• காஸாவில் உள்ள ஒரு மருத்துவரின் குரல் குறிப்புக்காகக் காத்திருக்கிறது

கடந்த செவ்வாய் (நவம்பர் 7) அன்று, எகிப்த் தலைநகரான கெய்ரோவிலிருந்து ஒரு நார்வே மருத்துவர் எனக்கு வாட்ஸ்அப் செய்தி அனுப்பினார். அதில், அவரது சிறந்த மருத்துவ மாணவர்களில் ஒருவரான மைசரா அல்ரேயஸ், காசாவில் உள்ள அவரது வீட்டை இஸ்ரேலியப் படைகள் குண்டுவீசித் தாக்கியுள்ளனர். பின்னர், அவரையும் கொன்றுள்ளனர்.  அல்ரேயஸ் மட்டுமல்லாமல் அவரது பெற்றோர், இரண்டு சகோதரிகள், அவர்களில் மூன்று குழந்தைகளும் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

“குடும்பத்தின்மீது அரவணைப்பு மற்றும் அக்கறை கொண்ட, வேறு எந்த குற்றமும் செய்யாத அந்த 8 பேரையும் இஸ்ரேலிய படையினர் படுகொலை செய்தனர்” என்று டாக்டர் மேட்ஸ் கில்பர்ட் எனக்கு எழுதினார்.  இன அழிப்பு பார்வையாளரான மேட்ஸ் கில்பர்ட், கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து என்னோடு தொடர்பில் இருக்கிறார்.  இந்த இஸ்ரேலின் தாக்குதலை பார்த்ததிலிருந்து என்னைப் போலவே அவரும் உதவியற்றவராக உணர்கிறார்.

எனது நெட்வொர்க்கில் காஸாவைச் சேர்ந்த மருத்துவர் மேட்ஸ் கில்பர்ட் மட்டுல்ல! ஒவ்வொரு நாளும், காசாவில் உள்ள ஒரு மருத்துவர் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகத்தின் தரவை என்னுடன் பகிர்ந்து கொள்கின்றனர். அந்த புள்ளிவிவரங்களின்படி, அக்டோபர் 7 முதல் நவம்பர் 7 வரை காசா பகுதியில் 10,328 பேர் இறந்துள்ளனர். அதாவது ஒரு மணி நேரத்திற்கு 14 பேர் கொல்லப்படுகின்றனர். மேலும் 2,800 பேர் காணாமல் போயுள்ளனர். பெரும்பாலானோர் வெடித்து சிதறிய கட்டிடங்களின் இடிபாடுகளுக்களில் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.

காஸாவைச் சேர்ந்த மருத்துவர் மேட்ஸ் கில்பர்ட்

காஸாவில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க நார்வே அமைச்சகத்தால் மருத்துவக் குழு ஒன்று அனுப்பப்பட்டது. அதில் மேட்ஸ் கில்பர்ட் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் மூன்று வாரங்களாக, அவர் எகிப்துக்கான ரஃபா கிராசிங் திறக்கும் வரை காத்திருந்தார். காசாவை உலகின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே புள்ளி இதுதான். (ரஃபா கிராசிங் பாயின்ட் என்பது எகிப்துக்கும் காசா பகுதிக்கும் இடையே உள்ள ஒரே குறுக்கு முனையாகும். இது காசா-எகிப்து எல்லையில் அமைந்துள்ளது) வரையறுக்கப்பட்ட உதவிகளை அனுமதிப்பதைத் தவிர மற்ற எதற்கும் திறக்க இயலாது என ரஃபா கிராசிங் மூடப்பட்டிருந்தது.

மருத்துவர் மேட்ஸ் கில்பர்ட் எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் 300 கி.மீ தொலைவில் காத்திருக்கிறார். அப்போது ​​காசாவில் உள்ள அவரது சகாக்கள் ஒவ்வொரு மணி நேரமும் துயர செய்திகளை அவருக்கு அனுப்புகிறார்கள்.

