லக அளவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து இந்தியா 3வது இடத்தில் உள்ளது என நைட் பிராங்க் அமைப்பு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு பெரும் பணக்கார இந்தியர்களில் 18% கிரிப்டோகரன்சிகள், என்எப்டிகளில் முதலீடு செய்துள்ளனர். ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி ஆசிய பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 10,300 கோடி டாலராகும். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஓராண்டில் 24 சதவீதம் அதிகரித்துள்ளது. அதானியின் சொத்து மதிப்பு ஓராண்டில் 4,900 கோடி டாலர் உயர்ந்துள்ளது.
மத்திய வங்கியின் நிதிக் கொள்கைக் குழு (MPC) அடுத்த நிதியாண்டில் ஆறு முறை சந்திக்கும் என்றும், அதன் முதல் கூட்டம் ஏப்ரல் 6-8 தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி, நுண் கடன் வழங்கும் நிறுவனங்கள் வழங்கும் கடன்களின் வட்டி விகிதம் மீதான வரம்புகளை நீக்கியுள்ளது. இது வரம்பில்லாமல் வட்டிவிகிதத்தை உயர்த்துவதை அனுமதிப்பதால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவர். இதற்கு முன் நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள், நிறுவனத்தின் நிதிச் செலவை விட 10-12 சதவீத புள்ளிகள் அதிகமாகவோ அல்லது ஐந்து பெரிய வணிக வங்கிகளின் சராசரி வட்டி விகிதத்தை விட 2.75 மடங்கு அதிகமாகவோ வசூலிக்கலாம் என மத்திய வங்கி பரிந்துரைத்திருந்தது.

மத்திய வங்கியின் அந்நிய செலாவணி இருப்புகளின் அளவு இருமுறை பில்லியன் டாலர்களுக்கு மேல் சரிவடைந்துள்ளது. ரூபாய் மீதான அழுத்தம் உயர்ந்துள்ளது.டாலருக்கு எதிராக ரூபாய் 3.5% வீழ்ச்சியடைந்தது.
இந்தியாவின் டாலர் அல்லாத யூரோ, பவுண்ட் ஸ்டெர்லிங் மற்றும் யென் ஆகிய அந்நிய செலாவணி சொத்துக்கள் மதிப்பு 30-40% காணப்படுகின்றன. வளர்ந்து வரும் புவிசார் அரசியல் சூழ்நிலையில், ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே அந்நிய செலாவணி இருப்புகளை பன்முகப்படுத்தத் தொடங்கியதாக மத்திய வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (CAD) 2021-22 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் $9.9 பில்லியன் ஆகவும், ஒரு வருடத்திற்கு முன்பு $2.2 பில்லியனாகவும் இருந்தது, மூன்றாம் காலாண்டில் (Q3FY22) $23 பில்லியனாக உயர்ந்துள்ளது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2.7 விழுக்காடாக உள்ளது. ஒரு நாடு வெளிநாட்டு ஆதாரங்களில் இருந்து பெறுவதை விட அதிக பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பும்போது நடப்புக் கணக்கு பற்றாக்குறை உருவாகிறது. தற்போது சர்வதேச அளவில் புவிசார் அரசியல் நெருக்கடிகளாலும், பணவீக்கம் உயர்ந்துள்ளதாலும் இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மேலும் உயரும் அபாயம் உள்ளது.

கச்சா எண்ணெயின் விலை 100 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது. ஆனால் நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகள் கச்சா எண்ணெயின் விலை 75-80 டாலர் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளதால், நிதிநிலை அறிக்கையை புதிய நிலைமைகளுக்கு ஏற்ப மறுமதிப்பீடு செய்யவேண்டியுள்ளது.

ஆனால் அரசு தரப்பில் அடுத்த 2-3 மாதங்களில் எண்ணெய் விலை குறையும் என்று எதிர்பார்ப்பதால், ஏறக்குறைய 10,000 கோடி ரூபாய் உயரும் உர மானியத்தைத் தவிர, அதிகரித்து வரும் எண்ணெய் விலைகள் நடப்பு நிதியாண்டில் அரசின் நிதிநிலை அறிக்கை கணக்கீட்டைப் பெரிதாக மாற்றாது” என்று கூறப்பட்டுள்ளது.
அரசின் நிதிப் பற்றாக்குறையை குறிப்பிட்ட இலக்குகளுக்குள் வைத்திருக்க வேண்டியதன் காரணமாக, நிதி அமைச்சகம் மார்ச் 15 முதல் வரி வசூல் மற்றும் செலவுகள் உள்ளிட்ட வருவாய் வரவு செலவுகளை தினசரி கண்காணிக்கத் தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மார்ச் 21 ஆம் தேதிக்குள் துறைகள், அமைச்சகங்கள் தங்கள் ‘சேமிப்புகளை’ ஒப்படைக்குமாறும் நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது

பணவீக்கம் உயரும் போதிலும் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக இந்தியாவின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை (ரெபோ) உயர்த்தவில்லை.
இந்திய பொருளாதாரம் பணவீக்கம்,தேக்கநிலை ஆகிய இரண்டையும் ஒருங்கே கொண்டிருக்கும் ‘ஸ்டாக்ஃப்லேசன் உருவாவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று மத்திய வங்கி ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பணவீக்கம் 6%க்கு மேல் செல்லாது என்றும் 4.5% ஆக மட்டுப்படும் என எதிர்பார்ப்பதாகவும், குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியாவின் பேரியல் பொருளாதார அடிப்படைகள் வலுவாக உள்ளன என்றும் எந்தவொரு சவாலையும் சமாளிக்கும் வகையில் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

