கர்நாடகா: தேர்தல் அரசியலில் வீழ்த்தியது மட்டுமின்றி நிரந்தரமாக ஆர்எஸ்எஸ்–பாஜகவுக்கு முடிவு கட்டுவோம்!
கார்ப்பரேட்-காவி பாசிச பயங்கரவாத சக்தியான ஆர்எஸ்எஸ்- பாரதிய ஜனதா கட்சியை 2023 சட்டமன்றத் தேர்தலில் விரட்டியடித்த கர்நாடக மக்களுக்கு எமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
நிலவுகின்ற பாராளுமன்ற, சட்டமன்ற கட்டமைப்பை தனது பாசிச பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக் கொண்ட பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அரசியலில் தான் வீழ்த்த முடியாத சக்தி என எக்காளமிட்டுக் கொண்டிருந்தது. கர்நாடக மாநிலத் தேர்தலிலும் ‘வீழ்த்த முடியாத மாவீரர்’ பல குட்டிக்கரணங்களை அடித்தார்.
தனக்கு எதிராக வேலை செய்கின்ற அரசியல் கட்சிகளை பிளவுபடுத்துவது, வெற்றி பெற்ற வேட்பாளர்களை குதிரை பேரம் நடத்தி விலைக்கு வாங்குவது, பல கோடி பணத்தை கையில் வைத்துக் கொண்டு பேரம் பேசி தன் பக்கம் இழுப்பது போன்ற பாராளுமன்ற, சட்டமன்ற ஜனநாயகத்தின் இழிந்த வடிவங்கள் அனைத்தையும் கையாண்டு தொடர்ச்சியாக இந்தியாவில் பல மாநிலங்களில் ஆட்சி அமைத்த பாரதிய ஜனதா கட்சி கர்நாடகாவில் தோல்வியடைந்தது முக்கியமான அம்சமாகும். கர்நாடகாவை தெற்கில் தங்களுக்கான நுழைவாயிலாக, காவி பாசிச சோதனைக்கூடமாக மாற்ற முயற்சித்தனர். அதற்கு ஒரு வேகத்தடையாக இந்த தோல்வி அமைந்துள்ளது.
கர்நாடகா தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இஸ்லாமியர்களிடமிருந்து இட ஒதுக்கீட்டை பிடுங்கி லிங்காயத்துகளுக்கும், ஒக்காலிகர்ளுக்கும் வழங்கி அவர்களின் ஓட்டுக்களை பெறுவதற்கு கீழ்த்தரமான வழிகளில் முயற்சி செய்தது.
ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்துகின்ற வகையில் இஸ்லாமிய வெறுப்பு, ஹலால் உணவு தடை, மாட்டுக்கறி தடை, ஹிஜாப் அணிய தடை என்று வெறித்தனமாக நடந்து கொண்டதன் மூலம் பெரும்பான்மை சமூகத்திடம் இருந்து தனிமைப்பட்டது பாரதிய ஜனதா கட்சி.
குறிப்பாக இந்தியாவின் சிலிக்கான் சிட்டி என்று அழைக்கப்படும் பெங்களூர் நகரத்தில் பொருளாதார நெருக்கடி மற்றும் தொடர்ச்சியான கலவரங்களால் பாதிக்கப்பட்டு உற்பத்தி முடக்கம், வேலை இழப்பு பல மடங்கு அதிகரித்தது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், தொழிலாளர்கள், குடும்பப் பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு பாடம் புகட்டி உள்ளனர்.
விவசாயிகளுக்கு கட்டுப்படியாகின்ற விலை நிர்ணயம் செய்து கொடுப்பதாக உறுதியளித்த பாரதிய ஜனதா கட்சி தொடர்ச்சியாக விவசாயிகளை புறக்கணித்து வந்ததால் விவசாயிகள் சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக வாக்களிக்கும் படி கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையை விவசாயிகள் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.
கர்நாடகா மாநிலத்தில் இயங்குகின்ற இடதுசாரி அமைப்புகள் மற்றும் சில ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து தேர்தல் பரப்புரைகளில் “விழி எழு, கர்நாடகமே” என்ற முழக்கத்துடன் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக செய்த பிரச்சாரங்கள் ஊசலாடிய மக்களிடம் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்க தூண்டியுள்ளது.
இவை அனைத்தையும் தேர்தல் அரசியல் என்ற வரம்புக்குள் கர்நாடக மக்கள் சாதித்துள்ளனர்.
