திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கவனத்தை குவித்துள்ளது. கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நட்சத்திரமும், பெளர்ணமியும் இணையும் நாளுக்கு முன்னாள் இரண்டு நாட்கள் துவங்கி கார்த்திகை அன்று திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதும், அதேபோலவே மலைக் கோவில்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதும் ஒரு வாடிக்கையாக இருக்கின்றது.
வீடுகளில் தீபத்தை ஏற்றி வழிபடுவது, கோவில்களில் தீபம் ஏற்றி வழிபடுவது ஆகியவை இந்து மதத்தின் நம்பிக்கை என்ற பெயரில் கடைபிடிக்கப்படுகிறது. கார்த்திகை தீபத்தை பற்றி பல்வேறு விதமான பகுத்தறிவுக் கருத்துகள் முன்வைக்கப்பட்டாலும் மக்கள் மனதில் தீபத்தை ஏற்றி வழிபடுவது ஒரு நம்பிக்கையாக உள்ளது.
இந்த நம்பிக்கைகளை மதவெறியாக மாற்றுகின்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆர்எஸ்எஸ் பாஜக உள்ளிட்ட சங்பரிவார கும்பல், திருப்பரங்குன்றத்தில் உச்சிப் பிள்ளையார் கோவில் அருகில் ஏற்றப்படுகின்ற தீபத்தை புறந்தள்ளிவிட்டு சிக்கந்தர் தர்கா அருகில் உள்ள அளவைக் கல் மீது தீபம் ஏற்றுவது தான் உண்மையான தீபம் என்று வெறித்தனமான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதே இல்லை என்பது போல கருத்துப் பிரச்சாரம் நடத்துகிறார்கள். மக்களிடையே நிலவுகின்ற மிக மெல்லிய நம்பிக்கைகளை, மதம் குறித்த நம்பிக்கை உணர்வுகளை மதவெறியாக மாற்றுவதில் பாசிஸ்டுகள் படிப்படியாக வெற்றி பெற முயற்சிக்கின்றார்கள். ‘
‘அயோத்தியில் ராமன் பிறந்தான்’ என்ற கட்டுக்கதையை முன்வைத்து அங்கே 464 ஆண்டுகளுக்கும் மேலாக பாபர் மசூதி இருந்த இடத்தில் தான் ராமன் பிறந்தான் என்ற நம்பிக்கையை முன்வைத்து பிரச்சாரத்தை துவக்கியது ஆர்எஸ்எஸ். எந்த விதமான வரலாற்று ஆதாரங்கள் இல்லாத போதும் பாபர் மசூதியை இடித்து தள்ளினார்கள். தற்போது அந்த இடத்தில் ராமனுக்கு கோவில் கட்டி விட்டார்கள். அதனைக் கொண்டு நாட்டில் ராம ராஜ்ஜியம் நிறுவுவது என்ற இலக்கை நோக்கி முன்னேற துடித்துக் கொண்டிருக்கிறார்கள். “ராமனுக்கு அணில் உதவியதை” போல நீதிமன்றமும் தன்னால் முடிந்த உதவியை ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு செய்தது.
அதுபோலவே, திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்தன்று பிரிட்டிஷ்காரர்கள் அளப்பதற்கு பயன்படுத்திய அளவைக் கல் மீது தீபம் ஏற்றுவது தான் முருகனுக்கு பக்தர்கள் செலுத்துகின்ற மரியாதை என்றும், அவ்வாறு செலுத்தவில்லை என்றால் நாடே குட்டிச்சுவராக போய்விடும், இந்துக்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு விடும் என்பதைப் போல ஒரு சித்திரத்தை சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தனது கருத்து பிரச்சாரங்களின் மூலம் மீண்டும் மீண்டும் முன்னிறுத்தி வருகின்றனர். இங்கும் அணிலாக நீதிமன்றம் உதவியுள்ளது.
பாசிஸ்டுகளை முறியடிப்பதற்கு அவர்கள் முன்வைக்கின்ற கருத்துகள் மற்றும் பிரச்சார உத்திகளுக்கு மாற்றாக திறமையான அறிவியல் பூர்வமான வாதங்களை, பிரச்சாரங்களை முன்வைத்து விட்டால் அவர்களை முடக்கி விடலாம் என்பது பாசிசத்தை பற்றிய புரிதலில் உள்ள குறைபாடு ஆகும்.
