இந்து ராஜ்ஜியம் இந்தியாவிற்கு மிகப்பெரிய பேரழிவாக இருக்கும் என்றார் அம்பேத்கர்: ஆனந்த் டெல்டும்ப்டே

0
இந்து ராஜ்ஜியம் இந்தியாவிற்கு மிகப்பெரிய பேரழிவாக இருக்கும் என்றார் அம்பேத்கர்: ஆனந்த் டெல்டும்ப்டே
ஆனந்த் டெல்தும்டே

ந்துத்துவ கட்சிகள் பாபாசாகேப் அம்பேத்கரை அரசியல் ஆதாயங்களுக்காக எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதை விளக்குகிறார், தலித் இயக்கத்தின் முன்னணி அறிஞர் ஆனந்த் டெல்டும்ப்டே. அம்பேத்கர் பற்றிய தனது புத்தகமான , Iconoclast: A Reflective Biography of Dr Babasaheb Ambedkar மூலம் நாடு முழுவதும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். இந்த புத்தகம் அம்பேத்கரின் தத்துவத்தை மட்டுமல்ல, அவரின் வாழ்க்கை முறை – சிக்கல்களை கையாளும் திறன், தொலைநோக்கு பார்வை மற்றும் எந்த அளவு உறுதியான மனிதர் என்பதனையும் ஆழமான பகுப்பாய்வுடன் முன்வைக்கிறது. ஃப்ரண்ட்லைனுடனான இந்த நேர்காணலில், டெல்டும்ப்டே, பல அரசியல் கட்சிகள் மற்றும் சாதாரண மக்களால் “வணங்கப்படும்” ஒரு சின்னமாக பாபாசாகேப் சுருக்கப்படுவதை கவலையுடன் விவரிக்கிறார். அம்பேத்கருக்கு “மிகவும் முற்போக்கான பார்வைகள்” இருந்தன, அவை இந்த சடங்குத்தனமான வழிபாட்டால் மறைக்கப்படுகின்றன என்றும் “ஒருவரின் படத்தை சுவரில் தொங்கவிட்டு, அதற்கு மாலையிட்டுவிட்டு மறந்துவிடுகிறார்கள்” என்றும் கவலையுடன் குறிப்பிடுகிறார்.

நேர்காணலின் பகுதிகள்:

அம்பேத்கர் அரசியல் கட்சிகள், சாதாரண குடிமக்கள் உள்ளிட்ட இந்தியர்கள் பலரால் “வழிபடப்படுகிறார்” உண்மையில் இத்தகைய வழிபாட்டின் மூலம் அம்பேத்கருக்கு உரிய மரியாதை கிடைப்பதாக எடுத்துக்கொள்வதா? அல்லது இத்தகைய வழிபாடுகள் அவர் முன்வைத்த கருத்தியல்களையும் இலட்சியங்களையும் மறைக்க உதவுகிறதா?

பிந்தையதே உண்மை. இந்தியாவில் சிறந்த மனிதர்களை வணங்கும் ஒரு பாரம்பரியம் உள்ளது. தேர்தல் அரசியல் போட்டித்தன்மையுடன் மாறத் தொடங்கிய 60களின் பிற்பகுதியில் அம்பேத்கர் வழிபாட்டின் போக்கு தொடங்கியது. நேரு எனும் மாபெரும் ஆளுமையின் மறைவிற்குப் பிறகு காங்கிரஸின் ஒளி குறையத் தொடங்கியது. அரசாங்கம் நிலச் சீர்திருத்தங்களை மேற்கொண்டது. காகிதத்தில் நன்றாக இருந்தாலும், சூத்திரர்களிடமிருந்து மிகவும் பிரபலமான நபர்களை கொண்ட முகவர்களின் வலையமைப்பை உருவாக்குவதே காங்கிரஸின் அரசியல் நோக்கமாக இருந்தது.

