பீமா –கோரேகான் சிறைப்பட்டோருக்கான விடுதலைக் குழுவின்
ஊடக அறிக்கை


பீமா-கோரேகான் வழக்கில் சிறைப்பட்டோரை விடுதலை செய்க!

பீமா-கோரேகான் : கேலிக்கூத்தாகும் நீதி
பீமா-கோரேகான் வழக்கு என்ற பெயரில் பாசக அரசு தீட்டியுள்ள சதியை அம்பலப்படுத்தவும் கேலிக்கூத்தாகியுள்ள நீதிக்குப் பின்னால் இருக்கும் உண்மையை வெளிக்கொணரவும் பீமா-கோரேகான் அரசியல் சிறைப்பட்டோர் விடுதலைக்கான குழு உருவாக்கப்பட்டுள்ளது. எல்கர் பரிசத் வழக்கில் சிறைப்பட்டுள்ள அறிவாளிகள், வழக்கறிஞர்கள், செயற்பாட்டாளர்களின் அப்பழுக்கற்றத் தன்மையை வெகுமக்களிடையே பரப்புவதையும் அவர் தம் உடனடி விடுதலைக்கான கோரிக்கையை எழுப்புவதையும் இக்குழு நோக்கமாக கொண்டுள்ளது.

எவரை வேண்டுமானாலும் பிணையின்றி சிறையில் அடைத்து வைப்பதற்கான கருவியாகப் பயன்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்(UAPA) கீழ் கடந்த ஜூன் 2018 இல் இருந்து புகழ்ப்பெற்ற அறிஞர்களையும் அறியப்பட்ட மாந்த உரிமைக் காப்பாளர்களையும் சிறைப்படுத்தியிருப்பதில் இதுவரை ஸ்டேன் சுவாமி என்றொருவர் கொல்லப்பட்டுள்ளார். அவர்களது முறையீடுகளை செவிமடுப்பதற்கு நீதிமன்றங்கள் மறுத்துவிட்டன. மும்பை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு தொடர்பில் போடப்பட்டுள்ள 38 வழக்குகள் காத்துக் கிடக்கின்றன.

எல்கர் பரிசத் என்பது மறைந்த நீதிபதி சாவந்த் , நீதிபதி கோல்சே படேல் ஆகிய இரு திறமையான முன்னாள் நீதிபதிகளின் தலைமையில், 250 அமைப்புகளை உள்ளடக்கிய ஓர் கூட்டமைப்பு. நீதிபதி சாவந்த் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், கரைபடியாதவர், மராட்டிய மாநில மாந்த உரிமை ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றியவர். நீதிபதி கோல்சே படேல் மும்பை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவ்விருவருக்கும் இத்தகைய பின்புலம் இருப்பினும் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் எல்கர் பரிசத்துக்கும் மாவோவியர்களும் தொடர்பு இருப்பதாக குற்றசாட்டுகளை பாசக அரசு முன்வைத்தது. எல்கர் பரிசத்தால் திட்டமிடப்பட்ட இந்நிகழ்வு அமைதியாக நடந்தேறியது என்று தொடக்கத்தில் காவல்துறையினர் ஒப்புக்கொண்ட போதும் பாசக அரசு அதையும் பொருட்படுத்தவில்லை. இவ்வழக்கு தொடங்கியது முதல் இதுவரை நடந்துள்ள முக்கிய நிகழ்வுகளையும் காலவரிசையும் சுருக்கமாக காண்போம்.

புனையப்பட்ட வழக்கு:
எல்கர் பரிசத் நிகழ்வு 2017 திசம்பர் 31 அன்று அமைதியாக நடந்தேறியது. அவ்வண்ணமே பூனே காவல்துறை அதை பதிவுசெய்துள்ளது. அடுத்த நாள் தலித் மக்கள் ஆண்டுதோறும் தாம் செய்யும் அனுசரிப்புக்காக நினைவுத் தூண் முன்பு கூடும் போதுதான் காவி கொடி ஏந்திய குண்டர்களால் திடீரென்று தாக்கப்பட்டனர். அவர்கள் பேருந்துகளையும் வாகனங்களையும் சேதப்படுத்தினர்; கடைகளை எரியூட்டினர்; தலித் மக்களைத் தாக்கி காயப்படுத்தினர். அங்கு நடந்த கைகலப்பில் ஒரு தலித் அல்லாத இளைஞர் மர்மமான முறையில் கொல்லவும்பட்டார். பாதிக்கப்பட்ட தலித் மக்களில் பலரும் இந்த கலவரத்தை வழிநடத்திய பிடே , எக்போடே என்ற இருவர் மீது சிக்ராபூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

