ந்தியாவில் 2014 ஆம் ஆண்டு முதல் ஆர்எஸ்எஸ்-மோடி தலைமையிலான பாசிச பயங்கரவாத காட்டாச்சி நடந்து கொண்டுள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்பு நடவடிக்கை நிரூபித்துள்ளது.

ஆர்எஸ்எஸ் மோடி பயங்கரவாத கும்பல் தனக்கு எதிராக விமர்சிப்பவர்களையும், ஊடகங்களில் எழுதுபவர்களையும் பொய் வழக்கின் கீழ் சிறையில் அடைத்து ஒடுக்குவதன் மூலம் ஜனநாயக உரிமைகளை பறித்து விடலாம், உண்மை வெளியில் வராமல் தடுத்து விடலாம் என்று மனப்பால் குடிக்கிறது.

2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கர்நாடகா மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி அப்போது வங்கிகளில் மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய நீரவ் மோடி, லலித் மோடி போன்றவர்களை அம்பலப்படுத்துகின்ற வகையில் ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரைக் கொண்டுள்ளனர் என்று பேசியுள்ளார்.

சட்டப்படி பார்த்தாலும் சரி சமூக அறிவின்படி பார்த்தாலும் சரி இது நாட்டின் செல்வ வளங்களை, வங்கிகளின் செல்வத்தை சூறையாடிய இருவரின் தனிப்பட்ட குடும்பப் பின்னணி மீது தொடுக்கப்பட்ட விமர்சனம் என்பது புரியும்.

ஆனால் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கு பல்வேறு பாசிச வழிமுறைகளை கையாண்டு வரும் நரேந்திர மோடி கும்பலைச் சார்ந்த குஜராத் மாநிலத்தின் தற்போதைய எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி என்பவர் சூரத் நீதிமன்றத்தில் கொடுத்த வழக்கு, மோடி என்ற குடும்பப் பெயரைக் கொண்டவர்கள் அனைவரையும் ராகுல் காந்தி இழிவு படுத்தி விட்டார் என்பது தான்.

இந்த வழக்கை எடுத்துக் கொண்ட சூரத் நீதிமன்றம் நான்காண்டுகளுக்கு பிறகு, விசாரணையை துரிதப்படுத்தி  “குற்றம் சுமத்தப்பட்ட ராகுல் காந்திக்கு பலமுறை எச்சரித்த போதிலும் அவர் தன்னை மாற்றிக் கொள்ளாத காரணத்தினால் அவர் மோடி குடும்பப் பெயர் குறித்த கிரிமினல் அவதூறு செய்துள்ளார்” என்று இரண்டு ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அத்துடன் நில்லாமல் அவர் மேல் முறையீடு செய்வதற்கான காலக்கெடு வெறும் முப்பது நாட்கள் என்று அறிவித்து முன் தேதியிட்டு தண்டனையை தீர்மானித்துள்ளது.

இந்த தண்டனைக்காக காத்துக் கொண்டிருந்த பாசிச ஆர் எஸ் எஸ் மோடி கும்பல்  2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம்  வில்லி தாமஸ் vs யூனியன் ஆப் இந்தியா வழக்கில் “குற்றத்தில் ஈடுபட்டு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற எம்பி எம்எல்ஏ அல்லது எம் எல் சி ஆகியோருக்கு உடனடியாக அவை உறுப்பினர் பதவியை ரத்து செய்யலாம்” என்று தீர்ப்பளித்து உள்ளதை காரணம் காட்டி ராகுல் காந்தியின் பதவியை பறித்துள்ளது.

இதையும் படியுங்கள்: ராகுல் எம்.பி பதவி பறிப்பு | பத்திரிக்கை செய்தி

அதையும் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய 24 மணி நேரத்திற்குள்  எம்பி பதவியை பறித்துள்ளது.

நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு இதுதான் கதி என்று சொன்னால் பிற கட்சியில் உள்ள இதர எம்எல்ஏ எம்பி களுக்கு என்ன நிலைமை என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் யோக்கியதையை சந்தி சிரிக்க வைத்துள்ளது ஆர்எஸ்எஸ் மோடி கும்பல். ‘மோடி’ குடும்பப் பெயருக்கு எதிராக ராகுல் காந்தி அவதூறு செய்துவிட்டதாக கூறும் இந்த சங்‌பரிவார்‌ கும்பல் இந்த நாட்டு மக்கள் தொகையில் 20 சதவீதம் உள்ள சிறுபான்மை மக்களை வந்தேறிகள் என்றும், தேசத் துரோகிகள் என்றும் விசத்தை கக்கி வருகின்றனர். அத்தகைய அவதூறுகளை  செய்த பிரக்யா தாக்கூர், யோகி‌ ஆதித்யநாத்‌ முதல் மோடி, அமித்ஷா வரை‌ யாரும் தண்டிக்கப்படவில்லை; அவர்களின்‌ பதவியும் பறிக்கப்படவில்லை.

ஹிண்டன்பர்க் அறிக்கை ஆர் எஸ் எஸ் பரிவாரக் கும்பலும் அதானியும் ஒன்று என்பதை நிரூபித்துள்ளது. தனது தேர்தல் பரப்புரைகளுக்கு தனி விமானம் வழங்கியது முதல் தனது பிரதமர் பதவிக்கு அனைத்து நிதி உதவியும் செய்து வரும் கார்ப்பரேட் முதலாளியும் நண்பருமான குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பனியா முதலாளி அதானியின் ஆட்சிதான் இந்தியாவில் நடக்கிறது.

அதானியும் மோடியும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வைத்துக்கொண்டு பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி பலமுறை மிரட்டப்பட்டார். ஆர் எஸ் எஸ் இன் நாளேடுகள் ஆன பஞ்சஜன்யா, ஆர்கனைசர் துவங்கி மைய ஊடகங்கள் வரை அனைத்தும் ராகுல் காந்திக்கு எதிரான கருத்து பிரச்சாரத்தை மேற்கொண்டன.

பிபிசி ஆவணப்படத்தின் மூலம் இனப்படுகொலையில் தனது பங்கு மீண்டும் ஒருமுறை உலகம் முழுவதும் அம்பலமாகி நாறி வருகின்ற சூழலில் ராகுல் காந்தியின் தொடர் பிரச்சாரங்கள் மற்றும் பரப்புரைகள் நாடாளுமன்ற கேள்விகள் அனைத்தும் பாசிச மோடி கும்பலை அச்சுறுத்தியுள்ளது.

யாரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று இறுமாப்புடன் திரிந்த மோடி அமித்ஷா கூட்டணிக்கு எதிரான எதிர்க் கட்சிகளின் ஒற்றுமையும் அவர்களது அச்சத்திற்கு காரணமாகும்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மூலம் தனது பாசிச கட்சியின் ஆட்சியை நிறுவியுள்ள ஆர்எஸ்எஸ் பாரதிய ஜனதா கட்சிக்கு நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், நாடாளுமன்றத்திற்கு வெளியே மக்கள் எழுச்சியின் மூலம் நிரந்தர சவக்குழி வெட்டுவதற்கு அவர்களே நிகழ்ச்சி நிரலை துவக்கி வைத்து விட்டார்கள்.

அப்புறம் என்ன மக்களை கார்ப்பரேட் காவி பாசிச  ஆர் எஸ் எஸ்-மோடி கும்பலுக்கு எதிரான கிளர்ச்சிக்கு தட்டி எழுப்புவோம்.  இந்தியாவில் உள்ள அனைத்து சிறைகளையும் நிரப்புவதற்கு தயாராவோம்.

இது பாசிச ஒடுக்குமுறைக்கு எதிரான மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டம்.

சண். வீரபாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here