அவ்வப்போது, அவரிடமிருந்து எனக்கு ஒரு செய்தி வரும்.  அன்று அவருடைய சக மருத்துவர் ஒருவரின் மரணம் பற்றியான செய்தி வந்தது. லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் முன்னாள் மாணவரான மைசரா அல்ரேயஸ் சமீபத்திய இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தார்.  இடிபாடுகளிலிருந்து, அல்ரையஸ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் உடல்களைப் பிரித்தெடுக்க முயன்றபோது அவரது இரண்டு சகோதரர்களும் இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இவையாவும் துன்பகரமான நிமிடங்கள்.  ஆம்! காஸாவுக்குள் எந்த நாட்டை சேர்ந்தவர்களும் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. என்னைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கு, மோதல்களின் வெகு தொலைவிலிருந்து வரும் வாட்ஸ்அப் மற்றும் சிக்னல் (வாட்ஸ் அப் போன்ற ஒரு செயலி) மட்டுமே சாத்தியமான தொடர்பு முறைகள்.

ஆனால், காஸாவில் வெளிவரும் கொடூரமான வீடியோக்கள், அழும் குழந்தைகளின் முகங்கள் மற்றும் பசியுள்ள குடிமக்களின் முழுமையான விரக்தியைப் பார்க்கும்போது எனது சமூக ஊடகங்களை மூடவும், அதிலிருந்து ஓய்வு எடுக்கவும் என்னை கட்டாயப்படுத்துகின்றன.  இதுபோன்ற நேரங்களில் நம்மைத் தூர விலக்கிக் கொள்ள நமக்கு சுதந்திரம் உண்டு. ஆனால், காஸாவில் இருப்பவர்களுக்கு இல்லை!

மருத்துவமனை வளாகத்திற்குள் ஒரு புதிய சூழல் உருவாகியுள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதை “WCNSF” (Wounded Child No Surviving Family) என்கின்றனர். அதாவது, காயமடைந்த குழந்தைகளின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இறந்துவிட்டதால் மருத்துவமனைகளில் திரும்புகின்றனர் என்பதே அந்த செய்தி.

லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் முன்னாள் மாணவரான மைசரா அல்ரேயஸ் சமீபத்திய இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தார்

கடந்த வாரம், காஸாவின் மிகப் பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா -வின் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியமர்த்தப்பட்ட மருத்துவரான முகமது குனைம் பணியில் இருக்கும்போது பதிவு செய்யும் ஆடியோ செய்திகள் மூலம் என்னுடன் தொடர்பு கொண்டு வருகிறார்.  அவரிடம் மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களின் பகல் மற்றும் இரவு பணி சூழல் பற்றி கேட்டறிந்தேன்.

அதில் அவர் கூறியதாவது, நான் தங்களோடு உரையாடும் ஒவ்வொரு முறையும் அடிப்படையான மருத்துவப் பொருட்கள், எரிபொருள் மற்றும் தண்ணீர் இல்லாததால், ஒவ்வொரு நிமிடமும் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று அவரது அவநம்பிக்கையான குரல் நமக்கு தெரிவிக்கிறது. மேலும், “நான் கடந்த 20 நாட்களாக மருத்துவமனையை விட்டு வெளியேறவில்லை,” என்று அவர் கடந்த வாரம் ஒரு குரல் குறிப்பில் என்னிடம் கூறினார்.

இதையும் படிக்க: ‘இஸ்ரேலி’ல் ஜனநாயகத்தைக் காப்பாற்றவே முடியாது’ ஏன் ? அப்படி ஒரு ஜனநாயகம் அங்கே என்றுமே இருந்ததில்லை!

