த்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி ஞாயிற்றுக்கிழமை – தீபாவளி நாளில் – பிரம்மகால்-போல்கானின் சில்க்யாரா பகுதியில் தொடங்கும் இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் முன்னால் இடிந்து விழுந்தது. சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இமயமலையில் அதிகரிக்கும் உள்கட்டமைப்பு பணிகள்!

உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள யமுனோத்ரியின் சில்கயாரா மற்றும் போல்கான் கிராமங்களுக்கு இடையே 4.5 கிமீ நீளமுள்ள சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருகிறது. இது முடிந்ததும், உத்தர்காசி மற்றும் யமுனோத்ரி இடையேயான பயண தூரம் 26 கிமீ குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சார் தாம் சாலை திட்டம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த சுரங்கப்பாதை, சில்க்யாரா மற்றும் தண்டல்கானை இணைக்கிறது. கங்கோத்ரி யமுனோத்ரி உள்ளிட்ட சில புனித தளங்கள் மற்றும் சீனாவுடனான எல்லைப் பகுதிகளை விரைவாக சென்றடைவதும்தான்  சார்தாம் சாலை திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஏற்கனவே மேக வெடிப்பு உள்ளிட்ட இயற்கை சீற்றத்தினால் பெரும் நிலச்சரிவை சந்தித்துள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் இத்தகைய திட்டங்களை தொடருவது பேரழிவையே கொண்டு வரும்.

மலைச்சரிவுகளில் சாலைகள் அமைத்தாலே அவை சரிந்து விழுந்து விடும் நிலையில், உறுதியற்ற இமய மலைகளை குடைந்து சுரங்கம் அமைத்தால் அது எப்படி நிற்கும்? இது தெரிந்துமே ஒன்றிய அரசு இந்த சாலை திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது என்றால் அதன் நோக்கம் என்ன? உத்தரகாண்ட் மக்களின் அடிப்படைத் தேவைகளையோ, ஆன்மிக பயணம் வருபவர்களின் தேவைகளையோ பூர்த்தி செய்வது மட்டுமே அல்ல என்பது தான்.

அதாவது, இந்துக்களின் புனித தலங்களை மையப்படுத்தி சுற்றுலாக்களை ஊக்குவித்து இந்து மத வெறியை பரப்புவது ஒரு நோக்கம் என்றால், மற்றொரு அம்சம் சீனாவுடனான யுத்தத்திற்கு துருப்புகளை அனுப்புவதற்கு பொருத்தமாக சாலை வசதிகளை எல்லையை நோக்கி விரிவாக்கி நவீனப்படுத்துவது என்பதும் தான்.

இதற்காகத்தான் தீபாவளி பண்டிகை அன்று கூட விடுமுறை இல்லாமல் தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் வேலை செய்ய வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 40 பேர் சுரங்க விபத்தில் மாட்டிக் கொண்டு மீட்கப்படுவோமா இல்லை சமாதி அடைவோமா என சாவை எதிர்பார்த்து கிடக்கின்றனர்.

சிக்கியுள்ள தொழிலாளர்களின் பட்டியலின்படி, 15 பேர் ஜார்கண்ட், 8 பேர் உத்தரப் பிரதேசம், 5 பேர் ஒடிசா, 4 பேர் பீகாரில் 4 பேர், மேற்கு வங்கத்தில் 3 பேர், உத்தரகண்ட் மற்றும் அசாமில் இருந்து தலா இருவர், ஹிமாச்சலத்தைச் சேர்ந்த ஒருவர்.(பிடிஐ)

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்!

உத்தரகாண்டில், நிலச்சரிவுகளுக்கு ஆளாகும் மாநிலத்தில், விரிவான கட்டுமானத்தின் பேரழிவுத் தாக்கம் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அறிவியல் சமூகம் மத்தியில் மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட அனுபவம் வாய்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ரவி சோப்ரா தலைமையிலான நிபுணர் குழு, இமயமலை விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களுடன் இணைந்து, சில ஆண்டுகளுக்கு முன்பு திட்டப் பகுதியில் தங்கள் கணக்கெடுப்பின் போது இந்த பிரச்சினைகள் குறித்து எச்சரிக்கை எழுப்பியது.