உண்மையான நில உழவர்களான தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளின் கைகளில் வந்திருக்க வேண்டிய நிலம் அவர்களின் கையை விட்டுச் சென்றது. சூத்திர குத்தகைதாரர்களுக்கு நிலம் விநியோகிக்கப்பட்டது இந்தப் புதிய நில உரிமையாளர்கள் பசுமைப் புரட்சி மூலம் உற்பத்தித்திறன் ஆதாயங்களால் வளப்படுத்தப்பட்டனர். முந்தைய பிராமண நில உரிமையாளர்கள் கிராமப்புறங்களிலிருந்து வெளியேறி, இந்தப் புதிய சூத்திர நில உரிமையாளர்களிடம் பிராமணியத்தின் தடியை ஒப்படைத்தனர். அவர்களின் அரசியல் விருப்பங்களும் உயரத் தொடங்கின. ஆனால் அதை காங்கிரஸால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. தேர்தல் சந்தைகளில் போட்டி தீவிரமடைவதற்கும் வாக்கு வங்கி அரசியலின் தொடக்கத்திற்கும் இது ஒரு குறிப்பிடத்தக்க காரணியாகும். அம்பேத்கர் என்ற ஒரே ஒரு ஆளுமையின் தாக்கத்தால் மட்டுமே சுழலக்கூடிய மிகவும் சாத்தியமான வாக்கு வங்கியாக தலித்துகள் வந்தனர். உலகில் வேறு எந்த உதாரணமும் இல்லை, அம்பேத்கர் என்ற ஒரே ஒரு சின்னத்தால் 220 மில்லியனுக்கும் அதிகமான மக்களை ஈர்க்க முடிந்தது.

அப்படியெனில், அரசியல் கட்சிகளுக்கு இவர்கள் கவர்வதற்கு எளிதான வாக்காளர்களாயிற்றே!.

ஆம், இது மிகவும் தனித்துவமான நிகழ்வாக இருந்து வருகிறது. அம்பேத்கரை வைத்து ஏமாற்ற அரசியல் கட்சிகளுக்கு இது கைகொடுத்தது: அவர்கள் அவரை தங்கள் சொந்த வழிகளில் முன்வைக்கத் தொடங்கினர். அவ்வப்போது, அம்பேத்கர் கூறிய ​​அவசியமாக நிலையானதாக இல்லாத விஷயங்கள் திரிக்கப்பட்டு அவை அரசியல் கட்சிகளால் திறமையாகப் பயன்படுத்தப்பட்டன. அம்பேத்கர் எனும் சின்னத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க பயன்பாடு பாஜகவால் செய்யப்பட்டது. 80களின் முற்பகுதியில், பாலாசாகேப் தியோராஸ்து பாஜகவின் சித்தாந்தத் தாயான ஆர்எஸ்எஸ்ஸின் தலைமையேற்றபோது,தலித்துகள் உள்ளைட்ட கீழ் சமூக அடுக்குகளில் ​​அவர்களின் சின்னங்களையும் இணத்துக்கொண்டு அவர்களைக் கையாளுவதன் மூலம் ஊடுருவுவது என்ற உத்தியை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

ஆக, ஒரு வகையில், அம்பேத்கர் பரப்பிய கருத்தியல்களுக்கு இது ஆபத்தானது: அவரின் இலட்சியங்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு வழிபாட்டு அரசியலாக மாற்றப்படுகிறதா?

நிச்சயமாக. அம்பேத்கர் இந்தியாவை சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு நவீன சமூகமாகப் பார்க்க விரும்பினார். அது அவர் விரும்பிய ஜனநாயகம் மற்றும் வாழ்க்கை முறையாகும். அவரது முற்போக்கான கருத்துக்கள் இப்போது நாம் காணும் “வழிபாட்டால்” மறைக்கப்படுகின்றன. ”ஒருவரின் படத்தை சுவரில் தொங்கவிட்டு, அதற்கு மாலை அணிவித்து அவரின் கருத்துக்களையும் இலட்சியங்களையும் மறந்துவிடும் வழிபாடு மிகவும் எளிதானது.

கடந்த சில வருடங்களாக, காங்கிரஸ் அம்பேத்கரை தோற்கடித்ததாக பாஜக கூறுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம், அதே நேரத்தில் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு பாஜகவால் ஆபத்தில் இருப்பதாக காங்கிரஸ் கூறுகிறது.உண்மை என்ன?

