டெல்லியின் புகழ்வாய்ந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) முனைவர் பட்டம் பெற்ற மாணவரான உமர் காலித், டெல்லி கலவர சதி வழக்கில் செப்டம்பர் 13, 2020 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாசிச பாஜக அரசால் 2019-ல் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ( CAA) எதிராக வீரியமான போராட்டங்களை நடத்தியதால், புனைவுகளின் அடிப்படையிலான பொய்யான குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு, எவ்வித விசாரணையுமின்றி ஆயிரம் நாட்களை கடந்தும் சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார். நீதிமன்றங்களும் அவருக்கு பிணை வழங்க மறுக்கின்றன.

சதி வழக்கும், போலியான சாட்சிகளும்!

வடகிழக்கு டெல்லியில் பிப்ரவரி 23 முதல் 25 (2020) வரை நடந்த வகுப்புவாத வன்முறை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 751 FIR – களில் டெல்லி கலவர சதி வழக்கு FIR-ம் ஒன்று. இந்தக் கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். அதில் மூன்றில் இரண்டு பங்கினர் முஸ்லிம்கள். இந்தக் கலவரத்தை திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 18 பேரில் 16 பேர் முஸ்லிம்கள். இவர்களின் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. மாவட்ட நீதிமன்றத்தில் 8 மாதங்களும், டெல்லி உயர்நீதிமன்றத்தில் நான்கு மாதமும் இவர்களது ஜாமீனுக்கு எதிராக பொய்யான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

மொத்தத்தில் சிஏஏ எதிர்ப்பு இயக்கத்தையும், அதில் பங்கேற்ற மக்களையும் (பெரும்பாலும் முஸ்லிம்கள்) திட்டமிட்ட வகையில் சிக்க வைக்க போலியான சாட்சியங்கள் உருவாக்கப்பட்டன. இதில் பல வழக்குகளில் நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கின. தெளிவற்ற ஆதாரங்கள், தரமான விசாரணையின்மை போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி போலீசை கண்டித்தன.

உமர் காலித்துக்கு தொடர்ந்து பிணை மறுப்பு!

டெல்லியின் திகார் சிறையில் உமர் காலித் ஆயிரம் நாட்களை கழித்த நிலையில், அவர் மீதான போலீசின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை மற்றும் புனைகதைகள் என்பது போலீஸ் உருவாக்கிய பொய் சாட்சிகளின் முரண்பட்ட வாக்குமூலங்கள் மூலம் நிரூபணமாகிக் கொண்டிருப்பதால் இந்த வழக்கு மேலும் மேலும் பலவீனமாகி வருகிறது. ஆளுகின்ற பாசிச பாஜக-வின் கீழ் இந்து பெரும்பான்மைவாதம் நாடெங்கும் வளர்ந்து வரும் சூழலில், முஸ்லிம்களின் எதிர்ப்பின் அடையாளமாக உமர் காலித் மாறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: சமூக செயற்பாட்டாளர் உமர் காலித்துக்கு பிணை மனு நிராகரிப்பு!

நாடாளுமன்றத்தில் டிசம்பர் 2019-ல் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மோடி அரசு நிறைவேற்றிய போது இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் மத்தியில் பீதி பரவியது. இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து கிளம்பின. ஜனநாயக சக்திகள் அனைத்தும் CAA எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்தன. உமர் காலித் எனும் போர்க்குணம் மிக்க இளைஞனது வீரியமான போராட்டமும் ஒன்றிய அரசை அச்சுறுத்தியது. அவரை முடக்கத்தான் UAPA – வின் கீழ் கைது நடவடிக்கை எடுத்தது மோடி அரசு.

உண்மையில் டெல்லி கலவரத்தைத் திட்டமிட்டு தூண்டிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மீதோ பிஜேபி தலைவரான கபில் மிஸ்ரா மீதோ எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. தாக்கூரின் கோலி மாரோ சலோன் கோ (துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள்) என்ற பேச்சு புறக்கணிக்கப்பட்டது குறித்து உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 2023 -ல் டெல்லி காவல்துறைக்கு இப்போதுதான் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிணை மறுப்புக்கு விசித்திரமான காரணங்கள்!