இந்திய அரசின் ராணுவ நோக்கங்களுடன் கொண்ட இந்த சாலை திட்டம் ஆனது, ஆய்வாளர்களின் எச்சரிக்கையை தெரிந்தே புறந்தள்ளி உள்ளது. இப்பொழுது கண்துடைப்புக்கான காட்சிகள் அரங்கேறுகின்றன.

சில்க்யாரா சுரங்கப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கான காரணங்களை ஆய்வு செய்யவும், ஆய்வு செய்யவும் உத்தரகாண்ட் நிலச்சரிவு தணிப்பு மற்றும் மேலாண்மை மையத்தின் இயக்குநர் தலைமையில் உத்தரகாண்ட் அரசு அமைத்த குழுவில் உள்ள நிபுணர்கள் குழு ஆய்வு செய்து விசாரணையைத் தொடங்கினர். இந்த குழு சுரங்கப்பாதை மற்றும் அதற்கு மேலே உள்ள மலையை ஆய்வு செய்து வருகிறது.

முடுக்கி விடப்பட்டுள்ள மீட்புப் பணி!

உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி டேராடூனில்  சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையின் நிலையை ஆய்வு செய்தார்.

தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் (ITBP) மற்றும் எல்லைச் சாலைகள் அமைப்பு (BRO) ஆகிய 150க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை அடைய கிட்டத்தட்ட 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர்.

இடிந்து விழுந்த கட்டுமான சுரங்கப்பாதையின் இடிபாடுகளுக்குள் அகலமான இரும்புக் குழாய்களைச் செருகும் பணியை மீட்புப் பணியாளர்கள் செவ்வாயன்று தொடங்கினர். ‘ஆஜர் இயந்திரம்’ உதவியுடன் குழாய்களை செருகுவதற்கான துளையிடும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக உத்தரகாசி மாவட்ட நீதிபதி அபிஷேக் ரூஹெலா தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: பேரழிவில் இமாச்சலப் பிரதேசம்: கனமழையால் 80 பேருக்கு மேல் பலி!

900 மிமீ விட்டம் கொண்ட உலோகக் குழாய்கள் திங்கள்கிழமை நள்ளிரவு சில்க்யாரா சுரங்கப்பாதை தளத்தை அடைந்தன.  குழாய்கள் மூலம் ஆக்ஸிஜனையும், உணவையும் சுரங்கத்திற்குள் அனுப்பி வருகின்றனர். காப்பாற்றி விடுவோம் என சுரங்கத்தின் உள்ளே இருப்பவர்களுக்கு நம்பிக்கையூட்டியும் வருகின்றனர்.

ஏகாதிபத்திய சேவைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!

மோடி அரசுக்கு சீனாவுடன் வம்புக்கு போக வேண்டிய தேவை உள்ளது. அது அமெரிக்க எஜமானனின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு செய்யும் வேலையாகவும் உள்ளது.

இதற்காகத்தான் மக்களின் வரிப்பணத்தை வாரி இறைத்து எல்லை பகுதிகளை நோக்கிய விரைவுச் சாலைகள் அமைக்கப்படுகின்றன. அதற்கான முயற்சியில் நம் மக்கள் உயிரையும் பணயம் வைக்கின்றது மோடி அரசு.

உலக மேலாதிக்க வெறிபிடித்தலையும் ஏகாதிபத்தியங்களுக்காக நாம் ஏன் பலியாக வேண்டும்?

இமயமலையின் உறுதியற்ற பாறைகளில் புதிய கட்டுமானங்களை எழுப்புவதை தடுத்து நிறுத்துவோம்.

புனித பயணமாக வரும் பக்தர்கள் நவீன கட்டுமானங்களை புறந்தள்ளி, நடைபாதை போன்ற இயற்கையை குலைக்காத வழிகளில் வந்து போக ஏற்பாடு செய்ய வேண்டும்.

நிகழ்கால, எதிர்கால துயரங்களான மேக வெடிப்பு, நிலச்சரிவு, நிலநடுக்கம் போன்றவைகளால் ஏற்படும் உயிர்பலிகளை முடிந்தவரை தவிர்ப்போம்.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here