சாதி அமைப்பின் அடிப்படையிலான இந்து மதத்திற்கு எதிராக அம்பேத்கர் முதன்மையாகப் போராடினார். அவர் அரசியல் ரீதியாக காங்கிரஸை எதிர்த்தார். சித்தாந்த ரீதியாக அவர் கம்யூனிஸ்டுகளையும் எதிர்த்தார். அனைத்து இந்துத்துவா கட்சிகள், இந்து மகாசபை, ஜனசங்கம் மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவற்றுடன் எந்த தொடர்பும் இல்லை என்று வெளிப்படையாக அறிவித்தார்.

அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டபோது, ​​அம்பேத்கர் அதில் நுழைவதை காங்கிரஸ் விரும்பவில்லை. உதாரணமாக, வல்லபாய் படேல், அம்பேத்கருக்கு கதவுகள் மட்டுமல்ல, அரசியலமைப்பு சபையின் ஜன்னல்களும் கூட மூடப்படும் என்று பகிரங்கமாகக் கூறியிருந்தார். பாபாசாகேப்பின் அரசியல் வாழ்க்கை 1946 இல் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. அம்பேத்கர் தனது எஸ்சிஎஃப் தோழர்களில் ஒருவரான ஜோகேந்திர நாத் மண்டலின் உதவியுடன் ஐக்கிய வங்காளத்திலிருந்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டது அதிசயம். அம்பேத்கர் ஜெசோர்-குல்னா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் சில காலத்திற்குள்ளாகவே பிரிவினை வந்தது, அம்பேத்கரின் தொகுதி பாகிஸ்தானுக்குச் சென்றதால் அவர் தனது உறுப்பினர் பதவியை இழந்தார். மறைமுகப் பேச்சுவார்த்தை நடந்தது, மேலும் பம்பாய் மாகாண சபைக்கு புனேவிலிருந்து அவரைத் தேர்ந்தெடுக்க காங்கிரஸ் முடிவு செய்தது. இதனால், காங்கிரசுடன் சில நேரங்களில் நேர்மறையான உறவு இருப்பதற்கான உதாரணங்கள் உள்ளன, ஆனால் ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்து தேசியவாதக் கட்சியுடன் ஒருபோதும் அவர் தொடர்பு கொண்டிருந்தது இல்லை.

சர்ச்சைக்குரிய சமகால பிரச்சினைகள் குறித்து, உதாரணமாக பொது சிவில் சட்டம் குறித்து சில கேள்விகளைக் கேட்கிறேன். அம்பேத்கர் அதை ஆதரித்ததாக பாஜக கூறுகிறது. நீங்கள் அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஆம், அதுதான் பாஜகவின் உத்தி: தனக்கு சாதகமான விஷயங்களைத் தேர்ந்தெடுத்து அதை விரிவுபடுத்துவது. உண்மைதான், அம்பேத்கர் நாடு முழுவதும் ஒரே சிவில் சட்டத்தை விரும்பினார். பாலின சமத்துவத்திற்காக அவர் வரைந்த இந்து சட்ட மசோதா, அதை நோக்கிய ஒரு சிறிய படியாகும். ஆனால் பாஜகவின் பொது சிவில் சட்டம் முஸ்லிம் பெண்கள் மீது பாய்கிறது. அம்பேத்கர் விரும்பியது அதை அல்ல. பெரும்பான்மையினராக இந்துக்கள் ஒரு தொடக்கத்தை எடுக்க முடியும் என்பதால் அவர் இந்து சட்டத்தை எடுத்தார். சிறுபான்மையினர் அத்தகைய சீரான சட்டத் தொகுப்பின் நன்மைகளைப் உணர்வதற்கு எளிதாக இருக்கும் என்று எண்ணினார். அவர் அதை வற்புறுத்தலுடன் கொண்டு வர விரும்பவில்லை.

படிக்க:

  நூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்

♦  அம்பேத்கரை இழிவு படுத்திய ஆர்எஸ்எஸ் அமித்ஷா பார்ப்பன பாசிச பயங்கரவாத கும்பல்.

அம்பேத்கர் இந்து சட்ட மசோதாவை வரைந்து அதை பொதுமக்களுக்கு வெளியிட்டபோது, ​​ஜனசங்கம் அல்லது இந்து மகாசபையின் எதிர்வினை என்ன?

