மாநாட்டு தீர்மானங்கள்!

திருச்சியில் மக்கள் அதிகாரம் சார்பாக இன்று (16.03.2025) இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது.


  1. ஒன்றியத்தில் அதிகாரம் குவிக்கப்பட்டு வரும் இன்றைய பாசிச சூழலில், மாநிலங்களுக்கு வரி வசூல் செய்வது முதல் கல்வி, சுகாதாரம் கனிம வளம் உள்ளிட்டவைகளில் அனைத்தையும் தீர்மானிக்கின்ற முழுமையான அதிகாரங்களும், உரிமைகளும் வழங்கும் வகையில் உண்மையான மாநில தன்னாட்சி அமையவும், நாணயம் வெளியுறவு பாதுகாப்பு என குறிப்பிட்ட துறைகளை மட்டும் ஒன்றிய அரசிடம் இருக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்பட வேண்டும். இதற்கான போராட்டத்தை தமிழக மக்கள் முன்னெடுக்க வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
  2. பாசிச பாஜக ஒன்றிய அரசை ஆண்டைகள் போலவும், மாநிலங்களை அடிமைகள் போலவும் நடத்தும் முறையை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. குறிப்பாக, பிரிட்டிஷ் காலனி ஆட்சியைப் போல தற்போது ஒன்றிய அரசு மாநிலங்களிடமிருந்து ஜிஎஸ்டி, செஸ், சர்ச்சார்ஜ் மூலம் கட்டிய வரி வசூல் செய்து வைத்துக்கொண்டு மாநிலங்களுக்கு தரவேண்டிய பேரிடர், கல்வி, உள்கட்டமைப்பு ஆகியவற்றிற்கு நிதிகளை தர மறுப்பது சட்டவிரோதம் மட்டுமின்றி கூட்டாட்சி தத்துவத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது. ஒன்றிய பாஜக அரசின் இத்தகைய அடாவடித்தனத்தை இம்மாநாடு கண்டிக்கிறது. ஒன்றிய அரசு இத்தகைய போக்குகளை உடனே கைவிட வேண்டும். இல்லையெனில் பிரிட்டிஷ் அரசிற்கு நேர்ந்தது போன்றே ஆர்.எஸ்.எஸ்- பி.ஜே.பி அரசுக்கு நேரும் என்பதை இந்த மாநாடு எச்சரிக்கிறது.
  3. கல்வியை மாநில உரிமை பட்டியலில் இருந்து முற்றாக நீக்குகின்ற, கவர்னர்களுக்கு மட்டுமே துணைவேந்தர்களை நியமிக்கின்ற அதிகாரத்தை வழங்குகின்ற, மாநிலங்களின் கல்விக் கழகங்கள்- வாரியங்களை ஒழித்துக் காட்டுகின்ற வகையிலான யுஜிசி பரிந்துரைகளை நிராகரிப்போம். தேசிய கல்விக் கொள்கையை மட்டுமே அமல்படுத்த வேண்டும் என்ற பாசிச சர்வாதிகாரத்திற்கு எதிராக ஒன்றிணைந்து கல்வி உள்ளிட்டு பறிக்கப்பட்ட மாநில உரிமைகளை போராடி நிலைநாட்டுவோம். கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வர வேண்டும் என்று இந்த மாநாடு அறிவிக்கின்றது.
  4. பார்ப்பன எதிர்ப்பு கோட்டையான தமிழகத்தில் கலவரங்களின் மூலம் கட்சியை கட்டுவதற்கு துடித்துக் கொண்டுள்ள ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணி போன்ற பார்ப்பன பாசிச அமைப்புகளின் சென்னிமலை, திருப்பரங்குன்றம் மலை பிரச்சனை போன்று அவ்வப்போது ஒற்றுமையை பிளவு படுத்துகின்ற பாசிச பயங்கரவாத நடைமுறைகளை வன்மையாக கண்டிப்பதுடன் எதிர்த்து முறியடிக்கவும் மக்களை அறைகூவி அழைக்கின்றது.
  5. வட இந்திய மாநிலங்களில் கல்வி, சுகாதாரம், சமூக நீதி ஆகியவற்றில் பின்தங்கி இருப்பதால் மக்கள் தொகை அதிகரித்த வருவதை பயன்படுத்தி எம்.பி தொகுதிகளை அதிகரித்து பாராளுமன்றத்தில் நிரந்தர அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ளவும், தென்னிந்தியாவின் பங்களிப்பு இல்லாமலே எந்த சட்டத்தையும் நிறைவேற்றும் அதிகாரத்தை வைத்துக் கொள்ளவுமே பாசிச பாஜக, 843 இருக்கைகள் கொண்ட புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டி வைத்து கொண்டு பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு எனும் நயவஞ்சகமாக செயல்படுகிறது என்பதை இந்த மாநாடு எச்சரிக்கிறது.
