பாரதிய ஜனதா கட்சியின் ஊழல் ஒழிப்பு நாடு முழுவதும் சந்தி சிரித்துக் கொண்டுள்ளது. பாஜகவின் ‘மிஸ்டர் கிளீன்’ முகமூடி கிழிந்து தொங்குகிறது. தனக்கு எதிராக பேசுகின்ற, செயல்படுகின்ற எதிர்க்கட்சிகளை முற்றாக ஒழித்துக் கட்டி ஒரு கட்சி சர்வாதிகாரத்தை கொண்டு வருவதற்கு துடித்துக் கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சி ஜனநாயக அடிப்படையில் செயல்படும் கட்சியே அல்ல.

போலி ஜனநாயக அரசு கட்டமைப்பில் குறைந்தபட்சம் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு யாரிடம் ஒப்பந்தம் போடுவது, யாருக்கு ஒப்பந்தம் கொடுப்பது என்பதை பற்றி கருத்து கூறும் அரைகுறை அதிகாரமாவது இருந்து வந்தது. உண்மையான அதிகாரம் கொண்ட அதிகார வர்க்கம் தீர்மானிக்கின்ற இடத்தில் கையெழுத்து போடுவதும், அதற்கு உரிய கமிஷனை பல்வேறு வகைகளில் பெற்றுக் கொள்வதும் அரசியல் கட்சிகளின் வழக்கமான நடைமுறையாகவே இருந்து வருகிறது.

ஊழல், லஞ்சம் ஆகிய அனைத்தும் கேடுகெட்ட முதலாளித்துவ நலன்களை பாதுகாக்கின்ற ஒன்றாகும். குறிப்பாக கார்ப்பரேட்டுகள் தனது காரியத்தை சாதித்துக் கொள்ள குறிப்பிட்ட தொகையை அரசியல் கட்சிகளுக்கும், அதிகார வர்க்கத்திற்கும் லஞ்சமாக கொடுப்பதை சட்டபூர்வமாகிவிட்டதால் சமீபத்திய ஆண்டுகளில் நடக்கின்ற ஊழல், கொள்ளை போன்றவற்றை சட்டப்படி ஒன்றும் கேள்வி கேட்க முடியாது என்ற துணிச்சலில் பாரதிய ஜனதா கட்சியும் அதன் அமைச்சர்களும் எம்பிக்களும் புகுந்து விளையாடிக் கொண்டுள்ளனர்.

ம் என்றால் ED!
ஏன் என்றால் NIA!

கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாத ஆட்சி அரசு கட்டமைப்பை முழுமையாக கைப்பற்றியவுடன் சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக உரிமைகள் கல்லறை கட்டப்பட்டு புதைகுழிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

2014 முதல் ஆட்சி புரிந்து வரும் பாசிச மோடி கும்பல் நாட்டை ஏகாதிபத்தியங்களுக்கும், அமெரிக்க மேல்நிலை வல்லரசுக்கும் மறுகாலனியாக்கி அதிதீவிர சேவை புரிந்து வருகின்றனர். மறுகாலனியாதிக்கத்தின் கீழ் பட்டவர் தனமாக நடக்கும் கொள்ளைகள் அனைத்தும் நாட்டின் வளர்ச்சிக்காகவே செய்யப்படுகிறது என்று ஆர்எஸ்எஸ் மோடி கும்பல் சண்டமாருதம் செய்து வருகிறது.

கார்ப்பரேட் சேவையில் உலகில் உள்ள ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளில் செயல்படும் அரசியல் கட்சிகளே வாயடைத்துப் போகும் வகையில் அதானி உலகின் இரண்டாவது பணக்காரராகிறார். அம்பானியோ இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் அடிமாட்டு விலைக்கு வாங்கி கொழுத்து வருகிறார். இவை அனைத்தும் சட்டபூர்வமாகவே நடந்து வருகிறது. ஹிண்டன் பார்க் அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்ட அதானி மீது சாதாரண முதல் தகவல் அறிக்கை கூட பாயவில்லை. இத்தகைய கார்ப்பரேட்டுகளிடம் நாட்டை சூறையாடுவதற்கு அனுமதி கொடுத்து பல ஆயிரம் கோடி ஊழல் புரிந்துள்ள ஆர்எஸ்எஸ் பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கட்சிகளின் மீது ஊழல் ஒழிப்பு யுத்தத்தை நடத்துவதாக நாடகமாடுகிறது.

