காட்சி போதை: கார்ப்பரேட்டுகளின் கொள்ளையும், அரசியல் கருத்துருவாக்கங்களும்.

புதிய ஜனநாயகம் தலையங்கம்
2026 அக்டோபர் இதழ்
 

“ஏகாதிபத்தியமும் பாட்டாளி வர்க்க புரட்சியும்” என்ற லெனினிச சகாப்தம் நடைபெற்று வருகின்ற சூழலில், 1970 ஆம் ஆண்டு ஏகாதிபத்திய முதலாளித்துவம் உருவாக்கிய மூன்றாவது தொழில்நுட்ப புரட்சி என்ற அடிப்படையில் உருவான தகவல் தொழில்நுட்பம், கணினிமயமாக்கம் மற்றும் இணையம் போன்றவை உலகை சூறையாடுவதற்கு ஏகாதிபத்திய நிதிமூலதனத்திற்கு புதிய வழிமுறைகளை உருவாக்கிக் கொடுத்தது.

அதே திசையில் 2016 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட நான்காவது கட்ட தொழில் நுட்ப புரட்சி என்ற அடிப்படையில் உருவாகியுள்ள செயற்கை நுண்ணறிவுத் திறன், இன்டர்நெட் ஆப் திங்ஸ், மேம்பட்ட ரோபோடிக்ஸ், குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்றவை உலகை சூறையாடுவதற்கு பொருத்தமான பொருளாதாரக் கட்டமைப்புகளை, கார்ப்பரேட் நிறுவனங்களை உருவாக்குவது மட்டுமின்றி, அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்துவதற்க்கு உகந்த வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதலாளித்துவ, ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனமாக திகழ்கின்ற கம்யூனிசத்தை வீழ்த்துகின்ற முயற்சியில் பல்வேறு ஆயுதங்களை கையாண்டு வருகின்ற ஏகபோக நிதிமூலதனமானது உலகம் முழுவதும் பாட்டாளி வர்க்கத்தின் மீது தொடுத்துள்ள தாக்குதல்களின் பிரதான வடிவமாக காட்சி போதை மாறியுள்ளது.

2025 ஆம் ஆண்டு உலகின் முன்னணி இடத்தை கைப்பற்றியுள்ள 10  கார்ப்பரேட் நிறுவனங்களில் நிவிடியா, ஆப்பிள், ஆல்ஃபாபெட், மைக்ரோசாப்ட்,  மெட்டா உள்ளிட்டு எட்டு இடங்களை பிடித்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் காட்சி போதையை (தகவல் தொழில் நுட்பம், செயற்கை நுண்ணறிவு, நுகர்வோர் மின்னணு சாதனங்கள், செமி கண்டக்டர், தேடுபொறி, மென் பொருட்கள், இணைய சேவைகள், சமூக ஊடகங்கள், கிளவுட் கம்யூட்டிங் உள்ளிட்ட  அனைத்தையும் பயன்படுத்துவதன் மூலமாக)   பிரதானப்படுத்தி அரசியலைக் கட்டமைக்கிறது. இவற்றின் தாக்கம் ஏற்கனவே காலனியம், அரைக் காலனிய, நவீனக் காலனிய நாடுகளாக இருந்து தற்போது மறுகாலனியாக்கத்தின் கீழ் கொண்டு செல்லப்படுகின்ற நாடுகளின் மீது மிகப்பெரும் தாக்கங்களை உருவாக்கியுள்ளது.

படிக்க: புதிய ஜனநாயகம் | அக்டோபர் 2026 மாத அச்சு இதழ்

இந்திய ஒன்றியத்தை பொருத்தவரை 2014ஆம் ஆண்டு பாசிச மோடி ஆர்எஸ்எஸ் பாஜக வெற்றி பெறுவதற்கு பின்னணியில் இருந்து செயல்பட்ட இத்தகைய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் லட்சக்கணக்கான சமூக வலைதளக் குழுக்கள் மூலமாக இரண்டு வகையான பிரச்சாரங்களை மேற்கொண்டன. அதில் ஒன்று, ஏற்கனவே பல ஆண்டுகாலம் நாட்டை ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் என்ற பெயரில் தொடுக்கப்பட்ட அவதூறுகள் ஆகியவை. மற்றொன்று, கார்ப்பரேட் சேவையில் முன்னணியில் நிற்கின்ற ஆர்எஸ்எஸ் பாஜகவை பற்றிய பிரச்சாரத்திற்கு முன்னுரிமை கொடுத்து மோடியை மிகப்பெரிய தலைவராக உருவகப்படுத்தி பிரச்சாரத்தை மேற்கொண்டது.

கடந்த 2010 ஆண்டுக்குப் பிறகு நடந்த தேர்தல்களில் இத்தகைய நிறுவனங்கள் செலுத்துகின்ற ஆதிக்கம் கோமாளிகளையும், அரசியலற்ற தற்குறிகளையும் நாட்டின் கதாநாயகர்களாக மாற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, 2014 ஆம் ஆண்டிலிருந்து தற்போதைய காலகட்டம் வரை இந்த வகையிலான காட்சி போதை பிரச்சாரங்கள் மூலமாக ஆர்எஸ்எஸ் பாஜக, நாடு முழுவதும் மிகப்பெரும் செல்வாக்கை உருவாக்கிக் கொண்டுள்ளது என்றால் மிகையில்லை.

ஆண்டுக்கு 18 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகின்ற அமெரிக்காவின் மெட்டா நிறுவனத்தின் அதிபர் மார்க் சூகன் பெர்க் கட்டுப்பாட்டில் உள்ள பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மற்றும் த்ரெட்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தும் நாடுகளில் உலகின் அதிக பயனர்களைக் (Consumers) கொண்ட நாடு என்ற ‘பெருமையை’ இந்தியா பெற்றுள்ளது.