அம்பேத்கர் அவரது வாழ்நாளில் இல்லாத அளவு பெரும் எதிர்ப்பை இந்துத்துவ சக்திகளிடமிருந்து சந்தித்தார். அம்பேத்கரை கண்டித்து ஏராளமான பொதுக் கூட்டங்கள் நடந்தன. டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இந்து அமைப்புகள் அவரது உருவ பொம்மையை எரித்தன. அவர் மீது சாதி ரீதியான அவதூறுகள் பரப்பப்பட்டது.

அப்படியெனில், ஆர்.எஸ்.எஸ். இந்த யோசனையை எதிர்த்ததா?

ஆம், ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை மற்றும் அனைத்து இந்துத்துவா அமைப்புகளும் ஒருசேர எதிர்த்தன.

உங்கள் புத்தகத்தில் நீங்கள் அரசியலமைப்பை உருவாக்கியதற்கான முழுப் புகழையும் அம்பேத்கருக்கு வழங்க முடியாது என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள், அம்பேத்கரை ஒவ்வொரு நபரும் “இந்திய அரசியலமைப்பின் தந்தை” என்று கூறும்போது நீங்கள் ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?

ஏனென்றால், அதுதான் உண்மை. அரசியலமைப்பு ஒரு [தனி] மனிதரால் எழுதப்படவில்லை. அரசியலமைப்பு சபை எதற்காக இருந்தது? அரசியலமைப்பு சபை ஒரு ஆலோசகராக, அரசு ஊழியரான பி.என். ராவ் அவர்களை ஒரு வரைவை உருவாக்க நியமித்தது, அதை அவர் ஒரு மாதத்திற்குள் செய்தார். இந்த வரைவு அடிப்படை ஆவணமாக மாறியது. பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க குழுக்கள் அமைக்கப்பட்டன, அவை பெரும்பாலும் காங்கிரஸ் தலைவர்களால் தலைமை தாங்கப்பட்டன. விவாத குழு எடுத்த முடிவுகள் , மீண்டும் பெரும்பாலும் காங்கிரஸ் தலைவர்களால் தலைமை தாங்கப்பட்ட ஆலோசனைக் குழுவால் சரிபார்க்கப்பட்டன. இந்த முடிவுகள் பின்னர் நேரு, படேல், ஆசாத் மற்றும் பிரசாத் ஆகியோரைக் கொண்ட “காங்கிரஸ் உயர்மட்டக்குழு” தலைமையிலான காங்கிரஸ் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றங்களிலும் விவாதிக்கப்பட்டன. எனவே, முடிவெடுக்கும் முழு செயல்முறையும் காங்கிரஸின் கைகளில் இருந்தது.

மக்கள் அதிகாரம் வாட்சப் சேனலை கிளிக் செய்து இணைந்துக் கொள்ளுங்கள்

அவர்கள் ஏழு பேர் கொண்ட வரைவுக் குழுவை அமைத்து பாபாசாகேப்பை அதன் தலைவராக்கினர். வரைவுக் குழு அதன் வரைவில் சுமார் 20 மாற்றங்களைச் செய்தது. ஒன்று முகவுரை. இந்த வரைவு பொதுமக்கள் கருத்து தெரிவிக்க திறந்திருந்தது. அவர்கள் அதை ஏழு, எட்டு மாதங்கள் வைத்திருந்து, பின்னர் ஒவ்வொரு கட்டுரையாக, சட்டமன்றத்தில் விவாதங்களுக்கு எடுத்துச் சென்றனர்.

அந்த நேரத்தில் கடுமையான உடல் நலக்குறைவுகள் இருந்தபோதிலும், பல்வேறு குழுக்களிலும் வரைவுக் குழுவின் தலைவராகவும் அம்பேத்கர் மகத்தான பங்களிப்புகளைச் செய்தார். மேலும், அரசியலமைப்புச் சபையில் வரைவை அவர் தனியாக முன்னோட்டமிட்டபோது வரைவுக் குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் அருகில் இல்லை என்பது உண்மை. அவருக்கு உதவ எஸ்.என். முகர்ஜி மற்றும் அவரது ஊழியர்கள் இருந்தனர். எனவே, அவரது பங்களிப்பை மறுக்க முடியாது. ஆனால் அவர் அரசியலமைப்பை எழுதினார் என்று சொல்வது அர்த்தமற்றது.

