ர்நாடகா முழுவதும் மதராசாக்களை தடை செய்யக்கோரி அக்டோபர் 10ஆம் தேதி தாவங்கரே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்து ராஷ்டிர சேனை அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்து ராஷ்டிர கும்பலின் தற்போதைய இலக்கு மதராசாக்கள் என்பது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. அவர்கள் மதராசாக்களை வைத்து அரசியலை தொடங்கிவிட்டனர்.

மதரசாக்கள் குறித்து வேறொரு கருத்தை பரப்புகிறது இந்துத்துவ கும்பல். அதாவது மதரஸாக்கள் வெறுப்பு பிரச்சாரங்களை செய்கிறது என்றும் அவைகள் வெறித்தனத்தின் மையங்கள் என்றும் கூறுகின்றது.

இதுவரை விநாயகர் ஊர்வலங்கள்  மூலம் கலவரத்தை உருவாக்க முயலும் காவி கும்பல் தற்போது தசரா ஊர்வலங்களை கையில் எடுத்துள்ளது. நேற்றுவரை மசூதிகளை குறிவைக்கும் கும்பல் இன்று மதராசக்களை குறி வைக்கிறது. ஆக இவர்களின் இலக்கு இஸ்லாமியர்கள்.

இதுகுறித்து தாவாங்கரே மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆனந்த்ராஜ் நியூஸ் கிளிக்டம் கூறுகையில்  ”கர்நாடகாவில் செயல்படும் மதரசாக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து ராஷ்டிர சேனையை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர். மதரஸாக்களை தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையானது சமூகத்தில் வெறுப்பை உண்டாக்குவதற்கும் சமூகத்தை பிளவு படுத்துவதன் மூலம் தேர்தல் ஆதாயங்களை உருவாக்குவதற்கும் பாஜகவின் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும்” என்று தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி இரவு தசரா ஊர்வலத்தின்போது பிதார் நகரில் அமைந்துள்ள பழமையான மஹ்மூத் கவான் மதரஸாவுக்குள் வலுக்கட்டாயமாக ஒரு குழுவினர் இந்துத்துவ முழக்கங்களை எழுப்பி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

பவானி மாதா கி ஜெய், பாரத் மாதா கி ஜெய், ஹிந்து தர்மா கி ஜெய் என்ற முழக்கங்களுடன் பலர் மதரஸாக்குள் நுழைந்து பூஜை செய்யும் காட்சி சமூக ஊடகங்களில் பரவியது.

வடக்கு கர்நாடகாவில் உள்ள மஹ்மூத் கவான் மதரசா, நகரத்திலுள்ள பாரம்பரிய தளமாகும். இந்த மதரஸா யுனெஸ்கோவில் உலக பாரம்பரிய தளமாக கடந்த 2014ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

2023 மே மாதம் கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் பாஜக மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியை மறைக்க திட்டமிட்டே இந்துத்துவ கும்பலின் துணையுடன் மதரசாக்கள் குறி வைக்கப்படுகின்றன.

பிதார் வகுப்புவாத பதட்டங்கள் இல்லாத ஒரு அமைதியான பகுதியாக இருந்து வருகிறது. நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் வாழும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. போராட்டம் நடத்திய பிறகே காவல்துறை 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்துள்ளது. அந்த 4 பேருக்கும் இந்துத்துவ அமைப்புகளுடன் தொடர்பு இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில் அக்டோபர் 6ஆம் தேதி இரவு 1 மணி அளவில் தான் மதரசாவுக்குள் இந்த சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் முழுவதும் உள்ளூர் காவல்துறையின் முன்னிலையில்தான் நடைபெற்றது அதைத்தொடர்ந்து தான் மதரசாவின் முன் மினார் மீது குங்குமத்தை தூவினார்கள் என்றார்.

மஹ்மூத் கவான் மதரசா

கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சினையின் மூலம் கலவரத்தை உருவாக்க முயன்று தோற்றுப்போன கும்பல் விநாயகர் சதுர்த்தியன்று மதரஸாக்களை குறிவைக்க ஆரம்பித்தன. அது தசரா ஊர்வலம் வரை விரிவடைந்துள்ளது. இவர்களின் கலவர திட்டங்கள் அனைத்தும் காவல் துறையின் துணையுடன் அரங்கேறுகிறது. அதாவது அதிகார பலத்துடன் கலவரம் செய்ய முயல்கிறார்கள் இதுவே அனைத்து தரப்பு மக்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்துத்துவ கும்பல் கலவரத்தில் ஈடுபட்டால் பாதிக்கப்படப்போவது இஸ்லாமியர்கள் மட்டுமல்ல இந்துக்களுமே என்பதை அனைவரும் உணர்ந்து உள்ளார்கள். இந்த கும்பல் ஒட்டுமொத்த மனித குலத்துக்குமே எதிரானவர்கள் என்பதை உணர்ந்து மதம் கடந்து ஓரணியில் சேர்ந்து எதிர்கொள்வோம்.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here