அக்டோபர் 2022 – ல் காலித்துக்கு ஜாமீன் மறுப்பதற்கான டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரஜ்னீஷ் பட்நாகர் மற்றும் சித்தார்த் மிருதுள் கூறிய காரணங்கள் கேலிக்கூத்தானவையாக உள்ளன.
1. “அவர் JNU முஸ்லிம் மாணவர்களின் whatsapp குழுவில் உறுப்பினராக இருந்தார்” என்பது ஒரு காரணம்.
ஒரு குழுவில் உறுப்பினராக இருப்பது தவறு இல்லை. இந்தக் குழுவில் அவர் பகிர்ந்த பிரச்சினைக்குரிய எந்த தகவலையும் போலீசு வெளியிடவில்லை.
2. “அவர் ஜந்தர் மந்தர், ஷாகின்பாக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றார்”. கூட்டங்களில் கலந்து கொள்வது குற்றமல்லவே அங்கு என்ன சொன்னார் அல்லது செய்தார் என்பது குறித்தும் காவல்துறை எதுவும் குறிப்பிடவில்லை.
3.”அமெரிக்க ஜனாதிபதியின் இந்திய வருகை குறித்து அமராவதி உரையில் அவர் குறிப்பிட்டார்”.
உமர் காலித் தனது 20 நிமிட உரையில் ட்ரம்ப் குறித்து 42 வினாடிகள் பேசியுள்ளார். அதில் வன்முறை தூண்டுவதாக எதுவுமில்லை.
4. “மேல்முறையீடு செய்தவர் மற்றும் இணை குற்றம் சாட்டப்பட்டவர்கள் இடையே கலவரத்துக்கு பிந்தைய அழைப்புகள் நடந்துள்ளன”.
கலவரம் நடந்த சூழலில் ஒருவரை ஒருவர் அழைப்பது இயல்பானதுதானே! இப்படித்தான் சொத்தையான வாதங்களை முன்வைத்து காலித்துக்கு பிணை மறுக்கப்பட்டு வருகிறது.

இதே UAPA வழக்கில் உமர் காலித்தோடு கைதான மூவருக்கு ஜூன் 2021- ல் தில்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்குகிறது. அதில் ஒருவரான நீதிபதி மிருதுள், ஓராண்டுக்குப் பிறகு காலித்துக்கு ஜாமீன் மறுத்தார். இது குறித்து அரசியலமைப்பு சட்ட அறிஞர் கௌதம் பாட்டியா எழுதிய பதிவில் “இரண்டு ஜாமின் தீர்ப்புகளும் ஒரே மாதிரியான நிகழ்வுகள், உண்மைகள் இருந்தும் எதிரெதிர் அணுகுமுறை கொண்டதாக உள்ளன. மூவருக்கு ஜாமீன் வழங்கிய போது நீதிபதி மிருதுள், வன்முறையைத் தூண்டியதாகவோ, பயங்கரவாத செயல்களை செய்ததாகவோ குறிப்பிட்ட ஆதாரம் ஏதுமில்லை எனக் கண்டறிந்தார். ஆனால் காலித் விஷயத்தில் whatsapp குழுவில் உறுப்பினராக இருந்தார் என்பதற்காகவும் அவரது உரையில் புரட்சிகர வணக்கம் புரட்சிகர வரவேற்பு போன்ற சொற்கள் இருந்ததால் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளார். இந்த இரு தீர்ப்புகளும் சீரற்றதாகவும், நீதிபதியை மையமாகக் கொண்டதாகவும் உள்ளது. மேலும் தனிநபர் சுதந்திரம் என்பது அடிப்படையில் ‘நீதித்துறை லாட்டரி’ விளைவுகளுக்கு உட்பட்டதாகவே உள்ளது” எனவும் எழுதினார்.

போலீசு புனைந்த இந்த வழக்கில் உள்ள பத்து தவறான விஷயங்கள்!

