகனங்களையும் கொடுத்தது. குக்கி பழங்குடியினரின் கிராமங்களை இவ்வாகனங்களில்தான் இந்த கொலைகாரக் கும்பல்கள் மெய்டி வன்முறையாளர்களைக் கொண்டுவந்து இறக்கி அம்மக்களை கொன்றுவிட்டு கிராமங்களை எரித்து தரைமட்டமாக்கியுள்ளனர். 

அதனால்தான் அமித்ஷா அங்கு சென்றிருந்தபோது “ஆயுதங்களை திரும்ப ஒப்படையுங்கள்” என்று கூறவேண்டியிருந்தது. மாநிலத்தில் இப்படியொரு கலவரம் நடத்தவேண்டும் என்பது 2020-ஆம் ஆண்டிலிருந்து திட்டமிடப்பட்டது தற்போது அம்பலமாகியுள்ளது. அதற்காகவே புதிய கொலைகாரக் கும்பல்கள் ஆரம்பிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு இருப்பதும், கலவரம் தொடங்குவதற்கு முன்னரே மணிப்பூரில் சமவெளியில் குடியிருக்கும் குக்கி மக்களின் வீடுகளின் கதவுகளில் அடையாளம் இடப்பட்டதும் நடந்துள்ளது.

பாசிச ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலின் பரிபூரண ஆசியும், மாநில அரசின் முழு ஒத்துழைப்பும் இருப்பதால் அரம்பை தெங்கோல் என்ற கொலைக்கும்பலுக்கு மட்டும் மாநிலம் முழுவதும் சுமார் 60,000 பேர்வரை உறுப்பினர்களாகவும், மெய்தி லீபுன் என்ற கொலைக்கும்பலுக்கு 14,000 உறுப்பினர்கள் உள்ளதாகவும் விபரங்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் வெளிப்படையாக பயிற்சி பெரும் வீடியோக்கள் காணக்கிடைக்கின்றன. அதுமட்டுமில்லாமல் மெய்டி இனத்தைச்சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வரவழைத்து NRC அமல்படுத்துவது, குக்கி மக்களை ST பட்டியலிலிருந்து வெளியேற்றுவது, இந்தோ-மியான்மார் எல்லையில் வேலியமைப்பது உள்ளிட்ட தமது கோரிக்கைகளை சட்டமன்ற/நாடாளுமன்றங்களில் பேச கூட்டம் ஒன்றையும் சமீபத்தில் நடத்தியுள்ளது அரம்பை தெங்கோல் கும்பல். இதிலிருந்தே பாசிச பாஜக-வின் மணிப்பூர் முதலமைச்சர் பிரேன்சிங் மற்றும் அரசு நிர்வாகத்தின் யோக்கியதையைத் தெரிந்துகொள்ளலாம்.

தனது இந்துராஷ்டிர கனவை நடைமுறைப்படுத்த நூறாண்டுகாலமாய் வேலைசெய்து வரும் பாசிச ஆர்எஸ்எஸ்-பார்ப்பன கும்பல் மற்றும் அதன் நூற்றுக்கணக்கான பரிவார் அமைப்புகளும் இந்தியாவெங்கும் பரவிக்கிடக்கும் பல்வேறு இனக்குழுக்களுக்குக்கிடையேயும், சாதிகளுக்கிடையேயும் நுழைந்து அதுநாள்வரை சகோதர சகோதரிகளாக பழகிவரும் மக்களிடையேயுள்ள வேறுபாடுகளை ஆழப்படுத்தி, புனைக்கதைகளை பரப்பி, எதிரிகளாக்கி மோதவிட்டு இரத்தம் குடித்துவருகிறது. ஆர்எஸ்எஸ் வீசும் எலும்புத்துண்டுகளுக்கு ஆசைப்பட்டு தெரிந்தே தன் இனம், சாதி உட்பட ஒட்டுமொத்த மக்களுக்கும் துரோகம் செய்கின்றன சாதி, இனம், மற்றும் மதத்தைக் காப்பதாகக் கூறும் அதன் தலைமைகள். 

