வேலையில்லா இளைஞர்களை இழிவுப்படுத்தும் நீதித்துறையின் அதிகாரத் திமிர்!
சமீப காலத்தில் சமூக வலைதளங்கள் எனப்படும் சமூக ஊடகங்கள் ஆளும் வர்க்கத்திற்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. தங்கள் கருத்துக்களை நேரடியாக கேட்க இடம் கொடுக்காத அரசையும் அதன் அதிகார மையங்களை சமூக வலைதளங்களின் மூலம் கேள்விகளால் துளைத்தெடுக்கிறார்கள்

ந்திய நீதித்துறை தன்னை ஒரு புனிதமான கட்டமைப்பாகவும், நீதிபதிகள் தங்களை எவரும் கேள்வி கேட்க முடியாத ‘தீர்ப்பு சொல்லும் கடவுள்களாகவும்’ கருதிக்கொள்ளும் வர்க்க மேலாதிக்கப் போக்கு அதிகரித்து வருகிறது. இதன் உச்சக்கட்டமாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அண்மையில் வேலையில்லா இளைஞர்களை ‘கரப்பான் பூச்சிகள்’ மற்றும் ‘ஒட்டுண்ணிகள்’ என இழிவுபடுத்தியுள்ளார்.

இந்தியாவில் வேலையின்மை விகிதம் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு ஏப்ரல் மாதத்தில் 5.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கான அடிப்படை காரணங்கள் என்ன என்று பின்னர் ஆராய்வோம். ஆனால் இதற்கு இளைஞர்கள் காரணம் இல்லை என்று அனைவரும் அறிவர்.

வேலையில்லா திண்டாட்டம் என்பது முதலாளித்துவ அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளின் நேரடி விளைவாகும். ஆனால், இந்த அமைப்புரீதியான தோல்விக்குக் காரணமான அதிகார வர்க்கத்தைக் கேள்வி கேட்பதற்குப் பதிலாக, வேலையின்மையால் பாதிக்கப்பட்ட இளைஞர்களையே ‘சமூகத்தின் ஒட்டுண்ணிகள்’ என்று நீதிபதி அழைப்பது உழைக்கும் வர்க்கத்தின் மீதான ஆளும் வர்க்கத்தின் வெறுப்பை வெளிப்படுத்துகிறது.

வேலை கிடைக்காத விரக்தியில் சமூக ஊடகங்கள் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் இந்த கட்டமைப்பைக் கேள்வி கேட்பவர்களை ‘அமைப்பைத் தாக்குகிறார்கள்’ என்று கூறுவது, ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்கும் செயலாகும்.

வரலாற்று ரீதியாக, ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தையோ அல்லது குழுவையோ ஒடுக்க விரும்புபவர்கள் அவர்களை ‘கரப்பான் பூச்சிகள்’ அல்லது ‘ஒட்டுண்ணிகள்’ போன்ற சொற்களால் மனிதத்தன்மையற்றவர்களாகச் சித்தரிப்பார்கள். ருவாண்டா இனப்படுகொலை மற்றும் நாஜி ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிராக இத்தகைய சொற்கள் பயன்படுத்தப்பட்டதை ‘தி வயர்’ கட்டுரை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுகிறது. இத்தகைய சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம், அந்த மக்களின் துயரங்களை அலட்சியப்படுத்துவதையும் அவர்களுக்கு எதிரான அடக்குமுறையை நியாயப்படுத்துவதையும் இந்த அதிகார வர்க்கச் சித்தாந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஜனநாயகக் குரல்களை நசுக்குதல்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது சாமானிய குடிமக்கள் அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்ப வழங்கப்பட்ட ஒரு முக்கிய ஆயுதம். ஆனால், தலைமை நீதிபதி இதை பயன்படுத்துபவர்களை ‘கரப்பான் பூச்சிகள்’ என்று இழிவுபடுத்துவது, அவர் இந்த அதிகாரக் கட்டமைப்பின் பாதுகாவலராகவே செயல்படுகிறார் என்பதைக் காட்டுகிறது. இது சாதாரண மக்கள் நீதித்துறையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைச் சிதைப்பதோடு, எளியவர்களின் குரல்களை நசுக்கி, இந்த அமைப்பைத் தற்காத்துக் கொள்ளும் ஒரு முயற்சியாகும்.

சமீப காலத்தில் சமூக வலைதளங்கள் எனப்படும் சமூக ஊடகங்கள் ஆளும் வர்க்கத்திற்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. தங்கள் கருத்துக்களை நேரடியாக கேட்க இடம் கொடுக்காத அரசையும் அதன் அதிகார மையங்களை சமூக வலைதளங்களின் மூலம் கேள்விகளால் துளைத்தெடுக்கிறார்கள் இளைஞர்கள். அவை சில நேரங்களில் இந்திய அளவில் பேசப்பட கூடியவையாகவும் மாறிவிடுகிறது. மறுபுறம் நீதிபதிகளின் அதிகார துஷ்பிரயோகத்தையும் தங்களின் கேள்விகளால் அம்பலப்படுத்துகிறார்கள். இது இந்த சமூகத்திற்கு மேலாக தன்னை இருத்திக்கொள்ளும் நீதிபதிகளால் பொறுத்துக் கொள்ள முடியாமலேயே கருத்துக்கள் என்ற பெயரில் வேலையில்லா இளைஞர்களை இழிவுப்படுத்துகிறார்கள்.

படிக்க:

 தொழிற்சங்கங்களின் மீது வெறுப்பை உமிழும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!

 இன்னும் எத்தனை ரோகித் வெமுலாக்கள் சாக வேண்டும்? 

