
சினிமாவை சாதாரணமாக கருதுகிறோம். ஆனால் அரசியலில் சினிமாவின் தாக்கம் பெரியது. இதை சங்பரிவார் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். Chaavaa படம் குறித்து சில தினங்களுக்கு முன்பே எழுதியிருந்தேன். இப்படம் ஔரங்கசீப்பை முரடராக சித்தரிக்கிறது. மராத்திய அரசரும் சிவாஜியின் மகனுமான சம்பாஜி மகாராஜை ஔரங்கசீப் கொடூரமாகக் கொன்றதாக இப்படம் சித்தரிக்கிறது. இப்படம் மராத்திய பூமியில் தீ மூட்டியிருக்கிறது.
‘பாபர் மசூதிபோல் ஒளரங்கசீப் கல்லறையையும் அகற்ற வேண்டும். முகாலயப் பேரரசர் ஔரங்கசீப் கல்லறையை அகற்றாவிட்டால் கரசேவை மூலம் அகற்றுவோம்.’ கொக்கரிக்கின்றன பஜ்ரங் தள், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகள்.
மகாராஷ்டிரத்தின் ஔரங்கபாத் நகரில் உள்ள ஔரங்கசீப் கல்லறையில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதேவேளை மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ‘நாங்கள் மராத்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம். உண்மையான தேசபக்தன் ஔரங்கசீப்பை போற்றமாட்டான். ஔரங்கசீப் மகாராஷ்டிரத்தின் எதிரி.
அவருடைய எச்சங்களை நாம் ஏன் வைத்திருக்க வேண்டும்?” என்று முழங்குகிறார்.
இவர்கள் சொல்வதுபோல் ஔரங்கசீப் அத்தனை கொடூரமானவரா? அவரது கல்லறை ஆடம்பரமான கட்டிடமா?
இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்ட பேரரசரான ஔரங்கசீப்புக்கு தலைநகரிலோ உ.பியிலோ கல்லறை எழுப்பாமல் ஏன் ஔரங்காபாத்தில் எழுப்பினார்கள்?
இதை நடுநிலையானவர்கள் தெரிந்து கொள்ளவது அவசியம் தொடர்ந்து வரலாறு ஔரங்கசீப்பை தவறானவராகக் காட்டி வந்திருக்கிறது. அதேவேளை ஔரங்கசீப்பை புரிந்துகொள்ள உதவும் நூல்களும் எழுதப்பட்டுள்ளன. அவ்வகையில் ஔரங்கசீப்பின் அறியாத பக்கங்களை ஆட்ரே டிரஷ்கி எழுதிய ‘ஔரங்கசீப்: தி மேன் அண்ட் தி மித்’ , வில்லியம் டேல்ரிம்பிள் எழுதிய ‘பிரின்சஸ் அண்ட் பெயின்டர்ஸ் இன் முகல் டெல்லி’ போன்ற நூல்கள் காட்டுகின்றன.
உண்மையில் சமயப் பொறையுடையவர் ஔரங்கசீப். அவரது காலத்தில் கட்டாய மதமாற்றங்கள் நடந்ததில்லை. இசை, ஓவியம் போன்ற கலைகளை நேசித்த மெல்லிய மனம் கொண்டவர் அவர். ஔரங்கசீப்புக்கு வீணை வாசிக்கத் தெரியும். அவர் காலத்தில் மதக் கலவரங்கள் நடைபெற்றதில்லை.
ராஜா ரகு ராஜ் என்ற இந்துவை ஔரங்கசீப் தன்னுடைய திவானாக நியமித்திருந்தார். மான்சாப் போன்ற உயர் பதவிகளை ராஜபுத்திரர்களுக்கு வழங்கினார். ஆனாலும் தொடர்ந்து வரலாற்றால் ஔரங்கசீப்பை அவதூறு செய்துவருகிறது சங்பரிவார் கூட்டம்.
ஷாஜகான் தன் மகனான ஔரங்கசீப்பை தெளலதாபாத்திற்கு ஆளுநராக அனுப்பினார்.
அவருக்கு தெளலதாபாத்தைவிட ஔரங்காபாத் நகரம் பிடித்திருந்தது. காரணம் அவரது சூஃபி மனநிலை. இறைத் தூதர் முகம்மதுநபியின் சீடர்கள் பலருடைய சமாதி இங்குதான் இருக்கிறது. குறிப்பாக ஔரங்கசீப்பின் குருவான சையது ஜைனுதீன் சிராஜின் கல்லறை ஔரங்காபாத்தில் இருக்கிறது.
‘தனது சூஃபி குருவின் கல்லறை அருகே தன் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும். அந்த கல்லறை எளிமையாக அமைய வேண்டும். தன் உழைப்பால் ஈட்டிய பொருளால் மட்டுமே கல்லறை கட்டப்பட வேண்டும். கல்லறையை கூரை கொண்டு மூடக்கூடாது. கல்லறை மீது காய்கறிச் செடிகள் பயிரடப்பட வேண்டும்’ என உயில் எழுதி வைத்திருந்தார் ஔரங்கசீப்.
படிக்க:
🔰 பாபர் மசூதி இடிப்பு கடப்பாரையுடன் தொடங்கவில்லை!
🔰 பள்ளி சிறுவர்களுக்கு மதவெறியூட்டும் கர்நாடக பாஜக || பாபர் மசூதியை இடிப்பது போன்று ஒத்திகை
அவரது கல்லறை வெறும் களிமண்ணாலும் மரத்தாலும் எழுப்பப்பட்ட கட்டிடம். ஒரு பேரரசரின் கல்லறை இவ்வளவு சாதாரணமாக இருப்பதா? என ஆங்கிலேயரான கர்சன்பிரபு நினைத்தார். அவர்தான் அந்தக் கல்லறையைச் சுற்றி பளிங்குகற்களால் மதிற்சுவரை எழுப்பினார்.
இத்தகைய பின்னணி கொண்ட ஓர் எளிய ஆன்மா உறங்கும் இடத்தைதான் இந்த ரமலான் மாதத்தில் இடிக்கத் திட்டமிடுகிறது சங்பரிவார் கூட்டம். டெல்லியில் அமைந்த ஔரங்கசீப் சாலையின் பெயரை பாஜக அரசு அப்துல்கலாம் சாலையாக மாற்றியது. இப்போது அவரது கல்லறையைக் குறிவைக்கிறது.
மனுநீதியால் ஒடுக்கப்படும் தீண்டாமைக் கொடுமை, பெண்கள் மீதான வன்முறை தீரவில்லை. ஓடுக்கப்பட்டவர்களை கல்விப் புலத்திலிருந்தும் அதிகாரத்திலிருந்தும் அகற்றும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.
அதேசமயம், கல்லறை இடிப்பு இந்துக்களின் நலனுக்காக எனச் சித்தரிக்கிறது சங்பரிவார்.
வெறுப்பும் வன்முறையும் பிரிவினைவாதமும் வளர்ப்பது வளர்ச்சி அரசியல் ஆகாது. இதற்கெல்லாம் மௌன சாட்சிகளாக இருக்கும் ஆபத்திலிருந்து இந்தியர்கள் விலகவேண்டும்.
![]()
கரிகாலன்
முகநூல் பதிவு