அவர்கள் முன்வைக்கின்ற ஒரு பொருளைப் பற்றி நீங்கள் விவாதிப்பதற்கு மூச்சை போட்டு தரவுகளை திரட்டி பேச துவங்கினால் அவர்கள் அதை விட்டுவிட்டு வேறு ஒரு ஒன்றை கையில் எடுத்துக் கொள்வார்கள். பிறகு அதற்கு நீங்கள் மீண்டும் தரவுகளை திரட்டி பேச துவங்க வேண்டும். அப்போது மீண்டும் வேறொரு பிரச்சனைக்கு சென்று விடுவார்கள். அதே போல நீங்கள் குறிப்பிட்ட பிரச்சினையில் அவர்களை நிறுத்தி விவாதம் செய்தால் பிரச்சனையின் அடிப்படையை திசை திருப்புவதற்கு பல்வேறு வகைகளில் முயற்சிப்பார்கள் அல்லது மலிவான மத உணர்ச்சிகளை தூண்டிவிட்டு வெற்றி பெறுவதற்கு முயற்சிப்பார்கள்.
படிக்க: திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க முயலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு!
அவர்களுக்கு தெரிந்த வழிமுறை ஒன்றே ஒன்றுதான். அதாவது சிறு வயது குழந்தைகள் முதல் நெஞ்சில் நஞ்சை விதைப்பது போல கலவரங்களுக்கு பயிற்சி கொடுப்பதை ஷாகா என்ற பெயரில் நடத்தி பயிற்சி கொடுக்கின்றார்கள். அதன் மூலமாக தெருச்சண்டைகளுக்கு பழக்குவது, அதன் அடுத்த கட்டமாக எதிரிகள் என்று அவர்கள் அறிவிப்பவர்களை வன்முறையுடன் தாக்குவது, கொலை புரிவது என்பது தான் அவர்களின் வழிமுறையாகும். எனவே தான் சொல்கிறோம் பாசிஸ்டுகளை ஒருபோதும் கருத்துப் பிரச்சாரத்தின் மூலம் முறியடிக்கவே முடியாது.
வடமாநிலங்களில் சமீபத்தில் ஆயுத பூஜையின் போது, கவரங்களில் அவர்கள் பயன்படுத்துகின்ற அருவாள், கத்தி முதல் துப்பாக்கி வரை அனைத்தையும் வைத்து ஆயுத பூஜை நடத்தினார்கள். இவையெல்லாம் சமூக வலைதளங்களில் பரவிய பிறகும் கூட அவர்களின் மீது சட்ட ரீதியாக ஒரு நடவடிக்கையும் பாயவில்லை. ஆனால் ஆயுதப் போராட்ட அரசியல் என்று பேசினாலே அவர்கள் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவது அவர்களை ஊபா சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பது என்பதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுதலின் கீழ் அவர்கள் செய்யும் ஆட்சியாகும். ஏதோ சட்டத்தின் ஆட்சி நடப்பதைப் போல மக்களின் மனதில் கருத்துருவாக்கம் செய்வது என்பதில் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள் மீண்டும் மீண்டும் வெற்றி பெறுகிறார்கள்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்தாலும் இந்த ஆண்டு உச்ச நீதிமன்றம், அதில் உள்ள ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை ஏற்ற நீதிபதிகள் இந்த ஒரு முறை மட்டும் தீபம் ஏற்றிக் கொள்ளட்டும் என்று விசித்திரமான, அயோக்கியத்தனமான தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளார்கள்.
இதனை எதிர்த்து தமிழகத்தில் ஆளுகின்ற தமிழக வெற்றிக் கழகம் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு என்றெல்லாம் போட்டுக்கொண்டு இருந்தாலும், அரசாங்கத்தை நேரடியாக கட்டுப்படுத்துகின்ற அதிகாரத்தை உச்சநீதிமன்றம் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. நவம்பர் 24 அன்று சிக்கந்தர் தர்கா அருகில் உள்ள அளவைக்கல் மீது தீபத்தை ஏற்றுமாறு மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நேரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பை வரவேற்று ஆர்எஸ்எஸ்-பாஜக, இந்து முன்னணி மற்றும் சங் பரிவார குண்டர் படையினர், கடந்த சில நாட்களாக மதுரையில் முற்றுகையிடுவது, பாசிச குண்டர்களை ஓரிடத்தில் குவிப்பது, ஆர்ப்பாட்டங்கள் என்ற பெயரில் சாலை மறியல்கள் நடத்துவது என்ற சட்டவிரோத செயல்களை செய்து வருகின்றனர். இந்து முன்னணி குண்டர் படையின் தலைவனான காடேஸ்வரா சுப்ரமணியம் போன்றவர்கள் தலைமையில் இத்தகைய போராட்டங்கள் இந்து மக்களின் உரிமைகளை பாதுகாப்பது என்ற பெயரில் நடத்தப்படுகின்றது.
