ந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுகணை தளத்திலிருந்து நிலவின் தென்பகுதியை அதாவது தென்துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்கு அனுப்பப்பட்டுள்ள சந்தராயன் மூன்று பற்றிய பெருமிதங்களும் இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளதாக அலப்பறைகளும் காதை கிழிக்கின்றது.

சந்திராயன் ஒன்று முதல் இரண்டு மூன்று ஆகிய மூன்று திட்டங்களிலும் பணியாற்றிய வீரமுத்துவேல் என்ற விஞ்ஞானி தமிழகத்தின் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் தமிழர்களுக்கு பெருமை என்று குதிக்க ஆரம்பித்து விட்டனர். “பேரு பெத்த பேரு தாக நீலு லேது” என்று தெலுங்கில் ஒரு பழமொழி உண்டு. அந்தப் பழமொழியைத் தான் சந்திராயனை ஏவுவதற்கு பணிபுரிந்த பணியாளர்களுக்கு 17 மாத சம்பளம் கிடைக்கவில்லை என்ற செய்தி நினைவூட்டுகிறது.

சந்திராயன் ஏவப்பட்டவுடன் அனுமான் அதை சுமந்து கொண்டு சென்றுள்ளார் என்றும், திருப்பதி வெங்கடேச பெருமாளின் அருளால்தான் சந்திராயன் வெற்றிகரமாக ஏவப்பட்டது என்று பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார் என்றும் பாஜகவை நக்கலடித்து மீம்ஸ்கள் மற்றும் ட்ரோல்கள் சுற்றி வர துவங்கி விட்டன.

சந்திராயன்-3  என்ன சிறப்பு?
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள்

“பூகோள பாடத்திலே சிவன் தலையில கங்கை ஆறு, வரலாறு சொல்லித்தர வாரியார் வருவாரு” என்று மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடல் ஒலித்த போது இது ஏதோ ஆர்எஸ்எஸ் பாஜகவினரை நையாண்டி செய்து எழுதப்பட்ட பகடி பாடல் என்று பலரும் கருதிக் கொண்டிருந்தனர். ஆனால் நாட்டின் உயர் அறிவியல் ஆராய்ச்சி கூடமான இஸ்ரோ துவங்கி உயர் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள், ஐஐடிகள் போன்றவற்றில் நடக்கின்ற பக்தி பஜனைகளை பார்க்கும் போது இவை உண்மையாகி விட 100% வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தொடர்ந்து வேலை செய்து ஓரளவிற்கு மூடநம்பிக்கைக்கு எதிராக பல்வேறு கருத்துகளை உருவாக்கி இருப்பதால் இது போன்ற செய்திகள் நமக்கு வேடிக்கையாகவும், கேலியாகவும் தெரிகிறது. ஆனால் வட இந்தியாவில் முழுக்க மதரீதியிலான கருத்துகளும், பகுத்தறிவுக்கு எதிரான பழக்க, வழக்கங்களும் ஆதிக்கத்தில் இருப்பதால், சாதாரண உழைப்பாளி மக்கள் துவங்கி உயர்கல்வி கற்ற விஞ்ஞானிகள் வரை மூடர்களாக, பகுத்தறிவுக்கு எதிரான கருத்துக்களை சகஜமாக ஏற்றுக் கொள்பவர்களாக இருக்கிறார்கள் என்பது தான் உண்மையாகும்..

000

ந்தியாவின் பெரும் கனவான சந்திரயான் திட்டத்தில் முக்கிய மைல் கல்லாக இஸ்ரோ 14.07.2023 அன்று சந்திரயான் – 3 விண்கலத்தை விண்ணில் ஏவியுள்ளது. வெற்றிகரமாக ராக்கெட்டில் இருந்து பிரிந்த சந்திரயான் – 3 களம் நிலவை நோக்கி தனது பயணத்தை துவங்கி விட்டது. ஒரு ஆகஸ்ட் மாதம் 23வது 24ஆம் தேதி சந்திரயான் – 3 விண்களம் நிலவில் தரையிறங்க தயாராகிவிடும்.

தற்போது புரோபல்ஷன் மாடுல் சந்திரயான் – 3 விண்களத்தை நிலவிற்கு எடுத்துச் சென்று வருகிறது. நிலவில் 100 கிலோ மீட்டர் உயரம் வரை இந்த புரோபல்ஷன் மாடுல் செல்லும். அங்கிருந்து புரோபல்ஷன் மாடுல் உள்ளே உள்ள லேண்ட் பிரிந்து வரும். அது ஃப்ரீ ஃபாலாக நிலவை நோக்கி செல்லும். நிலவிலிருந்து 30 கிலோமீட்டர் உயரத்தில் இந்த லேண்டர் வரும்போது இதன் இஞ்சின் ஸ்டார்ட் ஆகிவிடும்.