இத்தகைய நிறுவனங்கள், தவறான தகவல்களை பரப்புவது (Misinformation) மற்றும் கருத்து சுழல்களை (Echo chambers) உருவாக்குவது ஆகிய வழிமுறைகளின் மூலம் சமூக வலைதளங்களில் அரசியல் கருத்துகள் மட்டுமின்றி, பல்வேறு அம்சங்களின் மீது கருத்துப் பிரச்சாரத்தை உருவாக்கி மக்களின் மூளையை சலவை செய்கின்றனர். முக்கியமாக எதிர்க் கருத்துகள், விமர்சனங்கள், மாற்றுக் கருத்துகள் எதையும் கவனிக்காத, பார்க்க விரும்பாத வகையில் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

படிக்க: சமூக ஊடக அடிமைத்தனம் மீள்வது எப்படி?

இந்தியாவில் பேஸ்புக்கில் 40 கோடி பேரும், இன்ஸ்ட்டாவில் 55 கோடி பேரும், வாட்ஸ் அப்பில் 85 கோடி பேரும் இணைந்துள்ளனர் என்பதும், அன்றாடம் 60 லட்சம் ரீல்கள் பதிவிடப்படுகின்றன என்பதும் எந்த அளவிற்கு காட்சி போதை அதிகரித்துள்ளது என்பதை நமக்கு உணர்த்துகிறது. இவர்களை பயன்படுத்திக் கொண்டு தனது கருத்துக்களை பரப்ப, ஆர்எஸ்எஸ் லட்சக்கணக்கான குழுக்களையும், தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆயிரக்கணக்கான குழுக்களையும் உருவாக்கி மக்களின் சிந்தனையின் மீது தாக்குதல்களை தொடுக்கின்றனர்.

இந்தக் காட்சி போதையால் வரம் பெற்றுள்ள தமிழகத்தின் பாசிச கோமாளி விஜய் முதல் பாசிச மோடி வரை அனைவரும் தனது உண்மை நோக்கத்தை மறைத்து மக்களை திசை திருப்புவதற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். அதாவது கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வது; நாட்டினிலே இயற்கை வளங்களை சூறையாடுவதற்கு தங்கு தடையின்றி சட்டங்களை திருத்துவது, மாற்றுவது; அதற்கு எதிராக போராடுபவர்களை அடக்கி, ஒடுக்குவது; அவர்களை வெறுக்கக் கற்றுக் கொடுப்பது; பணியாதவர்களை சிறையிலடைப்பது அல்லது படுகொலை செய்வது போன்ற நாட்டின் மையமான பிரச்சனைகளின் பக்கம் மக்களின் கவனம் செல்வதை இந்த காட்சி போதை தடுக்கிறது.

அதுமட்டுமின்றி உலகம் இரண்டு துருவங்களில் தனது ஏற்றத்தாழ்வை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதை குளோபல் 2000 என்ற ஆய்வறிக்கை கீழ்க்கண்ட வகையில் நிரூபித்துள்ளது.

உலகின் முன்னணி நிறுவனங்கள் இணைந்து, 2025 ஆம் ஆண்டு விற்பனையில் 56 டிரில்லியன் டாலர்களையும் (கடந்த ஆண்டின் சாதனையை விட 6% அதிகம்), 5.5 டிரில்லியன் டாலர் இலாபத்தையும் (+13.9%), மற்றும் 272 டிரில்லியன் டாலர் சொத்துக்களையும் (+12.9%) பதிவு செய்துள்ளன. எல்லாவற்றிலும் மிகவும் முக்கியமான விடயம் என்னவென்றால், குளோபல் 2000 நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பு, கடந்த ஆண்டின் சாதனையை விட 31.8% என்ற மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது, அந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் சொத்து மதிப்பில் 30 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாகச் சேர்த்துள்ளது.

படிக்க: தவெகவின் தேர்தல் வெற்றிக்கு அடிப்படை காட்சி போதைக்கு அடிமையாகியுள்ள தமிழ் சமூகத்தின் தோல்வியே!

ஒரு பக்கம் பெரும்பான்மை உழைக்கும் மக்களும், பாட்டாளி வர்க்கமும், வறுமைக் கொடுமையிலும், உழைப்பு சக்தியை 15 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை விற்று தனது வாழ்க்கை நடத்த வேண்டிய அவலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அவர்களின் உழைப்பு சக்தியையும், பல நூற்றாண்டுகளாக மனிதகுலம் சேமித்து வைத்த இயற்கையையும், கனிம வளங்களையும் சூறையாடி கொழுக்கின்ற கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதற்கு ஒன்றிணைவோம். இதற்கு மிகப்பெரும் தடையாக உள்ள காட்சி போதையை பாட்டாளி வர்க்கத்திற்கு புரிய வைப்போம்.

நான்காம் கட்ட தொழிற்நுடப்ப் புரட்சியின் பலன்களை முழுமையாக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ள இந்திய ஒன்றியத்தின் பிரதமாரான மோடி, தமிழகத்தின் முதல்வரான விஜய் உள்ளிட்ட பாசிச கோமாளிகள் மற்றும் பாசிஸ்டுகள் அதிகாரத்தை எதிர்த்து முறியடிப்பதற்கு அதே ஆயுத்த்தை கையிலெடுத்துக் கொண்டு மக்கள் மத்தியில் பல கட்டங்களில், பல்வேறு கோணங்களில் தீவிரமாக பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதே தற்போதைய காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here