கார்ப்பரேட் கொள்ளைக்கு மாற்று பொதுத்துறை நிறுவனங்களே என்பதை நிரூபித்த நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்!

கார்ப்பரேட் கொள்ளைக்கு மாற்று பொதுத்துறை நிறுவனங்களே என்பதை நிரூபித்த நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்!

தெற்காசிய நாடுகளில் மிகப்பெரிய திறந்தவெளி சுரங்கமான நெய்வேலி நிலக்கரி நிறுவனம் 2024 25 ஆண்டில் சுமார் 2621.36 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 41% அதிகம் என்று நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் ரத்த வியர்வையால் உருவாக்கப்பட்ட நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும் அது மட்டுமின்றி நவரத்தினங்கள் என்று சொல்லக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களில் நவரத்தினா அந்தஸ்து பெற்றது.

இந்தியாவிலேயே மிகப்பெரிய, அளவில், திறந்தவெளியில் அமைந்துள்ள நிலக்கரிச் சுரங்கம் கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ளது. பழுப்பு நிலக்கரியைக் கொண்டு இங்கு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகத்திற்கு மட்டுமல்லாது சதர்ன் கிரிட் கார்ப்பரேஷன் மூலம் தென் மாநிலங்கள்அனைத்திற்கும் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. தென்னிந்தியாவிற்கு தேவையான மின் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது நெய்வேலி அனல் மின் நிலையம்.

பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோதே இப்பகுதியில் கருப்புத் தங்கம் என்று அழைக்கப்படுகின்ற பழுப்பு நிலக்கரி கிடைப்பதை அறிந்து ஆய்வுகள் செய்ய உத்தரவிட்டது பிரிட்டன் அரசாங்கம்.

அதன்படி 1951-ம் ஆண்டு மொத்தம் 175 ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டன. தமிழக அரசின் சார்பிலும் 160 ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டன. அப்போதுதான் நெய்வேலியில் மறைந்து கிடந்த பழுப்பு நிலக்கரியின் உண்மையான அளவு தெரிய வந்தது. அப்பகுதியில் 2000 மில்லியன் டன் அளவிற்கு பழுப்பு நிலக்கரி புதைந்து கிடப்பது தெரிய வந்தது.

துவக்கத்தில் மாநில அரசு நிலக்கரி சுரங்கங்களை கொண்டுவதற்கு முயற்சி மேற்கொண்டது. ஆனால் இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் 1955ம் ஆண்டு நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம் மாநில அரசின் கையிலிருந்து மத்திய அரசுக்கு மாறியது.

பூமிக்கடியில் கிடக்கின்ற கனிம வளங்களை மாநிலங்களின் கையில் இருந்து பறித்துக் கொண்ட இந்திய ஒன்றிய அரசு முழு அளவில் நிதியுதவி செய்ய ஒப்புக்கொண்டது. திட்டத்தின் தலைமை செயல் அதிகாரியாக மத்திய தொழில்துறை செயலாளர் டி.எம்.எஸ். மணி பொறுப்பேற்றுக் கொண்டார்.

சோவியத் ரஷ்யாவின் உதவியுடன் 1956ம் ஆண்டு நெய்வேலி அனல் மின் நிலையம் முழுமையான உற்பத்தி நிறுவனமாக மாறியது. அன்று தொடங்கி இன்று வரை அது தனது மின் உற்பத்தியைத் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறது.

1956ல் தொடங்கப்பட்ட என்எல்சி நிறுவனம் நெய்வேலி பகுதியில் 64,000 ஏக்கர் பகுதியில் மூன்று திறந்த வெளிச் சுரங்கங்களை அமைத்துள்ளது. இந்த திறந்தவெளி சுரங்கங்களின் மூலமாக பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுப்பதற்கு இரண்டு,, மூன்று கட்டங்களாக 1950களில் தொடங்கி 2023 வரை 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் என்எல்சியின் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்காகக் காலிசெய்யப்பட்டுள்ளன.

படிக்க:

🔰 நெய்வேலி நிலக்கரி நிறுவனம் விவசாயிகளை வேட்டையாடுவதை அனுமதிக்காதே! “நிலம் எனது உயிர்! நிலம் எனது அதிகாரம்!” என முழங்குவோம்!