இந்த செயல்முறையின் அதிகாரம் மிக்கவராகக் கருதப்படும் வரலாற்றாசிரியர் கிரான்வில் ஆஸ்டின், “காங்கிரஸ் உயர்மட்டக்குழுக்களின்” ஒப்புதல் இல்லாமல் ஒரு வார்த்தை கூட அரசியலமைப்பில் நுழைய முடியாது என்று தெளிவாக எழுதியுள்ளார். இந்த சூழலில், ராஜ்யசபாவில் பேசும்போது, ​​அம்பேத்கர் தன்னை “ஒரு குறுக்குவழியாக (a hack) ” ஆகப் பயன்படுத்தியதாகக் கோபப்பட்டதுடன் “என்னிடம் கேட்கப்பட்டதை, நிறைவேற்ற நிறைய இடங்களில் என் விருப்பத்திற்கு மாறாக செய்ல்பட்டிருக்கின்றேன்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அம்பேத்கரை அரசியலமைப்பு சபைக்குள் கொண்டுவருவதில் காந்தி எவ்வாறு ஒரு சிறந்த மூலோபாயவாதியாக இருந்தார் என்பதையும் நீங்கள் பேசினீர்கள். அவர்களின் கருத்துக்கள் எந்த வழிகளில் வேறுபட்டன? ஏனென்றால் இன்றைய இந்தியாவில், அவர்கள் எதிரிகளாகக் காட்டப்படுகிறார்கள்.

அவர்களின் கருத்து அரசியல் சார்ந்தது. 1935 ஆம் ஆண்டில், காந்தி மிகவும் ஒழுக்கமான நிலைப்பாட்டை எடுத்தார்: தலித்துகளுக்கு தனி வாக்காளர் தொகுதிகள் வழங்கப்பட்டால், அவர்கள் இந்து சமூகத்திலிருந்து நிரந்தரமாகப் பிரிக்கப்படுவார்கள். சாதி குறித்த காந்தியின் மரபுவழிக் கருத்துக்களும் ஒருவித பதட்டத்தைத் தூண்டின. காந்தி எப்போதும் தீண்டாமை மட்டுமே கூடாது என்றும் சாதிகள் நல்லது என்றும் நம்பினார், அனைத்து உயர் சாதி சீர்திருத்தவாதிகளின் குரலும் தீண்டாமை ஒழிய வேண்டும், அதே நேரத்தில் அவர்கள் சாதியைத் தொடக்கூடாது என்பதுதான்.

அரசியலமைப்புச் சட்டத்திலும் அதுதான் நடந்தது. தீண்டாமை ஒழிந்தது, ஆனால் சாதி அப்படியே இருந்தது. சாதி ஒழியாமல் தீண்டாமை எப்படி ஒழியும்?

காந்தியின் உத்தி, மற்றும் தெளிவு அல்லது பெருந்தன்மை, நீங்கள் அதை என்ன அழைத்தாலும், அம்பேத்கரை அமைச்சரவையில் சேர்க்க நேருவை அவர் வற்புறுத்தினார். எனது கருதுகோள் என்னவென்றால், காந்தி மட்டுமே அம்பேத்கர் அரசியலமைப்பு சபையில் சேர்க்கப்பட்டதற்குப் பின்னால் இருந்தார்.

அம்பேத்கருக்கும் சாவர்க்கருக்கும் இடையேயான உறவு எப்படி இருந்தது. ஏனென்றால் இன்று அவர்கள் நல்ல நண்பர்களாக இருந்ததாகக் காட்டப்படுகிறார்கள். உண்மையில் நட்பு இருந்ததா?

