விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் புலி குட்டியுடன் அமர்ந்து கொடுத்த புகைப்படத்தை கண்டு மெய் சிலிர்க்காத, ‘ போராளிகள்’ இருக்க முடியாது. வன்னி காடுகளில் சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக புலிகள் அமைப்பை நிறுவி போராடிய பிரபாகரனை போல தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விருப்பம் கொண்ட தமிழக பூனைகள் பலரும் தனது உடம்பில் சூடு போட்டு கொண்டு புலிகள் ஆக தன்னை கருதிக் கொண்டனர்.

மார்க்சிய லெனினிய அமைப்புகளிலிருந்து வெளியேறி தமிழ் தேசியம், தமிழ்த் தேசிய விடுதலை, அதற்கு தமிழ்நாடு விடுதலைப் படை என்று உருவாக்கிக் கொண்டு ஈழத்தில் விடுதலைப்புலிகள் போராடியதை போல தமிழகத்தில் போராட கிளம்பிய தமிழர் விடுதலை படை அமைப்பைச் சார்ந்த சுப.இளவரசன் கையில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்தது முன்னர் நக்கீரன் இதழில் வெளியானது.

இந்தச் செய்தியையும் கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பரவி கிடக்கும் முந்திரிக் காடுகளில் தமிழர் விடுதலைப் படை ஆயுதப் போராட்டத்தை துவக்கி விட்டதாக சிலர் மனக் கிளர்ச்சி அடைந்தனர்.

தான் நேரடியாக போர்க்களத்திலோ அல்லது சண்டைகளிலோ ஈடுபட முடியாத ஒருவர் தனக்கு பதிலாக வேறொரு கதாநாயகன் அந்த பணிகளை செய்யும்போது அவர் சினிமா ஹீரோவாக இருந்தாலும் சரி அல்லது நிஜ வாழ்க்கையில் துப்பாக்கிகளுடன் போராடுகின்ற யாராவது ஒருவராக இருந்தாலும் சரி அதை கண்டு தனது மறுபக்கத்தை காட்டிக் கொள்வார்கள்.

அதுபோலத்தான் விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் உள்ள திருவாளர் வன்னி அரசு தன்னை ஒரு ஈழ விடுதலை ‘ போராளி’ போல கருதிக் கொண்டு ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் தமிழகத்தில் போராட்டங்களில் ஈடுபட்டு ஆயுள் தண்டனை பெற்றவர்.

தவெக ஆட்சியமைக்க விசிக ஆதரவு வழங்கியதற்கு ஈடாக வன்னியரசுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. கடந்த 10-ம் தேதி நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில்சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், முதுமலை புலிகள் காப்பகத்திற்குச் சென்றார். அப்போது, தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் சென்று விதவிதமாக ரீல்ஸ் எடுத்துள்ளார். புலிகளை துரத்திக் கொண்டு ஓடினார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவலாக பரவிக் கொண்டுள்ளது.

படிக்க: ‘பொறுக்கி’ அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ-வை கைது செய்து சிறையிலடை!

தனக்கு அமைச்சர் பதவி கிடைத்தவுடன் அதனை பயன்படுத்திக் கொண்டு ஆங்காங்கே ரெய்டுகள் நடத்துவது; சமூக நல விடுதிகளில் சென்று சோதனை நடத்துவது என்ற எல்லையைத் தாண்டி வனத்துறை அதிகாரிகளுடன் காட்டுக்குள் புகுந்து புலிகளை துரத்திச் சென்று அதையும் ரீல்ஸாக எடுத்துப் போட்டதன் மூலம் தனது போராளி உணர்வின் மறுபக்கத்தை காட்டியுள்ளார் திருவாளர் வன்னி அரசு.

