டந்த ஜூன் 3 – ம் தேதி பிரதமர் மோடி கோவா – மும்பை “வந்தே பாரத்” ரயிலைக் கொடியசைத்து தொடங்கி வைக்க இருந்தார். ஆனால் அதற்கு முந்தைய நாள் இரவில் ஒடிசாவின் பாலசோர் எனுமிடத்தில் மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய கோர விபத்து நிகழ்ந்தது. இந்திய ரயில்வேத் துறை வரலாற்றில் நடந்த மோசமான இந்த விபத்தில் கிட்டத்தட்ட 300 பேர் வரை உயிரிழந்தனர். 900-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தையடுத்து, ஜூன் மாத இறுதியில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. வழக்கம் போலவே சங்கிகளின் சமூக ஊடகங்கள், இதன் வேகம் மிக அதிகமானது எனவும், இது மோடி அரசின் மற்றுமொரு சாதனை என்றும் ஆரவாரம் செய்தன. ஆனால் வேகம் பெரிதாக அதிகரிக்கவில்லை. மாறாகக் கட்டணம்தான் விமானக் கட்டணத்தை விட அதிகமாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினர். அதிகரிக்கப்பட்ட கட்டணத்துடனான ரயிலை ஒரு பக்கம் இயக்குவதும், விபத்துகள் மறுபுறம் நடப்பதும்தான் மோடி அரசினுடைய ரயில்வேத் துறையின் இலட்சணமாக உள்ளது.

ரயில்வே துறையை நவீனப்படுத்துகிறோம் எனக் காரணம் காட்டி வந்தே பாரத் ரயிலை அறிமுகம் செய்கிறார்கள். ஆனால் பாதுகாப்பு, நேரம் தவறாமை, இருக்கைகள் கிடைப்பது மற்றும் வருவாய் ஈட்டுதல் போன்ற அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தாமல் புறக்கணித்ததால்தான் இத்தகைய கோர விபத்துகள் நடக்கின்றன.

தொடரும் நட்டமும், பாதுகாப்புக் குறைபாடுகளும்!

ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கை, ரயில்வேத் துறையானது 2021-22 ல் மிக மோசமான நட்டத்தை சந்தித்துள்ளதை தெரிவிக்கிறது. அதாவது 100 ரூபாய் வருமானத்துக்கு 107 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. 2016- 17 ல் இருந்தே கிட்டத்தட்ட இந்த நிலைமைதான் நீடிக்கிறது. போதுமான வருவாய் உபரியை உருவாக்குவதற்கு பதிலாக மிக மோசமான நட்டத்தை தொடர்ச்சியாக சந்தித்து வருகிறது.

வழக்கமாக சரக்கு(Goods) சேவைகள் மூலம் கிடைக்கும் லாபத்தை பயணிகள் சேவைகளுக்கு மானியம் வழங்க பயன்படுத்துவர். லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது இதை சரிவர மேற்கொண்டதன் விளைவாகத்தான் ரயில்வேத் துறை லாபமீட்டியது. அவரால் துறையை நவீனப்படுத்தவும் முடிந்தது.


இதையும் படிக்க: 

மூத்த குடிமக்களிடம் 1500 கோடி பறித்த ரயில்வே

ரயில் விபத்தும் சங்கிகளின் கலவர புத்தியும்!


ஆனால் பாஜக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பிறகு இரண்டு சேவைகளுமே கடும் நட்டத்தை சந்தித்து வருகிறது. எனவே வருவாய் பற்றாக்குறையும் மேலும் அதிகரிக்கிறது. ரயில்வே துறையில் முக்கியமான முதலீடுகளை செய்ய முடியாமல் போவதற்கு காரணம் வருவாய் உபரியை உருவாக்க இயலாததுதான் எனக் கூறப்படுகிறது.

விபத்துகளுக்குக் காரணம் பாதுகாப்புக்கு உரிய நிதி ஒதுக்காததே!

ரயில்வே பாதுகாப்புக்காக 2017 – 18 முதல் ஒதுக்கப்பட்ட 20 ஆயிரம் கோடி (அரசின் பட்ஜெட் மூலம் 15 ஆயிரம் கோடியும் துறையின் மூலம் 5,000 கோடியும்) ஆண்டுதோறும் செலவு செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. ஆனால் துறையின் மூலமாக ஐயாயிரம் கோடியை ஒதுக்க முடியாததால் இத்திட்டத்தின் இலக்கு நிறைவேற்ற முடியாமல் தடுமாறுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் துறை மூலமாக ஒதுக்க வேண்டிய 25 ஆயிரம் கோடிக்கு பதிலாக வெறும் 4,225 கோடி மட்டுமே ஒதுக்க முடிந்துள்ளது. இதே போல தேய்மான கையிருப்பு நிதியும் மோசமாகவே கையாளப்பட்டுள்ளது. 2017 முதல் 2023 வரையான ஆறு ஆண்டுகளில் இதற்காக துறையிலிருந்து 3440 கோடி ஒதுக்கப்பட்டது.

