ந்தியா 2028க்குள் உலகின் மூன்றாவதுப் பெரிய பொருளாதாரமாக வேகமாக வளரும் என்கிறார் மோடி. தற்போது ஐந்து மாநிலத் தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரங்களில் வழக்கம் போலவே வாய்ச்சவடால்களை அடித்து வருகிறார். சமீபத்தில் சத்தீஸ்கரில் நடந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் 80 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கும் (கொரோனா ஊரடங்கு காலத்தில் தொடங்கிய) திட்டத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பதாக அறிவித்தார். “இது இந்திய மக்களுக்கு மோடியின் உத்தரவாதம்” எனப் பெருமை பீற்றிக் கொண்டார்.

மேலும், தான் மூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்றால் இந்தியா உலகின் மூன்றாவது பெரியப் பொருளாதாரமாக மாறும் என்றும் உருட்டியுள்ளார். ஏற்கனவே இரண்டு முறை இதே போல அள்ளிவிட்டு ஆட்சியைப் பிடித்து பிரதமராக இருந்து என்ன சாதித்தார் என்பதைப் பேசாமல் மூன்றாவது முறை பொறுப்பேற்றால் இந்தியாவில் பொற்கால ஆட்சி நடக்கும் என்பதாக மறுபடியும் கதை விடுகிறார்.

முரண்பாடுகளின் மொத்த உருவம்தான் மோடி!

வேகமாக முன்னேறி வரும் இந்தியா அமிர்த காலத்தில் நுழைவதாக மோடி பேசி வருகிறார். இந்த நிலையில் உலகப் பட்டினிக் குறியீட்டில் இந்தியா மோசமான நிலையை எட்டிப் பிடித்தது ஏன்? 125 நாடுகளின் பட்டியலில் ஏற்கனவே இருந்ததை விட 4 இடங்கள் சரிந்து 111 வது இடத்தை அடைந்தது ஏன்?

இதையும் படியுங்கள்: உலகப்பட்டினி குறியீட்டில்  ‘முன்னேறிய’ இந்தியா!

இந்த அறிக்கையை ஏற்காத மோடி அரசு, பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் எதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இலவசமாக 80 கோடி மக்களுக்கு உணவு தானியத்தை வழங்கப் போகிறது. ஒருபுறம் பசிக் குறியீட்டு அறிக்கையை ஏற்க மறுக்கும் மோடி அரசு, மறுபுறம் இலவச உணவு தானியத் திட்டத்தை நீட்டிப்பதன் மூலம் அந்த அறிக்கையை மறைமுகமாக ஒப்புக் கொள்ளத்தானே செய்கிறது.

மோடி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் திட்டவட்டமாக நிராகரித்த மற்றொரு திட்டம்தான் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டமாகும். உண்மையான பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு மற்றும் வருமானத்தை உருவாக்குவதில் காங்கிரஸ் கட்சியினுடைய தோல்வியின் நினைவுச் சின்னமாக இந்தத் திட்டத்தைக் கருத வேண்டும் என்றார் மோடி.

ஆனால் இன்றைக்கு இந்தத் திட்டத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில் 93 % தொகையானது, நிதியாண்டின் முதல் 6 மாதங்களிலேயே செலவிடப்படுகிறது. இது உண்மையிலேயே தேவையை அடிப்படையாகக் கொண்ட திட்டம் என்பதால், இதற்கு ஒதுக்கப்படும் 60,000 கோடி என்பது போதுமான தொகை அல்ல என்பதும் நிரூபணமாகிறது. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் இது போன்ற அப்பட்டமான முரண்பாடுகளை அடுத்தடுத்து மோடி அரசு சந்தித்துக் கொண்டுதான் உள்ளது.

பத்து வருட பிஜேபி ஆட்சியில் “மோடினோமிக்ஸ்” எதை சாதித்தது?

நாட்டில் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, சேமிப்பு, தனியார் முதலீடு, அந்நிய முதலீடு, ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் தனிநபர் வருமான அதிகரிப்பு போன்றவற்றில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்திக் காட்ட 10 ஆண்டு காலம் என்பது அதிகப்படியானது. ஆனால் இவை அனைத்திலும் மோடி அரசின் செயல் திறன் மிக மோசமாகவே உள்ளது. ஆனால் வாய்ச்சவடால் மோடியும் அவருக்கு ஆதரவான வெகுஜன மற்றும் சமூக ஊடகங்களும் உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து புளுகித் தள்ளுகின்றனர்.

இத்தகையப் பொய்மைகளை அரசின் புள்ளியியல் துறையே வெளியிட்ட தொழிலாளர் கணக்கெடுப்பு அறிக்கை அம்பலப்படுத்திக் காட்டுகிறது. ஜூலை 2022 முதல் ஜூலை 2023 வரையிலான ஓராண்டு காலகட்டத்தில், சுய தொழில் செய்பவர்களின் எண்ணிக்கை 58 சதவீதமாக அதிகரித்துள்ளது. இவர்களில் பெரும்பாலோர் சிறு விற்பனையாளர்கள் மற்றும் தனிப்பட்ட சேவை வழங்குபவர்களாக உள்ளனர்.

ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் எங்கே?

உற்பத்தித் துறைகளில் தரமான வேலை வாய்ப்பை உருவாக்கத் தவறுவதாலேயே, சுயதொழில் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. சுய தொழிலில் ஈடுபடுபவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர், குடும்பங்கள் நடத்தும் சிறு தொழில்களில் சம்பளம் பெறாத தொழிலாளர்களாகவே உள்ளனர். சுய தொழில் செய்பவர்களும், ஊதியம் பெறாத தொழிலாளர்களும் கடந்த ஐந்து ஆண்டுகளில், அதிலும் குறிப்பாக பண மதிப்பிழப்பு மற்றும் கொரோனா தொற்றுக்குப் பிறகு அதிகரித்துள்ளனர்.

பொருளாதார வல்லுநர் சந்தோஷ் மெக்ரோத்ராவின் கூற்றுப்படி, சுய தொழில் பிரிவில் ஊதியம் பெறாத தொழிலாளர்களின் எண்ணிக்கை 2017 -18 ல் சுமார் 4 கோடியில் இருந்து 2022-23 ல் சுமார் 9.5 கோடியாக அதிகரித்துள்ளது. இன்று 92 நாடுகளில் பின்பற்றப்படும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) பரிந்துரையின்படி, ஊதியம் பெறாத இத்தகையத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றவர்களாக கருதப்படவே முடியாது.

மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரி மாத வருமானம் 20 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது. இது பொருளாதாரக் கட்டமைப்பில் பெரும் பலவீனமாக இப்போது வெளிப்பட்டுள்ளது என்கிறார் அவர். சுயதொழில் புரிபவர்கள் மற்றும் நிரந்தரமற்ற தொழிலாளர்களின்(CL) ஊதிய விகிதங்களும் பெருமளவு குறைந்துதான் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரி ஊதியத்தில் அதிகரிப்பு இல்லாதது வேலை வாய்ப்பின் மோசமான தரத்தை தெளிவாகப் பிரதிபலிக்கிறது.

கட்டுமானத் தொழில் செய்பவர்களிடம் அல்லது ஓலா, ஊபர் போன்றவற்றில் சுய தொழில் புரியும் டிரைவர்களிடம் கேட்டால், வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில் ஊதியத்தில் தேக்க நிலை உள்ளதாக தெரிவிப்பார்கள். இப்படியாக ஊதியம் உயராமல் இருப்பதால் வாங்கும் சக்தியும் குறைகிறது. ஹிந்துஸ்தான் லீவர், பஜாஜ் ஆட்டோ போன்ற நுகர்வுப் பொருள் விற்பனை நிறுவனங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில் இது கடுமையாக எதிரொலிக்கிறது.

இதையும் படியுங்கள்: சமூக பாதுகாப்பற்ற கிக் தொழிலாளர் முறை: வளர்ந்து வரும் பேரபாயம்!

பஜாஜ் ஆட்டோ போன்ற இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த விற்பனையை விட இன்று 30 – 40 சதம் குறைவாக விற்பனையாவதாக தெரிவிப்பது முன்னெப்போதும் இல்லாத ஒன்று. அதே சமயம் ஆடம்பரப் பிரிவுகளில் நகைகள், கார்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், விமானப் பயணம் போன்றவை அதிகப்படியான நுகர்வைப் பெறுகின்றன. நடுத்தர வர்க்க பிரிவினரில் குறைவான ஊதியம் பெறுபவர்களின் நுகர்வானது முன் எப்போதையும் விடக் குறைந்துள்ளது. தொழிலாளர் கணக்கெடுப்பில் ஊதியத் தேக்கமானது மக்கள் தொகையில் 60 – 70 % பேரை பாதித்துள்ளது.

மோடியின் அமிர்த காலம் யாருக்கானது?

இந்த நிலைமையில்தான் பிரதமர் மோடி, இந்தியா “அமிர்த காலம்” எனும் பொற்காலத்தில் நுழைவதாக கூச்சமே இல்லாமல் புளுகித் திரிகிறார். மிகவும் எளிய, பொதுவான மற்றும் உணர்வுபூர்வமான ஒரு கேள்வியாக அமிர்த காலத்தில் 80 கோடி மக்களால் உணவு தானியத்தையே பெற முடியாத நிலை இருப்பது ஏன் என்று மோடியைத்தான் கேட்க வேண்டும்.

அவர் கூறும் அமிர்த காலம் என்பது உண்மையில் அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கும், அதன் மூலம் ஆதாயம் அடையும் மோடி, அமித்ஷா கும்பலுக்கும் தான் இருக்கப் போகிறது. பெருவாரியான மக்களுக்கானதாக இதை மாற்ற வேண்டுமானால் இந்தக் கார்ப்பரேட் – காவி பாசிசக் கும்பலின் கொட்டத்தை அடக்குவதைத் தவிர வேறு வழியில்லை.

செய்தி மூலம்:
https://thewire.in/economy/modi-amrit-kaal-hunger-unemployment

தமிழில் ஆக்கம்: குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here