சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரான்சைச் சேர்ந்த SUEZ (சூயஸ்) நிறுவனம் குடிநீர் விநியோகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்கும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. இது சேலம் மாவட்டத்திற்கு முழுவதும் அல்ல சேலம் மாநகராட்சிக்கு மட்டுமே. கோவையை அடுத்து சேலத்தில் களமிறங்கியுள்ளது சூயஸ் நிறுவனம். இந்த செய்தி இன்று( 10 ஜூலை 2026) ஊடகங்களில் வெளியாகியுள்ளது. சூயஸ் நிறுவனமும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் கோவையில் பழைய 60 வார்டுகளில் 24×7 குடிநீர் விநியோக திட்டம் SUEZ India-க்கு வழங்கப்பட்டது. 26 ஆண்டுகள் கொண்ட ஒப்பந்த காலத்தில் இதன் திட்ட மதிப்பு சுமார் ₹2,961 கோடி. இதன் மூலம் சுமார் 16 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என அரசு தெரிவித்தது. மக்கள் மத்தியில் தண்ணீர் தனியார் மயத்திற்கு எதிராக கடுமையான எதிர்ப்பு போராட்டங்கள் உருவான நிலையில் அப்போது எதிர்கட்சியாக இருந்த திமுக இத்திட்டத்தை எதிர்த்தது. போராட்டங்களிலும் ஈடுபட்டது. தான் ஆட்சிக்கு வந்தால் இத்திட்டத்தினை ரத்து செய்வேன் என வாக்குறுதியையும் அளித்தது.

ஆனால் அதற்கு எதிராக செயல்பட்டுள்ளது தற்போதைய செய்திகளின் மூலம் தெரியவந்துள்ளது. 2021-22 காலக்கட்டத்தில் திமுக ஆட்சியில் சேலம் மாநகருக்கு 24×7 குடிநீர் விநியோகத் திட்டத்தை PPP/Concession (A Public-Private Partnership) முறையில் செயல்படுத்தும் திட்டப்பணி தொடங்கப்பட்டது. திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு நிதி மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன

2023-24 ல் சர்வதேச டெண்டர் (International Tender) நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. தகுதி வாய்ந்த நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன; தொழில்நுட்ப மற்றும் நிதி மதிப்பீடுகள் நடத்தப்பட்டன. 2025-ல் SUEZ நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, சேலம் மாநகராட்சியால் Letter of Award (LOA) வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

2025 பிப்ரவரியில் SUEZ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக, சேலம் மாநகராட்சியின் 25 ஆண்டு குடிநீர் சலுகை (Concession) ஒப்பந்தத்தை வென்றதாக அறிவித்தது. இது இந்தியாவில் SUEZ-ன் மிகப்பெரிய குடிநீர் திட்டம் என்றும் தெரிவித்தது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட 45 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. 2026 ஜூலையில் தமிழ்நாடு அரசு திட்டத்திற்கு திருத்தப்பட்ட நிர்வாக அனுமதி (Revised Administrative Sanction) வழங்கியது. திட்டத்தின் மதிப்பு, பணிகள் மற்றும் செயல்படுத்தும் கட்டங்கள் புதுப்பிக்கப்பட்டன.

25 ஆண்டுகால திட்ட ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு சுமார் 456 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ₹4,500 கோடிக்கும் மேல்). சேலம் மாநகராட்சியில் சுமார் 10 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படும் இத்திட்டத்திற்கு கோவையில் சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட தொகையைவிட ரூ.1000 கோடி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. 

குடிநீர் வழங்கும் வேலையை மட்டும் தான் சூயஸ் நிறுவனம் பார்க்கும் மற்ற வகையில் சேலம் மாநகராட்சியிடமே நீர் ஆதாரங்கள் மற்றும் அனைத்து உள்கட்டமைப்புகளின் உரிமையும் இருக்கும் என அரசு கூறுகிறது. இது மக்களின் எதிர்ப்புணர்வை மட்டுப்படுத்துவதற்காக சொல்லப்படும் பதிலே தவிர இதில் உள்ள ஆபத்துக்களை அரசு திட்டமிட்டு மறைக்கிறது.

