ந்திய ஒன்றியத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் நவரத்தினா அந்தஸ்து பெற்ற நிறுவனமான, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் படிப்படியாக தனியாருக்கு தாரைவாக்கப்படுகின்ற திசையை நோக்கி முன்னேறிக் கொண்டுள்ளது.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள் அமல்படுத்த துவங்கியதில் இருந்து லாபம் ஈட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனங்கள் ஒவ்வொன்றாக உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகள், உள்நாட்டிலுள்ள தரகு முதலாளிகள் மற்றும் தேசங்கடந்த தரகு முதலாளிகளுக்கு வாரிக் கொடுப்பது என்பது படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடு மட்டுமன்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கும் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொடுக்கின்ற, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் ரத்த வியர்வையில் உருவான என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மூன்று சதவீத பங்குகளை மீண்டும் விற்பது என்ற முடிவிற்கு இந்திய ஒன்றிய அரசாங்கமான ஆர்எஸ்எஸ் பாஜக அரசாங்கம் வந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலியில் இருந்து நாளொன்றுக்கு 3390 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொடுத்து வருகின்ற, ஆண்டுக்கு 3600 கோடி ரூபாய் லாபமிட்டுகின்ற பொதுத் துறை நிறுவனமான என்எல்சி இந்தியாவின் பங்குகள் ஏற்கனவே 28% விற்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 சதவீதத்தை விற்பனை செய்வது என்ற முடிவுக்கு வந்துள்ளது குறித்து கட்சிகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

என்றாலும் ஏற்கனவே இந்திய ஒன்றியத்தை ஆண்ட காங்கிரசு, தற்போது ஆண்டு வரும் பாசிச பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தமிழகத்தில் அதிமுக, திமுக தற்போது ஆண்டு வரும் த.வெ.க போன்ற கட்சிகள் அனைத்திற்கும் கார்ப்பரேட்டுகளை ஆதரிக்கின்ற பொருளாதாரக் கொள்கைகள் தான் அடிப்படை.

லாபம் ஈட்டுகின்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கின்ற கொடூரமான நிகழ்ச்சி போக்கானது அதில் பணிபுரிகின்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின், ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்க்கையை பறித்து விடும்; இந்த தொழிலாளர்களை நம்பி அந்த மாவட்டம் முழுவதும் வர்த்தகத்தை நடத்தி வருகின்ற பல்வேறு துறை சார்ந்த வர்த்தகர்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பது மட்டுமின்றி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மின் துறை படிப்படியாக நாடு முழுவதும் அதானி எனர்ஜி நிறுவனத்தின் கைகளுக்கு சென்று கொண்டிருப்பதைப் போல தமிழகத்தின் மின்சார கட்டுப்பாடும் தனியாருக்கு சென்று விடும் என்பது தான் உண்மை நிலைமையாகும்.

ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே ஏகாதிபத்திய நிதி மூலதனம் பற்றி ஆய்வு செய்த தோழர் லெனின் ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள தொழிலாளி வர்க்கத்திற்கு அதாவது தொழிலாளி வர்க்கத்தை செல்ல பிள்ளைகளைப் போல வைத்துக் கொள்வதன் மூலம் சர்வதேச ரீதியில் தொழிலாளி வர்க்க ஒற்றுமை உருவாவதை தடுக்கின்ற கீழ்த்தரமான முயற்சியிலும், தொழிலாளர்கள் மத்தியில் சந்தர்ப்பவாத சிந்தனையையும், மஞ்சள் தொழிற்சங்கங்களையும் உருவாக்குவதில் முக்கிய பங்களிப்பை செலுத்துகிறது என்று கடுமையாக விமர்சனம் செய்து எச்சரிக்கை செய்திருந்தார்.

படிக்க:

 கார்ப்பரேட் கொள்ளைக்கு மாற்று பொதுத்துறை நிறுவனங்களே என்பதை நிரூபித்த நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்!

 கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக நிலக்கரி உள்ளிட்ட சுரங்கங்கள் சட்ட திருத்தம்! ஆர்எஸ்எஸ் மோடியின் சாதனை!

இந்த ஒரு நூற்றாண்டில் ஏகாதிபத்திய நிதி மூலதனம் பல லட்சம் கோடிகளாக பெருகியுள்ள சூழலில் அரசு தொழில்துறைகளில் ஈடுபடக்கூடாது; நாட்டின் வளங்களை பாதுகாப்பது அரசின் வேலை அல்ல; அனைத்தையும் தனியாருக்கு தாரை வார்த்து விட்டு அரசாங்கம் லாபமிட்டுகின்ற; அதாவது சொந்த நாட்டு மக்களை கொள்ளையடிக்கின்ற; சொந்த நாட்டின் இயற்கை வளங்களை வாரி கொடுத்து கொள்ளையடிக்கின்ற அரசாங்கமாக இருக்க வேண்டும் என்பதுதான் ஏகாதிபத்திய நிதி மூலதனங்களின் கட்டுப்பாடு.

90களில் மறுகாலனியாக்க கொள்கைகள் அமுலாக்கப்பட துவங்கிய காலத்திலேயே இந்த திசைவழியில் தான் நாட்டின் பொருளாதாரம், சொல்லிக் கொள்ளப்படும் அரைகுறை இறையாண்மையும் காவு கொடுக்கப்படும் என்றும், இந்தத் தனியார் மயமாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, நெய்வேலி மின்சார நிறுவனத்தை அமெரிக்காவைச் சேர்ந்த எஸ் டி பவர் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்கு கொடுத்தபோது புதிய ஜனநாயகத்தின் தோழமை அமைப்புகளான புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட புரட்சிகர தொழிற்சங்கங்களும், பிற அமைப்புகளும் ஒன்றிணைந்து நெய்வேலியில் முற்றுகை போராட்டம் நடத்தியது.

