கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக நிலக்கரி உள்ளிட்ட சுரங்கங்கள் சட்ட திருத்தம்! ஆர்எஸ்எஸ் மோடியின் சாதனை!
இந்தியாவில் ஏராளமான நிலக்கரி இருப்புக்கள் உள்ளன, இந்திய புவியியல் ஆய்வுத் துறையால் (Geological Survey of India) சுமார் 4 லட்சம் மில்லியன் டன் நிரூபிக்கப்பட்ட இருப்புகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. 1950 முதல், நாடு சுமார் 21,000 மில்லியன் டன் நிலக்கரியை எடுத்துள்ளது.

ந்தியாவின் இயற்கை வளங்களான கனிம வளங்கள் குறிப்பாக நிலக்கரி உள்ளிட்ட வளங்களை கார்ப்பரேட் முதலாளிகள் சூறையாடுவதற்கு பொருத்தமாக சட்ட திருத்தம் கொண்டு வந்து தனது எஜமான விசுவாசத்தை காட்டியுள்ளது ஆர்எஸ்எஸ் பாஜக.

நிலக்கரி தொடர்பான சட்டத் திருத்தங்கள் என்னவென்றால், முக்கியமாக சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டம், 1957 (MMDR Act) மற்றும் நிலக்கரி சுரங்கங்கள் (சிறப்பு ஒதுக்கீடுகள்) சட்டம், 2015 (CMSP Act) ஆகியவற்றை திருத்தி தனியார் சுரங்கங்கள் அமைத்துக் கொள்வதற்கும், புதிதாக பல்வேறு இடங்களில் மலைகளைக் குடைந்து சுரங்கங்களை வெட்டுவதற்கும் அனுமதியளித்துள்ளது என்பதுதான்.

‘உலகைக் காக்கும் பரம்பொருளான’ மகாவிஷ்ணு கடலுக்கு அடியில் ஒளித்து வைக்கப்பட்ட பூமியை, காப்பாற்ற பன்றியாக அவதாரம் எடுத்து கடலுக்கடியில் இருந்து தோண்டி எடுத்து வந்தார் என்ற புராண கதையை உண்மையாக்குகின்ற வகையில் நவீன இந்தியாவின் ‘கார்ப்பரேட்டுகளின் பரம்பொருளாக’ அவதரித்துள்ள திருவாளர் மோடி வராகியாக மாறி பூமிக்கடியில் உள்ள நிலக்கரியை மற்றும் கனிம வளங்களை அகழ்ந்து எடுப்பதற்கு பொருத்தமாக சட்ட திருத்தங்களை மேற்கொண்டுள்ளார்.

இந்தியாவை சூறையாடி வருகின்ற தேசங்கடந்த கார்ப்பரேட் நிறுவனங்களான அம்பானி மற்றும் அதானி ஆகிய இருவரும் இயற்கை வளங்களை சூறையாடுவதற்கு பொருத்தமாக இந்த சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதுதான் கவனிக்க வேண்டிய செய்தியாகும்.

இவ்வாறு சுரங்கங்கள் தோண்டுவதற்கு சமதளப் பிரதேசங்கள் மட்டுமின்றி மலைப்பிரதேசங்களில் கொட்டிக் கிடக்கின்ற கனிம வளங்களையும், இயற்கை வளங்களையும் சூறையாடுவதற்கு அனுமதிப்பதன் மூலம் சமீபத்தில் வயநாடு, உத்தரகாண்ட், காஷ்மீர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவை போல பல்வேறு நிலச்சரிவுகளை ஏற்படுத்துவதற்கு அதாவது இயற்கை பேரழிவுகளை செயற்கையாக உருவாக்க துடித்துக் கொண்டுள்ளது கார்ப்பரேட்டுகளின் கைக்கூலி அரசு.

ஏற்கனவே மாதவ் காட்கில் மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையானது மலைப்பகுதிகளில் ஏற்படுகின்ற நிலச்சரிவுக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக சமவெளி பிரதேசங்களில் உருவாக்கப்படுகின்ற நிலக்கரி சுரங்கங்கள் உள்ளிட்ட சுரங்கங்கள் தோண்டுவது முக்கிய காரணம் என்று அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது.

