சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் டெபாசிட்  ரூ 30,500 கோடியாக உயர்வு!


2014 ஆம் ஆண்டு மோடி பிரதமர் ஆவதற்கு முன் பல வெற்று வாக்குறுதிகளை அள்ளி விட்டார். அதில் ஒன்று கருப்பு பணம் மீட்பு. அதாவது வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடப்படும் என்றார். அதை சொல்லி பிரதமராகவும் வந்து விட்டார்.

மோடி பதவிக்கு வந்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. கருப்புப் பணம் என்று இதுவரை எதையும் மீட்கவில்லை. பல்வேறு அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பிய பின்னர், நான் அப்படி ஒரு வாக்குறுதி கொடுக்கவில்லை என்று கூறிவிட்டார் பொய்யர் மோடி.

சொன்ன வாக்குறுதி நடக்காது என்பது பலருக்கும் தெரியும். இப்போது விஷயத்துக்கு வருவோம். சுவிஸ் வங்கியில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்களின் டெபாசிட் பணம் அதிகரித்து வருகிறதாம். 2021 நிலவரப்படி 30,500 கோடி ரூபாய் உள்ளது என வங்கி தெரிவித்துள்ளது. அதாவது 2020 ஆம் ஆண்டில் 20,700 கோடியாக இருந்த பணம் தற்போது 10,000 கோடி அதிகரித்துள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021 மட்டும் 10 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய தொகை. சுவிஸ் வங்கியில் இந்திய வாடிக்கையாளர்களின் தரவுகள், தனிநபர்களின் வங்கி கணக்குகள் மற்றும் நிறுவனங்களின் கணக்குகள் உட்பட அனைத்து நிதிகளையும் கணக்கில் கொண்டுதான் இந்த தொகை கணக்கிடப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.

சுவிஸ் வங்கி அறிவித்துள்ள விவரங்கள் அனைத்தும் இந்தியர்களின் டெபாசிட் தொகை மட்டுமே. இவை அனைத்தும் அரசுக்காக தெரிவிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் மட்டுமே. வேறு நாட்டு நிறுவனங்கள் மூலம் போடப்பட்டுள்ள தொகை எவ்வளவு என்பது சுவிஸ் வங்கி தெரிவிக்காது. ஏனென்றால் சுவிஸ் வங்கி வாடிக்கையாளர் குறித்த சில ரகசியங்களை வெளியிடாது.

வங்கியில் உள்ள கருப்பு பணங்களை மோடி அரசு மீட்கும் என்ற நம்பிக்கை இருந்தால் அதை இன்றோடு மறந்து விடுங்கள். மோடி பணமதிப்பு நீக்கத்தை அறிவிக்கும்போது இனி கருப்புப் பணமே இந்தியாவில் இருக்காது என்றார். என்ன நடந்தது? மக்கள் செல்லாது என அறிவித்த பணத்தை மாற்ற வரிசையில் நிற்க்கும் போது, தமிழ்நாட்டில் சேகர் ரெட்டி வீட்டில் 33 கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டு பதுக்கப்பட்டு அம்பலமானது. பணமதிப்பு நீக்கத்தால் பலர் வேலை இழந்து தொழில்துறை பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது. பணமதிப்பிழப்பு  திட்டம் மிகப்பெரும் தோல்வியை சந்தித்தது.

பனாமா லீக்ஸ், பிட்காயின் போன்றவற்றில் கள்ளத்தனமாக முதலீடு செய்தவர்களின் விவரங்கள் வெளியான போதிலும் எந்த நடவடிக்கையும் இல்லை. அவர்கள் சுதந்திரமாக எந்த வித பயமும் இல்லாமல் வெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். கோடிக்கணக்கில் செலவு செய்து அம்பானி தன் மகனுக்கு திருமணம் செய்தார். கார்நாடகாவை சேர்ந்த பிஜேபியின் ஜனார்த்தனன் ரெட்டி தனது மகளுக்கு 600 கோடிக்கு மேல் செலவு செய்து திருமணம் செய்தார். இவர்களையெல்லாம் கைதுக் கூட செய்யவில்லை.

சுவிஸ் நாட்டின் சட்டப்படி வரிஏய்ப்பு என்பது குற்றமல்ல. அதுமட்டுமல்ல உலக வர்த்தகக் கழகத்தின் விதிமுறைக்கு ஏற்ப அன்னிய செலவாணி தொடர்பான மோசடிகளை கிரிமினல் குற்றமாக கருதிய பெரா (FERA) சட்டத்தை நமத்து போகச் செய்து அதற்கு பதிலாக பெமா(FEMA) சட்டமாக மாற்றியது, 1999 ஆட்சியில் இருந்த பாஜக அரசு.

படிக்க:

 வெளியேறும் அன்னிய முதலீடு! வீழ்ச்சியில் பங்குசந்தை? திவால் நிலையை நோக்கி இந்திய பொருளாதாரம்!

 அதானியின் எழுச்சி! இந்திய மக்களுக்கு வீழ்ச்சி!!

அதனால் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்களை சுவிஸ் வங்கி ஒன்றிய அரசிடம் வழங்கினாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை.  வேண்டுமானால் எதிர்க்கட்சிகளை மிரட்ட பயன்படுத்தும் அவ்வளவுதான்.

பாசிச பாஜக தான் ஊழலுக்கு எதிரான கட்சி, கருப்பு பணத்தை ஒழித்து விடுவோம் என்று சொல்வதெல்லாம் பம்மாத்து வேலை. சுரண்டிப் பிழைக்கும் கூட்டம் நீடிக்கும் வரை, அதாவது முதலாளித்துவம் நீடிக்கும் வரை அவர்களின் கள்ள  குழந்தைகளான ஊழல், கருப்புப் பணம் நீடிக்கவே செய்யும். மக்கள் நலனை விரும்பும் சுரண்டலற்ற சோசலிசமே ஊழலற்ற சுரண்டலற்ற சமுதாயத்தை உருவாக்க்கும்.

 

  • மாரிமுத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here