🔰 நிலக்கரி பற்றாக்குறை: மோடி ஆதரவு கார்ப்பரேட் கும்பல் உருவாக்கும் செயற்கை தட்டுப்பாடு!

விவசாயம் செய்து வாழ்ந்து வந்த மக்களை அவர்களது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றி அதில் சுரங்கம் 1, சுரங்கம் 1A மற்றும் சுரங்கம் 2 ஆகியவை செயல்படுகின்றன.

இவ்வாறு பூமிக்கு அடியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்படுகின்ற நிலக்கரி, என்எல்சியின் நான்கு அனல்மின் நிலையங்களில் மின்சாரத் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் வெறும் 600 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யும் நிறுவனமாக இருந்த என்எல்சி தற்போது 6,000 மெகாவாட் தயாரிக்கும் நிறுவனமாக வளர்ச்சி அடைந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் தான் இதுநாள்வரை இல்லாத அளவில், அதிபட்ச மின் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் கூறியுள்ளது போல சென்ற ஆண்டு லாபமும் 2500 கோடிக்கு மேல் ஈட்டப்பட்டுள்ளது.

தென் மாநிலங்களில் மிகப்பெரும் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்களும், பொறியாளர்களும் தேர்வு செய்யப்பட்டு அவர்களது கடுமையான உழைப்பினால் நவரத்தினா அந்தஸ்திற்கு உயர்ந்தது நெய்வேலி நிறுவனம்.

கனிம வளங்களை எடுத்து விற்பனை செய்வதற்கான கனிமவள சட்டங்கள் பாசிச பாஜகவினால் திருத்தப்பட்டது. இதன் காரணமாகவே பொதுத்துறை நிறுவனமான என்எல்சியின் பல பணிகள் தற்போது படிப்படியாக தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு வருகிறது.

அது மட்டுமல்ல புதிதாக இந்த பொதுத்துறை நிறுவனத்தில் வேலைக்கு ஆள் எடுப்பதை காட்டிலும் தனியார் கையில் ஒப்படைத்து தனியார்கள் கொள்ளை அடிப்பதற்கும் கொழுப்பதற்கும் உதவி கொண்டுள்ளது இந்திய ஒன்றிய அரசு.

சோவியத் ரஷ்யாவின் உதவியுடன் நெய்வேலி முழுவதும் 30 வட்டங்களில் கட்டியமைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வீடுகள் நிரந்தர தொழிலாளர்கள் இல்லாத காரணத்தினால் காலியாகி தற்போது ஒரு சில பகுதிகளில் குடியிருப்புகள் இடித்து தள்ளப்படுகிறது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

சாதாரண குண்டுசி தயாரிப்பில் இருந்து ராணுவத்திற்கு தேவையான போர் விமானங்கள் வரை அனைத்தையும் மேக் இன் இந்தியா என்ற பெயரில் அந்நிய கார்ப்பரேட்டுகள் மற்றும் தேசங்கடந்த தரகு முதலாளிகளின் நிறுவனங்கள் உற்பத்தி செய்வதற்கு தூக்கி கொடுத்துக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் பாஜகவின் ஆட்சியில் கார்ப்பரேட்டுகளுக்கு மாற்றாக நாட்டின் வளங்களை நாட்டிற்கே பயன்படுத்தக்கூடிய பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை முன்னிறுத்தி போராடுவோம்.

பொதுத்துறை நிறுவனங்கள் துவக்கப்பட்ட போது அதிகார வர்க்க முதலாளித்துவத்தினால் கட்டுப்படுத்தப்படுகிறது என்று மார்க்சிய லெனினிய இயக்கங்கள் வரையறுத்து முன் வைத்தது. அப்போதைய சூழலில் அது மிகச் சரியான வரையறுப்பாகவே இருந்தது.

தற்போதைய கார்ப்பரேட் பவர் கொள்ளையின் மூலம் நாடே தனது இயற்கை வளங்களையும் கனிம வளங்களையும் இழந்து கொண்டிருக்கின்ற சூழலில் அம்பானி, அதானி, அகர்வால் போன்ற ஒரு சில தேசங்கடந்த தனியார் முதலாளிகள் கொள்ளையடிப்பதைக் காட்டிலும் அரசு நிறுவனம் என்ற பெயரில் இயங்குகின்ற பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பது அவசியமானது என்று போராட வேண்டி உள்ளது.

ஆல்பர்ட்.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here