பாராளுமன்றத்தில் பாசிஸ்டுகளை எதிர்த்து கேள்வி எழுப்புவதில் முக்கிய பங்காற்றியவர் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா. கடந்த காலங்களில் இவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணறியது பாஜக.

சொல்லிக்கொள்ளப்படும் ஜனநாயாகத்தின் அடையாளமாக பார்க்கப்படும் பாராளுமன்றத்தில் இருந்தும் கேள்வி கேட்பவர்களை பாசிஸ்டுகள் துரத்தவே பார்க்கிறார்கள். 2014இல் மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் பெரும்பான்மை அசுர பலத்தை பயன்படுத்திக் கொண்டு தாங்கள் விரும்பிய, தங்கள் முதலாளிகள் விரும்பிய சட்டங்களை  எதிர்ப்புகளையும் மதிக்காமல், கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் நிறைவேற்றியது பாசிச பாஜக அரசு.

இதை எதிர்த்து கேள்வி எழுப்பினால் அவர்கள் மீது ஒன்று அமலாக்கத்துறை மூலமாக ஒடுக்கு முறை அல்லது முன்னர் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது போல தற்போது மஹூவா எம்பி பதவி பறிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் நடக்கும் என்பதை தான் மறைமுகமாக பாசிச அரசு உணர்த்தியுள்ளது.

மஹூவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ததற்கு பாசிஸ்டுகள் வைத்த குற்றச்சாட்டு மிகவும் கீழ்த்தரமானது.  நாடாளுமன்றத்தில் அதானியை எதிர்த்து கேள்வி எழுப்புவதற்கு தொழிலதிபர் ஹிரானிநந்தனிடம் பணம், பரிசு பொருள் பெற்றதாகவும் தன்னுடைய நாடாளுமன்ற இணையதள ஐடி பாஸ்வேர்டை கொடுத்ததாகவும் பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே குற்றம் சாட்டியிருந்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் கடிதம் எழுதி இருந்தார்.

நிஷிகாந்த் துபே

நெறிமுறைக் குழுவிடம் அக்டோபர் 19-ம் தேதி அளித்த பிரமாணப் பத்திரத்தில், மஹுவா மொய்த்ரா தனது நாடாளுமன்ற தளத்தின் உள்நுழைவு (Login ID)  ஐடி மற்றும் கடவுச்சொல்லை தனக்கு வழங்கியதாக ஹிராநந்தனி கூறினார். அதன் மூலம் நேரடியாக இணையதளம் மூலம் தான் கேள்வி எழுப்பியதாக ஹிராநந்தனி கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில் நெறிமுறைக் குழு மஹூவா மொய்த்ராவை அழைத்து விசாரணை செய்தது. அந்த விசாரணையில் கூட அவரின் தனிப்பட்ட வாழ்க்கை விஷயங்களைப் பற்றி கேள்வி எழுப்பியதாகவும் அவர் மீது அளிக்கப்பட்ட புகார் சம்பந்தமாக எந்த விசாரணையும் நடக்கவில்லை என்றும் மஹூவா கூறியிருந்தார், வெளிநடப்பும் செய்தார். நெறிமுறை குழுவில் இருந்த பலரும் அதே காரணத்துக்காக வெளியேறினர்.

பெண்களின் மீது அடக்குமுறை செய்வதற்கு அவர்களுக்கு தெரிந்த ஒரே ஆயுதம் அல்லது தந்திரம் அவர்களின் ஒழுக்கத்தை கேள்வி எழுப்புவது தவறாக சித்தரிப்பது. மது கோப்பையுடன் இருப்பது, ஆண் அரசியல் தலைவருடன் கைகோர்த்து இருப்பது போன்ற புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்புகிறார்கள். அதானி ஊழல்  குறித்து மஹுவா எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க துப்பில்லாத  பாசிச கும்பல் மஹூவாவின் தனிப்பட்ட ஒழுக்கத்தை கேள்வி கேட்கிறார்கள். பெண் என்பதாலேயே அவரது உறவு குறித்து கேள்விகள் எழுப்புகிறார்கள்.

இதையும் படியுங்கள்:

மஹூவா மொய்த்ராவை எளிதாக தாக்குவதற்கு அவர் விவாகரத்து பெற்றவராகவும் அவரது முன்னாள் கணவர் இந்தியர் அல்லாதவராகவும் இருப்பதையும் பயன்படுத்தி கொள்கிறது. பெண்களை பொருளாக, சொத்தாக கருதும் இந்துத்துவ கும்பல் இவர் பெண்ணாக இருப்பதால் இன்னும் வன்மமாகவே நடந்து கொள்ளும். கணவன் இறந்தால் கூடவே மனைவியையும் வைத்து சிதைமூட்டியவர்கள் தானே இந்த கொலைகார கும்பல்.

பாராளுமன்றத்தில் நேற்று நெறிமுறைக் குழு 500 பக்க அறிக்கையை முன்வைத்து கேள்விக் கேட்க பணம் வாங்கியதாக குற்றம் சுமத்தி அவரை மக்களவையில் இருந்து நீக்க பரிந்துரைத்தது. இது குறித்து பேச மொய்த்ரா அனுமதி கேட்ட நிலையில் சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதி அளிக்கவில்லை. இதனையடுத்து மஹூவா மொய்த்ரா மக்களைவையில் இருந்து நீக்கப்பட்டார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் வெளிநடப்பு செய்தன. நெறிமுறைக் குழு அறிக்கை மீது விவாதம் நடத்தக் கோரி எதிர்கட்சிகள் வைத்த கோரிக்கையை சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்கவில்லை.

வெளிநடப்பு செய்த எதிர்கட்சிகள்.

மஹூவா மொய்த்ரா நீக்கப்பட்டது தொடர்பான நிகழ்ச்சிகளை உற்று கவனித்தாலே இது முழுக்க பாசிச நடவடிக்கை என்று புரிந்துக் கொள்ள முடியும்.

மஹூவா மொய்த்ராவின் எம்.பி பதவி பறிப்பு என்பது ஏற்கனவே பாசிஸ்டுகளால் தீர்மானிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல். விசாரணை என்பதெல்லாம் வெறும் நாடகம்.

இதனை எதிர்கட்சிகளும், இந்தியா கூட்டணியும் பத்தோடு பதினொன்றாக வெறும் வெளிநடப்பு என்று கடந்து போகாமல் பாசிஸ்டுகளின் நடவடிக்கையில் இருந்து உண்மையை புரிந்துக் கொள்ள வேண்டும்.

வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் பாஜக என்ற கட்சியை வீழ்த்தவேண்டும் என்று ஒன்றிணைவதை விட இந்தியாவை சூழ்ந்திருக்கும் காவி பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் மக்களிடையே செய்யப்படும் பிரச்சாரத்தால் தான் நாடாளுமன்ற அரங்கில் இருந்து பாசிஸ்டுகளை வெளியேற்ற முடியும்.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here