டெல்லி பல்கலைக்கழகத்தில் கல்வியை காவிமயமாக்கும் முயற்சி!

0
டெல்லி பல்கலைக்கழகத்தில் கல்வியை காவிமயமாக்கும் முயற்சி!
பட்டப் படிப்பில் மனுதர்மத்தையும் ராமாயணம் மகாபாரதத்தையும் ஸ்மிருதிகளையும் மற்றும் இந்து மத புராணங்களையும் பாடத்திட்டமாக வடிவமைத்துள்ளனர்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் தர்மசாஸ்திர கல்வி (Dharmashastra Studies) என்ற புதிய பட்டப்படிப்பை (course)ஐ இந்த ஆண்டு துவங்கியுள்ளது சனாதன வெறி பிடித்த சங்கிக்கூட்டம்.

தற்பொழுது இந்தியாவில் நிலவி வரும் அரைகுறை ஜனநாயகத்தையும் அழித்து ஒழித்து விட்டு நால்வர்ண அடிப்படையிலான சாதி தீண்டாமை கொடுமை மிக்க இந்துராஷ்டரத்தை அமைத்தே தீர வேண்டும் என்று வெறிபிடித்து அலையும் ஆர்.எஸ்.எஸ், பாஜக பாசிஸ்டுகள் பல வழிகளில் இதற்கான வேலைகளை செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக அவர்கள் முதன்மை முக்கியத்துவம் கொடுத்து கல்வியை காவிமயமாக்க வேண்டும் என்று வேலை செய்து வருகின்றனர். அதன்படி தில்லி பல்கலைக்கழகத்தில் தர்மசாஸ்திர கல்வி என்ற பெயரில் புதிய மேற்படிப்பை (Undergraduate course) அறிமுகப்படுத்தி உள்ளனர்.

இந்தப் பட்டப் படிப்பில் மனுதர்மத்தையும் ராமாயணம் மகாபாரதத்தையும் ஸ்மிருதிகளையும் மற்றும் இந்து மத புராணங்களையும் பாடத்திட்டமாக வடிவமைத்துள்ளனர்.

அந்தப் பட்டப்படிப்பில் அகஸ்தம்ப தர்மசூத்திரம், புத்தயான தர்மசூத்திரம், வசிஷ்ட தர்மசூத்திரம்,  யக்னவல்கீய ஸ்மிருதி, நாரதர் ஸ்மிருதி கௌடல்ய அர்த்தசாஸ்திரம் போன்றவைகள் முக்கிய பாடங்களாக இருக்கும்.

திருமணங்கள், நாகரீக சமூகத்தை கட்டமைப்பதில் ஆற்றும் பாத்திரத்தை பற்றியும் தனிமனிதனின் நடத்தையை ஒழுக்க நெறிகள் எப்படி கட்டுப்படுத்துகின்றன என்பதை பற்றியும் இந்தப் பாடங்கள் வாயிலாக மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படும் என்றனர்.

இந்தப் பட்டப் படிப்பில் மனுஸ்மிருதியை ஒரு பாடமாக அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள் நடக்கும் பொழுதே இந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களில் ஒரு பகுதியினரிடம் இருந்து கடும் ஆட்சேபனைகள் எழுந்தன.

இந்த மனுஸ்மிருதி பாடத்திட்டமானது ஆண் –  பெண் ஏற்றத்தாழ்வையும், சமூக –  பொருளாதார – சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் மேலும் வலுப்படுத்துவதாகவும் அத்தகைய ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்தி புகழ்ந்துறைப்பதாகவும் கூறி ஜனநாயக உணர்வு கொண்ட பேராசிரியர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அதையும் மீறி பார்ப்பனப் பாசிஸ்டுகள் இந்தப் மனுஸ்மிருதியை ஒரு பாடமாக சேர்த்துள்ளனர்.

படிக்க:

🔰 டெல்லி JNU வில் ABVP குண்டர்கள் மீண்டும் வன்முறை!
🔰 வகுப்பறையில் சாணி பூசிய டெல்லி பல்கலைக்கழக முதல்வர்! பதில் சம்பவம் செய்த மாணவர்கள்!

