உத்திரபிரதேசத்தின் சஹரன்பூரில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் கான்வாயின் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்கள் காரில் வந்துள்ளார்கள். சந்திரசேகர்ஆசாத் காரின் வலது பக்கத்தில் இருந்து சுட்டதில் முதல் தோட்டா அவரது அடி வயிற்றில் பாய்ந்தது. இரண்டாவது தோட்டா அவர் மீது படாமல் தப்பித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவல்துறை கண்காணிப்பாளர் அபிமன்யு மங்லி செய்தி நிறுவனமான பிடிஐ-யிடம் தெரிவித்துள்ளார்.
காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில் எனக்கு சரியாக நினைவில் இல்லை. ஆனால் எனது மக்கள் அவர்களை அடையாளம் கண்டுள்ளனர். அவர்களின் கார் சஹரன்பூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. நாங்கள் எங்கள் காரை யூடர்ன் எடுத்தோம்.சம்பவம் நடந்த பொது நான் எனது தம்பி உட்பட காரில் ஐந்து பேர் இருந்தோம்.
ஆசாத் அவரது ஆதரவாளர் வீட்டின் சடங்குக்கு சென்று திரும்பும் பொழுது இந்த தாக்குதல் நடந்துள்ளது. காரில் வந்த ஆயுதமேந்திய நபர்கள் இந்த துப்பாக்கிசூட்டை நடத்தியுள்ளனர்.
நூற்றுக்கணக்கான பீம் ஆர்மி மற்றும் ஆசாத் சமாஜ் கட்சி ஆதரவாளர்கள் மருத்துவமனையில் குவிந்துள்ளனர். அங்கு கூடுதல் பாதுகாப்பு பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
காயமடைந்த ஆசாத்தின் புகைப்படங்கள் அவரது பேஸ்புக் கணக்கில் இருந்து பகிரப்பட்டன, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், ஆர்வலருக்கு பாதுகாப்பு வழங்கவும் காவல்துறையை வலியுறுத்தியது.
“சஹாரன்பூரில் உள்ள தியோபந்தில் பீம் ஆர்மி தலைவரும் தேசியத் தலைவருமான பாய் சந்திரசேகர் ஆசாத் மீதான கொலைவெறித் தாக்குதல் பகுஜன் மிஷன் இயக்கத்தைத் தடுத்து நிறுத்தும் கொடூரமான செயல்!”
“குற்றம் சாட்டப்பட்டவர்களை அவசரமாக கைது செய்யவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், தேசியத் தலைவர் பாய் சந்திரசேகர் ஆசாத்துக்குப் பாதுகாப்பு அளிக்கவும் நாங்கள் கோருகிறோம்!”
உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், ஆசாத் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையை ‘ஜங்கிள்ராஜ்’ (காட்டாட்சி) உடன் ஒப்பிட்டுள்ளார்.
“பாஜக ஆட்சியில் மக்கள் பிரதிநிதிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்றால், பொது மக்களின் கதி என்ன?” என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்திரபிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜகவின் யோகி ஆதித்தியநாத் தான் ஆளும் மாநிலத்தில் ஆட்சியை எதிர்ப்பவர்களையும், போராட்டகாரர்களையும் குறி வைத்து தாக்குகிறது. அந்த வரிசையில் ஆசாத்தும் உள்ளார். சுட்டவன் முகம் தெரியாத ‘மர்ம நபர்’ என காவல்துறை தெரிவித்துள்ளது.
யோகி ஆதித்யநாத் பதவியேற்ற 2017 முதல் ஒவ்வொரு 15 நாட்களுக்கும் இடையில் ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதுவரை 186 என்கவுண்டர்களை நிகழ்த்தியுள்ளது யோகி ஆதித்யநாத் அரசு. இவையில்லாமல் அரசின் ஆதரவோடு கொலைகளும் அடிக்கடி நிகழ்கின்றன. கடந்த முறை கூட உ.பி முன்னாள் எம்பியும் அவரது சகோதரரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதையும் படியுங்கள்: உத்தரப்பிரதேசமா? – யோகியின் கிரிமினல் கூடாரமா?
பீம் ஆர்மியின் சந்திரசேகர் ஆசாத் மக்கள் செல்வாக்கு மிக்கவர். உத்திரபிரதேசத்தில் உள்ள தலித் மக்களுக்காக களத்தில் போராடுபவர். முக்கியமாக ஆளும் பாஜகவுக்கு குடைச்சல் கொடுக்கும் நபராக விலைபோகாதவராக உள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தல் வருவதற்குள் உ.பி மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் பாஜக எதிர்ப்பாளர்களை ஒன்று விலைக்கு வாங்குவது அல்லது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ மூலம் கைது செய்து அவர்களை செயல்பட விடாமல் தடுப்பது என்ற நோக்குடன் செயல்படுகிறது.
இந்துத்துவத்திற்க்கு எதிராக செயல்படும் செயல்பாட்டாளர்களை கொலை செய்வதற்கென்றே சனாதன் சன்ஸ்தா என்ற அமைப்பை வைத்துள்ளது ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல். ஏற்கனவே நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி கடைசியாக கௌரிலங்கேஷ் உள்ளிட்டோரை கொன்றுள்ளது. அந்த வரிசையில் சந்திர சேகர் ஆசாத்தையும் இணைக்கப் பார்க்கிறது இந்துத்துவ பாசிச கும்பல்.
ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் பாசிச வளர்ச்சியை தடுத்து நிறுத்தவில்லை என்றால் கட்டுக்கடங்காமல் நாளை பலர் கொல்லப்படலாம். இதனை தடுக்க தற்காலிக தடையரண் அவசியம் என்பதை அரசியல் கட்சிகள் உணர வேண்டும். ஆட்சி அதிகாரத்தை தாண்டி இந்தியாவை பாசிச பிடியில் இருந்து மீட்க ஒன்றுபட்ட போராட்டம் அவசியம்.
- நந்தன்