படிக்க: திருப்பரங்குன்றம் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு: அநீதிக்கு மேல் அநீதி!
ஆனால் இந்துக்கள் பாதிப்புக்குள்ளாகின்ற கல்வி உரிமை, வேலை உரிமை, விவசாயிகளின் விளைபொருளுக்கு விலை நிர்ணயிக்கப்படுகின்ற உரிமை, விலைவாசி கடுமையாக ஏறி வாழ முடியாத வாழ்க்கை அவலங்கள் அதிகரித்துள்ள நிலைமை ஆகியவற்றை பற்றி ஒருபோதும் பேசாத பாசிச இந்து முன்னணி குண்டர் படையானது, கோவில் வழிபாடு, தீபம் ஏற்றுவது என்று உடுக்கடிப்பதன் மூலம் உண்மையான பிரச்சனைகளிலிருந்து மக்களை திசை திருப்பி குளிர் காய்கின்றனர்.
வரலாற்று ரீதியான ஆதாரங்களையும், தொல்லியல் ரீதியான ஆதாரங்களையும், நீதிமன்ற தீர்ப்புகளையும், முன்னர் திருப்பரங்குன்றத்தில் இருந்த நிலைமை குறித்த புகைப்படங்களையும், அப்போது வாழ்ந்த சிலரின் காணொளிகளையும் எடுத்து போடுவதன் மூலம் பாசிச ரத்த வெறி பிடித்த அரசியலை முறியடித்து விடலாம் என்றால் அது ஒருபோதும் முடியாது.
ஒருபுறம் கருத்தியல் ரீதியாக அவர்களை அம்பலப்படுத்தி மக்களிடமிருந்து தனிமைப்படுத்துகின்ற போதே அவர்கள் கடைபிடிக்கின்ற ஷாகா பயிற்சிகள் போல பயிற்சிகளை துவங்க வேண்டும். பாரம்பரிய, மரபுவழி ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான உரிமைகளை சட்டரீதியாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். பாசிச குண்டர்களுக்கு பாடம் புகட்டுகின்ற வகையில் மக்கள் படையை உருவாக்கி கலவரங்களை தடுத்து நிறுத்துவதற்கு முன்னணியில் நின்று பதிலடி கொடுக்க வேண்டும்.
இந்த வகையில் பாசிஸ்டுகளை நேருக்கு நேர் அம்பலப்படுத்தி முறியடிக்கின்ற அரசியலைக் கொண்டு செல்ல வேண்டும். மாறாக நல்லிணக்கம் என்ற மென்மையான போதனைகளோ அல்லது இருவரும் கலவரம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் போல சமூக நல்லிணக்கம் பேசுவது, அரசியலமைப்புச் சட்டத்தை அளவுக்கு மீறி தூக்கிப்பிடிப்பது போன்ற நடவடிக்கைகளோ ஆர்எஸ்எஸ் பாஜக பாசிச பயங்கரவாதிகளுக்கு துணை போகவே செய்யும் என்பதை மீண்டும் வலியுறுத்துவோம்.
பாசிஸ்டுகளின் அரசியலை கூர்மையாக முன்வைத்து பதிலடி கொடுக்கின்ற போது மட்டும் தான் கருத்தியல் ரீதியாக அவர்களை தனிமைப்படுத்த முடியும். அதே சமயத்தில் அவர்களின் கலவர நடவடிக்கைகளுக்கு உரிய வகையில் மக்களை தயார்படுத்தி பதிலடி கொடுப்பதன் மூலம்தான் அவர்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியும்.
ஒரு பக்கம் பாசிஸ்டுகள்; மறுபக்கம் பாசிசத்தை எதிர்த்து முறியடிக்க போராடுகின்ற மக்கள், இரண்டே இரண்டு முகாம்கள் தான் உள்ளது. இதில் நீங்கள் எந்த பக்கம் என்பதை முடிவு செய்வதற்கு கால அவகாசம் இல்லை.
- பார்த்தசாரதி.
புதிய ஜனநாயகம் தினசரி






