இந்திய ஒன்றியத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ஆர்எஸ்எஸ் பாஜகவால் திட்டமிட்டு புகுத்தப்பட்ட திருவாளர் ஞானேஷ் குமார் தலைமையில் தேர்தல் ஆணையம் பல்வேறு மோசடிகளை செய்துள்ளது என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர்களை நீக்குவது; அடுத்த கட்டமாக அவர்களை குடியுரிமை இல்லாதவர்களாக மாற்றுவது என்ற திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
வெறும் வாக்கு திருட்டு என்பது மட்டுமல்ல! நாட்டின் பெரும்பான்மை மக்கள் என்று அவர்கள் கூறிக் கொள்ளும் சொல்லிக் கொள்ளக்கூடிய ‘ இந்துக்களை’ தவிர இந்த நாட்டில் உள்ள மதச் சிறுபான்மையினரை படிப்படியாக இந்து மதத்திற்கு கொண்டு வருவது அல்லது அவர்களெல்லாம் நாட்டின் எதிரிகள் என்று குடியுரிமை பட்டியலில் இருந்து நீக்குவது என வெறித்தனமாக செயல்படுகின்றனர்.
இந்த லட்சணத்தில் சமீபத்தில் நாடு முழுவதும் நடந்து வரும் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டங்களையும், குறிப்பாக டெல்லியில் முன்னணியாக நின்று போராடுகின்ற சிஜேபி (கரப்பான் பூச்சி ஜனதா கட்சி) கட்சி போராட்டத்திற்கு அன்னிய நாடுகள் மூலம் நிதி உதவி செய்யப்படுவதாக அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.
அந்நிய மூலதனத்தை ஈர்ப்பதிலும், அந்நிய கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கு நாட்டை திறந்து விடுவதிலும் முன்னணியில் நிற்கின்ற ஆர்எஸ்எஸ் பாஜக தனக்கு எதிராக போராடுகின்ற கட்சிகளை தனிமைப்படுத்துவதற்கு கையாளுகின்ற தந்திரங்களில் முக்கியமான ஒன்று அந்நிய சதி, சீனாவின் ஏஜென்ட் என்று கூச்சல் போடுவது தான்.
உண்மையிலேயே தேசத்துரோக நடவடிக்கைகளில் முன்னணியில் நின்று, நாட்டின் இயற்கை வளங்களையும், நாட்டின் வருமானத்தையும், பெரும்பான்மை மக்களின் உழைப்பு சக்தியையும் கார்ப்பரேட்டுகள் சூறையாடி கொண்டு செல்வதற்கு காட்டிக் கொடுக்கின்ற வேலையை செய்வதில் முன்னணியில் நிற்பது, ஆர்எஸ்எஸ் பாஜக தான் என்பதை அவர்கள் வெளியிடுகின்ற புள்ளி விவரங்கள் அடிப்படையிலேயே நிரூபிக்க முடியும்.
2014 முதல் 2025 வரையிலான 11 நிதியாண்டுகளில், இந்தியா மொத்தம் 748.78 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) ஈர்த்துள்ளது. மேலும், தற்போதைய 2025-26 நிதியாண்டு வரையிலான (2014-15 முதல் 2025-26 வரை) 12 ஆண்டு காலத்தைக் கணக்கில் கொண்டால், இந்த ஒட்டுமொத்த முதலீடு 843 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இது முந்தைய 11 ஆண்டுகளுடன் (2003-14) ஒப்பிடும்போது சுமார் 143% கூடுதலாகும்.
அதுபோலவே கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அதாவது சாலை போக்குவரத்து முதல் தொலைத்தொடர்பு வங்கி சேவைகள் வரை அனைத்தையும் உருவாக்கிக் கொடுப்பதற்கு தேவையான கடனை வாங்குவது பல மடங்கு அதிகரித்துள்ளது. 2014ல் ₹55.87 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் சுமை 2025ல் ₹181.74 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது –இந்தக் கடன் தொகை 2026 மார்ச் மாத கணக்கின்படி ₹201.17 லட்சம் கோடி அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
அந்நிய முதலீடு, அந்நிய கடன் ஆகியவை அனைத்தும் நாட்டை சூறையாடுகின்ற ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் மற்றும் அமெரிக்க மேல்நிலை வல்லரசு ஆகியவற்றின் தயவில் பெறப்பட்டவை தான். நாட்டு மக்களுக்கு எதிரியாக அவர்கள் சித்தரிக்கின்ற சீனாவிடமும் வெட்கமின்றி பல்லாயிரம் கோடி முதலீடு மற்றும் கடன் பெற்றுள்ளனர்.