பின்னர் மெல்ல மெல்ல இந்த லேண்டர் நிலவில் தரையிறங்க துவங்கிவிடும். சிக்கல் இல்லாமல் அதிர்வுக்குள்ளாகாமல் லேண்டிங் நடந்து விட்டால் கிட்டத்தட்ட சந்திரயான் 3 திட்டம் வெற்றிகரமான திட்டமாக மாறிவிடும். வெறும் லேண்டிங் மட்டும் செய்தால் போதுமா சந்திரயான் 3 நிலவுக்கு சென்று என்ன செய்யப் போகிறது அதில் அப்படி என்னதான் இருக்கிறது? இதை விரிவாக காணலாம் வாருங்கள்.

சந்திரயான் 3 நிலவின் தென் துருவத்தில் தான் தரையிறங்க போகிறது. அங்கு  ஆய்வு பணியை வெறும் ரோவர் மட்டும் மேற்கொள்ளாது லேண்டரில் அதற்கான சில சாதனங்கள் உள்ளது. சந்திராயன் 3 லேண்டரில் மட்டும் மொத்தம் நான்கு விதமான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

முதல் கருவி CHAS TE:, இது நிலவில் உள்ள தட்பவெட்ப நிலையை ஆய்வு செய்யும். நிலவில் உள்ள வெப்பநிலை எவ்வளவு? எவ்வளவு வெப்பத்தை கொடுத்தால் நிலவு தாங்கும் ஒவ்வொரு வெப்ப நிலைக்கும் என்ன மாதிரியான ரியாக்ஷன் நடக்கிறது. என்பதை ஆய்வு செய்து அந்த தகவல்களை பூமிக்கு அனுப்பும்.

இரண்டாவது கருவி RAMBA: இது நிலவின் வெளி மண்டலத்தில் உள்ள வாயு மற்றும் பிளாஸ்மா ஆகியவற்றை ஆய்வு செய்யும். நிலவின் வெளிமண்டலத்தில் என்ன வகையான காற்று இருக்கிறது காற்றில் என்னென்ன வகையான பிளாஸ்மா எல்லாம் கலந்துள்ளன இது மனிதன் சுவாசிக்க ஏற்ற காற்றா இல்லையா என்பதை எல்லாம் ஆய்வு செய்யும்.

அடுத்த கருவி ILSA:. இது நிலவில் உள்ள நில அதிர்வுகள் குறித்து ஆய்வுகள் செய்யும். இந்த லேண்டர் தரையிறங்கிய இடத்தை சுற்றி உள்ள பகுதிகளில் ஏதாவது நில அதிர்வுகள் ஏற்படுகிறதா நில அதிர்வுகள் ஏற்பட்டால் என்ன வகையான அதிர்வுகள் ஏற்படுகிறது? அதன் அளவுகள் என்ன? எவ்வளவு நேரம் அந்த அதிர்வுகள் நீடிக்கிறது? உள்ளிட்ட விபரங்களை எல்லாம் சேகரிக்கும்.

நான்காவது கருவி LRA: இந்தக் கருவி நிலவிற்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தை மிகத் துல்லியமாக அளந்து பார்ப்பதற்காக பொருத்தப்பட்டுள்ளது. இது நிலவிலிருந்து பூமி எவ்வளவு தூரம் என்பதை கம்யூனிகேஷன் சிஸ்டம் மூலம் அளந்து பார்க்கும். இதிலிருந்து வெளியாகும் சிக்னல் குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட தூரம் வரை பயணிக்கும் என்பதை வைத்து நிலவிலிருந்து அந்த சிக்னல் புறப்பட்டு பூமிக்கு வர எவ்வளவு நேரம் ஆகிறது என்பதை வைத்து தூரம் கணக்கிடப்படும்.

அடுத்தது பிரக்யான் ரோவர்: பிரக்யான் ரோவர் நிலவில் தரையிறங்கிய பின்பு லேண்டர் உள்ளே இருந்து வெளியே வந்து தனது ஆய்வு பணிகளை மேற்கொள்ளும். இந்தப் பிரக்யான் ரோவர் மொத்தம் ஆறு வீல்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆய்வு செய்வதற்காக இரண்டு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவிகளை பற்றி விரிவாக காணலாம்.