மேற்படி புகார்களின் மீதான நடவடிக்கைக்கு காத்திருக்கையில், பிடேவின் தொண்டர்கள் சனவர் 4 அன்றும் சனவரி 8 அன்றும் கொடுத்த புகார்களின் அடிப்படையில் இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் போடப்பட்டன. எல்கர் பரிசத் அமைப்பின் உணர்ச்சியூட்டும் பேச்சுகள் பீமா கோரேகான் வன்முறைக்கு வழிவகுத்தன என்று அவை குற்றஞ்சாட்டின. பூனே காவல்துறை எல்கர் பரிசத்திற்கு மாவோவிய தொடர்பு என்று குற்றஞ்சாட்டிய இரண்டாவது முதல் தகவல் அறிக்கையை புலனாய்வுக்கு எடுத்துக் கொண்டது. முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த ஆட்களின் வீடுகளில் மட்டுமின்றி தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில் தில்லியைச் சேர்ந்த ரோனா வில்சனது வீட்டிலும் நாக்பூரைச் சேர்ந்த அறியப்பட்ட வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங்கினது வீட்டிலும் சோதனையிட வேண்டும் என்று பூனே காவல்துறை ஜே. எம் எப் சி. யிடம் முறையிட்டது. ஆனால், மாநிலக் காவல்துறையின் இக்கோரிகையை ஜே.எம்.எப்.சி. மறுதலித்து விட்டது. ஆனால், காவல்துறையோ அடுத்த மட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு செல்லும் சட்ட நடைமுறையைக் கடைபிடிப்ப்பதற்கு மாறாக வில்சன், காட்லிங் உள்ளிட்ட ஐந்து செயற்பாட்டாளர்களின் வீடுகளை சோதனையிட்டு அவர்தம் மின்னணுப் பொறிகளைக் கைப்பற்றவும் அவர்களை சிறைப்படுத்தவும் செய்தது. அந்த மின்னணுப் பொறிகளில் உள்ள விவரங்களை எடுப்பதற்கு எவ்வித சட்ட நெறிகளையும் கடைபிடிக்கவில்லை. சட்ட நெறிகளைக் காலில் போட்டு மிதித்தபடி, காவல் ஆணையர் பரம் வீர் சிங் ஊடக சந்திப்பில் அவர்களின் பொறிகளில் இருந்து கிடைக்கப்பெற்றதாக சில ஆவணங்களை பொது வெளியில் காட்டி, ஊடகங்களுக்குப் பகிரவும் செய்தார்.

உச்சநீதிமன்றம் இது தொடர்பில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில், இந்திய தலைமை அமைச்சர் மோடியைக் கொல்லத் திட்டமிடுவது பற்றிய ஆவணங்கள் என்ற பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டின் பெயரால் முக்கியமான செயற்பாட்டாளர்களை சிறைப்படுத்துவதற்கு எதிராக தடையாணைப் போட்டது. மராட்டிய காவல்துறை செயற்பாட்டாளர்களை சிறைப்படுத்துவதற்கு தேவையற்ற அவசரம் காட்டியும் குற்றஞ்சாட்டப் பட்டவருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சட்ட நெறிகளை மீறியும் நீதிமன்றத்தை அவமதித்தது குறித்து திகைப்படைவதாக நீதிபதி சந்திரசூட் தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

அர்செனல் கன்சல்டிங், செனிட்டல் ஆய்வகம், டொரோன்டோ குடிமக்கள் ஆய்வகம் போன்று இணையப் பாதுகாப்பிலும் எண்ணிய தடயவியலிலும் உள்ள பன்னாட்டு நிபுணர்களும் ஐ.ஐ.டி. மும்பையிலும் நிர்வாகத்திற்கான கோவோ கல்வி நிறுவனத்தில் உள்ள நிபுணர்களும் கணிணி பயிற்றுவர்களும் குற்றஞ்சாட்டப்பட்டோரின் கணிணியில் படைத்துறையில் பயன்படுத்தப்படும் உளவுமென்பொருளையும் தீம்பொருளையும் பயன்படுத்தி பொய்யான சான்றுகள் பதிவேற்றப்பட்டுள்ளதை ஐயத்திற்கிடமின்றி வெளிக்கொணர்ந்துள்ளனர்.

