திரிணாமூல் காங்கிரஸின் மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் மோடி-அமித்ஷா கும்பலை கதிகலங்க விடும் ஒருசில எதிர்க்கட்சி எம்.பி.-க்களில் முக்கியமானவர். அவரது முதல் நாடாளுமன்ற உரையிலேயே ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக-வை பாசிச சக்திகள் என்று முழங்கியவர். பாசிசத்தின் ஏழு கூறுகள் என்று அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை இந்தியாவெங்கும் எதிரொலித்தது. நாடாளுமன்ற விவாதங்களிலும் அதற்கு வெளியிலும் காவி பாசிஸ்டுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளையும், ஊழல்களையும், மணிப்பூர் உள்ளிட்ட கலவரங்களையும் பல்வேறு புள்ளிவிவரங்களுடன் அம்பலப்படுத்தி அலறவைத்துக்கொண்டிருந்தவர். அவர் இதுவரை நாடாளுமன்றத்தில் கேட்டிருந்த 61 கேள்விகளில் 50 கேள்விகள் அதானியைப் பற்றியதாகவே இருந்துள்ளது.
கேள்விகளையும், அறிவுப்பூர்வமான விவாதங்களையும் அறவே விரும்பாத காவி பாசிஸ்டுகள் அதானிக்கும் மோடிக்கும் உள்ள உறவைப்பற்றி கேள்வி எழுப்பிய ராகுல்காந்தியை தகுதிநீக்கம் செய்ததைப்போலவே மஹுவாவையும் நாடாளுமன்றத்தை விட்டு விரட்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தனர். அதற்காக அவரது முன்னாள் ஆண் நண்பரான ஜெய்ஆனந்த் டெஹாத்ராய் என்பவரைத் தேடிப்பிடித்தனர். தன்னைப் பிரிந்து சென்றதால் பொருமிக்கொண்டிருந்த அந்த ஆண் நண்பரும் வாய்மொழியாக சில விடயங்களைச் சொல்ல, அவற்றையே நிஷிகாந்த் துபே என்ற பா.ஜ.க. எம்.பி. மஹுவாக்கெதிராக நாடாளுமன்ற சபாநாயகரிடம் புகாராகத் தந்துள்ளார்.
அதானி தொடர்பாக மஹுவா கேட்ட கேள்விகள் அதானியின் தொழில் போட்டியாளரான தர்ஷன் ஹிரானந்தனி என்பவரின் பணியாளரால் மஹுவாவின் பயனர் அடையாளம் (User ID) மற்றும் கடவுச்சொல்லை (password) பயன்படுத்தி நாடாளுமன்ற கேள்வித் தொகுப்புக்கு அனுப்பப்பட்டது என்றும், அதற்குப் பதிலாக அத்தொழிலதிபரிடமிருந்து பரிசுப்பொருட்களையும், பணமும் மஹுவா பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டை பாசிஸ்டுகள் சுமத்தியுள்ளனர்.
இதையும் படியுங்கள்: அதானி குழுமத்தின் வர்த்தக மோசடிகளுக்கு பின்புலமாய் இருந்த மர்ம மனிதன் வினோத் அதானி!
நாடாளுமன்ற கேள்வித் தொகுப்புக்கு எந்த எம்.பி.-யும் தாங்களே கேள்விகளை அனுப்புவது கிடையாது. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பயனர் விவரம் மற்றும் கடவுச்சொல்லை தங்களது உதவியாளருக்கோ அல்லது தங்கள் அலுவலகப் பணியாளருக்கோ கொடுத்து அவர்கள்மூலமாகத்தான் கேள்விகளை பதிவிடுவது வழக்கம். இதுதான் காலம்காலமாக நடந்துவருவது. ஆனால் ஏதோ இப்போதுதான் அதுவும் மஹுவா மட்டும்தான் இப்படி செய்துவிட்டதாகவும், நாடாளுமன்ற மாண்பை அவர் சிதைத்துவிட்டதாகவும், நாட்டின் பாதுகாப்பே அச்சுறுத்தலுக்குள்ளாகி யுள்ளதாகவும் வானத்துக்கும் பூமிக்குமாக பாசிஸ்டுகள் குதிக்கிறார்கள்.