இதற்காக எதிர்க்கட்சிகளின் மீது வருமான வரித்துறை மூலம் ரெய்டு நடத்துவது, கைது செய்து சிறையில் அடைப்பது, பொய் வழக்கு பதிந்து அரசியலில் ஈடுபட முடியாமல் தடுப்பது போன்ற அடக்குமுறைகளின் மூலம், சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக நெறிமுறைகளை ‘ஹைகோர்ட்டுக்கும்’ (நன்றி எச் ராஜா.) மதிக்காத செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபடுகிறது ஆர்எஸ்எஸ்- பாஜக.

செந்தில் பாலாஜிக்கு அடுத்து பொன்முடி கைது!                            
திமுகவை உடைக்கும் சதி!

“2006-2011 திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததால் அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு சிறப்பு நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது.

சென்னை சைதாப்பேட்டையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக தொடரப்பட்ட வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு ஆகியவற்றில் இருந்து நீதிமன்றம் ஏற்கெனவே பொன்முடியை விடுவித்திருக்கிறது

தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமாக சென்னை மற்றும் விழுப்புரத்தில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை இன்று காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது விசாரணைக்காக அமலாக்கத்துறையால் பொன்முடி அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

விக்கிரவாண்டி சாலையில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்றது. இதேபோல், அவரது மகனும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.” என்ற செய்தியை பிபிசி வெளியிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக திமுகவை உடைப்பதற்கு திட்டமிட்டு செயல்படும் ஆர்எஸ்எஸ்-பாஜக, அதில் உள்ள அமைச்சர்களின் மீது பத்தாண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்குகளை தூசு தட்டி எடுத்து வருமான வரித்துறை மூலமாக சோதனை நடத்துவதும், சோதனை நடக்கின்ற போதே அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும் தெளிவாகவே திமுகவை ஒழித்து கட்டுவதற்கு நடக்கின்ற செயல்கள்தான் என்று அம்பலமாகி சந்தி சிரிக்கிறது..

எதிர்க்கட்சிகள் பாட்னாவில் ஒன்று கூடியவுடன் பீதியடைந்த ஆர்எஸ்எஸ் பாஜக எதிர்க்கட்சிகளை உடைப்பதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய்களை செலவிட்டு வருகிறது. ஊழல் ஒழிப்பு அவதாரம் எடுத்துள்ள ஆர்எஸ்எஸ் மகாராஷ்டிராவில் பல்லாயிரம் கோடி ஊழல் புரிந்த அஜீத் பவாரை தனது கட்சிக்குள் சேர்த்துக் கொண்டதன் மூலம் நிர்வாணமாக நிற்கிறது.

ஆனால் அந்த ஊழல் பேர்வழியை கட்சியில் சேர்த்துக் கொண்டு மகாராஷ்டிராவில் கேடுகெட்ட கழிசடை அரசியல் நடத்திய ஆர்எஸ்எஸ்- பாஜக, அதே பார்முலாவை தமிழகத்தில் பயன்படுத்த போவதாக முன்னாள் போலீஸ்காரன் அண்ணாமலை மூலமாக பல்வேறு தகிடு தத்தங்களை செய்து வருகிறது. அண்ணாமலையோ பதவி போதை தலைக்கு ஏறி பாஜக செய்யும் அனைத்து கேடுகெட்ட நடவடிக்கைகளையும் தமிழகத்திலும் செய்யப் போவதாக பீற்றிக் கொண்டுள்ளார். மோடி அமித்ஷா ஆசியுடன் அவர் அடுத்தடுத்து கை காட்டுகின்ற இடத்தில் எல்லாம் வருமானவரித்துறை பாய்கிறது.