சதிக்குப் பின்னால் இருக்கும் அரசியல்:

2019 இல் மராட்டிய சட்டமன்றத் தேர்தலில், சிவசேனா, தேசியவாத காங்கிரசு, காங்கிரசு கூட்டணியால் பாசக ஆட்சியில் இருந்து கீழிறக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிதாக அமைந்த மராட்டிய அரசு இவ்வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்ற முடிவு செய்தது. இதன் ஆபத்தை உணர்ந்த ஒன்றிய அரசு உடனே தலையிட்டு, இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ( என்.ஐ.ஏ) மாற்றியது. இதன் மூலம் இந்த கைதுகளின் அரசியல் தன்மை மிகத் தெளிவாக அம்பலமாகியது.

நீதித்துறையின் மீது எல்லா மட்டங்களில் இருந்தும் அழுத்தம் தரப்படுகிறது. மும்பை உயர்நீதிமன்றத்தில் சிறைப்படுத்தப்பட்டோரது 38 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் உள்ளன. அதில் ஒரு சில வழக்குகள் ஓராண்டைக் கடந்தும் விசாரணைக்காக காத்துக்கிடக்கின்றன. ஏற்கெனவே உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்தில் வரலாறு காணாத வகையில் இவர்களின் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

அறிஞர்களிடமிருந்தும் கல்வியாளர்களிடம் இருந்தும் எழும் விமர்சனர்களை வாயடைக்கச் செய்வதற்கு கடுமையான முயற்சிகளை பாசகவும் சங் பரிவாரங்களும் செய்கின்றன. ஏனெனில், சமுதாய வாழ்வில் கருத்துருவாக்கத் தளத்தில் இன்னும் சங் பரிவாரங்கள் கால்பதிக்காத நிலைமை இருக்கிறது. சங்பரிவாரங்கள் தங்களது ஆட்களை பணியமர்த்துவதன் மூலம் சனநாயகத்தின் பல்வேறு நிறுவனங்களைத் தங்கள் கட்டுக்குள் கொண்டுவர மேற்கொண்ட முயற்சிகளை கடந்த காலத்தில் கண்டிருக்கிறோம். சவகர்லால் நேரு பல்கலைக் கழகம், ஜாமியா மிலியா இஸ்லாமியா உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்களின் உள்விவகாரங்களில் தலையிடுவதன் மூலமாகவோ அல்லது ஐஐடி மெட்ராஸில் உள்ள அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம், ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள அம்பேத்கர் மாணவர் இயக்கம் போன்ற மாணவர் அமைப்புகளின் மீது குறிவைப்பதன் மூலமாகவோ பல்கலைக்கழக மாணவர்களிடையே பிரிவையும் பிரச்சனைகளையும் உண்டாக்க முயன்றன.