ஆனால் என்எல்சி நிர்வாகம் மற்றும் இந்திய ஒன்றிய அரசாங்கம் நெய்வேலியில் கிடைக்கின்ற நிலக்கரியை கொண்டு மின் உற்பத்தி செய்வதற்கு தனியாரை அனுமதித்தது போலவே படிப்படியாக சுரங்க தொழில்களில் அதாவது மேல்மண் நீக்குவது; தனியார் நிறுவனங்களின் மண் வெட்டும் எந்திரங்களை பயன்படுத்துவது; தனியார் நிறுவனங்களைக் கொண்டு எந்திரங்களையும் மின் உற்பத்தி மற்றும் நிலக்கரி உற்பத்தி ஆகியவற்றில் ஏற்படுகின்ற சிக்கல்களை பழுது பார்ப்பது; உற்பத்தி செய்யப்பட்ட நிலக்கரியை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது என்ற வகையிலான பணிகள் அனைத்தையும் படிப்படியாக தனியாருக்கு தாரை வார்த்தது.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தனியார் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற நிலையில் தற்போது மொத்தமாக என்எல்சி இந்தியா நிறுவனத்தையே தேசங்கடந்த தரகு முதலாளிகள் கும்பலில் ஒருவனான அதானி குழுமத்திற்கு கொடுப்பதற்கு ஆர்எஸ்எஸ் பாஜக துடித்துக் கொண்டுள்ளது என்பதை தான் மூன்று சதவீத பங்கு விற்பனை நமக்கு உணர்த்துகிறது.

ஏறக்குறைய முக்கால் நூற்றாண்டு காலமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்த என்எல்சி இந்தியா படிப்படியாக தமிழகத்திற்கு வெளியில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த தொழிலாளர்களுக்கும் வேலை வழங்குகின்ற நிறுவனமாக மாறியுள்ளது.

தமிழகத்தில் மட்டுமின்றி என்எல்சி நிறுவனத்தின் உற்பத்திக் கூடங்கள் ராஜஸ்தான், ஒடிசா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலும், தமிழகத்திலேயே சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மின் சக்தி போன்றவற்றை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனமாகவும், 2030-ம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்கின்ற நிறுவனமாக வளர்ந்துள்ள சூழலில் அதன் பங்குகளை தனியாருக்கு தாரை வார்ப்பது; வாரிக் கொடுப்பது தேசத் துரோக சதி செயலாகும்.

மறுகாலனியாக்கத்தையும் அதன் மூலமாக நாட்டின் இயற்கை வளங்கள், கனிம வளங்கள் சூறையாடப்படுவதையும், பொதுத்துறை நிறுவனங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு வாரிக் கொடுக்கப்படுவதையும் ஒருங்கிணைந்த முறையில் எதிர்த்துப் போராடுகின்ற புரட்சிகர தொழிற்சங்கங்கள் மற்றும் புரட்சிகர அமைப்புகள் தான் என்எல்சி பங்கு விற்பனையை தடுத்து நிறுத்துவதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும்.

தற்போதைய சூழலில் தமிழகத்தை ஆளுகின்ற தமிழக வெற்றிக்கழகம் என்எல்சி பங்குகளை விற்பதில் வருத்தம் அடைவதாக பாசிச மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளதும், பிற தொழிற்சங்கங்கள் இந்த முடிவை திரும்பப் பெறாவிட்டால் போராடுவோம் என்று எச்சரிக்கின்ற வகையிலும் அறிக்கை போர் நடத்திக் கொண்டுள்ளனர்.

அரசியல் ரீதியாக தொழிலாளி வர்க்கத்தை மறுகாலனியாக்கத்தின் தீவிர தன்மையை உணர்த்துவதை நோக்கியோ, அந்த தீவிரத் தன்மை தற்போது கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதமாகவும், போராடுகின்ற தொழிலாளர்களின் மீது கொடூரமான ஒடுக்குமுறைகளை செலுத்துகின்ற பயங்கரவாத சக்தியாகவும் மாறி உள்ளதை பற்றி எல்லாம் பிரச்சாரம் செய்யாமல் இவையெல்லாம் தனித்தனியான சிக்கல்கள் போல பிரச்சாரம் செய்து தங்களின் கீழே உள்ள அணிகளை தக்க வைத்துக் கொள்வதற்கு மட்டுமே பாடு படுகின்றனர்.

இத்தகைய சூழலில் என்எல்சி யில் பணிபுரிகின்ற சுமார் 15,000 தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்கள், 10,000 மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து ஒரே தலைமையின் கீழ் என்எல்சி பங்குகளை விற்காதே! தனியாருக்கு தாரை வார்க்காதே! நாட்டை கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு அனுமதிக்காதே! என்ற முழக்கத்தின் கீழ் போராட வேண்டும்.

 

அதேபோல கார்ப்பரேட்டுகளின் கொள்ளையை அனுமதிக்கின்ற கார்ப்பரேட் பாசிசத்தையும் அதற்கு ஒத்துழைக்கின்ற காவி பாசிசத்தையும் எதிர்த்து போராட ஒன்று திரள்வோம் என்று முழக்கத்தின் கீழ் இரத்தின சுருக்கமாக அவர்களுக்கு புரியும் வகையில் போராட்டங்களை கட்டியமைப்பது தான் என்எல்சி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்கின்ற ஒரே வழி.

ஞானசேகரன்.

புதிய ஜனநாயகம் தினசரி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here