ன்போசிஸ் நாராயணமூர்த்தி 70 மணி நேரம்  தான் வாரத்திற்கு வேலை பார்க்க சொன்னார். ஆனால் இந்தியாவின் பிரதமர் மோடியோ ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வேலைப் பார்க்கிறார். நாராயணமூர்த்தியின் Inspiration  ‘மோடிஜி’ தான்.

கடந்த ஜூலை மாதம் பாரீஸ் சென்ற மோடியிடம் ஒருநாளில் 20 மணி நேரம் வேலை செய்வதன் ரகசியம் என்ன? என்று அவரது ரசிகர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு சிரித்துக் கொண்டே சென்றார் மோடி என்று times of India புளங்காகிதம் அடைந்துள்ளது. ஆனால் மோடியின்  மைண்ட் வாய்சோ ‘இன்னுமாடா இந்த உலகம் நம்மள நம்புது’ என்பதாக தான் இருக்கும்.

மோடி ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே தூங்குகிறார். ஒவ்வொரு நிமிடமும் உழைக்கிறார். தூங்காமல் இருக்கும் வித்தையை கற்கிறார் என மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் தெரிவித்து இருக்கிறார்.

இதெல்லாம் உண்மையா என்று நீங்கள் கேட்கக் கூடாது. தவறி கேட்டீர்கள் என்றால் தேசதுரோகி பட்டத்தை சுமக்கக் கூடும். பாகிஸ்தானுக்கு போ என்ற கூச்சல் எழும். இப்படி யார் சொல்லுவார்கள் என்றால் மோடி, பாஜக சொல்லும் அத்தனை பொய்களையும் மறுப்பு தெரிவிக்காமல் நம்பும் மோடி ரசிகர்கள்.

இப்படி இந்திய மக்களுக்காக அள்ளும் பகலும் அயராமல் உழைக்கும் மோடியை நீங்கள் எப்படி பாசிஸ்ட் என்று அழைக்கலாம். என்று கேள்வி எழுப்புகிறது அவர்களது அடிவருடி ரசிக கும்பல்.

அவர்களது கேள்வி நியாயம் தானே?!

2014-ல் மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு ‘நன்றிக்கடனை’ தீர்க்க அதானியுடன் ஆஸ்திரேலியா புறப்பட்டார் மோடி. ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கம் வாங்குவதற்காக அதானிக்கு 6800 கோடி கடனும் வழங்கப்பட்டது. (கடன் திரும்பி வந்ததா என்றெல்லாம் கேட்கக்கூடாது). அப்போது உழைக்க ஆரம்பித்த நரேந்திர மோடி இன்று வரை ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறார். பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளிக்க கூட நேரம் இல்லையென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!.

மணிப்பூரே பற்றி எரிந்துக் கொண்டிருக்கும் போது மோடி படு பிஸியாக இருந்தார். மே மாதத்தில் ஜப்பான், பப்புவா நியு கினியா, ஆஸ்திரேலியா சென்றிருந்த மோடி, ஜூன் மாதத்தில் அமெரிக்கா, எகிப்து ஜூலை மாதத்தில் பிரான்ஸ், UAE  என நாடுநாடாக சுற்றிக் கொண்டிருந்த மோடி மணிப்பூர் மக்களின் பிரச்சினையை கண்டுக்கொள்ளவில்லை என்று சொல்வது நியாயமா?

மோடி அரசின் உளவுத்துறையும் மீறி 2 பெண்களின் நிர்வாண ஊர்வல வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதால், அத்துனை வேலைகளுக்கும் இடையில் அந்த வீடியோவுக்கு மட்டும் பதிலளிக்கவே ,மோடிக்கு நேரமிருந்தது. மற்ற படி மணிப்பூர் கலவரம் குறித்து எடப்பாடி போல் டிவியில் பார்த்து தெரிந்துக் கொள்ளக் கூட நேரமிருந்திருக்காது.