கடந்த இருபதாண்டுகளில், தங்கள் நிலங்களுக்காகப் போராடும் தலித் மற்றும் பழங்குடி மக்களை ஒடுக்கவோ அல்லது ”இஸ்லாமிய பயங்கரவாதம்” என்ற பொய்யான கட்டமைப்பைத் தக்கவைக்க இஸ்லாமியர்களுக்கு எதிராகவோ சட்டம் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஊபா சட்டம் ஆட்சியாளர்களுக்கு உகந்த கருவியாக பயன்பட்டதென்றால், தற்போதைய ஆட்சியில் மக்கள் விரோத சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. அரசு உதவி பெறும் கார்ப்பரேட் சுரங்க நிறுவனங்களும் தனியார் சுரங்க நிறுவனங்களும் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டுவதை எதிர்ப்பவர் எவராயினும் அவரை ’மாவோயிஸ்ட்’ என முத்திரை குத்தி தங்கள் கொள்ளையைத் தொடர முடியும். ஜார்கண்டில், அமைப்புசாரா தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் மஸ்தூர் சங்காத்தன் சமிதி (பதிவு செய்த உறுப்பினர்களாக 22000 பழங்குடி தொழிலாளர்களைக் கொண்ட 20 ஆண்டுகள் பழமையான அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம்) அல்லது பாம்பே மின்உற்பத்தி தொழிலாளர்கள் சங்கம் போன்ற சங்கங்களின் தொழிலாளர்களை ஊபா சட்டம் மூலம் சிறையில் நீண்ட காலம் அடைத்து வைப்பதன் மூலம் அந்த தொழிற்சங்கங்கள் ஒன்றுமில்லாமல் ஆக்கப்படுகின்றன. அதுபோல, பீமா கோரேகான் வழக்கில் நடைபெற்ற கைதுகளும், அரசு தன்னை எதிர்த்து கருத்து தெரிவிப்பவர்களை சிறைக் கொட்டடியில் அடைத்து வைப்பதன் மூலம் அவர்களின் குரல்களை அமைதியாக்க மேற்கொண்ட முயற்சியாகவே தெரிகிறது.

அதாவது சனாதன சன்சத் என்ற ஆர்.எஸ்.எஸ். இன் சட்டப்புறம்பான அமைப்பொன்றின் மூலமாக கெளரி லங்கேஷ், கல்புர்கி, தபோல்கர், கோவிந்த பன்சாரே போன்ற அறிஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு மாறாக, அரசினது காவல்துறை, புலனாய்வுத் துறை, நீதித்துறை, சிறைத்துறை, ஊடகங்கள் வழியாக அறிஞர்களினதும் செயற்பாட்டாளர்களினதும் மூச்சை நிறுத்தும் முன்னெடுப்பே பீமா கோரேகான் வழக்காகும்.