பா.ஜ.க. ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தபிறகு நாடாளுமன்றத்தை மோடியின் புகழ்பாடும் பஜனைமடமாக மாற்றிவருவதும், கேள்விநேரம் 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டு பல முக்கியமான மசோதாக்கள் எந்தவிதமான உருப்படியான விவாதங்களும் நடைபெறாமலேயே நிறைவேற்றப்படுவதும், எதிர்க்கட்சி எம்.பிக்களை கீழ்தரமாகப் பேசுவதும், அவதூறு செய்வதும், அவர்கள் பேசும்போது குரங்குகளைப்போல கூச்சலிடுவதும் என்று சங்கிகள்தான் அதன் மாண்பைக் கடந்த 9 ஆண்டுகளாகக் குறைத்துவருகின்றனர்.
மஹுவாவைக் கட்டம்கட்ட கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாசிஸ்டுகள், அவரை உளவியலாக முடக்கும் பொருட்டு அவர்மீது விசாரணைநடத்த மக்களவை நெறிமுறைக்குழுவிற்கு தங்கள் புகாரை அனுப்பிவைத்துள்ளனர். அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல அருவெறுப்பான கேள்விகளை அக்குழுவின் தலைவரான பா.ஜ.க.-வின் வினோத்குமார் சோன்கர் கேட்டதாகக்கூறி மஹுவா பாதியிலேயே வெளிநடப்பு செய்துள்ளார். அவருக்கு ஆதரவாக அக்குழுவில் உறுப்பினராக இருக்கும் எதிர்கட்சிகளை சேர்ந்த எம்.பி.-க்களும் வெளிநடப்பு செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: பாசிச மோடி ஆட்சி: நாடாளுமன்ற ஜனநாயகம் எனும் ‘வெங்காயம்’!
இதற்கிடையில் நெறிமுறைக்குழுவின் 500 பக்க அறிக்கை அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படும் முன்பே அவ்வறிக்கையில் உள்ளவற்றை அதானியின் NDTV வெளியிட்டுள்ளது. இந்திய மக்களின் வரிப்பணம், இயற்கைவளம், போலீசு, இராணுவம், அரசுத்துறைகள், அரசு நிர்வாகம், நாடாளுமன்றம் உள்ளிட்ட அனைத்தும் அதானி, அம்பானியின் வளர்ச்சிக்காகவும், நலனுக்காகவும்தான் என்பது இதிலிருந்தே தெரிகிறது. அவர்களைப் பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினால் பா.ஜ.க. பாசிஸ்டுகள் துடித்துப்போகின்றனர் என்பதும், அவ்வாறு கேள்விகேட்பவர்கள் நாடாளுமன்றத்திலிருந்தே துரதியடிக்கப்படுவார்கள் என்பதும் வெட்டவெளிச்சமாகி வருகிறது. மஹுவாவும் அத்தகைய நடவடிக்கைக்குத்தான் உள்ளாக்கப்படுவார். நெறிமுறைக்குழுவின் 10 உறுப்பினர்களில் 6 பேர் அப்படித்தான் தீர்ப்பெழுதியிருக்கின்றனர்.
தம் முன் வைக்கப்படும் கேள்விகளுக்கு பதில் தரத் துப்பில்லாத காவி பாசிஸ்டுகள் கேள்வி கேட்பவர்களையே முடக்கும் சதித்தனத்தை மக்களிடம் அம்பலப்படுத்துவோம். குறைந்தபட்ச ஜனநாயகத்தைக்காக்க ஆர்.எஸ்.எஸ். – பாஜக பாசிச கும்பலை வரும் பொதுத்தேர்தலில் தோற்கடித்து விரட்டியடிப்போம். பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி, பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியைக் கட்டியமைத்து நாட்டிலிருந்தும் விரட்டியடிப்போம்.
– ஜூலியஸ்