1.சட்ட விரோதமான பேச்சு?

டெல்லியில் வகுப்புவாத கலவரங்கள் வெடிப்பதற்கு ஒரு வாரம் முன்பு மகாராஷ்டிராவின் அமராவதியில் உமர் காலித் பேசியதாக ரிபப்ளிக் டிவி மற்றும் நியூஸ் 18 ஒளிபரப்பிய வெட்டி ஒட்டிய பேச்சை வைத்து FIR பதிவானது. இது ஆளும் பிஜேபியின் ஐடி விங் தலைவரான அமித் மாளவியா வெளியிட்ட டிவீட்டில் இருந்து எடுத்தது. அவர் பேசிய முழு பேச்சும் சமூக ஊடகங்களில் முழுமையாக இருக்கிறது. வழக்குப் பதிந்து நான்கு மாதம் கழித்துதான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் காவல்துறை அந்த பேச்சை கேட்டு பெற்றது. அதில் ட்ரம்பின் வருகையை ஒட்டி வன்முறையை தூண்டுவதாக எதுவுமே இல்லை. காலித்தின் வழக்கறிஞர் திரிதீப் பைஸ், இந்த முழு உரையை போலீஸ் ஆதாரமாக முன் வைக்கவில்லை என நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார். அவர் பேசியது ஒரு சட்டத்துக்கு (சிஏஏ) எதிரான அரசியல் பேச்சு மட்டும்தான் எனவும் கூறினார்.

2. ஜனவரி 8 சதியாலோசனை எனும் பொய்!

காலித் ஜனவரி 8, 2020 -ல் PFI – ஐ சேர்ந்த இருவரை ஷகின்பாகில் சந்தித்து டொனால்ட் டிரம்ப் வருகையின் போது வன்முறை நிகழ்த்த திட்டமிட்டார் என்று போலீஸ் குற்றம் சாட்டியது. ஆனால் ட்ரம்ப் வருகை குறித்து முதல் முறையாக ஜனவரி 14 அன்றுதான் ஊடகங்களில் செய்தி வெளியானது. அது பிப்ரவரி 11 அன்றுதான் இறுதி செய்யப்பட்டது. பிறகு எப்படி ஜனவரி 8 அன்று சதியாலோசனை நடத்த முடியும்?

3. பொய் சாட்சி!

மேற்கூறிய சந்திப்பை ஒட்டி போலீஸ் தரப்பு சாட்சியின் 4 வாக்குமூலங்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்தன. இந்த குறிப்பிட்ட வழக்கில் காலித்துக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி வினோத் யாதவ், சாட்சிகளின் இருவேறு பதிப்புகள் அறிவுக்கு உகந்ததாக இல்லை என்றார். மேலும் இது போன்ற முக்கியமற்ற விஷயங்களின் அடிப்படையில் குற்றப் பத்திரிக்கை தேவையற்றது எனவும் குறிப்பிட்டார்.

4. வாட்ஸ்அப் குழுக்கள் பற்றிய புனைகதைகள்!

“ஜேஎன்யு முஸ்லிம் மாணவர்கள்” என்ற whatsapp குழுவை தொடங்குமாறு சக குற்றவாளியான ஷர்ஜில் இமாமிடம் காலித் உத்தரவிட்டதாக காவல்துறை கூறியது. ஆனால் இதற்கான ஆதாரம் எதையும் காட்டவில்லை. அந்த டெல்லி போராட்ட ஆதரவு குழுவில் காலித்திடமிருந்து சர்ச்சைக்குரிய எந்த செய்தியும் பகிரப்படவில்லை. காலித்தின் வழக்கறிஞர் ஃபைஸ், குழு துவங்கப்பட்ட டிசம்பர் 2019-ல் காலித் நான்கு செய்திகளை அனுப்பியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதில் இரு முறை போராட்ட இடம் பற்றிய கூகுள் மேப்பும் மற்றும் ஒரு முறை அவர் டெல்லியில் இல்லாத போது போலீஸ் அதிகாரி அனுப்பிய செய்தியை பகிர்ந்தும் உள்ளார்.

