லெனின் காலத்தில் உலக முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கு ‘ஏகாதிபத்தியமாக’ உருவெடுத்த சூழலில் இப்படிக் கூறினார்.

“…முதலாளித்துவத்தினுடைய வளர்ச்சியின் எந்த ஒரு நிலையில் , ஏகபோக உரிமையும் ரொக்க மூலதனமும் அதிகமான செல்வாக்கை அடைந்து விடுகின்றனவோ, பண ஏற்றுமதி ஒரு முக்கியத்துவம் பெற்று விடுகிறதோ, சர்வதேச முதலாளிகளின் ஐக்கிய ஸ்தாபனங்கள் உலக மார்க்கெட்டைப் பங்கு போட்டுக்கொள்ள ஆரம்பிக்கின்றனவோ, பெரிய பெரிய முதலாளித்துவ நாடுகள், உலகமனைத்தையும் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்டு விடுகின்றனவோ அந்த நிலைக்குத்தான் ‘ஏகாதிபத்தியம்’ என்று பெயர்…”

என்று ரத்தினச் சுருக்கமாகக் கூறினார் லெனின்.

“ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்” என்ற நூலில் இன்னும் ஆழமான கருத்துக்களை லெனின் எடுத்துக் கூறியுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் கூறப்படுவது என்ன? 

இந்த முதலாளித்துவ சர்வாதிகார ஆட்சிக் காலத்தின் பாட்டாளி மக்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு முற்றுப்பள்ளி வைக்க புரட்சிகர சோசலிச சமுதாயத்தில், பொதுவாக என்னென்ன செய்யப்படல் வேண்டும் என்பதைப் பற்றி லெனின் காலத்திற்கு முன்பே, ஆசான் கார்ல் மார்க்ஸ் கீழ்க்கண்டவாறு சில திட்டங்களை “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை”-யில் முன் வைக்கிறார். அவை பின்வருமாறு:-

1.நிலத்தின் மீதுள்ள சொத்துரிமையை ரத்து செய்து விடுதல்; நிலவரிப் பணத்தைப் பொதுக் காரியங்களுக்காகப் பயன்படுத்தல்.

2.அதிகமான, அல்லது படிப்படியாக உயர்வுடைய வருமான வரி விதித்தல்.

3.பரம்பரைச் சொத்து பாத்தியதை என்பதை ரத்து செய்துவிடுதல்.

4.நாட்டை விட்டு வெளியேறியவர்கள், நாட்டுக்கு விரோதமாகக் கலகம் செய்கிறவர்கள் இவர்களுடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்தல்.

5.லேவாதேவித் தொழிலை அரசாங்கத்தின் சுவாதீனத்திற்குட்படுத்துதல். இதற்காக அரசாங்கத்தின் மூலதனத்தைக் கொண்டு வங்கிகள் ஏற்படுத்துதல்.

6.அனைத்து வகைப் போக்குவரத்து சாதனங்களையும் அரசாங்க உடமையாக்குதல்.

7.தொழிற்சாலைகள், பொருளுற்பத்தி சாதனங்கள் முதலியவற்றை அரசாங்கமயமாக்கி அவற்றை விஸ்தரித்தல், கரம்பு நிலங்களைச் சாகுபடிக்குக் கொண்டு வருதல், பொதுவான ஒரு திட்டம் வகுத்துக் கொண்டு அதன்படி பூமியை பயன்படுத்திப் பயன்பெறுதல்.

8.எல்லோரும் வேலை செய்யக் கடமைப்பட்டவர்கள் என்ற விதியை உருவாக்குதல்; தொழிற்சேனை யொன்றை, சிறப்பாக விவசாயத்திற்கு ஸ்தாபித்தல்.

9.விவசாயத்தையும் உற்பத்தித் தொழில்களையும் ஒன்றுபடுத்தல்; மெதுமெதுவாக நகரத்திற்கும் நாட்டுப்புறத்திற்கும் உள்ள வேற்றுமைகளை ஒழித்தல்; இதற்கு ஏற்றார் போல கிராமந்தரங்களில் மக்களைக் குடியேறச்செய்தல்.

10.அரசாங்கப் பள்ளிக் கூடங்களில் எல்லா குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி அளித்தல்; குழந்தைகளை தொழிற்சாலைகளில் அமர்த்தி வேலை வாங்குதலை ஒழித்தல்; கல்வியையும் பொருளுற்பத்தியையும் ஐக்கியப் படுத்துதல்.

படிக்க:

 சோசலிசம் தொற்றுக்கிருமிகளை வீழ்த்தும்! தோழர் லெனின்

 உண்மையறிவோம்; லெனின்- ஸ்டாலின்  குரூப்ஸ்கயா

“கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” -யில் மேற்கண்டவாறு ஆசான் மார்க்ஸ் வரையறுத்துக் கொடுத்த திட்டங்களைத்தான் 1917 வருடத்திய சோவியத் ரஷ்யாவின் சோசலிசப் புரட்சிக்குப் பின் ஆசான் லெனின் நடைமுறைப்படுத்தினான் என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது.

ஆசான் லெனின் மறைவுக்குப் பின் ஆசான் ஸ்டாலின் அக்கட்டமைவைப் போற்றிப் பாதுகாத்தான்; மென்மேலும் வளர்த்தெடுத்தான்.

ஆசான்களின் வழிகாட்டுதலில் புரட்சிகர கடமைகளை நிறைவேற்றுவோம்! 

தொழிலாளர் சர்வாதிகாரத்தின் கீழ் ஆட்சி அதிகாரம் அமைந்த பிறகு ஒரு சிறு கும்பல் பலரை சுரண்டுவதற்கான சந்தர்ப்பமே கிட்டாமல் போய்விடுகிறது அல்லவா?

அத்தகைய சோசலிச மாற்றத்தை உள்ளடக்கிய புரட்சியே உலகம் முழுமைக்குமுள்ள பாட்டாளி மக்களுக்கான – விடுதலைக்கான இலக்காக அமைந்துள்ளது.

எனினும், இந்தியாவைப் பொறுத்த மட்டில் கார்ப்பரேட் – காவிப் பாசிசம், சாதி- மத-ஆன்மீகப் போதையை மக்கள் தலையிலேற்றி – மதி இழக்கச் செய்து, கார்ப்பரேட் கொள்ளையைத் திரை போட்டு மூடி விடுகிறது காவிக் கும்பல்.

எனவே கார்ப்பரேட்- காவிப் பாசிசத்தை வீழ்த்தி மக்கள் ஜனநாயகக் கூட்டரசை நிறுவிடப் பயணப்படுவோம்!

அதனைத் தொடர்ந்து மக்களின் நிரந்தர விடுதலைக்கான, மேற்கண்ட ஆசான்களின் ‘விஞ்ஞான பூர்வமான (நமது) கனவுகளை’ நிறைவேற்றிட அடுத்த கட்டப் புரட்சிகரப் போராட்டப் பயணத்திற்கு அணியமாவோம்!

உண்மைகளை அறிவோம்!
ஆசான்களிடமிருந்து கற்போம்!
நல்லதொரு வினையாற்றுவோம்!

 

  • எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here