  6. தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்களை முடக்கி வைத்து ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்துவதுடன்,போட்டி அரசாங்கம் நடத்துவதும் மாநில மக்களின் மொழி, பண்பாடு அடையாளங்களை சிதைக்கும் வகையில் பேசுவதும் என தமிழக ஆளுநர் செயல்பட்டு வருவது கூட்டாட்சிக்கு ஆபத்தாகும். ஆளுநர்கள் மூலம் மாநில அரசை செயல்பட விடாமல் தடுக்கும் ஒன்றிய அரசின் போக்கை உடனடியாக தடுக்க புரட்சிகர, ஜனநாயக சக்திகள் ஒன்று பட வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
  7. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வரி யுத்த பிரகடன அறிவிப்பிற்கு அடிபணிந்து இறக்குமதி வரிகளை குறைத்ததோடு மட்டுமில்லாமல், அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகள் என்று பெயரிட்டு இந்தியர்களை ‘கைவிலங்கிட்டு’ நாய்களைப் போல் நடத்திய டிரம்ப அரசுக்கு எதிராக பெயரளவில் கூட கண்டனம் தெரிவிக்காமல் இந்திய மக்களின் இறையாண்மையை அமெரிக்க வல்லரசிடம் காவு கொடுத்து விட்டு, அமெரிக்காவின் MAGA திட்டத்தை இந்தியாவில் MIGA திட்டம் என்ற பெயரில் இந்திய மக்களை அமெரிக்காவின் அடிமையாக்கும் வகையில் அமல்படுத்த துடிக்கும் பாசிச மோடி அரசை இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.
  8. இந்தியாவில் உள்ள நடுத்தர வர்க்கத்தையும் தனது கூட்டணிக் கட்சிகள் ஆளுகின்ற பீகார் போன்ற மாநிலங்களை திருப்திப் படுத்தவும் பாசிச பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களை முற்றாக நிராகரிக்கின்ற வகையில் போடப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான இந்திய ஒன்றியத்தின் பட்ஜெட்டை புறக்கணிப்போம். நாட்டின் பெரும்பான்மை மக்களான விவசாயிகள் நலனை புறக்கணித்தும் கல்வி வேலை வாய்ப்பு சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகளுக்கு குறைவான நிதி ஒதுக்கியும் தனது எஜமானர்களான கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகள் தான் ஆர்எஸ்எஸ் பாஜக என்பதை இந்த பட்ஜெட் நிரூபிக்கின்றது, கார்ப்பரேட் பாசிசத்தின் மூலம் இந்திய மக்களை அமெரிக்கா மேல்நிலை வல்லரசு மற்றும் ஏகாதிபத்தியங்களில் மறுகாலனியாக்க துடிக்கின்ற பொருளாதாரக் கொள்கைதான் ஆர்எஸ்எஸ் பாஜகவின் பொருளாதாரக் கொள்கை என்பதை மக்களிடம் கொண்டு சென்று கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்த அணி திரட்டுவோம்.
  9. தென் தமிழகத்தில் ஆதிக்க சாதி வெறியர்களால் பள்ளி மாணவர்கள் முதல் பெண்கள் என உழைக்கும் மக்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதன் மீது கவனம் செலுத்தாமல் தமிழக அரசு மெத்தனமாக இருப்பதை இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. பிறப்பின் அடிப்படையில் உயர்வு -தாழ்வு, தீண்டாமை என்பதை முழுமையாக ஒழிக்க சாதி ஒழிப்பை சட்டமாக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தோழமையுடன்

பொதுச் செயலாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை.

தொடர்புக்கு: +91 9597138959

1 COMMENT

  1. இந்த பரந்தூர் சிப்காட் எல்லாம் வராதா?

    மத்திய பாசக அரசின் பத்து அடாவடிகள் எதிர்க்கிறீர்கள் வரவேற்கிறேன்

    டிம்கா பாசக கூட்டு அடாவடிகள் வராதா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here