5. சட்டத்துக்கு புறம்பாக எந்த ஆதாரமும் இல்லை!

டிசம்பர் 8, 2019 அன்று ஜங்புராவில் நடைபெற்ற கூட்டம் தொடர்பாக சாலையை மறித்து முடக்க சதித்திட்டம் தீட்டியதாக போலீசு குற்றம் சுமத்தியது. இது குறித்து பைஸ் நீதிமன்றத்தில் சாலை மறியல் குறித்து ஆலோசிப்பது ஒரு கிரிமினல் சதித்திட்டமா என வினவினார். கூட்டம் முடிந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட மூன்று போலீஸ் சாட்சிகளில் ஒருவர் மட்டுமே சாலை முடக்கம் பற்றிக் கூறினார். அதிலும் காலித்தின் பங்கு பற்றி எதுவும் கூறவில்லை. சாதாரண செய்தியைக் கூட சதித்திட்டம் போல புனைந்து போலீசு கூறுகிறது எனவும் தெரிவித்தார்.

6. முரண்பாடுகளும், அபத்தங்களும்!

ஜனவரி 23, 24 – 2020 சீலம்பூரில் இரண்டாவது சதிக் கூட்டம் நடைபெற்றதாக காவல்துறை குற்றம் சாட்டியது. அதில் காலித் சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்களை இறுதியில் கலவரங்களாக மாற்றி போலீஸ்காரர்கள் ரத்தம் சிந்த வேண்டும் என பேசியதாக கூறியுள்ளது. அதேபோல உள்ளூர்ப் பெண்கள் கத்திகள், அமிலம், மிளகாய் தூள் போன்ற ஆபத்தான பொருட்களை குவித்து வைக்க வேண்டும் என காலித் பேசியதாகவும் காவல்துறை கதை கட்டியது.

வேடிக்கை என்னவென்றால் இந்த ‘ரகசிய சந்திப்பின்’ புகைப்படங்கள் முகநூலில் வெளியிடப்பட்டன. ‘புலனாய்வாளர்களும்’ தங்களது ஆதாரமாக இதைத்தான் காட்டியுள்ளனர். போலீசார் நம்பி இருந்த ஆறு சாட்சிகளின் வாக்குமூலங்களும் முரண்பட்டிருந்தன. அதில் ஒரு சாட்சியானவர் டீ விற்பவர். அவரிடம் காலித் கலவர திட்டத்தை விவரித்ததாகவும், வன்முறை நடந்து மூன்று மாதங்களாக தாம் அமைதியாக இருந்ததாகவும் அவர் கூறுகிறார். இது குறித்து ஃபைஸ் நீதிமன்றத்தில், போலீசாருக்கு டீ விற்பவரை எப்படித் தெரியும், எங்கே கண்டுபிடித்தனர், அவருக்குப் போராட்டக்காரர்களின் பெயர்கள் எப்படித் தெரியும் எனக் கேள்விகளை எழுப்பினார்.

7. வழக்கு ஜோடிப்புகள்!

பிப்ரவரி 10, 2020 அன்று ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் காலித் மற்றும் அவரது தந்தை இலியாஸ் ஆகியோர் சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் வங்காளதேச பெண்களை ஈடுபடுத்த திட்டமிட்டனர் என போலீசு குற்றம் சுமத்தியது. இதில் போலீஸ் சாட்சி தனது முதல் வாக்குமூலத்தை செப்டம்பர் 15 அன்றுதான் (சுமார் 7 மாதங்களுக்கு பிறகு) அளித்தார். கைது செய்யப்பட்டப் பிறகும் இதுபோல வழக்கு ஜோடிப்புகள் சிறப்பாக நடைபெற்றன என பைஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

8. அரை உண்மைகள்!