வன்னி அரசுகள் ஒரு வகைமாதிரி தான்! ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரண்டு எதிர் எதிரான பண்புகள் இருக்கத்தான் செய்யும். அந்த பண்புகளில் மக்களின் சார்பாக மக்களின் விடுதலைக்காக போராடுகின்ற போது அதற்கு நேர்மையாகவும், துணிச்சலாகவும், எந்த விதமான விளம்பரங்கள் இல்லாமல் போராட்டக் களங்களில் முன்னே நிற்க வேண்டும் என்ற ஒரு முகம் இருக்கும் போதே இதனைப் பயன்படுத்திக் கொண்டு சொந்த வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற மற்றொரு முகமும் கண்டிப்பாக இருக்கும் என்பது தான் புரட்சிகர இயக்கவியல் கண்ணோட்டமாகும்.

எந்த ஒரு பொருளும் 100% ஒரு பக்க சார்பாக இருக்கவே முடியாது என்பதுதான் பொருள்களைப் பற்றியும் உலகில் இயங்குகின்ற, இயங்காத அனைத்து பொருட்களை பற்றியும் உள்ள இயற்கையின் விதியாகும்.

இந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போது ‘ போராளிகள்’ என்று அறியப்படுபவர்கள் தனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதற்கு செய்கின்ற முயற்சிகள் பல சந்தர்ப்பங்களில் சிறுபிள்ளைத்தனமாகவும், தற்குறித்தனமாகவும் வெளிப்பட்டு விடுகிறது.

வரலாற்றில் தனி நபர்களின் பாத்திரத்தை பற்றி நாம் பலமுறை முன் வைத்துள்ளோம் சமீபத்தில் எழுதிய கட்டுரையில் கூட புதிய ஜனநாயகம் தினசரி இது பற்றி எழுதியிருந்தது என்ற போதிலும் தனி நபர்கள் தன்னை சுற்றி ஒரு ஒளிவட்டத்தை அமைத்துக் கொள்ள முயற்சிக்கும் போது, அதுவும் அதற்குரிய அடிப்படைகள் இல்லாமல் முயற்சிக்கும் போது அது Rehabilitation மாறிவிடுகிறது.

படிக்க: தொல்.திருமா வன்னி அரசு: எப்படி இருந்த தோழர்கள் இப்படி ஆகிவிட்டார்களே…!?

வாய்ப்பு கிடைக்கும் போது தனது மறுபக்கத்தை அதாவது தனது மனதில் உள்ள பிற்போக்கு சமூகத்தின் அழுக்குகளை வெளிப்படுத்துவதற்கு இத்தகைய ‘ போராளிகள்’ தயங்குவதே கிடையாது.

புரட்சிகர அமைப்புகளில் செயல்பட்டு கொண்டிருக்கும் போது அதன் விதிகளுக்கு உட்பட்டு நேர்மையாக செயல்படுகின்ற ஒருவர், வாய்ப்பு கிடைக்கும் போது தனது மனைவியின் பெயரில் ஒன்றரை கோடிக்கு வீடு கட்டி விட்டு எதுவும் நடக்காதது போல வெளி உலகில் ‘ புரட்சியாளராக ‘ காட்டிக் கொள்கின்ற போலித்தனங்கள் அம்பலமாகின்ற போது அந்த ‘ போராளிகளின்’’ மறுபக்கம் வெளியாகி விடுகிறது.

உணவிற்கும் உடைக்கும் பெரும்பான்மை மக்களை சார்ந்தே வாழ்கின்றோம் என்று கூறுகின்ற ஒருவர் தனது தேவைக்காக 30 லட்சத்திற்கு வீடு கட்டிக் கொள்ளும் போது அவருடைய சொந்த விருப்பங்களும், ‘ போராளியின்’ மறுபக்கமும் வெளியாகி பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கி விடுகிறது.

“எளிய வாழ்க்கை, கடினமான போராட்டம்” என்பதை முன்வைத்து களமாட கிளம்புபவர்கள் உத்தரவாதமான குட்டி முதலாளித்துவ வாழ்க்கையில் அமர்ந்து கொண்டு அன்றாடம் வீதியில் இறங்கி போராடுகின்றவர்களை பார்த்து இளக்காரமாக கேள்விகள் எழுப்புவதும் செட்டில் வாழ்க்கையில் ஒரு மில்லி மீட்டர் கூட குறைத்துக் கொள்ளாமல் புரட்சி பேசுவது ஆகியவை அனைத்தும் போராளிகளின் மறுபக்கத்தை அவர்களுக்கு உரிய இடங்களில் அம்பலமாக்கி கொள்கிறது.