படிக்க:

 தனியார் மயமாக்கப்படும் தண்ணீர்! கோவை மாநகராட்சியில் முன்னோட்டம் பார்க்கிறதா அரசு?

 கோவையில் இனி காசுக்கே தண்ணீர்! வானதி சீனிவாசன் முன்னெடுக்கும் தண்ணீர் விற்பனை ATM!

சூயஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தின் படி முதல் 5 ஆண்டுகள்ஆய்வு, கட்டுமானம், பழைய அமைப்புகளை மேம்படுத்துதல்; அடுத்த 20 ஆண்டுகள்இயக்கம் மற்றும் பராமரிப்பு என அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. அது செய்யும் பணிகளையும் பின்வருமாறு வகைப்படுத்தியுள்ளது. பழைய குடிநீர் குழாய்களை புதுப்பித்தல் (சுமார் 1,800 கி.மீ.)   புதிய நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்தல் (26); பழைய 39 தொட்டிகளை சீரமைத்தல்; வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்புகள் வழங்குதல்; அனைத்து இணைப்புகளுக்கும் நீர் மீட்டர்கள் பொருத்துதல்;  SCADA உள்ளிட்ட டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்புகளை நிறுவுதல்; வாடிக்கையாளர் சேவை, மீட்டர் வாசிப்பு, கட்டண வசூல் போன்றவற்றை நிர்வகித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது.

தனியார் நிறுவனத்திடம் குடிநீர் வழங்கும் உரிமையை ஒப்படைத்து அரசு தனது கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளது. 24 மணி நேர குடிநீர் வழங்குதல், குழாய் கசிவுகளை குறைத்தல், நீர் இழப்பை (Non-Revenue Water) குறைத்தல், குடிநீர் தரத்தை மேம்படுத்துதல், டிஜிட்டல் கண்காணிப்பு மூலம் திறன் உயர்த்துதல் இவையெல்லாம் செய்ய வேண்டியது அரசின் பணிதானே. அதிலிருந்து விலகி அந்த வேலையை தனியார் மயமாக்குவதன் மூலம் நாங்கள் இதற்கு லாயக்கற்றவர்கள் என்கிறது அரசு. 

குடிநீர் வழங்கும் உரிமையை தனியாரிடம் கொடுத்ததினால் கோவை மக்கள் ஏற்கனவே பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். கண்ணப்பநகரைச் சேர்ந்த ஒருவர், தனக்கு ஓராண்டுக்கு முன்பு இணைப்பு கிடைத்தபோதிலும், வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் விநியோகிக்கப்படுவதாகக் கூறினார். “குறிப்பிட்ட நாளில், 24 மணி நேரமும் தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் வாரத்தின் மற்ற நாட்களில் விநியோகம் இல்லை.” என்கிறார். 

படிக்க:

 இனி தண்ணீர் காசுக்கு!!!

 “உலகத்தரத்தில் குழாயில் குடிநீர்!” தண்ணீர் கார்ப்பரேட்டுகளின் பிடிக்குள் சிக்குகிறதா ஒடிசாவின் பூரி!

சிவானந்தா காலனியைச் சேர்ந்த விடுதி வார்டன் ஜி. ராஜேஸ்வரி, கட்டணத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான உயர்வைச் சுட்டிக்காட்டினார். “முன்பு, நாங்கள் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சுமார் 2,000 ரூபாய் செலுத்தி வந்தோம், ஆனால் இப்போது கட்டணம் 4,000 முதல் 5,000 ரூபாய் வரை இரட்டிப்பாகியுள்ளது. அந்த நிறுவனம் மீட்டர் அளவீடுகளைப் பதிவு செய்கிறது, ஆனால் செலுத்த வேண்டிய தொகை அல்லது செலுத்துவதற்கான காலக்கெடு குறித்து எங்களுக்குத் தெரிவிப்பதில்லை. நாங்களே சரிபார்த்து பணம் செலுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.

