தமிழகத்தில் பாசிச கோமாளி விஜய் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் தனது தேர்தல் அறிக்கையில் முன்வைத்த பல்வேறு வாக்குறுதிகளை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு, லஞ்ச ஊழலை ஒழிக்க போவதாகவும்,, ஏற்கனவே தமிழகத்தை ஆண்ட திமுகவின் அமைச்சர்கள் செய்த ஊழல் நடவடிக்கைகள் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சோதனை நடத்துவது; அதனை பரபரப்பாக முன்வைத்து அரசியல்  செய்வது என்று செயல்பட்டுக் கொண்டுள்ளது.

இதற்கு முன்னர் தமிழகத்தை ஆண்ட சினிமா நடிகரும், பாசிச கோமாளியுமான எம்ஜிஆர் ஆட்சியில் விவசாயி, மீனவ நண்பன், தொழிலாளி என்றெல்லாம் திரைப்படங்களில் நடித்துவிட்டு நேரடியாக விவசாயிகள் போராடிய போது அவர்கள் மண்டையை பிளந்தது போலவும், மீனவர்கள் வாழ்கின்ற மெரினா கடற்கரையில் அவர்களை அப்புறப்படுத்துவதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்ததைப் போலவும், தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு அடக்குமுறைகளை ஏவியது போலவும் தற்போதைய பாசிச கோமாளி விஜய் ஆட்சியில் நிகழ்வுகள் தொடர்கிறது.

பாசிச கோமாளி எம்ஜிஆரின் 1977 முதல் 1987 வரையிலான பத்தாண்டு கால ஆட்சியில், நாராயணசாமி நாயுடு தலைமையிலான ‘தமிழக விவசாயிகள் சங்கம்’ மின்சாரக் கட்டணக் குறைப்பு, விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கோரி மாநிலம் தழுவிய தொடர் போராட்டங்களை நடத்தியது.துப்பாக்கிச்சூடுகள்: விவசாயிகளின் போராட்டங்களைக் கட்டுப்படுத்த எம்.ஜி.ஆர் அரசு காவல் துறையை ஏவி கடுமையான துப்பாக்கிச்சூடுகளை நடத்தியது. குறிப்பாக, 1980 டிசம்பரில் திருநெல்வேலி மாவட்டம் குருஞ்சாக்குளத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 விவசாயிகள் பலியாயினர். கைதுகள் மற்றும் சொத்து பறிமுதல்: ஆயிரக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் பம்புசெட்டுகள், மாடுகள் மற்றும் நில உடைமைகள் அனைத்தும் காவல் துறையினரால் ஜப்தி (கைப்பற்றுதல்) செய்யப்பட்டன.

அதுபோலவே 1978 அக்டோபரில் அரசு தன்னிச்சையாகக் குறைந்தபட்ச போனஸ் அறிவித்ததை எதிர்த்து அரசுப் பேருந்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தை ஒடுக்க எம்.ஜி.ஆர் அரசு ‘மினிமிசா’ (Mini-MISA) அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்து ஏவியது. இதன் மூலம் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.பஞ்சாலைத் தொழிலாளர்கள் போராட்டம்: ஊதிய உயர்வு கோரி 1977-78 காலகட்டத்தில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களும் காவல் துறையின் பலப்பிரயோகத்தால் கலைக்கப்பட்டன.கிராம நிர்வாக அதிகாரிகள் (VoS) நீக்கம் (1980): 1980 நவம்பரில் ஒரே இரவில் பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம் மூலம், பரம்பரையாகப் பணியாற்றி வந்த சுமார் 24,000 கிராம அதிகாரிகள் (கரணங்கள்/முன்னாள் வி.ஓ-க்கள்) பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். அரசுத் தரப்பில் பதிவேடுகளைக் கைப்பற்ற வலுக்கட்டாயமாகப் போலீசாரின் குண்டாந்தடி பலம் பயன்படுத்தப்பட்டது.

அதுமட்டுமின்றி மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் மீன்பிடி எல்லைகளை முறைப்படுத்தக் கோரி சென்னை மெரினா, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் போராட்டங்களை நடத்தினர். இப்போராட்டங்களின் போது சட்டம்-ஒழுங்கைக் காரணம் காட்டி, காவல் துறை மூலம் தடியடி மற்றும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மெரினா கடற்கரையை அழகு படுத்தும் திட்டத்துக்கு எதிராக 1985 ஆம் ஆண்டு மீனவர்கள் போராடிய போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு பல மீனவர்கள் உயிரிழந்தனர்.

படிக்க:

♦ சாக்கடையாகிப் போன தமிழக சட்டமன்றமும் – அதற்குத் தலைமை தாங்கும் ‘முதல்வர்’(?) நடிகர் விஜய்யும்!

♦ நகர் மற்றும் ஊரமைப்பு சட்ட திருத்தம் (2026): கார்ப்பரேட் சேவையில் நாலு கால் பாய்ச்சலில் பாசிச கோமாளி விஜய்!

சினிமா திரைப்பட இயக்குனர் திருவாளர் அட்லி முன்வைப்பதை போல விஜய் ஆட்சியில் தமிழகத்தில் ‘பொற்காலம் நிலவுவதை’ போல சித்தரிக்கப்படுவது அனைத்தும் பித்தலாட்டமே என்பது ஒவ்வொரு முறையும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. பாசிச கோமாளி எம் ஜி ஆர் ஆட்சியைப் போலவே பாசிச கோமாளி விஜய் ஆட்சி செயல்படுகிறது.