இதன் மூலமாக, சாதி மறுப்பு திருமணங்கள் செய்யவே கூடாது; சுயசாதிக்குள் மட்டும் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்; அப்பொழுதுதான் சாதிப் பாகுபாடுகள் நீடித்து நிலைத்து நிற்கும்; அதன் மூலமாகத்தான் தீண்டத்தகாதவர்கள் யார்? வேசிகளுக்கு பிறந்த சூத்திரர்கள் யார்? என்பதை தெளிவாக கண்டறிந்து அதற்கு ஏற்ப தீண்டாமையை கடைபிடிக்கும்படியான ஒரு வலிமையான இந்துராஷ்டிரத்தை – ராமராஜியத்தை அமைத்திட முடியும் என்பதில் பார்ப்பன பாசிஸ்டுகள் தெளிவாக இருக்கிறார்கள் என்பதை அனைவரும் தெளிவாக உணர வேண்டும்.

ஆனால்  பல்கலைக்கழகத்தில் மனுஸ்மிருதியை கற்றுக் கொடுப்பதற்கு எதிராக எழுந்த கடுமையான எதிர்ப்பின் காரணமாக, கடந்த ஜூன் 12-ம் தேதி அன்று டெல்லி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்   “மனுஸ்மிருதியின் எந்தப் பகுதியும்  எந்த வடிவத்திலும் டெல்லி பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்பட மாட்டாது” என்றும் “எதிர்காலத்திலும் மனுசுமிருதியை கற்றுக் கொடுக்கும் எந்த முயற்சியும் தடுத்து நிறுத்தப்படும்” என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் நாம் மகிழ்ச்சி அடைவதற்கு ஒன்றும் இல்லை. தர்ம சாஸ்திர கல்வி என்ற பட்டப் படிப்பில் இருந்து மனுஸ்மிருதியை நீக்கி உள்ளார்களே தவிர அந்த பட்டப் படிப்பையே நீக்கவில்லை. இந்த ஆண்டிலிருந்து டெல்லி பல்கலைக்கழகத்தில் தர்மசாஸ்திரக் கல்வி என்ற பட்டப் படிப்பு தொடர்ந்து கற்பிக்கப்பட தான் போகிறது.

அதில் ராமாயணம் மகாபாரதம் மற்றும் இந்து மத புராணங்களும் அகஸ்தம்ப தர்மசூத்திரம், புத்தயான தர்மசூத்திரம், வசிஷ்ட தர்மசூத்திரம்,  யக்னவல்கீய ஸ்மிருதி, நாரதர் ஸ்மிருதி கௌடல்ய அர்த்தசாஸ்திரம் போன்ற இந்து மத வெறி சரக்குகளும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப் போகிறார்கள்.

இதன் மூலம் பண்டைய இந்தியாவில் நிலவி வந்த நால்வர்ண  சாதிய அடிப்படையிலான கொடூரமான சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வு மிக்க சமூகத்தை புனிதமானது என்றும் அத்தகைய சமூகத்தை உருவாக்குவது புனிதமான கடமை என்றும் மாணவர்களின் மனங்களில் பதிய வைக்க போகிறார்கள்.

இத்தகைய கல்வி கற்ற மாணவர்கள், எதிர்காலத்தில், சமுதாயத்தின் மதிப்பு மிக்க இடங்களில் இருந்து கொண்டு  மக்களுக்கு எதைக் கற்றுக் கொடுக்கப் போகிறார்கள் என்று எண்ணும் பொழுது ஆர் எஸ் எஸ், பாஜக பாசிஸ்டுகள் கூறும் இந்துராஷ்டிரம் என்ற இருண்ட காலம் நம் கண்முன் வருகிறது.

இந்தியா இருண்டு காலத்திற்குள் சென்று விடாதிருக்க, மக்களிடையே அறிவொளியை பரப்பி ஆர் எஸ் எஸ், பாஜகவினரை முறியடிப்பதற்கு அனைவரும் களத்தில் இறங்க வேண்டியது கட்டாயம் என்பதை உணர வேண்டும்.

குமரன்

செய்தி ஆதாரம்: Thewire

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here