ர்நாடக மக்களின் மனநிலை குறித்து வரும் எதிர்மறை தகவல்களால் கிறுகிறுத்துப் போயிருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. வானரங்கள் எப்படியாவது தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்று தங்கள் வாய்க்கு வந்தபடியெல்லாம் பிரச்சார மேடைகளில் உளறிக்கொண்டிருக்கின்றன. கர்நாடகாவில் கடந்த 5 வருடங்களாக ஆட்சியில் இருந்து செய்த சாதனைகள் குறித்தோ! மீண்டும் ஆட்சி அமைத்தால் கன்னட மக்களின் வளர்ச்சிக்காக என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறோம்?என்றோ சொல்லி ஓட்டுகேட்க வக்கில்லாத காவி பாசிஸ்டுகள் மதரீதியாகவும், சாதி ரீதியாகவும் ஓட்டுகளைப் பொறுக்கக் கேவலமான வழிமுறைகளில் நாட்டின் பிரதமர், உள்துறை அமைச்சர் தலைமையில் அனைத்துத் தளங்களிலும் வேலைசெய்து வருகின்றனர்.

கர்நாடகா தேர்தல்
மோடியுடன் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை

 இந்நிலையில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் “பஜ்ரங்தள்” என்ற காலி காவி கும்பலை தடை செய்வதாகக் கூறியுள்ளது. ஏற்கனவே “காங்கிரஸ்காரர்கள் என்னை 91 முறை திட்டிவிட்டனர், எனவே பா.ஜ.க-வுக்கு ஓட்டு போடுங்கள்,” “கர்நாடகாவைச் சேர்ந்த இராணுவ தளபதி திம்மய்யாவுக்கு சர்க்கரை இல்லாமல் நேரு டீ கொடுத்து அவமானப்படுத்தினார் எனவே பா.ஜ.க.-வுக்கு ஓட்டு போடுங்கள்” என்று அழுது புலம்பி பல்வேறு நாடகமாடி ஓட்டு சேகரித்து வரும் பிரதமர், காங்கிரஸின் இந்த தேர்தல் வாக்குறுதியைப் பிடித்துக்கொண்டு “முன்பு இராமரை அடைத்து வைத்தவர்கள் இப்போது அனுமனையும் அடைத்துவைக்கப் பார்க்கின்றனர்” என்றும் “ஓட்டு போட்டவுடன் ஜெய் பஜ்ரங் பாலி!” என்று சொல்லுங்கள் என்றும் பிரச்சாரம் செய்துவருகிறார்.

 விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற மதவெறி கும்பலின் குண்டர் படையாக 1984-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டதுதான் இந்த பஜ்ரங்தள் என்ற அமைப்பு. இந்த பொறுக்கிக்கும்பல்தான் 1992 பாபர் மசூதி இடிப்பையும், 1999-ஆம் ஆண்டு கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் என்ற கிறிஸ்தவ மதபோதகரையும் அவரது இரண்டு குழந்தைகளையும் எரித்துக்கொன்றதையும், 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற முஸ்லிம் இனப்படுகொலையையும் முன்னின்று நடத்தியது. அது மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பல்வேறு கலவரங்களையும், பசு பாதுகாப்பு என்ற பெயரில் பல அப்பாவி முஸ்லிம்களையும் அடித்தே கொன்றது.

கர்நாடகா தேர்தல்
சங்பரிவார் கும்பலால் குடும்பத்தோடு கொளுத்தப்பட்ட கிரகாம் ஸ்டெயின்

 கர்நாடகாவிலும் காதலர் தினத்தன்று “லவ் ஜிகாத்” என்ற பெயரில் காதலர்களை அடித்து விரட்டுவது, ஆங்கில புத்தாண்டு அன்று கலவரம் செய்வது என்று இக்காவி குண்டர்களின் அடாவடிகள் எண்ணிலடங்காதது. சமீபத்தில் பசுக்களை கடத்தினர் என்று மூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் மசூத் என்ற 19 வயது முஸ்லிம் இளைஞர் கொல்லப்பட்டார். இப்படிப்பட்ட இந்த கொலைகாரக் கூட்டத்தை நாடு முழுவதுமே தடைசெய்யப்பட வேண்டும். ஆனால் இந்த கும்பலை தடைசெய்வதே அனுமனை தடைசெய்வது என்று மோடி புளுகித்திரிக்கிறார்.

இதையும் படியுங்கள்: கர்நாடகா: மதரஸாக்களை குறிவைக்கும் இந்துத்துவ கும்பல்!

 ஒரு நாட்டின் பிரதமர் என்ற வகையில் தனது பணிகளை (?) எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு மாநில தேர்தல் பிரச்சாரத்துக்காக ஒரு வார காலமாக 12 முதல் 15 தேர்தல் பிரச்சாரக்கூட்டங்கள், பேரணிகளில் கலந்து கொண்டு பொய்யாகப் பேசித்திரிவதை என்னவென்று சொல்வது? தேர்தல் பிரச்சாரங்களில் மக்களிடையே வெறுப்புணர்வையும், சிண்டுமுடிவதையும் செய்துவரும் இக்காவி பாசிஸ்டுகளுக்கு EVM மோசடிகள், தேர்தல் மோசடிகளைத் தாண்டி கர்நாடக மக்கள் தீர்ப்பளிக்க முடியுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

  • ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here