அதுமட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமாகி வருகிறது! நோயாளிகளுக்கு படுக்கை இல்லாததால் தரையில் அமர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம்; பாரிய உயிர்சேதம் உள்ளது; மருத்துவமனை முழுக்க இப்போது கூட்டம் நிரம்பி வழிகிறது; இங்கு காயமடைந்தவர்கள், பொதுமக்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் மருத்துவமனையிலேயே தங்குவதற்கு பாதுகாப்பான இடத்தைக் கண்டுபிடிக்க திண்டாடி வருகின்றனர். எரிபொருள் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை இன்றளவும் உள்ளது. முன்னதாக, 36 மணி நேரத்திற்கும் மேலாக எங்களுக்கு குடிநீர் இல்லை. இப்போது நாம் துவைப்பதற்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தும் தண்ணீர் உப்பு நீராக உள்ளது. மனித பயன்பாட்டிற்கு ஏற்றதாக இல்லை. அதே தண்ணீரைதான் நாங்கள் குனைம் நோயாளிகளுக்கும் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். ஆக்சிஜன் பம்புகள், ஆக்சிஜன் நிலையங்கள், மயக்க மருந்து கூட இல்லாமல் மருத்துவமனை சிரமப்பட்டு வருகிறதுஎன்றார்.

மற்றொரு குரல் பதிவில் மருத்துவர் குனைம் என்னிடம் இவ்வாராக கூறினார். நாங்கள் சிகிச்சை அளிக்கும் வெகுஜன மக்களின் உயிரிழப்புகள் நம்பமுடியாதவை. இதுபோன்ற உயிரிழப்புகளை இதற்குமுன் நான் கண்டதில்லை. நமக்குத் தேவையான பல மருத்துவ கருவிகள் இப்போது கிடைக்கவில்லை. மக்கள் கடுமையான வலியுடன், தலை மற்றும் வயிற்று பகுதி துண்ட சிதைக்கப்பட்டு எங்களிடம் வருகிறார்கள்இன்னும் ஒருசிலர் உடல்பாகங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் வருகிறார்கள். மேலும் இங்கு மயக்க மருந்து கூட கிடையாது. அதை உங்களால் கற்பனை கூட செய்ய முடியாது.  ஆம்! நாங்கள் மயக்க மருந்து இல்லாமல் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்கிறோம்.” என்றார்.

மருத்துவமனையான அல்-ஷிஃபா

எனக்கு குரல் பதிவு செய்த மருத்துவர் குனைம் பற்றியும், அவரது குடும்பத்தினர் பற்றியும், அவர்கள் எங்கே இருக்கிறார்கள், தாக்குதலுக்குப் பிறகு குடும்பத்தை சந்தித்தீர்களா? என்று என்னிடம் சொல்லும்படி கேட்டிருந்தேன்.  ஆனால், ஒரு வார காலமாகியும் அவர் பதிலளிக்கவில்லை.  அவர் நோயாளிகளுடன் பிஸியாக இருப்பதாலும், பதிலளிக்க நேரமில்லாததாலும் அவர் மௌனமாக இருக்கிறார் என நான் தீவிரமாக நம்புகிறேன்.

உலக சுகாதார அமைப்பும், ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி முகமையும் நவம்பர் 8 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டன.  அதில், மருத்துவப் பொருட்கள் அல் ஷிஃபா மருத்துவமனைக்கு வந்துவிட்டன. ஆனால், அவை “காசா பகுதியில் உள்ள மக்களின் தேவைகளுக்கு போதுமானதாக இல்லை” என்று கூறியது.  மருத்துவமனையில் உள்ள மருத்துவ நிலைமைகள் “பேரழிவு தரக்கூடியவை” என்று WHO குறிப்பிட்டது.

ஒரு அழைப்பின் போது மருத்துவர் குனைம் இவ்வாராக கூறுகிறார்.  அதாவது, மிருகத்தனமான சக்தியிடம், மனிதநேயம் எதிர் பார்க்க முடியாது என்ற நிலைக்கு நாம் வந்துவிட்டோம்! காயமடைந்த நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதில் நாம் அனைவரும் தோல்வியடைந்துவிட்டோம்!  இது “ஒரு இனப்படுகொலை”! என்று அவர் நமக்கு தெளிவுப்படுத்துகிறார்.

அதுமட்டுமின்றி, காஸா மக்கள் மீதான தாக்குதலை உலகளாவிய மக்களின் கவனத்திற்கு நாம் கொண்டு செல்ல வேண்டும்.  இதன்மூலம், உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகள் உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க முன்வருவார்கள்.

மொழியாக்கம்: சிறகினி

https://scroll.in/article/1058981/waiting-for-a-voice-note-from-a-doctor-in-gaza

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here