ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஊடகச் செய்திகள்*
சம்யுக்தா கிசான் மோர்ச்சா பிரஸ் புல்லட்டின்
348வது நாள், 9 நவம்பர் 2021
நவம்பர் 26ஆம் தேதி அன்றும் அதற்குப் பின்பும் இந்தியா முழுவதும், மற்றும் டெல்லியின் எல்லைகளிலும், கார்ப்பரேட் ஆதரவு மற்றும் மக்கள் விரோத பாஜக ஒன்றிய அரசை குறிவைத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் இயக்கத்தின் ஓராண்டு விழாவைக் கடைப்பிடிக்க SKM முடிவு செய்துள்ளது
லக்கிம்பூர் கேரி படுகொலை தொடர்பான தடயவியல் விசாரணையில், ஆஷிஷ் மிஸ்ரா டேனி மற்றும் அவரது கூட்டாளிக்குச் சொந்தமான துப்பாக்கி, விவசாயிகள் மீது சுடுவதற்குப் பயன்படுத்தப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. – இது எஸ்.கே.எம்.இன் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது. மேலும் இது ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டேனியின் மகனை தெளிவாகக் குறிப்பிடுகிறது.
நார்னாவுண்டில், ஹன்சியின் எஸ்பி அலுவலகத்திற்கு வெளியே காலவரையற்ற தர்ணா இரண்டாவது நாளாக தொடர்கிறது – இரண்டு விவசாயிகள் மீது கருப்புக் கொடி காட்டியதால் பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறவும், மற்றும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக, பாஜக எம்.பி. ராம் சந்தர் ஜங்ரா மீது வழக்கு பதிவு செய்யவும் நிர்வாகம் தயாராக இல்லை.
நவம்பர் 28ஆம் தேதி, மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் மாபெரும் விவசாயி-தொழிலாளி மகாபஞ்சாயத்து நடைபெறும் – இந்த நிகழ்வை சம்யுக்தா ஷேத்காரி கம்கர் மோர்ச்சா (SSKM) பதாகையின் கீழ் 100 க்கும் மேற்பட்ட அமைப்புகள் கூட்டாக நடத்துகின்றன – நவம்பர் 28ஆம் தேதி மாபெரும் சீர்திருத்தவாதியான மகாத்மா ஜோதிராவ் பூலே நினைவு நாள் நினைவுகூரப்படும்.
இன்று (9/10/21) சிங்கு எல்லையில் நடைபெற்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்த கிசான் மோர்ச்சா) கூட்டத்தில், நவம்பர் 26ஆம் தேதி மற்றும் அதற்குப் பிறகு, நாடு முழுவதும், எல்லைகளிலும், டெல்லியிலும் இந்தியாவிலேயே வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டத்தின் ஓராண்டு நிறைவைக் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டது.
நவம்பர் 26ம் தேதி அரசியலமைப்பு தினமும் கூட. 1949 நவம்பர் 26ல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அரசியலமைப்பு நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள். கடந்த ஆண்டு தொழிலாளர் வர்க்கத்தின் அகில இந்திய வேலை நிறுத்தத்தின் ஒரு வருடத்தை நவம்பர் 26ம் தேதி குறிக்கிறது.
நவம்பர் 26ஆம் தேதி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து டெல்லியின் அனைத்து எல்லைகளுக்கும் அணிவகுப்பாகச் செல்லுவார்கள். அங்கு பெரிய கூட்டங்கள் நடத்தப்படும்.
விவசாயிகள், தொழிலாளர்கள், ஊழியர்கள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், நவம்பர் 26 அன்று, மேலே குறிப்பிட்டுள்ள மாநிலங்கள் தவிர, இந்தியாவின் அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும், டெல்லி எல்லைகளில் அணிதிரளும் மாபெரும் கூட்டு மாநில நடவடிக்கைகளுக்கு SKM அழைப்பு விடுத்துள்ளது.
நவம்பர் 29ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டெல்லியில் தொடங்குகிறது. நவம்பர் 29ஆம் தேதி முதல் இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடியும் வரை, தேர்ந்தெடுக்கப்பட்ட 500 உழவர் ஆர்வலர்கள், இந்தப் பிடிவாதமான, உணர்ச்சியற்ற, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான பாஜக ஒன்றிய அரசை, கோரிக்கைகளை ஏற்க வற்புறுத்தும் வகையிலும், அதற்கு எதிரான அழுத்தத்தை பன்மடங்கு அதிகரிக்கும் வகையிலும், நாடு முழுவதும் விவசாயிகள் ஓராண்டாக வரலாற்று சிறப்பு மிக்க போராட்டம் நடத்தி வருவதை குறிக்கும் வகையில், டிராக்டர் பேரணியாக ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றத்திற்கு அமைதியாகவும், முழு ஒழுங்குடனும் செல்வார்கள் என்று எஸ்.கே.எம். முடிவு செய்துள்ளது.
லக்கிம்பூர் கேரி படுகொலை தொடர்பான தடயவியல் விசாரணையில், ஆஷிஷ் மிஸ்ரா டேனி மற்றும் அவரது கூட்டாளிளிக்குச் சொந்தமான துப்பாக்கி இந்தச் சம்பவத்தில் சுடுவதற்குப் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்ற எஸ்.கே.எம்.இன் நிலைப்பாட்டை இது உறுதிப்படுத்துகிறது. மேலும் மாநில அமைச்சர் அஜய் மிஸ்ரா டேனியின் மகன் இதில் சிக்கியுள்ளார். நேற்று, இந்த வழக்கின் மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் “ஒருவரைப் பாதுகாக்கும்” உ.பி அரசின் முயற்சிகளைச் சுட்டிக் காட்டியது. வழக்கின் உண்மைகள் இப்போது நன்கு வெளிப்பட்டுள்ளன. ஆனாலும், மோடி மற்றும் யோகி அரசுகள் வெட்கமின்றி அமைச்சரையும் அவரது மகனையும் தொடர்ந்து பாதுகாத்து வருகின்றன.