2013 -14 ஓராண்டு காலகட்டத்தில் இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 7900 கோடியாகும். ஆனால் மோடி ஆட்சியில் ஆறாண்டுகளுக்கு சேர்த்து அதில் பாதி அளவு நிதிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய தணிக்கையாளர் 2022 – ல் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் 2020 – 21ஆம் ஆண்டின் இறுதியில் தேய்மானக் கையிருப்பு நிதியிலிருந்து 94,873 கோடி மதிப்புள்ள பழைய இருப்புப் பாதைகள் மற்றும் பிற சாதனங்கள் மாற்றப்பட்டு இருக்க வேண்டும்.

இதில் இருப்புப் பாதைகள் சீரமைக்க மட்டும் 58,459 கோடி செலவிடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் வெறும் 671 கோடிதான் இதற்காக செலவிடப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு அரசின் வெள்ளை அறிக்கை ஆண்டுக்கு 4500 கிலோமீட்டர் பாதை புதுப்பிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு வரை குறைந்தபட்சம் ஒரு ஆண்டு கூட இது நிறைவேறவில்லை.

ரயில்வே அமைச்சகத்தின் பாதுகாப்பு அறிக்கையில் ரயில் விபத்துகளுக்கு 70% காரணமாக இருப்பது ரயில் தடம் புரள்வதுதுதான் என குறிப்பிட்டுள்ளது. எனவே ரயில் பாதை புதுப்பிப்பதில் அரசு காட்டும் அலட்சியமே பெரும்பான்மையான ரயில் விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றது.

குறுக்குவழியில் வருவாயைப் பெருக்கத் திட்டம்!

பண்டிகைக் காலங்களில் வழக்கமாக அதிகப் பயணிகள் பயணம் செய்வர் என்பதைக் கவனத்தில் கொண்டு கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்காததன் விளைவால் ரயில் நிலையங்களில் கடும் நெரிசலும், வன்முறையும் நிகழ்கின்றன. சமீபத்தில் சூரத்தில் நிகழ்ந்த நெரிசலில் சிக்கி மிதிபட்டு ஒருவர் இறந்ததும் மூன்று பேர் படுகாயமுற்றதும் இதற்கு சாட்சியாக உள்ளது.

வருவாயை பெருக்குவதற்கு குளிர்சாதன பெட்டிகளை அதிகரிக்கும் திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டிய வாரத்தில் பல சமூக ஊடகப் பயனர்கள் ரயில்களில் நெரிசல் மற்றும் இருக்கைகள் கிடைக்காதது பற்றி புகார் தெரிவித்தனர்.

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

அவர்களில் ஒருவர் இந்திய ரயில்வே சாதாரண படுக்கை வசதி மற்றும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, பதிலாக வருவாயை அதிகரிக்கும் நோக்குடன் குளிரூட்டப்பட்ட பெட்டிகளை சேர்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில்களில் வழக்கமான அளவில்தான் பெட்டிகள் உள்ளன எனப் புளுகியுள்ளார்.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஏசி அல்லாத பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக செய்திகள் வந்து கொண்டுதான் உள்ளன. ஏசி பெட்டிகளில் அதிகக் கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டி உள்ளதாக பலரும் புகார் தெரிவித்துள்ளனர். சமூக ஊடகத்தில் செய்தி வெளியிட்டவர் 12 ரயில்களில் இதுபோல ஏசி பெட்டிகள் அதிகப்படுத்தி, ஏசி அல்லாத பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார்.

ஆகஸ்ட் மாதம் இந்திய ரயில்வே துறை பொதுப் பெட்டிகளில் (Unreserved) கூட்ட நெரிசலை சமாளிக்க சில ஸ்லீப்பர் பெட்டிகளை பொதுப்பெட்டிகளாக மாற்றுமாறு மண்டல அதிகாரிகளை கேட்டுக்கொண்டது. ஜூலை மாதம் ரயில்வேயின் மூத்த அதிகாரி ஹிந்து பத்திரிகையிடம் கூறுகையில், ஏசி அல்லாத பெட்டிகளை குறைத்தது தவிர முழுமையாக பொதுப்பெட்டிகளுடன் இயங்கிய “ஜன் சதாரன்” ரயில்களை நட்டத்தில் இயங்குவதாகக் கூறி நிறுத்தியதும் கூட்ட நெரிசலுக்கான முக்கியக் காரணம் என தெரிவித்தார்.