இவை ஒரு புறம் இருக்க இவர்களின் சித்தாந்தம் என்று சொல்லக்கூடிய பாசிச சித்தாந்தம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சரக்கு தான்.
படிக்க: ஆர் எஸ் எஸ் அமைப்பின் மீது தடை விதிக்க வேண்டும்! USCIRF அறிக்கை!
ஜெர்மனியின் நாஜி கும்பலின் தலைவனான பாசிச ஹிட்லர் இத்தாலியின் பாசிச கும்பலின் தலைவனான முசோலினி ஆகியவர்களிடம் சித்தாந்தத்தையும், ராணுவ பயிற்சி முறைகளையும், அரசியலையும் கற்றுக் கொண்ட தேசத்துரோகிகள் தான் ஆர்எஸ்எஸ் பாஜகவின் பிதா மகன்களான மூஞ்சே மற்றும் ஹெட்கேவார்.
ஆர்எஸ்எஸ் பிதாமகர்களில் முக்கியமானவரான பிஎஸ் மூஞ்சே 1931 ஆம் ஆண்டு இத்தாலியின் தலைநகரான ரோமுக்கு சென்று முசோலினுடன் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார். அதன் பிறகு அவர் தனது டைரியில் 13 பக்கங்கள் குறிப்பு எழுதி வைத்துள்ளார். இத்தாலியின் ராணுவ கல்லூரி, மத்திய ராணுவ உடற்பயிற்சி பள்ளி மற்றும் பாசிஸ்டு கட்சியின் முக்கிய ஸ்தாபன அலுவலகங்கள் இவை அனைத்தையும் பார்வையிட்டு அதன் விவரங்களை குறிப்பிட்டுள்ள அவர், 6 வயதில் இருந்து 18 வரை சிறுவர்கள் பயிற்சி; இளைஞர்கள் கூட்டம் நடத்தி உடற்பயிற்சி மற்றும் சில ராணுவ ரீதியிலான பயிற்சி அணிவகுப்பு முறைகள் இவற்றையெல்லாம் புரிந்து கொண்டு இதே பாணியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முறைகளை உருவாக்கினார் மூஞ்சே.
“இந்து இந்தியாவின் ஒற்றுமைக்கும், இந்துக்களின் ராணுவ மறுமலர்ச்சிக்கும், பாசிசம் தெளிவான வழிமுறை கோட்பாடுகளை காட்டுகின்றது. ஹெட்கேவார் தலைமையில் உள்ள ஆர்எஸ்எஸ் இது போன்ற ஒரு நிறுவனமாகும் என்றும், ஹெட்கேவாரின் அமைப்பை விரிவுபடுத்தவும், மகாராஷ்டிராவுக்கு வெளியில் உள்ள மாநிலங்களுக்கு பரப்பவும், எனது எஞ்சியுள்ள வாழ்நாட்களை கழிப்பேன்” என்று எழுதினார் மூஞ்சே.
1934 ஆம் ஆண்டு, “பாசிசமும் முசோலினியும்” என்ற தலைப்பில் நடந்த ஒரு கூட்டத்திற்கு ஹெட்கேவார் தலைமை தாங்கினார். அந்தக் கூட்டத்தில், “இந்து தர்ம சாஸ்திரத்தின் அடிப்படையில் இந்து மதத்தை இந்தியா முழுவதும் ஒரே பிரமாணமானதாக கட்டுவதற்கு நான் ஒரு திட்டத்தை தயாரித்து உள்ளேன். ஆனால் நமது சொந்த சுய ராஜ்யத்தில் முன்னாளைய சிவாஜி போலோ அல்லது இன்றைய இத்தாலி, ஜெர்மனியின் முசோலினி, ஹிட்லர் போன்றோ ஒரு சர்வாதிகாரி இல்லாமல் இந்த லட்சியத்தை செயல்படுத்த இயலாது” என்று பேசினார்.
படிக்க: சைனிக் பள்ளிகளை கைப்பற்றிய காவிகள்! இராணுவத்தை ஆர்.எஸ்.எஸ் மயமாக்கும் பாஜக அரசு!
அது மட்டுமல்ல. அவர்கள் நிறுவிய பான்ஸ்லே ராணுவ பள்ளி இந்து ராணுவ கல்வி கழகம் ஒன்றை அமைப்பதற்கு 1934- 35 காலகட்டத்தில் ஒரு திட்டத்தை முன்வைத்து, “எதிரி மக்கள் திரளை அதிகபட்சம் கொலை செய்யவும், காயமடைய வைக்கவும் செய்து வெற்றி காணும் திறன் கொண்ட நமது இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பது என்பது தான்” என்பதை தனது திட்டத்தின் முன்னுரையாக முன்வைத்தார் மூஞ்சே.