கருப்புக் கொடி காட்டியதற்காக இரண்டு விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை நிர்வாகம் திரும்பப்பெறவும், பாஜக எம்.பி. ராம் சந்தர் ஜங்ரா மீது, விவசாயிகளைத் தாக்கியதற்காக வழக்குப் பதிவு செய்யவும் நிர்வாகம் மறுத்ததால், நார்னவுண்டில் ஹன்சி நகரின், SP அலுவலகத்திற்கு வெளியே காலவரையற்ற தர்ணா இரண்டாவது நாளாகத் தொடர்கிறது. இந்த வழக்கில் நீதி கேட்டு ஆயிரக்கணக்கான விவசாயிகளும், விவசாய தலைவர்களும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், இந்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த விவசாயி குல்தீப் சிங் ராணா உயிருக்குப் போராடி வருகிறார்.
நவம்பர் 28ஆம் தேதி, மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் மாபெரும் விவசாயி-தொழிலாளி மகாபஞ்சாயத்து நடைபெறும். வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகளின் போராட்டத்தின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், சம்யுக்தா ஷேத்காரி கம்கர் மோர்ச்சா (SSKM) பதாகையின் கீழ் 100க்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்துகின்றன. சிறந்த சீர்திருத்தவாதியான மகாத்மா ஜோதிராவ் பூலேயின் நினைவு தினம், நவம்பர் 28 அன்று கொண்டாடப்படுகிறது. மஹாபஞ்சாயத்து, மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்தை அனைத்து முனைகளிலும் கண்டிக்கும் மற்றும் உழைக்கும் மக்களின் பல முக்கிய பிரச்சினைகளை எழுப்பும். மேலும் இந்த மகாபஞ்சாயத்து, வேளாண் சட்டங்கள், தொழிலாளர் தொகுப்பு குறியீடுகள், நியாயமான MSP உத்தரவாதத்திற்கான மத்திய சட்டம், டீசல் விலையைப் பாதியாக குறைத்தல் உட்பட, பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு, தனியார்மயமாக்கல் மற்றும் நாட்டை அற்ப விலைக்கு விற்பது ஆகிய பிரச்சனைகளையும் எழுப்பும். அக்டோபர் 27 அன்று புனேவில் இருந்து தொடங்கிய, லக்கிம்பூர் கேரி விவசாயி தியாகிகளின் வீரச்சாம்பல் பயணங்கள், இப்போது பல்வேறு உழவர் அமைப்புகளால் உற்சாகமான வரவேற்புகளுக்கு மத்தியில் மாநிலம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டு, நவம்பர் 27 அன்று மும்பையில் சங்கமிக்கும். அன்று, விவசாயி தியாகிகளின் வீரச்சாம்பல் பயணங்களின்போது சத்ரபதி சிவாஜி சிலைக்கும், சிவாஜி பூங்காவில் உள்ள வாஜி, சைத்ய பூமியில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் நினைவிடம், 1930ல் மும்பையில் சுதந்திரப் போராட்டத்தின் போது பிரிட்டிஷ் துணியை எரித்தபோது ஆங்கிலேயர்களால் லாரி ஏற்றி கொல்லப்பட்ட தியாகி பாபு ஜெனுவின் நினைவிடம் மற்றும் மந்த்ராலயா அருகில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை ஆகியவற்றிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
பஞ்சாபி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பொருளாதாரப் பேராசிரியரான லக்விந்தர் சிங் மற்றும் பாட்டின்டாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தின் குரு காசி வளாகத்தில் சமூக அறிவியல் உதவிப் பேராசிரியர் பல்தேவ் சிங் ஷெர்கில் ஆகியோர் நடத்திய ஆய்வில், விவசாய போராட்டத்தில் இறந்த பெரும்பாலானவர்கள் சிறு விவசாயிகள் என்று தெரிய வந்துள்ளது. அவர்களுக்குச் சொந்தமான பண்ணைகளின் சராசரி நிலப்பரப்பு 2.26 ஏக்கர். விவசாய இயக்கத்தின் பின்னணியில் இருப்பவர்கள் பணக்கார விவசாயிகள் என்று அடிக்கடி கூறப்படும் கூற்றை இந்த ஆய்வு தகர்க்கிறது.
அறிக்கையை வழங்கியவர்கள் –
பல்பீர் சிங் ராஜேவால், டாக்டர் தர்ஷன் பால், குர்னம் சிங் சாருனி, ஹன்னன் மொல்லா, ஜக்ஜித் சிங் தலேவால், ஜோகிந்தர் சிங் உக்ரஹான், ஷிவ்குமார் சர்மா ‘கக்காஜி’, யுத்வீர் சிங்
ஐக்கிய விவசாயிகள் முன்னணி
(சம்யுக்தா கிசான் மோர்ச்சா)
மின்னஞ்சல்: samyuktkisanmorcha@gmail.com
வெளியீடு: ஐக்கிய விவசாயிகள் முன்னணி,தமிழ்நாடு.