நிச்சயமாக இல்லை. அம்பேத்கர் ஹெட்கேவர், கோல்வால்கர் மற்றும் தத்தோபந்த் தெங்கடி ஆகியோருடனும் நண்பர்களாக இருந்தார் என்று இந்துத்துவாவாதிகள் முன்வைக்க முயற்சிக்கின்றனர். அம்பேத்கருக்கு சாவர்க்கருடன் எந்த சமரசமும் இல்லை. பாகிஸ்தான் பற்றிய தனது புத்தகத்தில், அவர் அவரை கேலி செய்கிறார்.

இன்றைய இந்தியா, நாட்டை ஒரு இந்து ராஷ்டிரமாக மாற்றுவதை நோக்கி பயணிக்கிறது. இதைப் பற்றி அம்பேத்கர் என்ன நினைத்தார்?

அம்பேத்கர் “இந்து ராஜ்ஜியம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தி, அது வந்தால், அது நாட்டிற்கு மிகப்பெரிய பேரழிவாக இருக்கும் என்றும், அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்றும் கூறினார். அம்பேத்கருக்கு இஸ்லாத்தை விட இந்து மதத்தில் பெரிய பிரச்சனை இருந்தது. அவர் ஒருபோதும் ஒரு இந்து ராஷ்டிரத்தை ஆதரிக்க மாட்டார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

படிக்க:

  ஆனந்த் டெல்டும்டேவின் சிறை வாழ்வின் இரண்டாண்டு நிறைவு: அம்பேத்கர் பேத்தியின் உருக்கமான கடிதம்!

  அரசியலமைப்பை பாதுகாப்பது அம்பேத்கரின் நோக்கத்துக்கு நியாயம் செய்யுமா?

மார்க்சிய தத்துவம் குறித்த தற்போதைய ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி-யின் விமர்சனங்களிலிருந்து அம்பேதகரின் விமர்சனம் எப்படி மாறுபடுக்றது?

அம்பேத்கருக்கு மார்க்சிய சித்தாந்தத்தில் நிச்சயமாக சிக்கல் இருந்தது. அவர் இரு சிக்கல்கள் இருப்பதாக பார்த்தார் : மார்க்சியம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நம்பியிருந்தது, மற்றொன்று அது வன்முறையை நம்பியிருந்தது. இப்போது, ​​எந்த மார்க்சிய அறிஞரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அடிப்படையில், அம்பேத்கரின் சித்தாந்தம் நடைமுறைவாதத்தில் (pragmatism) வேரூன்றியுள்ளது, அதை அவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தனது பேராசிரியர் ஜான் டியூயிடமிருந்து பெற்றார். அவர் இங்கிலாந்தில் வாழ்ந்தபோது, ​​சீர்திருத்தவாதமும் (Fabianism) அவரை பாதித்தது. இந்த சித்தாந்தங்களின் தாக்கம் அவர் சொன்ன மற்றும் செய்த பல விஷயங்களில் பிரதிபலித்தது. இந்த சித்தாந்தங்கள் மார்க்சியத்திற்கு விரோதமானவை. அம்பேத்கரும் மார்க்சியத்தை அவற்றின் கண்ணாடி மூலம் பார்த்தார்.

அந்த நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக இருந்தது.

ஆம். அவர் கம்யூனிஸ்டுகளுடன் போராட வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக இருந்தது.

ஆம். அவர் கம்யூனிஸ்டுகளுடன் போராட வேண்டியிருந்தது. இருவரும் ஒரே தொகுதியைப் பகிர்ந்து கொண்டனர். கம்யூனிச சித்தாந்தத்தைப் பற்றி அவருக்கு அதிக அக்கறை இல்லாதிருக்கலாம். நூலகத்தில் அவரது புத்தகங்களைப் பார்த்தேன், அங்கே ஒரே ஒரு “தாஸ் கேபிடல்” தொகுதி மட்டுமே உள்ளது. அதுவும் படிக்கப்படாததாகத் தோன்றியது. மார்க்சியம் பற்றிய இரண்டாம் நிலை புத்தகங்கள் இருந்தன. புத்தகங்களைப் படிக்கும்போது வண்ண பென்சில்களால் பக்கங்களில் அடிக்கோடிட்டு கருத்து தெரிவிப்பது அம்பேத்கரின் பழக்கம். மார்க்சியம் தொடர்பான புத்தகங்களில் இவற்றை நான் எங்கும் காணவில்லை.