மணிப்பூரில் நடத்தப்படும் இந்த ஒட்டுமொத்த கலவரத்துக்கும் பின்னாலுள்ள நோக்கம் என்பது மலைப்பகுதியில் உள்ள குக்கி மக்களை அங்கிருந்து துரத்திவிட்டு மலைகளில் பொதிந்திருக்கும் வளங்களை அம்பானி, அதானி, வேதாந்த முதலிய கார்போரேட்டுகளின் கொள்ளைக்கு படையல் வைப்பதும், மலைப்பகுதிகளில் காடுகளை அழித்து ரிசார்ட்டுகளை அமைத்து “நாட்டின் வளர்ச்சிக்காக 24 மணிநேரமும் உழைத்து களைத்துப்போன மேன்மக்களுக்கான” சுற்றுலா தளங்களாக்குவதுதன் மூலம் முதலாளிகள் கொள்ளை லாபம் ஈட்டத்தான்.

படிக்க:

♦ 2023 மணிப்பூர் கலவரம்: 2024ல் நாம் செய்ய வேண்டியதை உணர்த்துகிறது!

மணிப்பூர் எரிகிறது ! மௌனசாமிக் கும்பலை இனியும் நம்பவேண்டுமா?

இந்த உண்மையை மெய்டி, குக்கி, மிசோ, நாகா மக்கள் உணர்ந்துவிட்டால் ஆர்எஸ்எஸ்-பாஜக காவி பாசிச கும்பலுக்கும் அவர்களின் புரவலர்களான கார்ப்பரேட் பாசிச கும்பலுக்கும் சாவுமணி அடித்துவிடுவார்கள். அந்த வகையில் ஒரு புதிய செய்தியாக நாகா தேசிய சோஷலிச கவுன்சில் (NSCM -IM) என்ற நாகாலாந்தில் செயல்படும் போராளிக் குழு மணிப்பூரில் வசிக்கும் கிறிஸ்துவர்களை பாதுகாக்க களமிறங்குவோம் என்று சமீபத்தில் அரம்பை தெங்கோல் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது கவனிக்கத் தக்க அம்சமாகும்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மணிப்பூரிலுள்ள இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரசுக்கு வாக்களித்து மணிப்பூர் மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். காங்கிரஸ் வென்றுள்ளதால் முதலமைச்சர் பிரேன்சிங் மேல் மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், அவரை மாற்றவேண்டுமென்று அழுத்தம் கொடுப்பதை தாங்கள் உணர்வதாகவும் தகவல்களை கசியவிட்டு தங்களை புனிதர்களாகக் காட்டிக்கொள்ள ஆர்எஸ்எஸ் நாடகம் நடத்துகிறது. 

ஆனால் மணிப்பூரின் மக்கள் பாசிச ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலை தேர்தலில் வீட்டுக்கு அனுப்பியது மட்டும் போதாது. தங்களுக்குள் உள்ள இன வேறுபாடுகளை புறந்தள்ளி விட்டு வர்க்கமாக ஒன்றிணைந்து பாசிச பயங்கரவாதிகளை தங்கள் மாநிலத்தை விட்டே விரட்டியடிப்பதும், அரம்பை தெங்கோல், மெய்தி லீபுன் போன்ற கொலைகார ஆர்எஸ்எஸ் குண்டர் படைகளை விரட்டியடித்து நிர்மூலமாக்குவதும்தான் தங்கள் மண்ணையும், மதத்தையும், பண்பாட்டையும், வாழ்க்கையையும் பாதுகாத்துக்கொள்ள ஒரே வழி. நாகா போன்ற பிற தேசிய இன போராளிக் குழுக்களுடன் இணைந்து போராடவும் வேண்டும்.

  • மதியழகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here