குறிப்பாக தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில், “5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும் எனவும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும்” என்றும், “சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள ஒவ்வொரு விவசாயிகளின் குடும்பத்திற்கும் விதைப்புக் கால நிதியுதவியாக ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் இரண்டு தவணைகளில்(ஜூலை – ஆகஸ்ட் பருவம், ஜனவரி-பிப்ரவரி பருவம்) வழங்கப்படும்” எனவும் அறிவித்திருந்தது.

ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன், ‘கையில் காசு இல்லை, கஜானா காலி’ என்று நாடகமாடியதுடன் தான் முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகளை வீசியெறிந்து விட்டு கார்ப்பரேட்டுகளின் காலடியில் விழுந்து சேவை செய்வதும், அதற்கு எதிராக போராடுகின்ற விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், மீனவர்கள் மீது அடக்குமுறை ஏவுவதற்கும் தயங்காமல் செயல்பட்டுக் கொண்டுள்ளது.

ஒரு எடுத்துக்காட்டாக, திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகத் தமிழகத்தின் பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஒன்றிணைந்து நடத்தி வந்த தொடர் போராட்டம் தற்போது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் மற்றும் இதர வேளாண் கடன்களைத் தமிழக அரசு உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன்வைத்து இந்தத் தீவிரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஏறக்குறைய ஒரு வார காலத்திற்கு மேல் நீடித்த இந்த போராட்டத்தை கலைத்து போக செய்வதற்கு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டது பாசிச கோமாளி விஜய் ஆட்சி. அதிகார வர்க்கத்தின் மூலமும், போலீசு குண்டாந்தடியின் மூலமும், மிரட்டியும் பணியாமல் தொடர்ந்து போராடிய விவசாயிகளை நைச்சியமாக அந்த இடத்தை விட்டு அகற்றுவதற்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் பிரச்சனையை தீர்ப்பதற்கும், கடன் தள்ளுபடி செய்வதற்கும் வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது என்பதைப் போல பேசி போராட்டத்தை நீர்த்துப்போக செய்ய முனைந்துள்ளனர். போராட்டக் களத்திலேயே விவசாயி ஒருவர் மாரடைப்பால் மாண்டு போனது விவசாயிகளின் மத்தியில் கடும் கோபாவேத்தை உருவாக்கியுள்ளது.

படிக்க:

♦ ‘அடுத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோசப் விஜய்’ தான்! தற்குறிகளின் அலம்பல்!

♦ ஜனநாயகன் விஜய் -ன் ஆட்சியில் சிதைக்கப்படும் ஜனநாயகம்

பரந்தூர் விமான நிலையத்தை விவசாயிகளின் நலனை காப்பதற்காகவும், விவசாய நிலங்களை பாதுகாக்கவும் ரத்து செய்வதாக அறிவித்து நாடகமாடிய சில நாட்களிலேயே விமான போக்குவரத்து மற்றும் புதிய விமான நிலையங்கள் கட்டுவது ஆகியவை அனைத்தையும் தனியாருக்கு சார்பாக டெல்லி எஜமானர்களுக்கு கடிதம் எழுதி இருந்தது அம்பலமாகிவிட்டது. இதனை மறைக்க, ‘தனியார் மயமாக்கல் கிடையாது; தனியார் பங்களிப்பு மட்டுமே’, என பூவும், புஷ்பமும் பாணியில் மிளகாய் அரைக்கிறார் ஆர்எஸ்எஸ்-காரரான அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்.

இதே காலகட்டத்தில் சுறா (சுரேஷ் ராமச்சந்திரன்) படத்தில் மீனவனாக நடித்தது போலவே நிஜ வாழ்க்கையிலும் இருப்பார் என்று எதிர்பார்த்து ஓட்டு போட்ட மீனவர்களின் வாழ்க்கையை நாசமாக்குவதற்கு கிழக்கு கடற்கரை எங்கும் மீத்தேன் வாய்வு எடுப்பதற்கான திட்டங்களை எதிர்ப்பு இல்லாமல் ஹிந்துஸ்தான் ஆயில் எக்ஸ்பிளரோஷன் நிறுவனத்திற்கு அனுமதி கொடுக்க முனைந்துள்ளதைப் போலவே, தனது உல்லாச, ஊதாரித்தனத்திற்காக ரூ 1200 கோடி செலவில் 21.37  ஏக்கர் நிலத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு பட்டினப்பாக்கம் மீனவர்களை அப்புறப்படுத்துகின்ற திட்டத்தையும் முன்வைத்து தனது கோரமுகத்தை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்.

கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வது ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள் மீதான அடக்குமுறைகள் அதிகமாகிக் கொண்டுள்ளது. மறுபுறம் மாணவர்களின் மீதான தாக்குதல்கள் போலீசின் அடக்குமுறைகள், வெறியாட்டங்கள் அதிகரித்துள்ளது.

இவற்றையெல்லாம் திசை திருப்புவதற்கு பிரபல கிரிமினல் பேர்வழிகளை தன் உடன் வைத்துக் கொண்டு ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் நாடகமாடி கொண்டுள்ள பாசிச கோமாளி விஜய் ஆட்சியை நம்புபவர்கள் ஒன்று முட்டாள்களாக இருக்க வேண்டும் அல்லது கடைந்தெடுத்த காரியவாதிகளாகவும், அரசியல் பிழைப்புவாதிகளாகவும் இருக்க வேண்டும்.

  • மருது பாண்டியன்

புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here