வங்கிகள் இப்போது சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், மூலதன நிறைவு விகிதம் 16 விழுக்காடாகவும், மொத்த வாராக்கடன் 6.5 சதவீதமாக குறைந்துவிட்டதாகவும் ஆளுநர் கூறியுள்ளார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ்

நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பொதுத்துறை வங்கிகளுக்கான மொத்த வாராக்கடன் விகிதம், 2021 மார்ச் 31ல் 9.11% ஆக இருந்தது டிசம்பர் 2021 இறுதியில் 7.9% ஆக குறைந்துள்ளது என்ற முன்முடிவுகளுக்கு எதிராக அரசை எச்சரித்து, தொற்றுநோயின் பின் தாக்கம் மீண்டும் வாரக்கடன்களை உயர்த்தக்கூடும் என்று கூறியுள்ளது.

பாஜக அரசு உரத்துறைக்கு குறைந்த ஒதுக்கீடு செய்திருப்பது உரத் துறையின் செயல்திறனை மோசமாக பாதிக்கிறது என நாடாளுமன்ற நிலைக்குழு விமர்சித்துள்ளது. இரசாயன மற்றும் உரத் துறையின் (DCF) திட்டமிடப்பட்ட நிதிக்கோரிக்கை ரூ. 1.76 லட்சம் கோடியாக உள்ள நிலையில் ரூ. 1.09 1.76 லட்சம் கோடியே நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்துறையின் நிதித் தேவைகள் எந்தக் குறையும் இன்றி நிறைவேற்றப்படும் வகையில், உரத் துறையை ‘முன்னுரிமைத் துறை’யாக அறிவிக்க வேண்டும் என்று நிதி அமைச்சகத்தை இந்தக் குழு வலியுறுத்தியுள்ளது.

தேசிய ஊரக குடிநீர் திட்டம் (NRDWP), ஜல் ஜீவன் இயக்கத்தின் (JJM) கீழ் குழாய் நீர் இணைப்பு வழங்கும் திட்டத்தின் செயல்வேகம் குறைந்துள்ளது. இந்த நிதியாண்டில் 490 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்புகளை வழங்க முடியும் என்று அரசாங்கம் கருதியது, ஆனால் மார்ச் 24 வரை 198 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே வழங்க முடிந்தது. இந்த ஆண்டு இலக்கில் 40% மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள், விவசாயிகள், பொது மக்களை பாதிக்கும் அரசின் கொள்கைகளுக்கு எதிராக தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களும் மார்ச் 28, 29ல் நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும், மத்திய அரசு அலுவலகங்களில் 8.75 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது, தொழிலாளர் சட்டங்களைத் திரும்பப் பெறவேண்டும், எந்த வகையிலும் தனியார்மயத்தை செயல்படுத்தக் கூடாது, பொதுசொத்துக்களை விற்று பணமாக்கும் திட்டத்தை கைவிடவேண்டும், மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் ஊதிய ஒதுக்கீடு அதிகரிக்கவேண்டும் என்பது உட்பட 14 முக்கிய அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். மத்திய அரசின் கொள்கைகளால் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆட்டோ தொழிலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா காலத்தில் கடுமையான நெருக்கடியை இவர்கள் சந்தித்துள்ளனர். மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை கண்டித்து 28, 29-ம் தேதிகளில் நடந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளனம் (சிஐடியு) பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வழக்கம் போல் பாஜக அரசு அவர்களது கோரிக்கைகளை அலட்சியப்படுத்தியுள்ளது.

குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதற்கான குழுவை அமைக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது என விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். ஓராண்டிற்கும் மேலாக இதே சிந்தைப் பாடி வருகிறது பாஜக அரசு. இன்னும் எத்தனை ஆண்டுகள் இழுத்தடிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல குறைந்தபட்ச ஆதார விலை கூடக் கிடைக்காத இந்திய விவசாயிகள் இப்போது வருமானத்தை அதிகரிக்க கார்பன் கிரெடிட்களை வர்த்தகம் செய்யலாம் என்ற அறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசை விட மாநில அரசுகள் மக்கள் நலனில் அக்கறை செலுத்துகின்றன. 2020-ஆம் ஆண்டிலிருந்து கேரளாவில் தக்காளி, வாழை, பாகற்காய், உருளைக்கிழங்கு போன்ற 16 வகை காய்கறிகளுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையை அம்மாநில அரசு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் அந்த காய்கறிகளை பயிரிடுவோருக்கு அனைத்து செலவுகளும் போக 20% லாபம் கிடைக்க உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம், சுமார் 403.5 மில்லியன் வேலைகள் இழந்துள்ளதாகவும், தொற்றுநோய்களின் போது கிட்டத்தட்ட 97 விழுக்காடு இந்தியர்களின் சராசரி வருமானம் குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதனால் இந்தியப் பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் அதிக ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரம், நமது சமூகத்தின் சிறந்த நிலைத்தன்மைக்கு 2030க்குள் 90 மில்லியன் கூடுதல் வேலைகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது. ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக பாஜக அரசு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியை மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பர் காலப்பகுதியில் எந்த பொதுத்துறை வங்கியும் (PSB) எந்த இழப்பையும் சந்திக்கவில்லை, மேலும் இந்த காலகட்டத்தில் 48,874 கோடி ரூபாய் கூட்டு நிகர லாபம் ஈட்டியுள்ளது என்று அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும்…

SAMANATHA.K.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here