ஆர்எஸ்எஸ் பாஜகவின் கொள்கைகளையும், லட்சியங்களையும் அதாவது இந்தியாவை இந்து பயங்கரவாத நாடு ஒன்றாக மாற்றுவது பற்றிய குறிக்கோள்களை பற்றி நூற்றுக்கணக்கான நூல்கள் வெளிவந்துவிட்டது. ஆனால் அவையெல்லாம் இன்றைய இளைஞர்கள் மத்தியில் பரப்பப்படவில்லை அல்லது அரசியல் ரீதியாக முன்னனியாக உள்ளவர்கள் மத்தியில் கூட அவையெல்லாம் விவாதிக்கப்படவில்லை என்ற காரணத்தினால் அரசியலற்ற முறையில் பாஜகவை எதிர்ப்பது அல்லது காங்கிரஸ் பாணியில் லாவணி பாடுவது என்பதையே பாஜக எதிர்ப்பு என்று நம்ப வைக்கின்றனர்.
தனது சிந்தனை முழுக்க இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான வெறுப்புணர்ச்சியும், உடல் முழுக்க ராணுவ ரீதியிலாக தாக்குதல் நடத்துவது; கொலை வெறியாட்டம் போடுவது; கொலைகளை செய்வது; பாலியல் வன்கொடுமைகளை ஏவுவது என்று நாடி நரம்புகள் முழுக்க வெறியூட்டப்பட்ட பயங்கரவாத படைத்தான் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள்.
சித்தாந்த ரீதியாக பயிற்றுவிக்கப்பட்ட இந்த குண்டர் படை ஜந்தர் மந்தரில் பெண்கள் மீது பாலியல் ரீதியிலாக தாக்குதல்களை நடத்தியதையும், போலீஸ் உடையை அணிந்து கொண்டு குண்டர்களாக மாறி தாக்குதல் நடத்தியதையும், அம்பலப்படுத்திய பிறகும் உச்ச நீதிமன்றமும், வேறு பிற அதிகார அமைப்புகளோ எதையும் பிடுங்க முடியவில்லை.
படிக்க: என்எல்சி பங்குகளை விற்காதே! ஆர் எஸ் எஸ் பாஜக தேச துரோக கும்பலுக்கு எதிராக ஒன்றிணைவோம்!
போராடுகின்ற நாட்டுப் பற்றாளர்களையும், ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்கள், போராடுபவர்கள் அனைவரையும் தேச விரோதிகள், அந்நிய கைக்கூலிகள் என்று முத்திரை குத்தி பெரும்பான்மை மக்கள் மத்தியில் அவதூறுகள் மூலம் பொதுக்கருத்தை உருவாக்கி தன்னை பாதுகாத்துக் கொண்டு வருகின்ற ஆர்எஸ்எஸ் பாஜகவின் முகத்திரை கிழித்தெறியப்பட வேண்டும்.
சொந்த மதத்தைச் சார்ந்த மக்களையே பார்ப்பனர், வைசியர், சத்திரியர், சூத்திரர், பஞ்சவர் என்று பிரிவினை செய்து பார்ப்பனர்களை மேலாதிக்கம் செலுத்துபவர்களாக உருவாக்கி இன்று வரை ஆதிக்கம் செலுத்தி வருகின்ற பார்ப்பன (இந்து) மதத்தின் கொடுங்கோன்மைகளை பற்றி மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும்.
இந்து மதம் என்பது பார்ப்பன மேலாதிக்கம் தவிர பார்ப்பன பாசிசம் இரண்டையும் தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதை திரை கிழித்து காட்டுவதன் மூலமும் அதற்கு எதிராக பெரும்பான்மை மக்களை ஒரு படையாக திரட்டி எதிர் தாக்குதல் நடத்துகின்ற வகையில் பயிற்றுவிப்பது ஒன்றுதான் இவர்களின் பித்தலாட்டங்களையும், பொய் பிரச்சார அரசியலையும், பாசிசத்தையும் முடிவுக்கு கொண்டு வரும்.
நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எதிரான உண்மையான அந்நிய கைக்கூலிகள், அந்நிய ஏக போகங்களின் எடுபிடிகள், அந்நிய சித்தாந்தத்தை இந்தியாவிற்குள் திணிப்பவர்கள் ஆர்எஸ்எஸ் பாஜக என்ற பயங்கரவாத கும்பல் தான் என்பதையும் அம்பலப்படுத்தி முடிவுக்கு கொண்டு வர முடியும்.
- மருது பாண்டியன்.
புதிய ஜனநாயகம் தினசரி