ஜனவரி 5 முதல் பிப்ரவரி 2020 வரை காலித்துடன் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரிடம் இருந்து ஆறு செய்திகள் பெறப்பட்டுள்ளன. இதிலிருந்து காலித் போராட்டத் தளங்களை ஒருங்கிணைத்து வருவது தெரிகிறது என போலீஸ்தரப்பு கூறியது. ஆனால் அந்த செய்திகள் எதற்கும் காலித் பதில் அளிக்கவில்லை. மேலும் செய்தி அனுப்பியவரே இருமுறை தன்னை காலித்திடம் அறிமுகம் செய்து கொள்கிறார்.

9. உண்மையற்றவை!

அரசுத் தரப்பு வாதங்கள் உமர் காலித்தை ஒரு சதித் தலைவனாக இருந்து சிஏஏ-வுக்கு எதிரானப் போராட்டங்களை சட்டத்திற்கு புறம்பானதாக மாற்றினார் என்பதாக இருந்தது. அரசு தரப்பின் சிறப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில், சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்கள் மதச்சார்பின்மை எனும் போலியான முகத்தைக் கொண்டு நடத்தப்பட்டன என்றும் ஏழை முஸ்லிம்களின் இருப்பிடங்கள் போராட்ட தளங்களாக மாற்றப்பட்டதாகவும் கூறினார். ஜாப்ராபாத் பகுதி கலவரத்தின் மையமாக இருந்ததாகவும், அதிகபட்ச வன்முறை நடந்த இடம் என்றும் குறிப்பிட்டார். ஆனால் அங்கு தொடங்கிய சாலை மறியலால் எவ்வித வன்முறையும் நிகழ்ந்ததாக FIR -ல் குறிப்பிடப்படவில்லை.

10. ஆதாரமில்லாததை மறைப்பதற்கான வாதங்கள்!

கலவரத்தின் போது காலித் டெல்லியில் இல்லாதது, வன்முறைக்கு அழைப்பு விடுக்கும் அல்லது குற்றச் செயலில் ஈடுபட்டதற்கான சாட்சிகள் இல்லாதது, பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்ததற்கான ஆதாரமோ, அவரிடம் இருந்து எவ்வித ஆயுதங்களோ பறிமுதல் செய்யாதது போன்றவை போலீஸ் தரப்புக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தன. அவருக்கு எதிரான ஆதாரம் எதையும் காட்ட முடியாததை மறைப்பதற்காக “மௌனத்தின் சதி” என்ற சொற்றொடரை அரசுத் தரப்பு பயன்படுத்தியது. ஏற்கனவே 2016ஆம் ஆண்டு காலித் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு, அவர் எல்லா ஆதாரங்களையும் மறைக்கக் கற்றுக் கொண்டார் என்று வெட்கமே இல்லாமல் புளுகியது. அதாவது ஆதாரம் இல்லாததே குற்றத்திற்கான ஆதாரமாக உள்ளது எனக் காட்டியது. போலீஸ் தரப்பில் கலவரம் முடிந்து பல மாதங்கள் கழித்து சாட்சிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. பல சாட்சிகளின் வார்த்தைகள் ஒரே மாதிரியாக இருந்ததிலிருந்து அவை புனையப்பட்டவை என்பது வெட்ட வெளிச்சமாகியது. பல மாதங்கள் கழித்து காலித் மீதான மூன்றாவது துணைக் குற்றப் பத்திரிகையை காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இது குறித்து காலித்தின் வழக்கறிஞர் பைஸ், மார்ச் 6, 2020 -ல் முதல் அறிக்கை தாக்கல் செய்தீர்கள். அதை நிரூபிக்க 2022 -ல் சிலவற்றைத் தேடி கண்டுபிடித்தோம் என்கிறீர்கள் எனத் தெரிவித்த அவர், இதை “தலைகீழ் பொறியியல் பயிற்சி” எனவும் குறிப்பிட்டார்.

அப்போதும், இப்போதும்!