அதன் பிறகு இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்று போராடுகின்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முதல் மார்க்சிய லெனினிய புரட்சியாளர்கள் வரை அனைவரும் கனிம வளங்களை சூறையாடுவது; நிலக்கரியை பூமிக்கு அடியில் இருந்து அகழ்ந்த எடுத்து எரிசக்தியாக பயன்படுத்துவது ஆகியவற்றை குறிப்பிட்ட வரம்புக்கு மேல் செய்வதை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

நிலச்சரிவு மட்டுமின்றி சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கின்ற நிலக்கரி பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று சர்வதேச ரீதியில் சூழலியல் மாநாடுகள், பருவநிலை மற்றும் வெப்பநிலை பாதுகாப்பு மாநாடுகள் போன்றவற்றை நடத்திக் கொண்டிருந்தாலும் அதில் இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் சார்பில் மோடியே பலமுறை கலந்து கொண்டிருந்தாலும் அவற்றையெல்லாம் தூக்கி வீசி எறிந்து விட்டு தற்போது பூமிக்கு அடியில் உள்ள நிலக்கரியை அகழ்ந்து எடுப்பதற்கு பொருத்தமாக சட்ட திருத்தங்களை கொண்டு வந்துள்ளனர்.

இந்தியாவில் ஏராளமான நிலக்கரி இருப்புக்கள் உள்ளன, இந்திய புவியியல் ஆய்வுத் துறையால் (Geological Survey of India) சுமார் 4 லட்சம் மில்லியன் டன் நிரூபிக்கப்பட்ட இருப்புகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. 1950 முதல், நாடு சுமார் 21,000 மில்லியன் டன் நிலக்கரியை எடுத்துள்ளது. இதுவரை இந்த நிலக்கரி எடுக்கும் பணியில் முக்கியமாக பங்காற்றி வருகின்ற கோல் இந்தியா நிறுவனம் மற்றும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க:

 அதானி நிலக்கரி சுரங்கத்திற்கு எதிராக போராடும் சத்தீஸ்கர் பழங்குடிகள்!

 நிலக்கரி பற்றாக்குறை: மோடி ஆதரவு கார்ப்பரேட் கும்பல் உருவாக்கும் செயற்கை தட்டுப்பாடு!

இந்த சுரங்கங்களின் மூலம் நிலக்கரியை வெட்டி எடுப்பதற்கு வேறு சில தடைகளும் இருந்தன அதாவது புவியியல் ரீதியாக சில சிக்கல்களும், அங்கிருந்து ஏற்றுமதி செய்வதற்கு பொருத்தமான போக்குவரத்து வசதி இல்லாததும் இதற்குக் காரணமாக அமைந்தன.

ஆனால் இந்திய ஒன்றிய அரசாங்கத்திற்கு இணையாக கையிருப்பு வைத்துள்ள தேசங்கடந்த கார்ப்பரேட்டுகளான அம்பானி மற்றும் அதானி நிறுவனங்கள் அரசாங்கத்தின் செலவில் கட்டுமான பணிகளை செய்து முடித்துவிட்டு அதாவது போக்குவரத்து, ரயில்வே போன்றவற்றை ஏற்பாடு செய்துவிட்டு அகழ்ந்து எடுத்து ஏற்றுமதி செய்வதை மட்டுமே தொழிலாக செய்வதன் மூலம் பல்லாயிரம் கோடிகளை சூறையாடுவதற்கு தயாராகி வருகின்றனர்.

நாட்டின் இயற்கை வளங்களை சூறையாடுவதற்கு இத்தகைய சட்ட திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்ற காலத்தில் தான் வாக்காளர் தீவிர திருத்தம் மற்றும் மத விவகாரங்களை செயற்கையாக உருவாக்கி மக்களின் கவனத்தை திசை திருப்புவது போன்ற பார்ப்பன சூழ்ச்சிகளில் இந்திய ஒன்றிய அரசாங்கம் இறங்கியுள்ளது.

அரசுத்துறை செயலர்கள் முதல் உச்சநீதிமன்ற நீதிபதிகள், முக்கியமான அரசுத்துறை அலுவலர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகார வர்க்கம் ஆகியவற்றில் இந்திய சுதந்திரம் பெற்றதாக முன்வைக்கப்படுகின்ற 75 ஆண்டுகளுக்குப் பிறகும் பார்ப்பன மற்றும் மேல் சாதி கும்பல் ஆதிக்கம் செலுத்துகின்ற நிலையில், இந்தியாவின் இயற்கை வளங்களை இந்த காலகட்டத்திலேயே முற்றாக சுரண்டி கொண்டு செல்வதற்கு கார்ப்பரேட்டுகளுக்கு தாராள அனுமதி கொடுத்து தேசத்துரோகச் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் குலக்கொழுந்துகள் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வசதியாக செட்டிலாகி வாழ்ந்து கொண்டிருக்கின்ற சூழலில் நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டு தொடர்ச்சியாக இயற்கை வளங்களும் அழிக்கப்பட்டு வருவது மிகப்பெரும் கொடூரமான செயல் என்பதை எதிர்த்து முறியடிப்பதற்கு கோடிக்கால் பூதமாக திரள்வோம்.

மருது பாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here