என்.சி.இ.ஆர்.டி-யின் 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள ‘நீதித்துறை ஊழல்’ என்ற அத்தியாயம் மீது நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்ததோடு மூத்த கல்வி அதிகாரிகளுக்குக் காரணம்கேள் அறிவிப்புகளை அனுப்பியதோடு, அனைத்து அச்சு மற்றும் டிஜிட்டல் தளங்களிலிருந்தும் நாடு தழுவிய அளவில் அப்புத்தகத்தை உடனடியாகத் திரும்பப் பெறவும் உத்தரவிட்டது. அதாவது தாங்கள் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் எங்களை யாரும் கேள்வி கேட்க கூடாது என்ற பண்ணையார் ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடே அனைத்து வழக்குகளிலும் அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களிலும் வெளிப்படுகிறது.

அதே நேரத்தில் இந்த நாட்டை சூறையாடும், பல கோடி இளைஞர்களின் உழைப்பைச் சுரண்டும் முதலாளித்துவத்தையும் அதன் அதிகாரம் மையங்களையும் நீதிபதிகள் எப்போதுமே கேள்வி எழுப்பியது கிடையாது. பல்லாயிரம் பேரை கொன்றொழித்த டௌ கெமிக்கல்ஸ் வாரன் ஆண்டர்சனுக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்த ‘அற்புதமான’ நீதிபதிகள் அடங்கிய நீதித்துறை தான் இன்று இளைஞர்களை கரப்பான் பூச்சிகள் ஒட்டுண்ணிகள் என்று இழிவு படுத்துகிறது.

போகிறபோக்கில் இளைஞர்கள் மீது பொதுவெளியில் தவறான கருத்தை உருவாக்கிய தலைமை நீதிபதி சூரியகாந்த் பின்னர் அளித்த விளக்கம் வெறும் கண்துடைப்பாகவே தெரிகிறது. தன்னுடைய கருத்தை ஊடகங்கள் தவறாக புரிந்துக் கொண்டதாக கூறுவது ஏற்புடையதல்ல. நாட்டின் இளைஞர்களை, வேலைவாய்ப்பை உருவாக்கத் தவறிய அரசிடம் கேள்வி கேட்கவிடாமல் தடுப்பதும், அவர்களைச் சமூக விரோதிகளாகச் சித்தரிப்பதும் கடும் கண்டனத்திற்குரியது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவு வழங்கும் ‘கண்ணியத்துடன் வாழும் உரிமையை’ பாதுகாக்க வேண்டிய ஒருவரே, இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்துவது ஒரு மிகப்பெரிய அரசியல் சாசன நெருக்கடியாகும்.

  • நலன்

1 COMMENT

  1. மெக்காலே எனும் வெள்ளைக்காரனால் உருவாக்கப்பட்ட இந்தப் பாழாய்ப் போன கல்வி முறையும் சரி; அக்கல்வி முறை வழியே டாடன்ஹாம் எனும் வெள்ளைக்காரனால் உருவாக்கப்பட்ட அனைத்து நிர்வாக நடைமுறைகளும் சரி;… கீழ்மட்ட ஊழியர் முதல் மேல்மட்ட அதிகாரிகள் வரை… அதிலும் குறிப்பாக நீதிபதிகள் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் வரை…
    அவர்களது தலைகளில் கூர்மையான கத்திகள் மாதிரியில் கொம்புகள் முளைத்திருப்பதாக எண்ணிக் கொள்கின்றனர். அதனால் தான் அவர்கள் சாதாரண மக்களை மனிதர்களாகவே பாவித்துப் பழக்கப்பட்டவர்களாக இருப்பதில்லை. மக்களுக்கு சேவகம் புரிவதான எண்ணம் அவர்களுக்கு என்றும் இருப்பதில்லை. மாறாக அம்மக்கள் எப்படி வாழ வேண்டும்? எப்படி சிந்திக்க வேண்டும்? எப்படி எழுத வேண்டும்? என்பவற்றையெல்லாம் கூட இவர்களே தீர்மானித்து அம்மக்கள் மீது தங்கள் முழு அதிகாரத்தையும் ஈட்டி முனை கொண்டு சொருகுகிறார்கள்! உண்மையில் வெளித்தோற்றத்திற்கு மக்களிடம் வாக்குகளைப் பெற்றுச் சென்று அரசாங்கப் பதவிகளில் அமர்கின்ற சட்டமன்ற பாராளுமன்ற ‘தலைவர்களை’ விடவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நியமனப் பதவிகளில் அமர்ந்திருக்கும் இத்தகைய வரம்பற்ற அதிகார வர்க்கத்திடமே அதிகாரங்கள் குவிந்து கிடக்கின்றன. அதனுடைய வெளிப்பாடே சாதாரண மக்களை ‘கரப்பான் பூச்சிகள்’ என்றும் ‘ஒட்டுண்ணிகள்’ என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியால் துணிவுடன் கருத்து கூற முடிகிறது. அதனைத்தான் கட்டுரையாசிரியர் சிறப்பாக அம்பலப்படுத்தி உள்ளார். பாராட்டுக்கள்!

    குறைந்த பட்சம் புரட்சிகர சமூக மாற்றம் ஏற்படும் காலம் வரை, சட்டத்தை இயற்றும் இயந்திரமும் சட்டத்தை அமுல் செய்யும் இயந்திரமும் ஒருமுகப்படுத்தப்பட்டாக வேண்டும். அதுவரை இந்த அவலம் தொடரவே செய்யும். அதனால் தான் ‘மக்களவையை’, ‘பாராளுமன்றம் என்பது பன்றிகளின் தொழுவம்’ என்றார் போலும் ஆசான் லெனின்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here