பிரிட்டிஷ் ஆட்சி குறித்து அம்பேத்கரின் கருத்துக்கள் என்ன? அது இந்திய உயர் சாதியினருக்கு சாதகமாக மாற்றப்படும் என்று அவர் நம்பினார்? எனவே, அவரது பயம் சரியா?

ஆம். ஆங்கிலேயர்கள் உண்மையில் அதிகாரத்தை மாற்றியபோது, ​​அது இயல்பாகவே காங்கிரசிடம் வந்தது. காங்கிரஸ் கட்சி இயல்பில் சமூகத்தின் உயரடுக்கு மக்கள், நில உரிமையாளர்கள் மற்றும் முதலாளிகளின் பிரதிநிதித்துவ அமைப்பாக இருந்தது. எனவே, காந்தியின் வெகுஜன இயக்கமாக பொதுவில் முன்னிலைபடுத்திய போதிலும், காங்கிரஸ், அதன் மையத்தில் இந்த வகுப்புகளையேப் பிரதிநிதித்துவப்படுத்தியது. இயற்கையாகவே, ஆங்கிலேயர்கள் வெளியேறிய பிறகு, ஆட்சி உயர் சாதியினரின் கைகளுக்குச் சென்று, அவர்கள் தலித்துகளைப் புறக்கணிப்பார்கள் என்ற அச்சம் அம்பேத்கருக்கு இருந்தது. அதனால்தான், தலித்துகளின் உரிமைகள் பாதுகாப்பாக இருக்க, அவர்களின் எதிர்கால அதிகார அமைப்பில் ஒரு பங்கிற்காக அவர் தனது முழு அரசியல் வாழ்க்கையையும் போராடினார்.

சாதி அமைப்பை ஒழிக்க வேண்டுமென்றால், இந்து மதத்தையே ஒழிக்க வேண்டும் என்றும் அம்பேத்கர் கூறினார். இந்த நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, உயர் சாதி ஆதிக்கம் செலுத்தும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இப்போது பாபாசாகேப்பை கையகப்படுத்தும் போக்கை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஒருபுறம், அம்பேத்கரை நீங்கள் கையகப்படுத்தலாம், வேறு இடங்களில் அவர் கூறியதைத் தேர்ந்தெடுத்துப் புறக்கணிக்கலாம். சாதி ஒழிப்பு என்ற புத்தகத்தில், சாதி அமைப்பின் வேர்கள் இந்து தர்ம சாஸ்திரங்களில் இருப்பதாக அவர் வெளிப்படையாக எழுதினார். மேலும் இந்து தர்ம சாஸ்திரங்கள் அழிக்கப்படாமல், சாதி அமைப்பு நீங்காது. அப்போது அவர் இந்து மதத்திலிருந்து வெளியேற முடிவு செய்திருந்தார். இந்துக்களுக்கும் இந்து மதத்திற்கும் எதிராக அவர் பேசிய ஒரே நிகழ்வு இதுவல்ல. ஆர்எஸ்எஸ் அல்லது பாஜகவால் இவை ஒருபோதும் குறிப்பிடப்படவில்லை.

சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடி நாக்பூரில் உள்ள தீக்சபூமிக்குச் சென்று, 1956 இல் அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவிய இத்திற்கு சென்று அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்தினார். பாஜக ஆளும் மாநிலங்கள் மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்களைக் கொண்டுவரும் இதே காலகட்த்தில். இந்த முரண்பாட்டை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

அம்பேத்கர் தொடர்பான பாஜகவின் நடத்தை முற்றிலும் முரண்பாடானது. அவர்கள் தர்க்கரீதியாக நிலையானவர்களாக இருந்தால், அவர்களுக்கு சில நெறிமுறைகள் இருந்தால், அம்பேத்கரைத் தொடவே கூடாது. அவர்கள் முன்வைப்பது எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றுகிறது. அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து வெளியேறினார். புத்த மதத்தை இந்து மதத்தின் ஒரு பிரிவாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இந்த முழு இந்து கும்பலும் தான் புத்த மதத்தை இந்து மதத்தின் ஒரு பிரிவாக ஏற்றுக்கொண்டதாகக் கூறுகிறது. புத்த மதம் பிராமணியத்திற்கு எதிரான ஒரு கிளர்ச்சி. இந்து மதத்தினர் சமீபத்தில் தங்களை சனாதனிகள் என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர். ஒருவேளை, அவர்கள் அந்த பெயரைப் பயன்படுத்தலாம்.