ஜூன் 2021 இல் மாணவ செயல்பாட்டாளர்கள் மூன்று பேருக்கு பிணை வழங்கிய நீதிபதிகள் மிருதுள் சித்தார்த் மற்றும் அனுப் ஜெய்ராம் ஆகியோர், அரசு தொடுத்துள்ள இந்த வழக்கு உண்மை என்று ஏற்றுக் கொண்டாலும் கூட, கொந்தளிப்பான பேச்சுக்கள், சாலை மறியல்கள், பெண் போராட்டக்காரர்களை தூண்டுதல் போன்றவை தீவிரவாத செயல்களோ, சதியோ அல்லது தீவிரவாத செயலுக்கான தயாரிப்போ அல்ல. எனவே UAPA – வில் எப்படி வழக்கைத் தொடுக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினர்.

ஆனால் ஓராண்டுக்குப் பின்பு அக்டோபர் 2022 -ல் இதே நீதிபதி மிருதுள், காலித்துக்கு பிணை மறுத்தபோது, சாலை மறியல் போன்ற சீர்குலைக்கும் போராட்டங்கள் முன்கூட்டியே திட்டமிட்ட சதியாக இருப்பதாகத் தோன்றுகிறது. குறிப்பிட்ட தேதிகளில், குறிப்பிட்ட இடங்களில் வன்முறையைத் தூண்ட திட்டமிடப்பட்டுள்ளது. இது சாதாரண அரசியல் போராட்டமாகவோ, ஜனநாயக வழியாகவோ இல்லாமல் மிகவும் அழிவுகரமான தீங்கு விளைவிக்கும் வகையில் நடத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகிறார்.

ஜனநாயகமே எங்கள் மூச்சு என மோடி பச்சையாக புளுகுகிறார்!

இப்போது உச்ச நீதிமன்றத்தில் காலித் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். டெல்லி போலீஸ் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சூழலில் அமெரிக்கா சென்றுள்ள மோடி, துரதிருஷ்டவசமாக பத்திரிகையாளர் ஒருவரின் கேள்வியை எதிர்கொண்டபோது, “நாங்கள் மத, இன அடிப்படையில் பாகுபாடு காட்டுவதே இல்லை. ஜனநாயகம்தான் எங்களது ஆன்மா. மனித உரிமைகள் இல்லையேல் ஜனநாயகமும் இல்லை. எங்கள் நரம்புகளில் ஜனநாயகம் ஓடுகிறது” என்று பச்சையாகப் புளுகியுள்ளார்.

பல்வேறு மனிதவுரிமை ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள், பத்திரிகையாளர்கள் என மோடியின் பாசிச கொடுங்கோன்மை ஆட்சியை விமர்சித்த பல நூறு பேரை, வருடக் கணக்கில் சிறைக் கொட்டடியில் அடைத்து வைத்துள்ள மோடிதான், ஜனநாயகம் குறித்து போலியாகப் பசப்புகிறார். மோடியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திய குஜராத்தின் போலிசு அதிகாரி சஞ்சீவ் பட் போன்ற பலரும் பல ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர்.

உமர்காலித் 2016 ஆம் ஆண்டு தேசதுரோக வழக்கில் கைதாகி பிணையில் வந்தவுடன், மாணவர்களிடையே ஆற்றிய புகழ்வாய்ந்த உரையில், ” நான் சிறையில் இருந்ததற்காக வெட்கப்படவில்லை. ஆட்சியில் குற்றவாளிகள் அமர்ந்துள்ளனர். (நியாயத்துக்காக) குரல் எழுப்புபவர்கள் சிறையில் அடைக்கப் படுகிறார்கள்” என்றார்.

அதிகாரவர்க்கத்தின் அனைத்து அங்கங்களையும், நீதித்துறையின் எல்லா மட்டங்களையும் தனது இந்துமதவெறி காவி பாசிசத்துக்குப் பயன்படுத்தும் மோடி – அமித்ஷா கும்பலை வீழ்த்தாமல், அரைகுறை ஜனநாயகத்தைக் கூட மீட்டெடுக்க முடியாது என்பதே உண்மை. இதை உணர்ந்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராட முன்வரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

செய்தி ஆதாரம்:
https://article-14.com/post/1000-days-without-trial-or-bail-for-umar-khalid-denied-bail-despite-false-allegations-fabrications-and-inconsistencies-6482500d54eea

தமிழில் ஆக்கம்: குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here