திருச்சி பெல் நிறுவனத்தில் செயல்படுகின்ற புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான பாய்லர் பிளான்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், போனசுக்காகவும் போராடியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டபோது அவர்களது வழக்கை நடத்திய மைக்கேல் பெர்னெண்டஸ் என்ற தொழிற்சங்க தலைவர் சைக்கிளில் செல்வார், தொழிலாளிகளோடு தொழிலாளியாக அமர்ந்து பணியாற்றுவார் என்றும், சாலையோர கடைகளில் உணவு அருந்திவிட்டு தனது வேலையை முடித்துக் கொள்வார் என்றும் கேள்விப்பட்டதில் இருந்து தற்போதைய போராளிகளை பார்க்கும் போது நகைச்சுவையாக தான் இருக்கின்றது.

பதவி, அதிகாரம், பண வசதி போன்றவை போராளிகளின் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கி விடும் அல்லது தலைகீழ் மாற்றத்தை கொண்டு வந்து விடும் என்பதை தான் அவர்களில் உள்ள மற்றொரு முகம் வெளிக்காட்டுகிறது.

படிக்க: அவநம்பிக்கைக்குத் தள்ளும் திருமா, வைகோவின் ஓட்டரசியல்!

ஒவ்வொருவருக்கும் தனக்கு உள்ளே இருக்கின்ற ‘அம்பி’ என்கின்ற அந்நியனை பற்றி தெளிவாகவே தெரியும். அவனைக் கட்டுப்படுத்திக் கொண்டு நேர்மையாக வாழ்கின்ற வரை முன்னுதாரணமிக்க போராளிகளாகவும், அவர்களுக்குள் உள்ள அம்பியின் குணம் வெளியாகும் போது அதே போராளிகளின் மறுபக்கம் வெளி உலகத்திற்கு தெரிகின்ற வகையில் அமைந்து விடுகிறது.

இந்தக் கொடூரமான நோய் பொதுவுடமை இயக்கத்தில் செயல்படுபவர்கள் துவங்கி சமூக நீதிக்காக போராடுகின்ற ஜனநாயக இயக்கங்கள் வரை நீக்கமற பரவி இருப்பது தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் உடனுக்குடன் அம்பலமாகி பொது வாழ்க்கையில் நேர்மையாக செயல்படுகின்றவர்கள் மீதும் கடுமையான விமர்சனங்களை உருவாக்குகின்றது.

இதன் உப விளைவாக ஊருக்கு உபதேசிப்பார்கள் சொந்த வாழ்க்கையில் வேறுமாதிரி வாழ்வார்கள் என்ற விமர்சனங்களும் அதிகரிப்பதற்கு அடிப்படையை உருவாக்கிக் கொடுக்கின்றது. “நீ பிறரை சுட்டிக்காட்டும் போது ஒரு விரல் அவரை நோக்கியும் மீதமுள்ள மூன்று விரல்கள் உன்னை நோக்கியும் இருக்கிறது என்பதை மறந்து விடாதே” என்று ஒரு ஐரோப்பிய பழமொழி உள்ளது.

இதையெல்லாம் கவனத்தில் கொண்டு போராளிகளின் வாழ்க்கை விமர்சனத்திற்கு பணிந்து தன்னை மாற்றிக் கொள்கின்ற தன்மை கொண்டதாக, நேர்மையான முன்னுதாரணமிக்க நடைமுறை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்துகின்றோம்.

“புலியை முறத்தால் அடித்து துரத்திய” தமிழ் மகளிர்கள் வாழ்ந்த மண்ணில் புலியை துரத்திக் கொண்டு ஓடிய வன்னி அரசுகள், இத்தகைய நடைமுறை மிக மிக அவசியம் என்பதை மீண்டும் மீண்டும் நமக்கு வலியுறுத்துகிறார்கள்.

◾மாசாணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here