அதே சமயத்தில் தேர்தல் வெற்றி, தோல்வி என்பது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரிய தடை கிடையாது. தற்போதைய சட்டமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வெற்றி பெற்றுள்ள 66 எம்எல்ஏக்களும் ஓயாமல் அமளியில் இருப்பார்கள். RSS க்கு மிகப்பெரும் நிதி உதவி அளிக்கின்ற ரெட்டி எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார் ; மொத்தமுள்ள 6 மண்டலங்களில் பெங்களூரில் சமமாகவும் (16 சீட் ), கடற்கரைப்பகுதியில் காங்.- ஐ ஒப்பிடுகையில் 85% அதிக இடங்களிலும் (11சீட் ) , கிட்டூரில் ஒப்பிடுகையில் 50% (18 சீட் ), கல்யாணில் 30% (10 சீட் ) எம்.எல்ஏ-க்களைப் பெற்றுவிட்டனர். இதனால் பாசிச பாஜக முற்றாக தேர்தல் அரசியலில் துடைத்து எறியப்படவில்லை என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.

தேர்தல் அரசியலில் பாசிச ஆர்.எஸ்.எஸ் பாஜக வீழ்த்தப்பட்டதை வைத்துக்கொண்டு பாசிச எதிர்ப்பு போரில் நாம் பின்வாங்கி விட முடியாது. ஏனென்றால் சட்டவிரோதமான முறையில் பயங்கரவாத அமைப்பாக செயல்படுகின்ற ஆர்எஸ்எஸ் தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் வர்க்க ஒற்றுமையை பிளவுபடுத்துவதற்கும், சாதி ஆதிக்கத்திற்கு பொருத்தமான சக்திகளை கொண்டு ஆதிக்க சாதி வெறியாட்டங்கள் நடத்துவதற்கும், இஸ்லாமியர்களுக்கும், சிறுபான்மை மதத்தினருக்கும் எதிராக வெறுப்புணர்ச்சியை தூண்டி அடக்குமுறை செலுத்துவதற்கும், கார்ப்பரேட்டுகள் மனம் கோணாத வகையில் சேவை செய்வதற்கும், தேர்தல் அரசியலை ஒரு வழி முறையாக பயன்படுத்தி வந்தது.
இன்னொருபுறம், ஆளுநர் முதல் அதிகார வர்க்கம், போலிசு, நீதித்துறை என அனைத்து துறைகளையும் ஆர்.எஸ்.எஸ் தனது ஆட்களை இட்டு நிரப்பி பாசிசமயப்படுத்தி வைத்துள்ளது. இவை இரண்டையும் எதிர்கொள்வது ஆட்சியமைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக அமையப் போவது உறுதி.
இதையும் படியுங்கள்:
ஒரு வேளை இவற்றின் மூலம் முழுமையாக தன்னால் கார்ப்பரேட் சேவை செய்ய முடியாமல் போனால் பகிரங்கமாக பாசிச அடக்கு முறையை கட்டவிழ்த்து விடுவதற்கும் தயங்காது என்பதை இந்த நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.
தேர்தல் அரசியலில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவது முழுமையான வெற்றி ஆகி விடாது என்பது பாசிசத்தை எதிர்த்து போராடுகின்ற அனைவருக்கும் தெரிந்த விடயம்தான். அதே சமயத்தில் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் சுமார் 72 சதவீத மக்கள் இந்த அரசு கட்டமைப்பில் ஜனநாயகம் நிலவுவதாக நம்பிக் கொண்டுள்ளனர். அவர்களைப் போன்று தேர்தல் அரசியலில் பாஜகவை வீழ்த்தி விட முடியும் என்ற நம்புகின்ற மக்கள் மத்தியில் கர்நாடகாவில் பாஜகவின் தோல்வி மிகப் பெரும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. அது மட்டும் இன்றி பாசிசத்தை முறியடிப்பதற்கு போராடுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மத்தியிலும் புதிய உத்வேகத்தை உருவாக்கியுள்ளது.
இந்த உத்வேகத்துடன் நாட்டை ஏறி தாக்கி வரும் கார்ப்பரேட்-காவி பாசிசத்திற்கு எதிரான போராட்டங்களை தீவிரமாக்குவோம். பாராளுமன்ற சட்டமன்ற அமைப்புக்கு வெளியில் மாபெரும் மக்கள் எழுச்சியை உருவாக்குகின்ற போராட்டத்தில் முன்னேறுவோம்.
- மருது பாண்டியன்