மேலும் பல பயணிகள் ரயில்களை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றியக் கொடுமையும் நடந்துள்ளது. ஏற்கனவே உள்ள வழித்தட நெருக்கடியில் அதிக வேகத்தில் இயக்க முடியாது என்பது தெரிந்தும், குறித்த நேரத்தை கடைபிடிப்பது கடினம் என்பது தெரிந்தும் இப்படி மாற்றியுள்ளனர். ஒழுங்காக ஓட்டுவதற்கு பாதைகளே இன்றி அதிவேக ரயில்களை வடிவமைத்து என்ன பயன்?

பயணத்தில் பாதுகாப்பா, வேகமா – எது முக்கியம்?

இந்தியாவைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் 15 நிமிட காலதாமதம் வருவது இயல்பானதாகவே உள்ளது. இங்கு பயணிகள் ரயில்களின் சராசரி வேகமானது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மணிக்கு 5 கிலோ மீட்டருக்கு மேல் குறைந்துள்ளது. சரக்கு ரயில்களின் சராசரி வேகம் மணிக்கு ஆறு கிலோ மீட்டர் குறைந்துள்ளது.

ஒரு மணி நேரத்தில் 110 முதல் 130 கிலோமீட்டர் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதாக சொல்லப்படும் வந்தே பாரத் ரயில் சராசரியாக 100 கிலோமீட்டர் வேகத்தை கூட தொடத் தவறியுள்ளன. ரயில் தண்டவாளங்கள் முறையாகப் பராமரிக்கப்படாத போது குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் ரயில்களை இயக்குவது பாதுகாப்பானதல்ல எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இப்படி பராமரிப்பில்லாத மோசமான ரயில்வேப் பாதைகளை கொண்டிருக்கும் நிலையில், அடிக்கடி விபத்துகளை சந்தித்துக் கொண்டிருக்கும் லட்சணத்தில், இவர்களுக்கு ‘அதிவேகமாக’ இயங்கும் வந்தே பாரத் ரயில்கள் தேசபக்தி கூச்சலைப் போல போலியாக மக்களை ஏமாற்றத்தான் உதவும். பயணிகளின் பாதுகாப்பை விட வெட்டி பந்தாக்கள்தான் இவர்களுக்குத் தேவைப்படுகிறது.

ரயில்வேத் துறையை தனியார் மயமாக்க சதி நடக்கிறதா?

பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, ரயில்வேக்கான தனி பட்ஜெட் முறை ரத்து செய்யப்பட்டு அது பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. சிக்னல்களை புதுப்பிப்பது, ரயில்வே பாலங்களைப் பராமரிப்பது, பழுதடைந்த தண்டவாளங்களை மாற்றுவது போன்றப் பணிகள் முற்றிலுமாக புறக்கணிக்கப் பட்டுள்ளன. 19,500 கிலோ மீட்டர் தண்டவாளங்கள் பழுதாகி உள்ள நிலையில் புதுப்பிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மூன்று லட்சத்திற்கும் மேலானப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதன் விளைவாகத்தான் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. ஆனால் இந்த உண்மைகளை மறைத்துவிட்டு அதை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற அபத்தமான வாதம் முன்வைக்கப்படுகிறது. அப்படித் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால் ஏழை, எளிய மக்களின் குறைந்த செலவிலானப் பயணம் என்பது எட்டாக்கனியாகி விடும்.

கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்யும் ஒன்றிய அரசானது, பொதுமக்களின் முக்கிய ஆதாரமாக உள்ள ரயில்வேத் துறையையும் மற்ற பொதுத் துறைகளைப் போல அதானி, அம்பானிகள் வசம் ஒப்படைக்கும் சதியாகவே இவர்களின் நடவடிக்கைகள் உள்ளன. இப்படி கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்யும் இந்த காவி பாசிஸ்டுகளை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்றுவதே இது போன்றப் பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமையும்.

செய்தி ஆதாரம்:
https://scroll.in/article/1059269/why-the-indian-railways-is-on-the-brink

தமிழில் ஆக்கம்: குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here