வந்தேபாரத் ரயில்களை துவங்கி வைக்கவும், நடிகர், நடிகைகளுடன் போஸ் கொடுக்கவும், மேக்கப் போடுவதற்கும், ஜி-20 மாநாட்டிற்காக டெல்லியை சுற்றியுள்ள ஏழை மக்களின் குடிசைகள் வெளிநாட்டு தலைவர்கள் கண்ணில் படாமல் இருக்க துணிகளை வைத்து மூடுகிறார்களா என்பதை கண்காணிக்கவும், மன்கிபாத்தில் உரையாற்றவும், கோவில்களுக்கு செல்லவுமே மோடிக்கு நேரம் சரியாக இருக்கையில், மாட்டிறைச்சிக்காக இஸ்லாமிய இளைஞர்கள் கொல்லப்படுவதை பார்க்கவோ அல்லது கண்டிக்கவோ நேரம் எப்படி இருக்கும். இது இந்துராஷ்டிர அஜண்டாவின் அங்கம் தானே!. இது அவ்வளவு முக்கியமான விசயமும் கிடையாது என்று மோடிக்கும் தெரியும்.

உத்தரகாண்டில் 41 தொழிலாளர்கள் நெடுஞ்சாலை பணிக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தில் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சூழலில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒய்யாரமாக மேக்கப் செய்து கலந்துக் கொண்ட மோடி, இந்திய அணி தோற்ற பிறகு வீரர்களின் அறைக்கே சென்று ஆறுதல் சொன்ன மோடிக்கு, சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட வீரர்கள் பற்றி பேசவோ அல்லது அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் நம்பிக்கை கொடுக்கவோ நேரமில்லை.

விமானப்படை விமானத்தில் ஏறி போட்டோ ஷூட் நடத்தும் போதுக் கூட அந்த வழியாக பறக்க நேரமில்லை. அந்த அளவுக்கு மோடிஜி ரொம்ப பிஸி!

'மோடிஜி' ரொம்ப பிஸி!

சரி பிறகாவது இது குறித்து பேசுவார் என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டிருந்த நிலையில் 5 மாநில தேர்தல் பிரச்சார வேலைகளில் மீண்டும் பிஸியாகி விட்டார். தற்போது ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலில் தரிசனம் செய்வதிலும், போட்டோ சூட்டிலும் பிஸியாக உள்ளார். 140 கோடி மக்களுக்கும் பிரார்த்தனை செய்வதற்காக திருப்பதி வந்ததாக கூறுகிறார் மோடி. இதுவும் தெலுங்கானா தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதி தான் என நமக்கு தெரியவா போகிறது.

மணிப்பூரை ஒட்டிய மிசோரம் மாநிலத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அங்குள்ள பாஜகவினரோ இந்த பக்கமே வந்துவிட வேண்டாம் என்று மோடியை கண்டிப்பாக சொல்லிவிட்டார்கள்.


இதையும் படியுங்கள்:மணிப்பூர் எரிகிறது! மௌனசாமிக் கும்பலை இனியும் நம்பவேண்டுமா?


ஒருநாளைக்கு 20 மணி நேரம் வேலை செய்யும் மோடி மணிப்பூரை மறந்திருப்பார் அதுக்காக இப்படியா சொல்வது. ஒருவேளை வந்து பிரச்சாரம் செய்தால் கிடைக்கும் ஓட்டுகளும் கிடைக்காமல் போகலாம் என்ற ஐயமே இதற்கு காரணம். ஒரு மாநிலமே மோடியை புறக்கணித்திருக்கிறது.

மோடியை பொறுத்தவரையில் இந்தியா என்றாலே அதிகார வர்க்க தரகு முதலாளிகளும், அவர்களின் அடிவருடிகளான சங்பரிவார் கும்பலும் தான். அவர்களுக்காகவே ஊர் ஊராக, நாடு நாடாக உலகத்தை சுற்றி வருகிறார். ஒரு வழியாக அதானியை உலகப் பணக்கார வரிசையில் உயர்த்தி விட்டார். மக்களை தெருக்கோடிக்கு பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளி விட்டார். தொடர்ந்து கார்ப்பரேட்டுக்காக உழைத்து களைத்திருக்கும் மோடியை ஓய்வெடுக்க அனுப்புவதே மனிதத் தன்மை அதனை இந்திய மக்கள் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் செய்வார்கள்.

மீண்டும் மோடிஜியைத் தேடி களைப்படையாதீர்கள் தேர்தல் வரை அவர் ரொம்ப பிஸி!

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here