இதிலிருந்து ஆர்எஸ்எஸ் பாஜக எதிர்க்கட்சிகளை சந்திப்பதற்கு திராணி இன்றி, ED,NIA போன்ற அதிகார வர்க்கத்தின் மூலம் திட்டமிட்டு ஒழித்துக் கட்டுகிறது என்பது நிரூபணமாகிறது. எதிர்க்கட்சிகளின் ஊழல் என்பதை கையில் எடுத்துக் கொண்டு ஆட்டம் போடுகின்ற பாஜகவிற்கு ஊழல் ஒழிப்பு என்று பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது என்பதுதான் ‘பாரத் மாதா கி’ யின் மீது சத்தியம் செய்யப்பட்ட உண்மையாகும்?

ஊழல் பெருச்சாளி அதிமுகவுடன் கூட்டணி!
திமுகவுக்கு எதிராக ஊழல் எதிர்ப்பு லாவணி!

தமிழகத்தை மொட்டையாக சுரண்டி கொள்ளையடிக்க துடித்துக் கொண்டிருந்த அலிபாபா, பாசிச ஜெயலலிதாவும் அதன் சகபாடிகளான 40 திருடர்களும் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவதும், அதனாலயே உத்தமர் வேடத்துடன் துணிச்சலுடன் தமிழகத்தில் வலம் வருகின்றனர். இந்தக் கொள்ளைக் கூட்ட கும்பலுடன் கூட்டணி வைத்துக்கொண்டே எதிர்க்கட்சிகளை அதாவது தற்போது தமிழகத்தை ஆண்டு வரும் திமுகவை ஊழல் கட்சி என்று அண்ணாமலை பேசுவது வெட்கக்கேடு.

திமுக ஆட்சியில் இருந்தபோது செய்த ஊழல்கள் மீது அண்ணா திமுக அரசாங்கம் வந்த பிறகு போட்ட வழக்குகளை திமுக சட்டரீதியாக எதிர்கொண்டு தான் வருகிறது. சட்டத்தின் மூலமாக ஊழலை லேசாக தட்டி வைக்கலாமே ஒழிய ஒருபோதும் ஒழிக்கவே முடியாது. ஆனால் பாஜகவின் நோக்கம் திமுகவின் ஊழலை கண்டுபிடித்து ஒழிப்பதோ, தடுப்பதோ அல்ல! மாறாக இதனை முகாந்திரமாக பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தில் எஞ்சியுள்ள திராவிட இயக்கத்தின் மீது தாக்குதல் தொடுத்து முற்றாக ஒழித்துக் கட்டுவது என்பதுதான்.திமுக வினர் மீதான அமலாக்கத் துறை, வருமான வரித்துறை ஆகியவை நடத்தும் சோதனைகள், தொடரும் வழக்குகளின் நோக்கம் திமுகவின் ஊழலை கண்டுபிடித்து ஒழிப்பதோ, தடுப்பதோ அல்ல! மாறாக இதனை முகாந்திரமாக பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தில் எஞ்சியுள்ள திராவிட இயக்கத்தின் மீது தாக்குதல் தொடுத்து முற்றாக ஒழித்துக் கட்டுவது என்பதுதான்.

இதையும் படியுங்கள்: 

வடமாநிலங்களில் கொள்கை கோட்பாடு ஏதுமற்ற பதவி வெறியர்கள், திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள், சாதி மத வெறியர்கள், கொலை கொள்ளைக்கார கிரிமினல்கள் போன்றவர்கள் பாஜக ஆர் எஸ் எஸ் விட்டெரியும் எலும்பு துண்டுகளுக்கும் கருப்பு பணத்திற்கும் பலியாகி கட்சி மாறுவதைப் போல தமிழகத்திலும் முயற்சி செய்து பார்க்கிறார்கள். இதை எதிர்த்து கொள்கை குன்றுகளாக நிற்பதோ, சோரம் போவதோ திமுகவினரின் வேலை. அதை அந்தக் கட்சி பார்த்துக் கொள்ளட்டும்.

பாசிச ஒடுக்குமுறை என்ற கோணத்தில் ஒன்றிய மோடி அரசின் இந்த பாசிச நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி முறியடிப்பதற்கு மக்களிடம் பிரச்சாரத்தைக் கொண்டு செல்வோம்.

  • மருது பாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here