இதையும் படியுங்கள்: 

முதல் கருவி APXS. அப்படி என்றால் ஆல்ஃபா பார்ட்டிக்கள் எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர். இந்த கருவி எக்ஸ்ரே கதிர்களை வெளியிட்டு நிலவில் உள்ள மண் மற்றும் பாறைகள் குறித்து தகவல்களை சேகரிக்கும். இந்தத் தகவல்கள் நேரடியாக லேண்டனுக்கு தெரிவிக்கப்பட்டு லேண்டர் மூலம் இஸ்ரோவிற்கு கிடைக்கும். இது நிலவில் உள்ள மண்ணில் மெக்னீசியம் , அலுமினியம், சிலிக்கான், பொட்டாசியம், கால்சியம், டைட்டானியம், இரும்பு தாது எவ்வளவு உள்ளது என்பதை கண்காணிக்கும்.

இரண்டாவது கருவி LIBS. இதன் விரிவாக்கம் லேசர் இன்டக்டர் பிரேக் டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் இது நிலவில் உள்ள மினரலாஜிக்கல் காம்போசிஷன் மற்றும் கெமிக்கல் காம்போசிஷன் ஆகியவற்றை குவாலிட்டேட்டிவ் மற்றும் குவான்டிடேட்டிவ் முறையில் ஆய்வுகளை செய்கிறது. இது போக லேண்டரையும் ரோடவை எடுத்து சென்ற புரோபல்சன் மாடுல் நிலவின் நீற்வட்ட பாதையில் நிலை கண்காணிக்கும் செயற்கைகோளாக செயல்படும்.

இந்த செயற்கைகோளில் SHAPE  என்ற கருவி இருக்கிறது. அது நிலவிலிருந்து பூமியை ஸ்போக்டரல் பாலிமெட்ரிக் மெஷர்மென்ட் ஆய்வுகளை செய்யும். அந்த தகவல் பூமி குறித்த ஆய்விற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பயன் கிடைக்கும். நிலவில் தரையிறங்கிய லேண்டர் மற்றும் ரோவர் சூரிய வெளிச்சத்தில் இயங்கும் திறன் கொண்டது. இந்த லேண்டர் மற்றும் ரோவர் தரையிறங்கியது முதல் 14 நாட்களுக்கு தொடர்ந்து அங்கே வெளியில் இருக்கும்.

அதனால் தொடர்ந்து 14 நாட்கள் இந்த ரோவர் தனது பணியை நிலவில் செய்து கொண்டே இருக்கும். அந்த தகவலை பூமிக்கு அனுப்பும், அங்கு இருட்டான பின்பு தனது செயல்பாட்டை நிறுத்திவிடும். இதன் பேட்டரி அடுத்த 14 நாட்களுக்கு இதை உயிர்ப்புடன் வைத்திருந்தால் இந்தியாவிற்கு அடுத்து வெளியில் வரும் போது மீண்டும் 14 நாட்கள் ஆய்வு செய்வதற்கு கிடைக்கும். இது போன்ற விவரங்கள் அனைத்தையும் தமிழில் வெளியாகும் டிரைவ்ஸ் பார்க் என்ற இணைய இதழ் விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், சந்திரயான் -3 தயாரிப்பு பணியில் முக்கிய பங்கு வகித்த ராஞ்சியில் உள்ள கனரக பொறியியல் நிறுவனத்தில் 17 மாதமாக யாருக்கும் ஊதியம் வழங்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. மத்திய கனரக தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இதில் 3,000 பேர் பணியாற்றி வருவதாகவும் ரூ 1,000 கோடி கேட்ட நிலையில் மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை என அமைச்சகம் பதில் அளித்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதான் பாசிச மோடி உருவாக்க துடிக்கின்ற வல்லரசு இந்தியாவின் யோக்கியதை ஆகும். அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு பிறகு நிலவு பற்றிய ஆராய்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வரும் நாடு இந்தியா என்று சவடாலடிக்கின்றனர். ஆனால் அதில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க துப்பில்லை என்பது அவர்களின் உண்மை முகத்தை காட்டுகிறது.

சந்திராயன்-3 ஏவப்பட்டதற்காக தலை நிமிர்ந்து நிற்பதற்கு பதில் தொழிலாளிகளுக்கு சம்பளத்தை கொடுக்கவில்லை என்பதற்காக வெட்கத்துடன் தலை குனிந்து நிற்போம்.

  • இரா.கபிலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here