கோவையில் 2018-ல் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் 2021-ல் அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு கொடுத்து தண்ணீர் வழங்குவதை உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால் கொரானாவை காரணம் காட்டி 3 வருடத்தை நிறுவனம் விழுங்க்கி விட்டது. அதாவது 2024-ல் தான் குடிநீர் வழங்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்தியுள்ளது. இன்னும் பல இடங்களில் திட்டம் முமுமையடையாமல் உள்ளது. இவையனைத்தும் குறிப்பிட்ட பகுதிகளில் செய்திகளில் வந்துள்ள அனுபவம் மட்டும் தான். இவையல்லாமல் சூயஸ் நிறுவனத்தின் செயல்பாட்டில் பல புகார்களை சமூகவலைதளங்களில் காணமுடிகிறது.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் குடிநீரை உறுதி செய்யவேண்டியது அரசின் தலையாயக் கடமை. ஆனால் அதிலிருந்து விலகி உலக வங்க்கியின் திட்டப்படி தண்ணீரை விற்பனை பண்டமாக மாற்றி கார்ப்பரேட் நிறுவனங்களின் கொடுங்கரங்களில் ஒப்படைத்துள்ளது தமிழ்நாடு அரசு. விற்பனை சரக்காக மாற்றப்படும் குடிநீர் தனியார் கைகளில் செல்லும் பொழுது அதனை அவர்கள் சேவையாக கருதாமல் லாப நோக்கத்துடன் மட்டுமே அணுகுவார்கள். அதனால் குடிநீருக்கான கட்டணம் பல்வேறு காரணங்களை சொல்லி உயர்த்தப்படலாம். இயற்கையாக கிடைக்கின்ற தண்ணீர் காசு இல்லாதவனுக்கு இல்லாத நிலையே ஏற்படும். 

கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான தண்ணீரை வரன்முறையின்றி எடுத்துக் கொள்ள அனுமதிக்கின்ற அரசு, மக்களுக்கு கட்டுப்பாடு விதித்து மீட்டர் பொருத்துவது அரசின் கார்ப்பரேட் ஆதரவு மனநிலையே காட்டுகிறது. இந்த ஆட்சி வந்தால் மாறும் , அந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் மாறும் என்ற மூடநம்பிக்கையிலிருந்து மக்கள் வெளிவர வேண்டும். அதற்கு சூயஸ் நிறுவனமே சிறந்த உதாரணம். சூயஸ் நிறுவனத்திற்கு முதல்முதலாக 2018-ல் அனுமதியளித்தது அதிமுக ஆட்சி. அப்போது எதிர்கட்சியாக இருந்து எதிர்த்த திமுக ஆளுங்கட்சியாக மாறிய பிறகு சேலத்தில் சூயஸ் நிறுவனத்திற்கு அனுமதியளித்துள்ளது. திமுகவை ‘தீயசக்தி’ என பேசி ஆட்சிக்கு வந்த தவெக தான் தூயசக்தி என நிரூபிக்க தனியார் மயத்திற்கு எதிராக திமுக ஆட்சியில் போடப்படுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் திட்டத்தை அமல்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. இதிலிருந்தே ஆட்சிகள் மாறினாலும் அவர்களது சேவை கார்ப்பரேட்டுகளுக்கே. கொள்கை தனியார் மயமே என நிரூபிக்கிறார்கள்.

ஆனால்  மக்களோ ஒவ்வொரு தேர்தலிலும் நமக்கான விடிவு பிறக்கும் என அப்பாவித்தனமாக காத்துக்கொண்டிருக்கிறார்கள். நமக்கான விடிவை நாம்தான் போராடிப்பெற வேண்டும்.  தனியார்மயத்திற்கு எதிராக போராடவில்லை என்றால் நாளை நம் சந்ததி தண்ணீருக்கு கையேந்த வேண்டிய நிலை ஏற்படும்.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here