யார் இந்த பீ.கே 16?
இந்த வழக்கில் கைதானவர்கள் அனைவரும், நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், விளிம்புநிலை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களைப் பாதிக்கும் அரசின் கொள்கைகளை எதிர்த்தும் தொடர்ச்சியாக இயங்கியவர்கள், பாராட்டத்தக்கவர்கள். ஜார்கண்ட, 1996, பஞ்சாயத்து ஏற்பாடுகளை இயற்றும் சட்டத்திற்கான (பட்டியலினத்தவர் பகுதிகளுக்குமான நீட்சி) போராட்டத்தில் ஈடுபட்ட மறைந்த அருட்தந்தை ஸ்டான் ஸ்வாமி முதல், பேராசிரியர் எஸ்.ஏ.ஆர் கீலானிக்கான வழக்கறிஞர் குழுவை உருவாக்கியவர்களில் முக்கியமானவரான ரோனா வில்சன் வரை; நாண்டெட் குண்டுவெடிப்பு வழக்கின் உண்மைகளை வெளிக்கொணர்ந்த நாக்பூர் பி.யு.சி.எல் அமைப்பின் மாந்த உரிமைப் போராளியும் நாக்பூரைச் சேர்ந்த ஆங்கிலப் பேராசிரியருமான சோமா சென் முதல் பேராசிரியர் சாய் பாபாவின் தரப்பு வழக்கறிஞரான சுரேந்திர காட்லிங் வரை என இந்தப் பட்டியல், பொதுத் தொண்டில் பங்களித்தவர்களை உள்ளடக்கியது. ஐஐஎம் அகமதாபாத்தில் பயின்ற, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பொது நிறுவனம் ஒன்றின் சி.இ.ஒவும், முன்னாள் ஐஐடி காரக்பூர் பல்கலைக்கழகத்தின் ஆசிரியருமான, மிகத் திறமை வாய்ந்த பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே கைது செய்யப்பட்ட போது, கோவா நிர்வாகக் கல்லூரியில் தகவல் பகுப்பாய்வு அறிவியல் துறையின் பேராசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்தார். ஐஐடி கான்பூரில் பயின்ற சுதா பரத்வாஜ், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பணி செய்ய தனது அமெரிக்க குடியுரிமையைத் துறந்தார். 82 வயதான வரவர ராவ் செயற்பாட்டாளர், ஆசிரியர் மற்றும் எழுத்தாளருமாவார். பழங்குடியின செயல்பாட்டாளரான மகேஷ் ராவ்த், பழங்குடி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பணியாற்றியவர். மாந்த உரிமை செயல்பாட்டாளரான சுதிர் தவாலே, மாதம் இருமுறை வெளியாகும் மராத்திய இதழான வித்ரோகியின் வெளியீட்டாளருமாவார். கவுதம் நவ்லகா, அறிஞரும் எக்கனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி (EPW) என்ற இதழின் கட்டுரையாளருமாவார். வெர்னான் கன்சல்வேஸ் கல்வியாளரும், மாந்த உரிமை செயற்பாட்டளரும், தொழிற்சங்க ஆற்றலுமாவார். அருண் ஃபெரேரியா இதே வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு செயற்பாட்டாளராவார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் இன்னொருவரான பேராசிரியர் ஹனிபாபு சாதி எதிர்ப்புச் செயல்பாட்டளரும், தில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியருமாவார். கபீர் கலா மஞ்ச் குழுவைச் சேர்ந்த கலைத்துறை செயல்பாட்டாளர்களான சாகர் கோர்கே, ஜோதி ஜக்தப் மற்றும் ரமேஷ் காய்ச்சோர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முடிவுரை
ஆளும் தரப்பின் மதவெறிக் கருத்தியலையும், மக்கள் விரோதக் கொள்கைகளையும் எதிர்த்தார்கள் என்பதற்காக குடிமக்கள் சிறையிலடைக்கப்படுவதற்கு இந்த வழக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். நீது வழங்கல் முற்றிலும் உடைந்து போனதையும், நமது அரசியல் சாசன சனநாயகத்தின் மீது நிகழ்த்தப்பட்ட மாற்ற முடியாத சேதத்தையும் காட்டுகிறது. அவர்களது வழிமுறைகள், நீதி, நிர்வாகம் மற்றும் சட்டமன்றம் என எந்தத் துறையில் இருப்பவரையும் குற்றஞ்சாட்ட ஏதுவாகிறது. இது வெறும் 16 ஆட்கள் (அவர்களில் ஒருவர் ஏற்கெனவே கொல்லப்பட்டுவிட்டார்) பற்றியதல்ல; இது இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றிய கேள்வியாகும். இந்த வழக்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் எடுத்துச் செல்லப்படாமலும், அரசின் குற்றங்கள் சிறப்புப் புலனாய்வு குழுவின் மூலமாக வெளிக்கொணரப்படாமலும் போகுமெனில், பாசிச ஆற்றல்கள் நமக்கு இன்னொரு வாய்ப்பினை வழங்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

ஆதலால் நாங்கள் பின்வருவனவற்றைக் கோருகிறோம்:
1. பீமா கோரேகான வழக்கில் சிறைப்பட்டுள்ள அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
2. அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) சட்டம் திரும்ப்பபெறப்பட்டு, அந்த நிறுவனம் கலைக்கப்பட வேண்டும்.

ஊடக சந்திப்பில் பங்குபெறும் அமைப்புகள்:

மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL)
இந்தியக் குடியரசு கட்சி
NCHRO
சிபிசிஎல் – தமிழ்நாடு
சிபிடிஆர் – தமிழ்நாடு
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
மக்கள் அதிகாரம்
தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்
தமிழக மக்கள் முன்னணி

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா
எஸ்.டி.பி.ஐ.
மே 17 இயக்கம்
திராவிடர் விடுதலைக் கழகம்
தந்தைப் பெரியார் திராவிடர் கழகம்
வெல்பேர் பார்டி ஆப் இந்தியா
இந்திய மாதர் தேசிய சம்மேளனம் (NFIW)
சுயராஜ்ஜிய கட்சி
மனிதி
அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் ( APSC)
பேராசிரியர் சிவக்குமார்
மக்கள் உரிமை பாதுகாப்புமையம்(PRPC)
சிறைவாசிகள் உரிமை மையம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here