
பாலஸ்தீனத்திற்கு எதிரான இனப்படுகொலை 17 மாதங்களாக நடந்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் போர் நிறுத்தம் 45 நாட்களுக்கு அமலுக்கு வந்தது. ரத்த வெறி பிடித்த இனப்படுகொலையில் இருந்து இளைப்பாறிய காசா மக்கள் மீது மீண்டும் தாக்குதல் கொடுத்துள்ளது யூதஇனவெறி இஸ்ரேல் அரசு.
இந்த தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் ஹமாஸ் அமைப்பு “ஆக்கிரமிப்பாளர்களுக்கு எல்லை இல்லாத அரசியல் மற்றும் இராணுவ உதவி வழங்குவதனால் வாஷிங்டன்(அமெரிக்க மேலாதிக்க கும்பல்) தான் இன அழிப்புக்கும் காசாவில் நடக்கும் குழந்தைகள் மற்றும் பெண்கள் படுகொலைகளுக்கும் முழு பொறுப்பு” என குறிப்பிட்டுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் துல்லியமாக கடைப்பிடித்து வருவதாகவும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குறுதியை மீறி போரையும் ஆக்கிரமிப்பையும் தொடங்கி ஒப்பந்தத்தை மீறி உள்ளனர் என்றும் கூறியதுடன் மத்தியஸ்தர்களுடன் இணைந்து ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஒன்றரை வருடம் நடந்த இனஅழிப்பு போரில் 48,520 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 19ஆம் தேதி காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று ஒப்பந்தத்தை மீறி மிகப்பெரிய வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது இனவெறி நெதன்யாகு அரசு.
இந்த தாக்குதலில் 413 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிகம். காசாவில் உள்துறை இணை அமைச்சரான முஹம்மத் அபு வஃபா கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இவர் அந்த பிராந்தியத்தில் ஹமாஸின் உயர்நிலை பாதுகாப்பு அதிகாரியாக கருதப்படுகிறார்.

தின்ற சோறு செரிக்கும் முன்னே நடந்தேறிய படுகொலை!
போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் நிலையில் அறிவிக்கப்படாத தாக்குதலை தொடுத்து அப்பாவி மக்களை கொன்று குவித்துள்ளது. ரமலான் மாதம் என்பதால் அதிகாலையில் மக்கள் தங்களின் உணவை எடுத்துக் கொண்டிருந்ததாக தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அவர்களின் உணவு செரிப்பதற்கு முன்னதாகவே இனவெறி பசியை தீர்த்துள்ளது கொலைகார கும்பல்.
“இப்போது இருந்து ஹமாஸூக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேல் அதிகரித்துக் கொண்டே இருக்கும்” எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது இஸ்ரேல். இத்தனை கொடுமையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது ஐநா சபை.
படிக்க:
☢ வடக்கு காசாவில் பஞ்சம்: இஸ்ரேல் யூத இனவெறியர்கள் உருவாக்கியது!
☢ யார் வீழ்த்தப்பட வேண்டும்! ஹமாஸா? இஸ்ரேல் ஜியோனிசமா?
இந்த தாக்குதலுக்கு முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்துடன் இஸ்ரேல் கலந்தாலோசித்ததாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர், ஃபாக்ஸ் நியூஸுக்கு தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மொத்த வாழ்க்கையும் அழிக்கப்பட்டு கையறு நிலையில் என்ன செய்வதென்று அறியாமல் தங்கள் இடத்தைத் தேடி அலைந்து கொண்டிருக்கும் பாலஸ்தீன மக்களை குறிவைத்து மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதலை தொடுத்துள்ள இஸ்ரேலின் அராஜக செயலை அனைத்து நாடுகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. இஸ்ரேலின் இந்த கோழைத்தனமான செயலை பாசிஸ்ட் மோடி ஆளும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மறைமுகமாக ஆதரிக்கின்றன.
இஸ்ரேலின் இனவெறியும் அமெரிக்காவின் மேலாதிக்க வெறியும் இணைந்து பாலஸ்தீனத்தை 70% சுடுகாடுகள் ஆக்கிவிட்டது. இருக்கின்ற மக்களும் போதிய ஊட்டச்சத்து இன்றி, போதிய உணவு, தண்ணீர், சுகாதார வசதிகின்றி சாவின் விளிம்பில் இருக்கும் தருணத்தில் அவர்களை மீண்டும் ஒருமுறை கொன்று தனது கோழைத்தனத்தை பறைசாற்றியுள்ளது இஸ்ரேல்.
சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்ட மக்களை ஐநாவோ அல்லது வேறு அமெரிக்க ஏவல் அமைப்புகளோ காப்பாற்றும் என்று கனவு காண்பது முட்டாள்தனம். இந்த போருக்கு பக்கபலமாய் இருப்பதும் இந்த கும்பல் தான். சர்வதேச நீதிமன்றம் நெதன்யாகுவை இனப்படுகொலை குற்றவாளி என அறிவித்த பின்பும் இதுவரை அவனை கைது செய்ய முடியவில்லை. காசா மக்களுக்கும் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. அவர்கள் எதிர்த்து போராடும் நிலையிலும் இல்லை. நாஜிச ஹிட்லரை ஒழித்துக் கட்ட தோழர் ஸ்டாலின் தலைமையில் உருவான பாட்டாளி வர்க்க படையை போல் உலகை கூறு போட நினைக்கும் ஏகாதிபத்திய நிதி மூலதன கும்பலையும் அதற்கு சேவை செய்யும் பாசிச அரசையும் வீழ்த்த உலக பாட்டாளி வர்க்கத்தால் தான் முடியும். ஒரு நாள் வீறுகொண்டு எழும் பாட்டாளி வர்க்கம் இவர்களுக்கு சவக்குழி வெட்டும்.
- நலன்