ஆனால் அவர்கள் “இந்து” என்று சொல்லும்போது, ​​அது வெளிநாட்டினர் வழங்கிய பெயர். எனவே, இது எல்லாம் நகைச்சுவையானது. அம்பேத்கர் யாரும் தன்னை வணங்குவதை விரும்பவில்லை; அவர் அதை எதிர்த்தார். யாரும் அவரை வணங்குவதைப் பற்றி நான் கவலைப்படவில்லை, ஆனால் தலித்துகள் அம்பேத்கரை வணங்குவதைப் பற்றி நான் அதிகம் கவலைப்படுகிறேன். அது அவரது மதிப்புகளையும் இலட்சியங்களையும் மறப்பதற்குச் சமம். அது மோடி அவரை வணங்குவதை விட ஆபத்தானது.

ஆனால் சமீப காலங்களில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவை அம்பேத்கரை ஓரளவு கையகப்படுத்தியுள்ளன. மேலும் தலித் அமைப்புகள் இந்த அரசியல் விளையாட்டைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டன. நீங்கள் அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஆம், நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. துல்லியமாக. அதனால்தான் நான் இந்தப் புத்தகத்தை எழுத வேண்டியிருந்தது. அம்பேத்கரின் சொந்த மக்களே அந்த மனிதரைப் புரிந்து கொள்ளவில்லை. அவர்களின் தலைவர்களும் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் சந்தர்ப்பவாதிகளாக மாறி அவரின் பார்வையை குருகியதாக திரிக்க முயல்கின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) வீழ்ச்சியைப் பற்றி சொல்லுங்கள்.

உத்தரப்பிரதேசத்தில் தலித்துகளின் குறிப்பிட்ட மக்கள்தொகை, வரலாற்று மற்றும் அரசியல் அம்சங்கள் மற்றும் மறைந்த கன்ஷி ராமின் நிறுவனத் திறன்கள் காரணமாக BSP வெற்றி பெற்றது. சூழ்நிலைகள் மாறியபோது, ​​BSP வீழ்ச்சியடைந்தது. BSP உண்மையில் வேறு பாதையில் சென்றது. அம்பேத்கரின் நடைமுறைவாதம் சில முக்கிய மதிப்புகளில் சமரசம் செய்யவில்லை; BSPயால் அதைச் செய்ய முடியவில்லை. அதிகாரத்தைத் தேடி ஓடிய BSP, வழியில் அதன் அடிப்படை பலத்தை இழந்தது.

அப்படியானால், தலித் அமைப்புகள் அம்பேத்கரின் சிந்தனைகளின் மையத்தைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டன என்றும், அதனால்தான், இந்த நிலை என்றும் நீங்கள் கூறுகிறீர்களா?

நிச்சயமாக. நான் அதைத்தான் செல்கிறேன். ஏனென்றால் அவர்கள் அம்பேத்கரின் சிக்கலான ஆளுமையை ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லை. அம்பேத்கர் என்ன விரும்பினார், அவரது குறிக்கோள் என்ன என்பதை யாராவது வகுக்க வேண்டியிருந்தது. இந்த வகையான சிந்தனையை ஊக்குவிக்கவே நான் இந்தப் புத்தகத்தை எழுதினேன். அம்பேத்கரின் காலத்தில், அவர் மீது பல சக்திகள் தாக்கத்தை ஏற்படுத்தின, அவர் தனது சொந்த பாதையை உருவாக்கினார், அதை அவர் விரிவுபடுத்தினார். தலித்துகள் தங்கள் சொந்த பாதையை எடுக்க வேண்டியிருக்கிறது.

மொழியாக்கம்: தாமோதரன்

https://frontline.thehindu.com/politics/anand-teltumbde-ambedkar-iconoclast-legacy-politics/article69429623.ece

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here